சனி, மே 31, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்

வீழும் இருவர்க்கு இனிதே வளிஇடை 
போழப் படாஅ முயக்கு (1108)
பொருள்: காற்று நுழைவதற்கும் இடைவெளியின்றித் தழுவுதல் காதலருக்கு இன்பம் தருவதாகும்.

இன்றைய சிந்தனைக்கு

முகம்மது நபி
 

தொழாதோரின் கதி:
 "உங்களை நரகத்தில் நுழைய வைத்தது எது? என்னும் கேள்விக்கு தொழாதோரின் பதில் இதுவாகத்தான் இருக்கும்:

* தொழுபவர்களில் நாங்கள் இருக்கவில்லை.
* ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. 
* வீணானவற்றில் மூழ்கிக் கிடந்தோருடன் நாமும் மூழ்கிக் கிடந்தோம்.
* இந்த 'நியாயத் தீர்ப்பு நாளை' நாங்கள் பொய் என்று கூறிக்கொண்டு திரிந்தோம். 
* எங்களுக்கு மரணம் எனும் உறுதி வரும் வரையில் நாங்கள் இவ்வாறாக இருந்தோம்.

சத்தான கேரட் சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
கேரட் - 100 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பால் - கால் கப்

செய்முறை :

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பால், துருவிய கேரட், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைத்த பின் சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் உருட்டி வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு வேக வைத்து எடுக்கவும்.

• இதில் கேரட் சேர்க்கப்படுவதால் அதிகளவு சத்துக்கள் உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு இந்த சப்பாத்தி மிகவும் பிடிக்கும். டயட்டில் இருப்பவர்கள் இவ்வாறு சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

நன்றி: மாலைமலர்

வெள்ளி, மே 30, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்

தம்இல் இருந்து தமதுபாத்து உண்டுஅற்றால் 
அம்மா அரிவை முயக்கு. (1107)
பொருள்: இவ்வழகிய நங்கையை அணைக்கும் இன்பம் எவ்வாறு உள்ளதென்றால், நான் எனது முயற்சியால் தேடிய பொருளை எனது வீட்டில் உறவுகளுக்கெல்லாம் பகிர்ந்து கொடுத்து நானும் கூடி உண்ணும் இன்பம் போன்று உள்ளது.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

எடுத்தால் குறைவது செல்வம்.
கொடுத்தால் வளர்வது கல்வி.

வியாழன், மே 29, 2014

உங்கள் குழந்தைகள் நல் ஒழுக்கமாக, புத்திசாலியாக வளர

ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்பார்கள். குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை.
1.ஒவ்வொரு குழந்தையும் தனக்கு என்று ஒரு உலகத்தை வைத்துக் கொள்கிறது. அதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2. அவர்களின் உலகத்துக்குள் சென்று அவர்களின் எண்ணங்களை பாராட்டி, அதே நேரம் அவர்களை நமது நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருவது ஒவ்வொருபொற்றோர்களின் கடமை ஆகும்.

3. குழந்தைகளுக்கே உள்ள பயத்தை போக்குவது முதலில் நம் கடமை. அதற்கான வழிகளை கையாள வேண்டும்.

4. இருட்டான நேரத்தில் அவர்கள் பயப்படுவதை தவிர்க்க தேவையான தன்னம்பிக்கை கதைகளை கூற வேண்டும். அப்போது இருட்டு பயத்தில் இருந்து குழந்தை விடுபடும்.

5. அதன்பிறகு குழந்தைகள் அணியும் உடைகளை பார்த்து அவர்களை பாராட்ட வேண்டும். இந்த பாராட்டால் முக மலர்ச்சி அடையும். குழந்தைக்கு தன்னை அறியாமல்தன்னம்பிக்கை வளரும்.

6. பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்பதிலும், வீட்டுப் பாடம் படிப்பதிலும் அனைத்து குழந்தைகளும் சரியாக செய்யும் என்று கூறமுடியாது. அப்போது அவர்களின் குறைகளையும், நிறைகளையும் ஆராய வேண்டும்.

7. அவர்களின் நிறைகளை பாராட்டி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, குறைகளை ஆராய்ந்து அந்த குறைகளுக்கான காரணத்தை அறிந்து அதை போக்க நாம் சில ஆலோசனைகளை கூறவேண்டும். இது அவர்களை உற்சாகப்படுத்தும்.

8. குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், ''டியூசன்'', அதன்பிறகு வீட்டு பாடம், சாப்பாடு, தூக்கம் என்று ஒரு வட்டத்துக்குள் விட்டுவிடக் கூடாது, ''டியூசன்'' முடிந்ததும் அவர்களுடன் காலாற நடந்து சென்று அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடி திருப்தி படுத்த வேண்டும்.

9. பின்னர் தூக்கம் வந்த பிறகும் ''படி படி'' என்று கூறாமல் தூங்க வைக்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன் அன்போடு, வீட்டு பாடம் செய்ய வேண்டியது உள்ளது. ஆகவே காலை 6 மணிக்கு எழுந்து விட்டால் வீட்டு பாடம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தி படுக்க வைக்க வேண்டும்.



