சனி, பிப்ரவரி 26, 2011

எந்தக் குழந்தையும் -அத்தியாயம் 13

ஆக்கம் இ.சொ. லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்.

நான் மேலே குறிப்பிட்ட 'மேற்கத்திய' நாடுகளில் உள்ள பெண்கள் சிறு வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரைகளை உபயோகிக்க ஆரம்பிப்பதால் தமது கர்ப்பப் பையைப் பலவீனமடையச் செய்வதுடன், சினைப் பையின்(கரு முட்டை உருவாகுமிடம்) செயற்பாட்டில் உள்ள சமநிலையைத்  (regulation) தமது அறியாமையான சில செயற்பாடுகளால் குழப்பி விடுகின்றனர். இதனால் கருப்பையின், சினைப்பையின் செயற்பாடுகள் ஒரு ஒழுங்கில் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் அவர்கள் பல உடலியல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். உதாரணமாக , உடல் பருமனாதல், ஒழுங்கீனமான மாதவிலக்கு, எதிர்பாராத நேரத்தில் காரணமில்லாமலே பெண்ணுறுப்பிலிருந்து குருதிக் கசிவு, தலைவலி, தலைப்பாரம், தலைச் சுற்று, உடல் பலவீனமாதல், வாந்தி போன்ற இன்னோரன்ன கோளாறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.
அதேபோல் பல சந்தர்ப்பங்களில் இப்பெண்கள் தாம் கர்ப்பமுற்று உள்ளதை அறியாமலே, ஒரு சில மாதங்கள் மதுபானம் அருந்துதல், புகைத்தல், போதைப் பொருட்களை உபயோகித்தல் போன்ற தீய செயல்களைத் தொடருகின்றனர். இவர்கள் தாம் கர்ப்பமுற்று இருக்கின்ற நிலை தெரிய வரும்போது அது பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையாகவே இருக்கிறது. இருந்தும் தமது கருவில் வளரும் சிசுவின் வளர்ச்சிக்கு, ஆரோக்கியத்திற்கு கேடான செயல்களில் இறங்கியிருப்பதான எவ்வித 'குற்ற உணர்வும்' இவர்களை ஆட்கொள்வதில்லை. ஐரோப்பாவில் பல நாடுகளில் குறிப்பாக டென்மார்க்கில் கர்ப்பமுற்ற ஒரு இளம்பெண், தான் கர்ப்பமுற்ற பன்னிரண்டு வாரங்களுக்குள் (ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குள்) தனது 'சுய விருப்பத்தின்' பேரில் கருக்கலைப்புச் செய்துகொள்ள சட்டம் இடமளிக்கிறது. இச்சட்டம் 1973 ஆம் ஆண்டு தொடக்கம் டென்மார்க்கில் அமுலில் உள்ளது. இச்சட்டம் 'உயிர்க்கொலைக்கு' ஆதரவாக உள்ளது என்ற ஒரு பார்வையும், அதிருப்தியும் மக்களில் ஒரு பங்கினரிடம் உள்ளமையையும், காணக் கூடியதாக உள்ளது. ஆனால் அரசாங்கத்தின் விளக்கம் வேறு மாதிரியாக உள்ளது. அதாவது சமுதாயத்தில் பெற்றோரின் 'போதுமான' கவனிப்பு இல்லாமல் போகக்கூடிய ஏதுநிலை உள்ள குழந்தைகள் உருவாவதை அரசு விரும்பவில்லை, மிகக் குறைந்த வயதில் ஒரு இளம்பெண் கர்ப்பமுற்று, ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் பட்சத்தில் அக்குழந்தை போதுமான கவனிப்பு கிடைக்காமல், நேரிய முறையில் வளர்க்கப்படாமல் போக வாய்ப்புள்ளது. அக்குழந்தை பின்னர் நாட்டிற்குச் சுமையாக, குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரஜையாக மாறுகின்ற வாய்ப்பும் உள்ளது. ஆகவே 'கவனிப்பார் இன்றி' அதிக குழந்தைகள் வளர்வதை அரசு விரும்பவில்லை ஆதலால் 'கருக்கலைப்புக்கு' அரசின் பூரண  அனுமதி உள்ளது என்ற அரசாங்கத் தரப்பு வாதம் ஏற்புடையதே. 
ஆனாலும் இக்கருக்கலைப்பு விடயத்தில் சகல நெறிமுறைகளையும் 'காற்றில் பறக்கவிட்டு' அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக நாம் முடிவுக்கு வரக் கூடாது. ஏனெனில் 18 வயதிற்கு மேற்பட்ட ஒரு இளம் பெண்ணிற்கே கருக்கலைப்பு விடயத்தில் இவ்வாறு தனது சுய விருப்பத்தின் பேரில்(தன்னிச்சையாக) முடிவெடுக்கும் உரிமை உள்ளது. அப்பெண் 18 வயதிற்குக் குறைந்தவளாக இருந்தால் அவளது பெற்றோர் அல்லது கர்ப்பத்திற்குக் காரணமான அவளது காதலன்(ஐரோப்பிய நாடுகளில் இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பே காதலனுடன் சேர்ந்து வாழ்தல் சாதாரண ஒரு விடயம் என்பதை ஆசிய நாட்டு வாசகர்கள் அறிக) மருத்துவரின் ஒப்புதலுக்கு அழைக்கப் படுவர். இதுவே பதினைந்து வயதிற்குக் குறைந்த ஒரு சிறுமியாக இருக்கும் பட்சத்தில் மேற்படி கர்ப்பத்திற்குக் காரணமான இளைஞன் சிறுமியை விடவும் வயதில் மூத்தவனாக இருப்பின் அவன் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். கர்ப்பத்திற்குக் காரணமான ஆடவன் சிறுமியை விடவும் வயதில் மூத்த ஒரு ஆணாக இருப்பின் அவர் சிறைக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் பதினைந்து வயதிற்குக் குறைந்த ஒரு சிறுமியுடன் பாலுறவு வைத்துக் கொள்வது டேனிஷ் சட்டப்படி கடும் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். இச்சட்டமே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப் படுகிறது எனக் கருதுகிறேன். இதுவே கர்ப்பத்திற்குக் காரணமான அல்லது அச்சிறுமியோடு பாலுறவில் ஈடுபட்ட இளைஞன் பதினான்கு வயதிற்கு உட்பட்டவனாக இருப்பின் அவனைத் தண்டிப்பதற்கு டேனிஷ் சட்டத்தில் இடமில்லை ஆதலால் அவன் ஒரு நன்னடத்தைப் பள்ளிக்கு(சிறுவர் சீர்திருத்தப் பள்ளி) அனுப்பப் படுவான்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

1 கருத்து:

சசிகலா சொன்னது…

தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு நட்போடு அழைக்கிறேன் .

கருத்துரையிடுக