திங்கள், மே 12, 2014

ஹோட்டல் (hotel) விருந்து: கவனிக்க வேண்டியவை

உணவகங்களுக்கு சென்று விதவிதமான ருசிகளில் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடிக்கும். எவ்வளவுதான் வீட்டில் அபாரமாக சமைத்தாலும் ரெஸ்டாரண்டில் சாப்பிடுவது தனிச் சுவை, தனிக் கொண்டாட்டம்தான். வீட்டில் சமைத்து தருவதற்கு ஆள் இல்லாதவர்களும் இந்த ரெஸ்டாரண்டுகளை நம்பவேண்டிய திருக்கிறது.

திடீர் விருந்தாளிகளை குஷிப்படுத்துவதற்கும், திருமண நாள், பிறந்தநாள் போன்ற முக்கிய விழாக்களை உறவினர்களுடன் கொண்டாடுவதற்கும் உணவகங்கள் கைகொடுக்கின்றன. பள்ளி விடுமுறையில் குழந்தைகளை மகிழ்விக்கவும், நண்பர்களோடு அரட்டையடிக்கவும் உணவகங்களை நோக்கி படையெடுத்து செல்பவர்கள் ஏராளம்.

பெண்கள் வீட்டு சமையலில் கெட்டி என்றால், ஆண்கள் ரெஸ்டாரண்டுகளில் சமைப்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். ஒரு உணவை சாப்பிடும் போதே அது எந்தெந்த பொருட்கள் கலந்து தயாரிக்கப்பட்டது என்று சிந்தித்துக் கொண்டே சாப்பிட்டால், அந்த உணவுப் பொருளின் உள்ளடக்கத்தையும், செய்முறையையும் புத்திசாலி பெண்களால் புரிந்துகொள்ள முடியும்.

இப்படி முயற்சிகளில் ஈடுபடும் பெண்களுக்கு உணவகங்களில் சாப்பிடுவது இரட்டிப்பு லாபம். எல்லோரும் சாதாரணமாக பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு புதிய வகை உணவினை மற்றவர்கள் வியக்கும் வண்ணம் தயாரிப்பதில் ரெஸ்டாரண்ட் சமையல் கலை நிபுணர்கள் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

உலகில் எந்த மூலையில் உள்ள உணவும், இந்தியாவில் கிடைக்கும் என்ற நிலையையும் அவர்கள் உருவாக்கிவிட்டார்கள். உணவு திருவிழாக்களை பல்வேறு ஓட்டல்கள் அவ்வப்போது நடத்துகின்றன. ‘நாங்களெல்லாம் ஓட்டலுக்கு சாப்பிட போகமாட்டோம்’ என்று சொல்பவர்கள்கூட, அந்த விழா காலத்தில் உணவின் சுவையை அனுபவிக்க சென்றுவிடுகிறார்கள்.

பின்பு அவர்கள் அந்த ஓட்டலின் சுவைக்கே அடிமையாகிவிடுவதும் உண்டு. நீங்கள் உணவக உணவுப் பிரியர் என்றால், ஓட்டலுக்கு செல்லும் முன்பு கடைபிடிக்கவேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவை:

* குடும்பத்தோடு ஷாப்பிங் போய்விட்டு, அந்தப் பகுதியில் உள்ள பிரபலமான உணவகத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தால் முன்பதிவு செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் வெகுநேரம் காத்திருக்க வேண்டியதாகிவிடும்.

நீங்கள் ஒருவேளை முன்பதிவு செய்துவிட்டு, குறித்த நேரத்திற்குள் அந்த உணவகத்திற்கு வர இயலாவிட்டால், உங்கள் இடம் வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுவிடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அங்குபோய் நின்றுகொண்டு கூச்சல் போடக்கூடாது. முடிந்த அளவு விரைவாக இருக்கைகளை ஏற்பாடு செய்து தரும்படி மட்டும் கூறுங்கள்.

* எவ்வளவு மனஅழுத்தங்கள், பிரச்சினைகள் இருந்தாலும் அதை எல்லாம் விலக்கிக்கொண்டு, மனஅமைதியோடு ஓட்டலுக்குள் நுழையுங்கள். மகிழ்ச்சியோடு உணவின் முன்பு அமருங்கள். கோபத்தோடும், எரிச்சலோடும் சாப்பிடும் உணவு ருசிக்காது. செரிக்காது. பணத்தை கொடுத்துவிட்டு, வயிற்றை மட்டும் நிரப்பக்கூடாது. மனதையும் நிரப்பவேண்டும்.

* ஓட்டல்களில் இப்போது நிறைய சுப நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அத்தகைய விருந்துகளுக்கு உங்களை அழைத்தால், முதலிலே எத்தனை பேர் செல்வீர்கள் என்று கூறிவிடுங்கள். அதற்கு மேல் யாரையும் அழைத்து செல்லாதீர்கள். ஏன்என்றால் அவர்கள் முதலிலே எத்தனை பிளேட் உணவு என்று ஆர்டர் செய்திருப்பார்கள். ஆர்டரைவிட அதிக நபர்கள் செல்லும்போது, அங்கே தேவையற்ற நெருக்கடிகள் உருவாகும்.