10. காலை 6 மணிக்கே குழந்தை எழுந்து வீட்டு பாடம் செய்ய அலாரம் வைத்து, அவர்களுடன் நாமும் எழுந்து வீட்டுபாடம் முடிக்கும் வரை அருகில் உட்கார்ந்து இருக்க வேண்டும். குழந்தைகளை படிக்க சொல்லிவிட்டு டி.வி. பார்ப்பது தவறான செயல். அதை பெற்றோர்கள் தவிர்ப்பது அவசியம்.
11. குழந்தை தவறு செய்து விட்டு வந்து நம் மன்னிப்பை எதிர்பார்த்து நிற்கும் போது, அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி ''டேக் இட் ஈஸி'' என்று கூறுங்கள். அவர்களிடம் குற்ற உணர்வு பறந்துவிடும்.

12. நாம் தவறு செய்யும் போது ''சாரிடா கண்ணா'' என்று கூறினால் அவர்களும் அந்த வார்த்தைகளை பின்பற்றுவார்கள். அதே சமயம் குழந்தைகளுக்கு யாராவது ஏதாவது உதவி செய்யும் போது அதற்கு ''நன்றி'' தெரிவிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

13. பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை எட்டாத போது குழந்தை முகம் வாடி இருக்கும். அப்போது இந்த போட்டிகளில் கலந்துகொள்வது தான் முக்கியம் என்று கூற வேண்டும். அப்போது தோல்வியை கண்டு அவர்கள் பயப்பட மாட்டார்கள்.

14. பல போட்டிகளில் பங்குபெறும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் வளரும். பள்ளிகளில் நடக்கும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடக் கூடாது. ஏனெனில் குழந்தைகளின் திறமையை உரசி பார்க்கும் இடமே அதுதான். அங்கு கிடைக்கும் ''ரிசலட்''டை வைத்து குழந்தை செல்ல வேண்டிய பாதையை வகுக்க முடியும்.

15. இவை அனைத்துடன் சுற்றுப்புற தூய்மை அவசியத்தை விளக்குவதும் நமது கடமை ஆகும். இதையெல்லாம் பெற்றோர் சரி வர கடைபிடித்தால் தன்னம்பிக்கை உள்ள குழந்தை தயார்.

ஒரு குழந்தை பெரிய அறிவாளியாகவும், திறமைசாலியாகவும் வளர்வது ஒவ்வொரு பெற்றோர்களின் வளர்ப்பில்தான் உள்ளது.


நன்றி: இருவர்உள்ளம்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்
 
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். (1106)

பொருள்: இவள் தொடும் போதெல்லாம் என்னுயிர் உயிர் பெற்றெழுவதால் இவளுடைய தோள்கள் அமிழ்தத்தால்(அமிர்தத்தால்) ஆனவை போலும்.

 

இன்றைய பழமொழி

அராபியப் பழமொழி
funny desert arab camel (click to view)


குருடனை விருந்துக்கு அழைத்தால் கூட ஒருவன் வருவான்.

புதன், மே 28, 2014

அல்சர் நோய்க்கு மருந்தாகும் பீட்ரூட்

செக்கச் செவேல் சிவப்பு நிறத்துடன் நியை சத்துகளையும் கொண்ட காய், பீட்ரூட். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பெருமை பெற்றுத்திகழ்கிறது. பீட்ரூட்டின் சில மருத்துவப் பெயன்களை இங்கே பார்க்கலாம்..

•பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

•பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி சேர்த்துக் கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ, எரிச்சல், அரிப்பு மாறும்.

•தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத்தடவினால் தீப்புண், கொப்புளம் ஆகாமல் விரைவில் ஆறும்.

•பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும், பீட்ரூட் ரத்த சோகையைக் குணப்படுத்தும்.

•பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமான சக்தியைக் கூட்டும்.

•பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலமிச்சைச் சாற்றில் தோய்த்து உண்டு வர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

•பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வந்தால் அவை அனைத்தும் குணமாகும்.

நன்றி: மாலைமலர்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்

வேட்ட பொழுதின் அவைஅவை போலுமே 
தோட்டார் கதுப்பினாள் தோள். (1105)
 
பொருள்: மலரணிந்த கூந்தலையுடைய இவளுடைய தோள்கள் விரும்பிய போது அவை, அவை(என்னால் விரும்பப் பட்ட பொருள்கள்) தரும் இன்பத்தைப் போல இன்பம் தருகின்றன.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

பணக்காரனாய் சாகவேண்டும் என்பதற்காக 'சிக்கனம்' என்னும் பெயரில் வறுமையாய் வாழ்வதும் வடிகட்டிய முட்டாள்தனம்.

செவ்வாய், மே 27, 2014

சர்க்கரை நோய் அபாயத்தைத் தடுக்க...

சர்க்கரை நோய் என்பது எது? 

இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின்தான். ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்கிறார்கள்.

புதிய ஆய்வுகள்!

மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சர்க்கரை நோய்க்கும் இதயம் தொடர்பான நோய்க்கும் (Cardiovascular disease CVD) உள்ள நெருக்கம் பற்றி புதிது புதிதாக ஆராய்ந்து வருகிறார்கள். பொதுவாக, இரத்தத்திற்கு வெளியே இன்சுலின் குளுக்கோஸாக மாறிய பின்னர்தான் ரத்த செல்களுக்குள் செல்லும். ஆனால், குளுக்கோஸின் அளவு கூடினால், ரத்த ஓட்டத்தில் உள்ள இன்சுலினை பயன்படுத்த முடியாமல் உடலானது பம்ப் பண்ணுவதால், சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால்தான் இதயநோய் (CVD) மாதிரியான நோய்கள் வருகின்றன. இன்சுலின் அளவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அநியாயத்திற்கு உயரும்போது ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகப்படியாக படிவதாலும் இதய நோய் வரலாம் என்கிறார்கள்.

மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வுப்படி, நடுத்தர வயதுடையவர்களில் அதிக எடையுள்ளவர்களுக்குத்தான் (over weight) இன்சுலின் சுரப்பதில் தடையும் ரத்தத்தில் அதிகளவு குளுக்கோஸ§ம் இருப்பது தெரிய வந்துள்ளது.

இவர்களுக்குத்தான் ‘ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ராலும் (unhealthy cholesterol) உயர் ரத்த அழுத்தப் பிரச்னையும் இருக்கும். இதனால்தான் சர்க்கரை நோய் (diabetes), இதயநோய் (Heart disease), இதயத்தாக்கம் (stroke) போன்றவற்றிற்கான நோய் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

கீழே உள்ள சில வழிமுறைகள், உடலில் இன்சுலின் சுரப்பதில் பிரச்னை இருந்தாலோ, மற்ற நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவற்றை எதிர்த்துப் போராடி, சரிசெய்ய உதவும்.

1. நடவுங்கள்... டயாபடீஸை விரட்டலாம் :

அதிக எடை உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். அதோடு இன்சுலின் சுரப்பதில் தடையும், இதயநோய் சம்பந்தப்பட்டதும் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி மிகமிக உயர்ந்த வழி.

முறையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எட்டு மாதத்திற்குப் பிறகு 8 சதவீத கொழுப்பு கரைந்து விட்டதாகவும், அடிவயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுபிடித்தார்கள். ஒரு நாளைக்கு 30 நிமிடம் என்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் நடப்பவர்கள் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை உடல் எடையைக் குறைக்கமுடியும். 58 சதவீதம் சர்க்கரை நோய் அபாயத்தைத் தடுக்கமுடியும்.

ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி மிகமிக அவசியம். அதிகம் டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களைவிட இவர்களுக்கு இதயநோய் அபாயம் மிகமிகக் குறைவு.

2. காலை உணவைச் சாப்பிட மறக்காதீர்கள்!


காலையில் எழுந்ததும் காலை உணவை ஒழுங்காகச் சாப்பிடாதவர்கள் மற்றும் அடிக்கடி காலை உணவைத் தவிர்ப்பவர்களைவிட, ஒழுங்காகச் சாப்பிடுபவர்களுக்கு உடற்பருமனும் இன்சுலின் சுரப்பதில் தடையும் 35 முதல் 50 சதவீதம் வரை குறையும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால், காலை உணவை யாரும் தவறவிடாதீர்கள். குறிப்பாக நவதானிய உணவுகள் சேர்ப்பது நல்லது.

3. மகிழ்வான சூழல் : (Laugh it up)

பொதுவாக நன்றாகச் சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வர வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தியும், நல்ல மூடும் உருவாகும் என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன.

இப்போது, டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக வாய்விட்டுச் சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு Êஏறும் குளுக்கோஸின் அளவு மிகமிக குறைவு என்கிறார்கள்.

இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித்தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒருநாள் சீரியஸான விரிவுரையைக் கேட்க வைத்திருக்கிறார்கள். இன்னொரு நாள் நன்றாக வாய்விட்டுச் சிரிக்கும் காமெடி நிகழ்ச்சியில் பங்குகொள்ள வைத்திருக்கிறார்கள். சீரியஸான விரிவுரையைக் கேட்ட நாளைவிட, காமெடி நிகழ்ச்சியில் கலந்து வாய்விட்டுச் சிரித்த நாளில் அவர்களின் குளுக்கோஸ் அளவு குறிப்பிட்ட அளவு குறைந்திருந்ததைக் காட்டியதாம்.

4. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்:

உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் அடிக்கடி மாறி மாறி, இதய நோய், இதயத் தாக்கம் என்று கொண்டுபோய் விடுகின்றன. ஆனால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் 44 சதவீத சர்க்கரை நோய் தொடர்பான தாக்கம் வராது என்கிறார்கள்.

சர்க்கரை நோய் வந்த பின்னர், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுத்துக்கொள்ளும் சிரத்தையில் கொஞ்சமாவது அந்நோய் வரும்முன் காட்டினால் போதும். சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கலாம். சர்க்கரை நோயைத் தடுப்பது என்பது, அதனுடன் தொடர்புடைய இதய நோய்கள், கிட்னி பிரச்னைகள் வராமல் காப்பதற்குச் சமமானதாகும்.

