திங்கள், ஏப்ரல் 08, 2013

கோடை வெயில் சமாளிப்பது எப்படி?

கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலையாளர்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாரபட்சம் பாராமல் அனைவரையுமே பாடாகப்படுத்தும். சம்மர் (கோடை) இந்தியாவில் குழந்தைகள், நடுத்தர வயதினர், வயதானவர் என 3 பிரிவினரையுமே வெயில் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக்கிவிடுகிறது. வயதானவர்களுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ என்ற 'வெயில் வெப்பத்தாக்கு நோய்', நடுத்தர வயதினருக்கு சிறுநீர் பிரச்னை, குழந்தைகளுக்கு தொண்டை பாதிப்புக்கள் என பட்டியல் நீளமானது. சரும மற்றும் வியர்வை பிரச்னைகள், 'அம்மை' என எல்லோரையும் தாக்கும் பாதிப்புகளும் உண்டு.கோடை காலத்தில் நாம் அடிக்கடி பார்க்கும் செய்தி, "வெயிலில் சுருண்டு முதியவர் பலி" என்பது. இது எப்படி ஏற்படுகிறது? ‘‘அதிக வெப்பத்தால் முதியவர்களின் உடலில் வறட்டுத் தன்மை ஏற்பட்டு நீர்ச்சத்து வேகமாகக் குறையும். அந்த நேரத்தில் இன்னும் வெயிலில் அலைந்தால் ‘ சன் ஸ்ட்ரோக்’ என்ற வெப்பத்தாக்கு ஏற்படும் . நீர்ச்சத்து குறைவதைப் பொறுத்து இது மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும். கோடையில் வயதானவர்கள் காற்றோட்டமான சூழ்நிலையிலும், வெயிலில் அலையாமலும் இருப்பதே நல்லது. இந்நோய் பெரும்பாலும் வடஇந்தியா, பாலைவனப் பகுதிகள், வெப்பநிலை அதிகமாகப் பதிவாகும் இடங்கள் மற்றும் வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்க்கும் வயதானவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும்’’ என்கிறார் மருத்துவ நிபுணர் ஒருவர் .‘ ‘இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ள வயதானவர்களுக்கு கோடை காலத்தில் ரத்தத்தில் உப்புச்சத்தின் அளவு மாறுபடும். சிறுநீரகப் பாதிப்புகளைக்கூட அந்த உப்புத்தன்மை ஏற்படுத்திவிடும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.நீர்ச்சத்து அதிகமுகள்ள தர்ப்பூசணி, இளநீர் , வெள்ளரி பழங்கள் நல்லது. தர்ப்பூசணியில் நீர்ச்சத்தும் சர்க்கரைச்சத்தும் சரிவிகிதத்தில் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வெள்ளரி சாப்பிடுவது நல்லது’’ நடுத்தர வயதினருக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு அடிக்கடி வந்து எரிச்சலை கிளப்பும். ‘‘கோடை காலத்தின் முக்கிய பிரச்னை" உடலில் நீர்ச்சத்து குறைவதுதான். இதனால், களைப்பு அதிகமாகும்.
கோடையில் சிலருக்கு சிறுநீரில் கலந்துள்ள உப்புக்கள் சரிவர கரையாமல், அது வெளியேறுவதில் பாதிப்பு வரும். அந்த நேரத்தில் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்பட்டு சிரமப்படுத்தும். உப்புக்கள் நன்றாகக் கரைய தண்ணீரே அருமருந்து. தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடித்தாலே நீர்க்கடுப்பு உள்பட சிறுநீர் பாதிப்புகளை துரத்திவிடலாம்’ ’ என்கிறார் சென்னை சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர் ஒருவர். கோடையில் குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோருக்குப் பெரிய சவால். கொசு தொல்லைகள் அதிகம் இருக்காது என்பதால் மலேரியா, டைபாய்ட், சிக்குன் குனியா உள்பட நோய்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால், அம்மை நோய் வர வாய்ப்புக்கள் அதிகம். இது தொற்றுநோய் என்பதால் ஒருவருக்கு வந்தால்,மற்றவர்களுக்கும் எளிதில் வந்துவிடும். அதனால், பெற்றோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வெயில் காலம்தானே என்று நினைத்து,
குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜ் தண்ணீர் அதிகம் கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்குத் தொண்டையில் தொற்று ஏற்பட்டு பாதிப்பு வரலாம். சில குழந்தைகளுக்கு தொண்டையில் ஏற்படும் பாதிப்பு இதய நோயில் கொண்டு போய் விட்டுவிடும். அதனால் மருத்துவரின்ஆலோசனை மிக அவசியம்.
குழந்தைககள் வெயிலில் அதிகம் விளையாடுவார்கள் என்பதால் நீர் இழப்பும் அதிகமாகவே இருக்கும். தண்ணீர் அதிகம் பருகச் செய்ய வேண்டும்.குழந்தைகளின் எடைக்கு ஏற்றவாறு 1 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை கொடுக்கலாம். நீர்ச்சத்து அதிகமுகள்ள பழங்கள் அதிகம் கொடுப்பதும் நல்லது.அதை பழங்களாகவே கொடுக்க வேண்டும். ஐஸ் கலந்து ஜூஸாக கொடுக்க வேண்டாம். காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 4 மணி வரை குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. சூரியனின் நேரடிப் பாதிப்பு இந்நேரத்தில் அதிகம் என்பதால் தவிர்க்கலாம். அசைவ உணவுகள் அதிகம் ஜீரண பிரச்னையை ஏற்படுத்திவிடும். முட்டை, பால் ஆகி ய உணவு வகைகளைக் கொடுக்கலாம்.ஃபாஸ்ட் புட்(விரைவு உணவு), ஃப்ரைடு புட்(பொரித்த உணவுகள்) ஆகியவற்றை கோடை காலத்தில் தவிர்க்க வேண்டும்.தேர்வு முடிந்து வீட்டில் உள்ள குழந்தைகளை ‘சம்மர் கோச்சிங்’ என்ற பெயரில் அதிக அளவு தொந்தரவு செய்தால் அவர்களின் மனஅழுத்தம் அதிகரிக்கும். அடுத்த ஆண்டு வகுப்புக்கு செல்லும் குழந்தைககள் படிப்பில் சுணக்கம் காட்ட இது காரணமாகிவிடும். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் தொடர்பான பயிற்சிகளுக்கு அனுப்பலாம்’’ என்கிறார் சென்னை குழந்தைககள் நலம் மற்றும் உளவியல் நிபுணர். உடல் சிவந்து போகுதல், கொப்பளங்ககள்,
கட்டிகள் போன்றவை எல்லா வயதினரையுமே பயமுறுத்தும். வியர்வை பாதிப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.‘‘கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் வியர்வை நாளங்களில் அடைப்பு ஏற்படும். இதனாலேயே மேற்கண்ட பிரச்னைகள் உள்பட துர்நாற்றமும் ஏற்படுகிறது. வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படாமல் இருக்க காலை, மாலை என இருவேளை குளியல் நல்லது.
மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ஒருவர்.

கொளுத்தியெடுக்க கோடை வெயில் தயார்! உங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் தயாரா?

இளநீரே… இளநீரே…

கோடையின் அருமருந்து என்று இளநீரை சொல்லிவிடலாம். மற்ற நீர்ச்சத்துப் பழங்களைக் காட்டிலும் இதில்தான் எல்லாவிதச் சத்துகளும் சரிவிகிதத்தில் உள்ளன. இளநீருக்கு சூட்டை குறைக்கும் ஆற்றல் உண்டு. ஜீரணசக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏற்படும் நீர்&உப்பு பற்றாக்குறையை சரி செய்யும்.குடல்புழுக்களை அழிக்கும்.இதில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்பு, குளோரைடு, கந்தகம் போன்ற தாதுக்கள் சரிவிகிதத்தில் உள்ளன. புரதமும் சர்க்கரைச் சத்தும் சமமாகவே உள்ளன.
எல்லோருக்கும் ஏற்ற இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. அதில் உள்ள அமிலம் வயிற்றில் புண்ணை உருவாக்கிவிடும். கவனம்!

நன்றி: senthilvayal.wordpress.com

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பயனுள்ள தகவல்கள்...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

கருத்துரையிடுக