* எந்த உணவகத்திற்கு சென்றாலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் நட்போடு பழகுங்கள். அவர்களும் நம்மை போன்றவர்கள்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சர்வரை சொடக்குப் போட்டு அழைக்காதீர்கள். அது உணவுக்கு செய்யும் அவமாரியாதை. நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுப்போமோ, அந்த அளவுக்கு நமக்கு பதில் மரியாதை கிடைக்கும்.

* முதலில் ஆர்டர் கொடுத்த உணவு வருவதற்கு தாமதம் ஆனால் உடனே ஆர்டரை மாற்றாதீர்கள். ஏனெனில் உங்கள் ஆர்டர் உணவு பாதி தயாராகிவிட்ட நிலையில் மாற்றினால் அந்த உணவகத்திற்கு இழப்பாகிவிடும்.

* குழந்தைகளை அழைத்துச் செல்வதாக இருந்தால், உணவகங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை முன்கூட் டியே அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் எப்படி சாப்பிடுவது என்பதையும் கற்றுக் கொடுங்கள்.

எந்த உணவை எப்படி சாப்பிடவேண்டும் என்பதையும் கற்றுக் கொடுப்பது அவசியம். ஒருசில முறை கற்றுக்கொடுத்தால் குழந்தைகள் அதை நன்றாகவே தெரிந்துகொள்ளும். பொது இடங்களில் சாப்பிட பழகுவது அவர்களது அறிவு வளர்ச்சியை விசாலமாக்கும்.

* உணவகங்களில் பரிமாறும் சர்வருக்கு நம்மால் முடிந்த அளவுக்கு ‘டிப்ஸ்’ கொடுக்கவேண்டும். டிப்ஸ் கொடுப்பது இப்போது அங்கீகரிக்கப்பட்ட விஷயமாகிவிட்டது.

* டீ அல்லது காபி பருகிவிட்டு மணிகணக்கில் அந்த இருக்கையை ஆக்கிரமித்து விடக்கூடாது. ஏனெனில் பசியோடு பலர் வருவார்கள். அவர்களை அல்லாடவைத்துவிடக்கூடாது.

* தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால் அதை மென்மையாக எடுத்து சொல்லவேண்டும். பணம் கொடுக்கிறோம் என்ற ஆணவத்தில் ஊழியர்களை பலர்முன் அவமானப்படுத்தி தூக்கி எறிந்து பேசக்கூடாது. உணவிட்டவருக்கு உபத்திரவம் செய்வது உங்கள் கொள்கையாக இருந்துவிடக்கூடாது.

* நண்பர்களோடு உணவகத்திற்கு செல்லும்போது அவரவருக்கு விருப்பமானதை கேட்டு ஆர்டர் செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த உணவை எல்லோரும் சாப்பிடவேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கிவிடாதீர்கள். அது அவர்களுக்கு ருசிக்கு பதில் எரிச்சலை கொடுத்துவிடும்.

* நீங்கள் நண்பர்களோடு சென்றாலும், உங்களுக்கு கொடுக்கப்பட்ட உணவைத்தான் சாப்பிடவேண்டும். நண்பர்கள் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடுவது மற்றவர் உணவை எடுத்துச் சாப்பிடுவது அநாகரீகமான செயலாகும்.

* இருமல், மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் இப்படி ஏதாவது இருக்குமானால் உணவகத்திற்கு செல்வதை தவிர்த்திருங்கள். இது மற்றவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்திவிடும். உணவகத் தில் சாப்பிடும்போது, மற்ற உணவகத்தைப் பற்றி புகழ்ந்து பேசாதீர்கள். பலர் முன் குறை கூறவும் செய்யாதீர்கள். உங்களுக்கு பிடிக்காவிட்டால் மறுமுறை போவதை தவிர்த்திடுங்கள்.

* உங்களுக்கு பிரியமான உணவகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், அடுத்தவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது டேபிளுக்கு அருகில் சென்று நிற்காதீர்கள். அது சாப்பிடுபவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

சாப்பிடும்போது வளவள வென்று போனில் அரட்டையடிப்பது, மூச்சுவிடாமல் விமர்சனம் செய்வது, வீட்டு விஷயங்களை பேசுவது இதெல்லாம் அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்கவைக்கும். .. இப்படி இன்னும் பலவிஷயங்கள் இருக்குதுங்க..! 
அதை அப்படியே வீட்டில் சென்று முயற்சித்தால் ஓரளவு சுவை கிடைத்துவிடும். மீண்டும் முயற்சி செய்தால், அந்த உணவின் செய்முறை கைவந்த கலையாகிவிடும். இப்படித்தான் புது வகையான உணவுகளை பெண்கள் சமைக்க கற்றுக் கொள்கிறார்கள்.
நன்றி: மாலைமலர்

1 கருத்து:

ப.கந்தசாமி சொன்னது…

அவசியமான அறிவுரைகள்.

கருத்துரையிடுக