நன்றி: குமுதம்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்

நீங்கின் தெறூ உம் குறுகுங்கால் தண்ணென்னும் 
தீயாண்டுப் பெற்றாள் இவள். (1104)
 
பொருள்: இவளை நீங்கினால் 'பிரிவு' என்னும் தீ சுடுகின்றது. இவளை நெருங்கினால் அதே நெருப்பு 'நெருக்கம்' என்னும் தீயால் குளிர்விக்கிறது. இத்தகைய புதுமையான தீயை இவள் எங்கிருந்து பெற்றாளோ?

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 
  

தனக்கு நிகழாதவரை உலகில் நடைபெறுபவை எல்லாம் வேடிக்கைதான்.

திங்கள், மே 26, 2014

முதுமையை விரட்டும் நெல்லிக்காய்

மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான். ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது.

நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, இளமையுடன் காட்சியளிக்கும். குறிப்பாக மிருதுவான, பொலிவுடன் கூடிய சருமத்தை பெறலாம்.

ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும். ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.

நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது. அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்து காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம். மேலும் நரைமுடி, பொடுகு போன்ற தொல்லைகளுக்கும் சிறந்த நிவாரணத்தை பெறலாம்.

நன்றி: மாலைமலர்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் 
தாமரைக் கண்ணான் உலகு. (1103)
 
பொருள்: தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் தூக்கத்திற்குத் தாமரைக் கண்ணனின்(திருமாலின்) உலகம் ஈடாகுமா?

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே அவனை அவனுக்கே உணர்த்தி, அவனது பலத்தையும், பலவீனங்களையும் எடுத்து உரைக்கின்றன.

வாய் துர்நாற்றமும் தடுக்கும் முறைகளும்:

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நம் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் (plaque)  நம் வாயில் சேர்ந்து கொண்டே இருப்பது, உணவு உண்ட பின் வாயை சரியாகக் கழுவாமல் இருப்பது போன்றவை முக்கிய காரணங்கள். பல்லில் ஏற்படும் சிதைவு, பற்குழிகள் ஈறுகளில் வரும் நோய்கள் போன்றவை மற்ற காரணங்கள்.
மிகவும் அரிதாக நுரையீரல் அல்லது இரைப்பையில் ஏற்படும் தொற்றுக் கிருமிகளால் வாய் துர் நாற்றம் ஏற்பட கூடும். பூண்டு சேர்த்து செய்யப்படும் உணவுகளை உண்பதும் ஒரு காரணம். பூண்டு, வெங்காயம் இவைகளை உண்டவுடன் இவற்றில் இருக்கும் மிகக் கடுமையான வாசனை இரத்த ஓட்டத்துடன் கலந்து நுரையீரல் வழியாக மூச்சுக் காற்றுடன் வெளியே வருகிறது. ஆல்கஹால் மற்றும் புகையிலை மெல்லுவதும் கூட வாய் துர் நாற்றம் வர காரணம்.
சில உடல் உபாதைகள் சைனஸ் அல்லது டயாபடிஸ் (வாயிலிருந்து ஒருவித இராசாயன வாசனை வரும் இவர்களுக்கு) இருப்பவர்களும் இந்த வாய் துர் நாற்றத்திற்கு ஆளாகிறார்கள்.
எப்படி இந்த துர் நாற்றத்தைத் தவிர்க்கலாம்?
  • வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்: ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் விளக்கவும். பல் மருத்துவரிடம் சென்று மாதத்திற்கு ஒரு முறை பற்களை floss  செய்து கொள்ளவும். floss என்பது பிளாஸ்டிக்கினால் ஆன மெல்லிய இழை. இதன் மூலம் பற்களின் நடுவில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துணுக்குகளை நீக்கலாம். வீட்டிலேயே நாமே செய்து கொள்ளலாம். அதே போல ஈறு களின் ஓரங்களில் இருக்கும் பாக்டீரியாக்களையும் அகற்றலாம். ஒவ்வொரு முறை சாப்பிட்டப் பிறகும் வாயை நன்றாக கொப்பளிக்கவும்.
  • நாக்கு வழித்தல்: பற்களை சுத்தம் செய்வது போலவே நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாத நாக்கினில் இருக்கும் கிருமிகளும் கூட துர் நாற்றத்தை ஏற்படுத்தும். இப்போதெல்லாம் டூத் ப்ரஷிலேயே பின் புறம் நாக்கு வழிக்க வசதியாக டங் கிளீனர் வைத்துள்ளனர். தனியாகக் கிடைக்கும் டங் கிளீனரை உபயோகப் படுத்துவது நல்லது.
  • வாய் உலராமல் பார்த்துக் கொள்ளுங்கள்: வாய் நீண்ட நேரம் நீர் குடிக்காமல் இருந்தால் உலர்ந்து போகும். நம் வாயில் ஊறும் உமிழ் நீர் நம் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நாம் சாப்பிடும் போது உணவுத் துணுக்குகள் உமிழ் நீருடன் கலந்து உணவு குழாய்க்குள் செல்லுகிறது. வாயில் கிருமிகள் தங்காவண்ணம் உமிழ் நீர்  தடுக்கிறது. ஆனாலும் இரவு தூங்கும் போது உமிழ் நீர் ஊறுவது குறைகிறது. காலையில் எழுந்திருக்கும் போது மிகக் குறைந்த அளவு உமிழ் நீர் வாயில் இருப்பதால் வாய் உலர்ந்து போகிறது. அதனால் காலையில் வாய் துர் நாற்றம் உண்டாகிறது. இதற்கு வாய் உலராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது சிறிது சிறிது நீர் குடித்துக் கொண்டே இருப்பது நல்லது. காபி, தேநீர் போன்ற பானங்கள் வாயை உலரச் செய்யும். இவைகளைக் குடித்தபின் தண்ணீர் குடிப்பது, வாய் உலர்ந்து போகாமல் தடுக்க உதவும்.
  • சுத்தமான நீரினால் வாயைக் கொப்பளியுங்கள்: சாப்பிட்டு முடித்தவுடன் நிறைய நீரை வாயில் விட்டுக் கொண்டு வாயை மூடிய படியே வாயினுள் எல்லா பக்கங்களிலும் நீரை சுழற்றுங்கள். பிறகு வெளியே கொப்பளித்து விடுங்கள்.  இதனால் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்டுள்ள உணவுத் துணுக்குகள் நீருடன் வெளியே வந்து விடும். பல முறை இதனைச் செய்யுங்கள். காபி, தேநீர் குடித்த பின் வாயைக் கொப்பளிப்பது, அல்லது தண்ணீர் குடிப்பது பற்களின் நிறம் மாறாமல் இருக்கவும், பேசும்போது நாம் குடித்த பானத்தின் வாசனை வராமல் இருக்கவும் உதவும்.
  • சூயிங் கம்: மூலிகைகளினால் ஆன சூயிங் கம் மெல்லலாம். வாய் துர் நாற்றம் இதனால் போகாது என்றாலும், மற்றவருடன் பேசும் போது நம் வாயை மணக்கச் செய்யும்.
  • காரட் போன்றவற்றை நன்கு கடித்து சாப்பிடலாம். நொறுக்குத் தீனியாக வேர்கடலை, குறைந்த கொழுப்பு சத்து கொண்ட சீஸ் முதலியவற்றை சாப்பிடலாம். இவை பற்களின் மஞ்சள் கறை படிவதைத் தடுப்பதுடன், வாய் துர் நாற்றத்தைத் தடுக்கவும் உதவும். இவற்றை கடித்து சாப்பிடுவதால் பற்களும் பலமாக ஆகின்றன.
  • எதை சாப்பிட்டாலும் உடனே வாயை சுத்தம் செய்வது மிக மிக நல்லது. ஒவ்வொரு முறை சாப்பிட்டவுடனேயும் – சிற்றுண்டியோ, சாப்பாடோ, முறுக்கு, ஸ்வீட் போன்ற பலகார வகைகளோ – வாயைக் கொப்பளிப்பதை பழக்கப் படுத்திக் கொள்ளவும். வாய் கொப்பளிக்கக் கூடிய சூழ்நிலை இல்லை என்றால் தண்ணீர் குடித்து வாயை உணவுத் துகள்கள் தங்காமல் பாதுகாத்துக் கொள்ளவும்.
  • கட்டுப் பல் : தினமும் உங்கள் பல் செட்டை சுத்தம் செய்யுங்கள்.
  • டூத் பிரஷ்: 3 அல்லது 4 மாதத்திற்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்றவும். மிருதுவான பிரஷையே பயன் படுத்தவும்.
இவை எல்லாம் உங்கள் வாய் நாற்றத்தைக் குறைக்க உதவலாம். ஆனாலும் பல் மருத்துவரிடம் சென்று என்ன பிரச்சினை என்பதை அறிந்து வைத்தியம் செய்து கொள்ளுவது நல்லது. அவ்வப்போது பற்களை சுத்தம் செய்து கொண்டு வருவது சாலச் சிறந்தது.
நன்றி:  a2ztaminadunews.com & ranjaninarayanan.wordpress.com

