ஆக்கம்: வி. ஜீவகுமாரன், டென்மார்க்
முதலாவது என்னுடைய மூத்த அதிகாரி.
பென்சன் பெற்ற பின்பும் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து தனியே வாழ்ந்தவர். பெரிய வீடு…வளவு…கார்…எக்ஸ்செற்றா…எக்ஸ்செற்றா…
நான் சிங்கப்பூர் போகும் போது கறுத்த றேபன்(Ray-Ban) கண்ணாடி வேண்டி வந்து தரச்சொல்லி இருந்தார்.
காசை நீட்டினார். வந்த பின்பு வாங்கிக் கொள்கின்றேன் என்று சொன்னேன்.
என்னை விமானநிலையத்தில் கொண்டு சென்று வழி அனுப்பியும் வைத்தார்.
அடுத்த நான்கு நாட்களின் பின்பு அவர் வீட்டுப்பூனை அமைதியற்றுத் திரிவதை அக்கம் பக்கத்தினர் அவதானித்து இருக்கிறார்கள்.
யன்னலால் எட்டிப் பார்த்த பொழுது சோபாவில் இருந்தபடியே அவர் உலகை விட்டுப் பிரிந்திருக்கின்றார்.
கோடை காலம் ஆதலால் உடல் துர்நாற்றம் வீசத் தொடங்கி இருக்கின்றது.
நான் திரும்பி வந்த பொழுது எல்லாமே முடிந்திருந்தது.
மனைவியும் பிள்ளைகளும் சொத்தைப் பங்கு போட்டுக் கொண்டு இருந்தார்கள்.
மனம் வலித்தது.
இப்போதும் அந்த றேபன் கண்ணாடியை நான் அணிந்து கொண்டு திரிகின்றேன் – அவர் நினைவாக.
இப்போது இரண்டாவது!!
ஒரு கிழமைக்கு முன்பாக…..
ஒரு தமிழர்…
சட்டப்படி திருமணமாகியிருந்தாலும் தாம்பத்தியம் இல்லாமல் பிரமச்சாரியாய் வாழ்வைத் தொடர்ந்தவர்.
அவருக்கு இருந்த ஒரே குறைபாடு அவருக்கு வஞ்சமாக யோசிக்கத் தெரியாது.
அவரின் அறிவீனம் பலருக்கு முதலாகி இருக்கிறது. அவரைக் கடன்காரன் ஆக்கி இருந்தது.
பத்து எண்கள் கொண்ட அவரின் அடையாள அட்டையின் மதிப்பு அவருக்கே தெரியாது வாழ்ந்தவர். தெரிந்தவர்கள் அதனைப் பாவித்துக் கொண்டார்கள்.
இவரும் தனியே தன் மரணத்தை தழுவியிருக்கின்றார்.
உலகத்துக்குத் தெரியும் பொழுது 'காடாத்து' (இரண்டாம் நாள் காரியம்) முடிந்திருக்க வேண்டிய நாள்.
மனதை வலிக்க வைத்த இரண்டாவது தனித்த மரணம் இது!!
மே மாத மரணம் என்னும் பொழுது இன்னமும் வலிக்கின்றது!!!
இந்தியா இலங்கையில் என்னதான் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தாலும் பிணங்கள் தனியே தூங்குவதில்லை.
ஹொல்பெக்(Holbæk) வைத்தியசாலையில் வரும் ஞாயிறு 11-05-2013 அன்று காலை 10 மணிக்கும் 12 மணிக்கும் இடையில் "ஒரு மடம் ஆகி ஒருவனும் ஆகி" என பட்டினத்தார் பாடல் பாடி சுண்ணம் இடித்து அவரை அடக்கம் செய்யப் போகின்றோம்.
இப்போ அவருக்கு சொந்தங்கள் அதிகம்!!!
2 கருத்துகள்:
//மடம் ஆகி ஒருவனும் ஆகி" என பட்டினத்தார் பாடல் பாடி சுண்ணம் இடித்து அவரை அடக்கம் செய்யப் போகின்றோம்.//
சுண்ணம் இடித்து - இது என்ன சடங்கு?
பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு, தமிழ்நாட்டில் இறுதிச் சடங்கு செய்யும்போது இறந்தவரின் தலையில் அரப்பு அல்லது எண்ணெய் தடவி குளிப்பாட்டுவீர்கள் அல்லவா? அதேபோல் இலங்கைத் தமிழர்கள் இறுதிச் சடங்கு செய்யும்போது சடலத்தின்/பூதவுடலின்மீது பூசிக் குளிப்பாட்டுவதற்கு 'அரப்பு/ சீயக்காய் உட்பட பல நறுமணம் தரும் பொருட்களை உரலில் இட்டு இடித்து அதை இறந்தவரின் தலையில் பூசிக் குளிப்பாட்டுவார்கள். இந்தப் பொருட்களை உரலில் இடிக்கும் சடங்கையே 'சுண்ணம் இடித்தல்' என்று அழைக்கிறோம். தமிழ் நாட்டிலும் இந்த வழக்கம் 'இந்துக்கள் மத்தியில்' பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்துள்ளது. மேற்படி 'சுண்ணத்தை' இடிப்பவர்கள் இறந்தவரின் பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்களாக இருப்பர். இந்தச் 'சுண்ணம்' இடிக்கும் சடங்கு நடைபெறும்போது 'மாணிக்க வாசகர்' சுவாமிகள் பாடிய 'திருப் பொற்சுண்ணம்' பாடல்கள் அல்லது 'பட்டினத்தார் பாடல்கள்' பாடுவது இலங்கைத் தமிழர்களில் 'இந்துக்களின்' வழக்கம்.
கருத்துரையிடுக