ஞாயிறு, மே 25, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்

பிணிக்கு மருந்து பிறமன்; அணிஇழை 
தன்நோய்க்குத் தானே மருந்து. (1102)
பொருள்: நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக உள்ளன. ஆனால் அழகிய அணிகளையணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு(காமத்திற்கு) இவளே மருந்தாக இருக்கின்றாள்.

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து 


 வாய்க்குள் செல்வது(உணவுகள்) மனிதரைத் தீட்டுப்படுத்தாது(அசுத்தம் செய்யாது); மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும். வாயினின்று வெளிவருபவை(சொற்கள்) உள்ளத்திலிருந்து வருகின்றன. அவையே மனிதரை தீட்டுப்படுத்துகின்றன.

சனி, மே 24, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் 
ஒண்தொடி கண்ணே உள. (1101)
பொருள்: கண்டும், கேட்டும், உண்டும், மோந்தும், உள்ளும்(தீண்டியும்) அறிகின்ற ஐம்புல இன்பங்களும், அழகிய வளையணிந்த இவளிடத்தில் உள்ளன.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

சூதாட்டம் என்பது முட்டாள்களுக்கு மட்டும் இயற்கையால் விதிக்கப்படும் கடுமையான வரி.

வெள்ளி, மே 23, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

கண்ணோடு கண்இணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. (1100)

பொருள்: காதலர்களின் கண்கள் அன்போடு பார்த்துக் கொண்ட பிறகு அவர்கள் வாயால் பேசிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை.



இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

உன்னை வந்தடையும் புகழையும், மற்றவர்கள் உன்னைக் குறித்துக் கூறும் புகழ்ச்சியையும் வெறுக்கத் தெரிந்து கொள். ஏனென்றால் நம் உள்ளத்திலே தீமையை வளர்ப்பது புகழ் மொழிகளே.

வியாழன், மே 22, 2014

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டுமா?

தேங்காய், நம் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதை தான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல, சிறந்த மருத்துவப் பொருளும்கூட என்கிறது சித்த மருத்துவம்.

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல்நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம், தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.

புரதச்சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் 'சி', அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய்ப் பால், உடல் வலிமைக்கு நல்லது.

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளைப்படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தைச் சேர்த்து, தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
தேங்காயில் உள்ள 'பேட்டி ஆசிட்' (Fatty acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச்சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நன்றி: மாலைமலர்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் 
காதலார் கண்ணே உள. (1099)

பொருள்: அயலாரைப் பார்ப்பது போல் காதலர்கள் வெளியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது, உள்ளேயிருக்கும் அவர்களின் அசையாத அன்பிற்கு அறிகுறியாகும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

பயமும் தயக்கமும் உள்ளவனைத் தோல்விகள் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கும்.

புதன், மே 21, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

அசையியற்கு உண்டுஆண்டுஓர் ஏஎர்யான் நோக்கப் 
பசையினள் பைய நகும். (1098)

பொருள்: நான் அவளைப் பார்க்கும் போது அவள் என்னைப் பார்த்து அன்போடு நகைப்பாள், அசையும் இயல்புடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
  

தொடங்கிய இடத்தைத் தெரிந்து வைத்துக் கொள், அப்போதுதான் முடிக்கும் இடத்தையும் அறிந்து பயணம் செய்யலாம்.

‘‘ஒருவருக்கு ரத்தம் கொடுக்க பத்துபேர் பறந்தோடி வரணும்’’

செய்தியாளர்: குள.சண்முகசுந்தரம்
(The Hindu)
விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஜீவன் உரையாற்றுகிறார்
‘‘அம்மாவுக்கு காலில் குண்டடிபட்டு ஆபத்தான நிலையில் அகதியாக தமிழகம் வந்த எங்களை அரவணைத்துக் காப்பாற்றியது தமிழ் மக்கள். அந்த அன்புக்கு கைமாறு செய்யவே ரத்த, கண் தான சேவை செய்ய ஆரம்பிச்சேன்’’ - நன்றிப் பெருக்குடன் சொல்கிறார் ஜீவன்.
இலங்கை முல்லைத் தீவு மாவட்டம் மல்லாவி கிராமத்தைச் சேர்ந்தது ஜீவன் குடும்பம். 1990-ல் ராணுவத் தாக்குதலில் ஜீவனின் அம்மாவின் காலில் குண்டடிபட்டது. அதற்குமேல் அங்கிருக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் ஜீவனின் குடும்பம் அகதியாக தமிழகம் வந்தது. மதுரை அருகே உச்சப்பட்டி அகதிகள் முகாமில் இவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. பிறகு நடந்ததை ஜீவன் சொல்கிறார்.
"என் அம்மாவைக் காப்பாற்ற முடியுமா என்கிற சந்தேகத்துடன்தான் தமிழ் மண்ணை மிதித்தோம். இலங்கையில் அவசரத் தேவைக்கு மருத்துவ வசதியோ, மருந்தோ கிடைக்காது. இங்கே கிடைத்த வசதிகளைப் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டேன். அரசாங்கத்தைவிடவும் இங்குள்ள மக்கள் எங்களை நல்லாவே பாத்துக்கிட்டாங்க. கஷ்டப்பட்டு அம்மாவையும் சுகப்படுத்தியாச்சு". 

ஜீவன்
காப்பாற்றிய மக்களுக்கு கைமாறு
"எங்களை அரவணைச்ச தமிழ் மக்களுக்கு ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சேன். பண உதவி செய்ய என்கிட்ட வலு இல்லை. அதனால, ரத்த தானம், கண் தானம் பற்றி பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சேன். நான் தனி ஆளாகப் போய் பேசியபோது பெரியவங்க யாரும் என் பேச்சை நின்னுகூட கேட்கல. அப்புறம்தான், பள்ளிகளில் 10-லிருந்து 12-ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் மத்தியில் பிரச்சாரத்தை தொடங்கினேன்.
அந்தப் புள்ளைங்க ரத்த தானம் செய்ய முடியாது. ஆனா, அதோட முக்கியத்துவத்தை அவங்க மனசுல விதைச்சா, அவங்க பல பேரை தானம் குடுக்க வைப்பாங்கன்னு நம்புனேன். அதுல வெற்றியும் கிடைச்சுது.

மதுக்கடையிலும் பிரச்சாரம்
நான் இலங்கை அகதிங்கிறதால பள்ளிக்கூடங்கள்ல விழிப்புணர்வு பிரச்சாரம் பண்ண அதிகாரிகள் ஒப்புக்கல. மூணு மாசம் அலைஞ்சு சென்னையில் மறுவாழ்வுத் துறை அதிகாரிகளிடம் அனுமதிக் கடிதம் வாங்கி வந்து கொடுத்து பிரச்சாரத்தை தொடர்ந்தேன். ஆரம்பத்துல டெய்லர் கடையில வேலை பார்த்தேன். நடுவுல 2 மணி நேரம் பர்மிஷன் வாங்கிட்டுப் போய் பள்ளிக் குழந்தைகள்ட்ட பேசிட்டு வருவேன். என் பணத் தேவைக்காக டீத்தூள் வியாபாரம் பண்ணேன், கீரை விற்றேன், ஒயின் ஷாப்புலகூட வேலை பார்த்தேன். ஒயின் ஷாப்புக்கு வர்றவங்களிடம் மதுவின் தீமை, ரத்த தானம் குறித்து பேசினதால, அந்த வேலையில நிலைக்க முடியல. இப்ப, கொசு வலை, ஃப்ளோர் மேட் போடும் வேலை செய்கிறேன். எங்கள் முகாமைச் சேர்ந்த 7 பேர் உள்பட இதுவரை மொத்தம் 14 பேரை கண் தானம் செய்ய வச்சிருக்கேன். 45 பேரை வழக்கமாக ரத்த தானம் செய்யும் குருதிக் கொடையாளரா மாத்தியிருக்கேன்.
ரத்த தானம் செய்யும் 265 பேர் பட்டியல் என் செல்போனில் இருக்கிறது. அவர்களது எண்ணை அழுத்தினாலே அவர்களது ரத்த வகை தெரியுமாறு பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
தமிழகம் முழுவதும் 117 அகதி முகாம்கள் இருக்கு. முகாமுக்கு 5 பேரையாவது குருதிக் கொடையாளரா மாத்தணும்கிறது என் ஆசை, கனவு. ‘ஈழம் ரத்ததான கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கும் திட்டமும் இருக்கு. ஒருவருக்கு ரத்தம் தேவை என்றால், தானம் கொடுக்க 10 பேர் பறந்தோடி வரணும். அந்த நிலையை உருவாக்குவதுதான் லட்சியம் என்று நெகிழவைத்தார் ஜீவன். 
நன்றி:thehindu.com

செவ்வாய், மே 20, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. (1097)

பொருள்: கபடமின்றிச் சொல்லும் கடினச் சொல்லும், பகைவர்கள் போல பார்க்கும் பார்வையும் உள்ளே அன்பு நிறைந்திருப்பதற்கு அறிகுறிகளாகும்.

இன்றைய சிந்தனைக்கு

இந்தியப் பழமொழி

ஒரு நோயாளிக்கு நல்ல வரவேற்பு பாதி மருந்து என்பதை சிறந்த மருத்துவன் மட்டுமே அறிவான்.

திங்கள், மே 19, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 110 குறிப்பறிதல்
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும். (1096)

பொருள்: வெளியில் அயலவர் போல் அன்பில்லாமல் பேசினாலும் மனத்தால் பகையில்லாதவர்களின் சொல் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

இன்றைய சிந்தனைக்கு

வர்த்தமான மகாவீரர்

பிறர் மனம் நோகாத வகையில் இதமாகவும், மென்மையாகவும் பேசுங்கள். அதனால் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.

ஞாயிறு, மே 18, 2014

காபியும் டீயும் உடலுக்கு நல்லதா?

காலையில் சிலர் காபி கோப்பையில்தான் கண் விழிப்பார்கள். இன்னும் சிலரோ டீ வாசனை மூக்கைத் துளைத்தால்தான் படுக்கையில் இருந்தே எழுவார்கள்.

இப்படி காபி, டீயுடன் அன்றைய நாளைத் தொடங்கும் சுவைப் பிரியர்களின் மனதில் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும் கேள்வி, 'எது நல்லது? காபியா? டீயா?' முதலில் 'டீ'க்கு வருவோம். டீ குடித்தால் சில புற்றுநோய்களும், இதயநோய்களும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.

அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க டீ உதவுகிறது. ஒரு கப் டீயில் காபியை விட குறைவான 'காபீன்' இருக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உயர் ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கப் டீயுடன் நிறுத்திக் கொள்வது நல்லது.

இப்படிப்பட்டவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடக் கூடும். சிலர் டீயை கொதிக்க கொதிக்க அப்படியே தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே தொடர்ந்தால் தொண்டையில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது, சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.

காபி விஷயத்தைக் கவனிப்போம். டீயை விடவும் காபியில் 'காபீன்' அதிகம் இருப்பதால் டீயை விட சிறப்பாகவும், வேகமாகவும் அதிக செயல்திறனை உணரமுடிகிறது. டீ குடிப்பவர்களுக்கு ஏற்படும் சுறுசுறுப்பை விட இது அதிகம்.

குறிப்பாக டிகாஷன் காபிக்கு நகர்ப்புறத்தில் பிரியர்கள் அதிகம். வடிகட்டப்பட்ட 'பிளாக் காபி’க்கு அல்சை மர்ஸ், பெருங்குடல் புற்றுநோய், டைப் 2 சர்க்கரை நோய் ஆகியவற்றை தடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாம். சிலர் கையில் எப்போதும் காபி கோப்பை புகைந்து கொண்டிருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் பின்னாளில் மனக்கவலை சார்ந்த நோய்களுக்கு உள்ளாகக்கூடும். எனவே காபியானாலும் அளவோடு குடித்து ஆரோக்கியம் காக்கலாம். காபிக்கு அடிமையாகிவிட்டதை உணர்ந்து திடுமென அதை நிறுத்த முயல்பவர்கள் ஒரேயடியாக சோர்ந்து போவார்கள். கவனம் செலுத்துதலில் குறைபாடு ஏற்படக்கூடும். காபியோ, டீயோ, கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம். 
நன்றி: மாலைமலர்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் 
சிறக்கணித்தாள் போல நகும். (1095)
 
பொருள்: என்னை அவள் நேராகப் பார்க்கவில்லை. ஆனால் அவள் ஒரு கண்ணை இறுக்கிக் கொண்டு பார்ப்பது போல் பார்த்து மகிழ்வாள்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

வாழ்க்கையில் விரைவாக உயரவேண்டும் எனும் ஆவலில் 'குறுக்கு வழிகளைக்' கையாளுவோர் அதிகம். விரைவில் உயர்வது பெரியது அன்று. எப்பொழுதும் உயர்ந்தபடி இருக்க வேண்டும் அதுவே பெரிது.

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்
எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.

* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.


நன்றி: இருவர்உள்ளம்

சனி, மே 17, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்
 
 
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். (1094)

பொருள்: நான் அவளைப் பார்க்கும்போது அவள் கீழே குனிந்து தரையைப் பார்ப்பாள். நான் பார்க்காத போது அவள் என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்வாள்.

இன்றைய சிந்தனைக்கு

முகம்மது நபி

சுவர்க்க மாளிகையை சென்றடைய நான்கு வழிச் சாலை இதுதான்:
1.   உன்னை வெறுப்பவர்களை நீ நேசம் கொள்.

2.   இல்லை என யாசிப்பவனுக்குக் கொடு.

3.   உனக்கு அநியாயம் செய்பவனை மன்னித்து விடு.

4.   'மீஸான்' என்னும் தராசில் நற்குணத்தை விட மேலானது வேறெதுவுமில்லை. நற்குணமுள்ளவனுக்கு சொர்க்கத்திலுள்ள மாளிகையைத் தர நான் துணைபுரிவேன்.

வெள்ளி, மே 16, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதுஅவள் 
யாப்பினுள் அட்டிய நீர். (1093)
 
பொருள்: அவள் என்னைப் பார்த்தாள்; நான் அவள் முகத்தைக் கண்டதும், வெட்கப்பட்டுத் தலை குனிந்தாள். அந்தக் குறிப்பு எங்கள் இருவரின் அன்புப் பயிருக்கு வார்த்த நீராகியது.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

நாம் அதீதமாக அன்பு செலுத்துவோர் செய்யும் தவறுகள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அன்பு குறைந்த இடத்தில் குற்றங்கள் பெரிதாகத் தோன்றுகின்றன.

வியாழன், மே 15, 2014

அடேங்கப்பா! வெந்நீர் இத்தனை நோய்களுக்கு நிவாரணியா?

எளிதாகக் கிடைக்கும் விஷயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒன்றுதான், 'வெந்நீர்'. தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம். அவை இதோ...

* காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

* ஏதாவது எண்ணைப் பல காரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்செரிச்சல் மறைந்துவிடும்.

* தொடர்ந்து வெந்நீர் குடித்தால், உடம்பில் சேரும் கொழுப்பு கரையும் என்று கூறப்படுகிறது.

* மூக்கு அடைப்பால் அவதிப்படுகிறீர்களா? வெந்நீரைப் போன்ற சிறந்த மருத்துவர் ஏது? வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு 'ஆவி பிடித்தால்' மூக்கு அடைப்பு, தலைப் பாரம் அகன்றுவிடும்.

* உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத் தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடியுங்கள். இதனால், பித்தத்தினால் ஏற்படும் வாய்க்கசப்பு மறைந்துவிடும். மேலும் உடல் வலிக்கும்போது நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு, சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

* அலைந்து திரிந்ததால் பாதங்கள் வலியெடுக்கிறதா? அப்போதும் வெந்நீர் தான் கை கொடுக்கும். பெரிய பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவு வெந்நீர் ஊற்றி, அதில் சிறிது கல் உப்பைப் போட்டு கொஞ்சம் நேரம் பாதத்தை அமிழ்த்தி எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போலத் தோன்றினால் வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகி விடும்.

* வீட்டில் துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யும் இல்லத்தரசிகள், வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் கைகளை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருங்கள். அதனால் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் அகன்று, கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

* வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனே 'ஜில்'லென்று ஐஸ் வாட்டர் பருகுவதைவிட வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தலாம். அது நன்கு தாகம் தீர்க்கும்.

* ஈஸ்னோபிலியா, ஆஸ்துமா போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக வெந்நீர் பருகுவது நல்லது. அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால் அது அந்த நேரத்தில் இதமாக இருப்பதோடு, விரைவாக இயல்பு நிலை ஏற்படும். இப்படி வெந்நீரின் நன்மைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். வெந்நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது என்றும் நன்மை தரும்.
நன்றி: மாலைமலர்