செவ்வாய், ஏப்ரல் 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 72, அவை அறிதல்
 
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக; சொல்லின் 
தொகைஅறிந்த தூய்மை யவர். (711)

பொருள்: சொற்களின் தொகுதியை அறிந்த தூய அறிவாளர்கள் அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே எதனையும் சொல்ல வேண்டும்.

இன்றைய பொன்மொழி

அறிஞர் எபிக்டெட்டஸ் 

யாராவது உன்னைக் குறை கூறினால் அது உண்மைதானா என்று பார். உண்மை என்று தெரியவந்தால் உன்னைத் திருத்திக்கொள். பொய்யாக இருந்தால் சிரித்துக்கொண்டே இருந்துவிடு.

திங்கள், ஏப்ரல் 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்

நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்
கண்அல்லது இல்லை பிற. (710) 
பொருள்: நுட்பமாக அறிந்து சொல்கிறவர்க்கு அவ்வாறு கூற அளவு கோலாக இருப்பது அவருடைய கண்களே.

இன்றைய சிந்தனைக்கு

செவ்விந்தியர்களின் பத்துக் கட்டளைகள் 

1. பூமி எமது தாய் அவளைப் போற்று, மதித்துக் காப்பாற்று.

2. உனது அனைத்து உறவுகளையும் கௌரவமாக நடத்து.

3. உனது இதயத்தையும், ஆன்மாவையும் உயர்ந்த பரம்பொருளை(இயற்கை / இறைவன்) நோக்கித் திறந்து வை.

4. ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நோக்கத்திற்காகப் படைக்கப் பட்டது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தியாகத்தைச் செய்தே இப்பூமியில் வாழ்கின்றன. ஒவ்வொரு உயிரையும் மதித்துக் காப்பாற்று.

5. இந்தப் பூமியில் இருந்து உனக்குத் தேவையான அளவு மட்டுமே எடுத்துக் கொள். தேவைக்கு அதிகமாக எதையும் எடுத்து விடாதே.

6. செய்கின்ற செயல்கள் அனைத்தும் அடுத்தவர்களுக்கு நன்மை பயப்பதாக(தருவதாக) இருக்கட்டும்.

7. எல்லையில்லாத பரம்பொருளுக்கு(இயற்கை / இறைவன்) ஒவ்வொரு நாளும் நன்றி கூறு.

8. ஒவ்வொரு நாளும் உண்மையை மட்டும் பேசு. அதுவும் அடுத்தவர்களுக்கு நன்மை தருவதாக இருப்பின் பேசு.

9. இயற்கையின் ஒழுங்கின்படி வாழ்க்கை நடத்து.

10. வாழ்க்கைப் பயணத்தை ஆனந்தமாக நடத்து, அனுபவி. நீ பூமியில் வாழ்ந்தமைக்காக நன்றி உணர்வை விட்டுச் செல். அதிகமான தடயங்களை அல்ல.

 நன்றி:"Humans Are Free"

ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்

 
 
பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின் 
வகைமை உணர்வார்ப் பெறின். (709)

பொருள்: கண் பார்வையால் கருத்தை வகைப்படுத்தி உணர்பவரைத் துணையாகப் பெற்றால், ஒருவரது பகைமையையும் நட்பையும் அவரது கண்களே தமக்குச் சொல்லி விடும்.

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து 

மனதால் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக இராச்சியம் அவர்களுடையது.

இந்தப் பிறவியில் துக்கம் அடைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இறைவன் அவர்களைத் தேற்றுவார்.

பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இறைவன் வாக்களித்த இடத்தை அவர்கள் பெறுவார்கள்.

மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முழுத் திருப்தியை இறைவன் அளிப்பார்.

மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.

தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இறைவனின் அருகாமையிலிருப்பார்கள்.

அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இறைவன்  அவர்களைத் தன் பிள்ளைகள் என அழைப்பார்.

நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக இராச்சியம் அவர்களுக்குரியது.

உங்களுக்கெதிராகத் தீய சொற்களைப் பேசி மக்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுகின்ற காரணத்திற்காக  எல்லாவிதமான தீய சொற்களையும் உங்களுக்கெதிராகச் சொல்வார்கள். ஆனால் மக்கள் உங்களுக்கு அவற்றைச் செய்யும் பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆகிறீர்கள். அதற்காக மகிழ்ச்சியடையுங்கள். இறைவனுடைய வெகுமதி உங்களுக்கு காத்திருக்கிறது.

சனி, ஏப்ரல் 27, 2013

கிவி பழம் சாப்பிட்டால் உடல்நலம் உறுதி

பழத்தின் சுவை புளிப்போ, துவர்ப்போ... உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ... அதில்லை சங்கதி. ‘கிவி&  ப்ரூட்’ தொடர்ந்து சாப்பிட்டு  வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  

தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் கிவி. இதை நம்மூரில் கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். தமிழில் அதன் பெயர் பசலிப்பழம். அதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக லேட்டஸ்ட் ஆய்வு தெரிவிக்கிறது. ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் கூறியதாவது: கிவி ப்ரூட்டில் ஏராளமான மினரல்கள், விட்டமின்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழமான அதில் விட்டமின் ஏ, சி, இ அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட பலவற்றில் இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.


விட்டமின் சி&யின் பணிகளை விட்டமின் இ அதிகரிக்கும். இந்த இரண்டும் கிவி ப்ரூட்டில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. கிவி ப்ரூட்டில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும். ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்தும் என்றார். முக்கிய பழச் சந்தைகள், மார்க்கெட்களில் கிடைக்கும் கிவி ப்ரூட்டை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.
நன்றி: paadumeen.blogspot.com 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்
 
 
 
முகம்நோக்கி நிற்க அமையும், அகம்நோக்கி 
உற்றது உணர்வாய்ப் பெறின். (708)

பொருள்: குறையுள்ளவன் தான் உற்ற துன்பத்தை உணர்ந்து தீர்க்கவல்லாரைப் பெறுவானாயின் அவர் முகத்தைப் பார்த்து நிற்றலே போதுமானதாகும்.

இன்றைய சிந்தனைக்கு

சாணக்கியர் 

வீரனைப் போரிலும், யோக்கியனைக் கடனிலும், மனைவியை வறுமையிலும், நண்பனைக் கஷ்டகாலத்திலும் அறிந்து கொள்ளலாம்.

வெள்ளி, ஏப்ரல் 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் 
காயினும் தான்முந் துறும். (707)

பொருள்: ஒருவன் மனம் ஒன்றை விரும்பினாலும் வெறுத்தாலும் அதனை அவன் முகம் முற்பட்டுத் தெரிவித்து விடும்; ஆதலால் முகத்தைக் காட்டிலும் பேரறிவுடையது வேறு ஒன்றுமில்லை.

இன்றைய சிந்தனைக்கு

வாழ்வில் வெற்றிபெறக் கவனிக்க வேண்டிய ஏழு விடயங்கள்  
 

1. கவனி - உன் வார்த்தைகளை 

2. கவனி - உன் செயல்களை 

3. கவனி - உன் எண்ணங்களை 

4. கவனி - உன் நடத்தைகளை 

5. கவனி - உன் இதயத்தை 

6. கவனி - உன் முதுகை 

7. கவனி - யாவும் இறைவன் எண்ணப்படியே என்பதை 

வியாழன், ஏப்ரல் 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்
 

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம். (706)

பொருள்: தன்னைச் சார்ந்த பொருளின் நிறத்தைத் தான் கொண்டு, பிறர்க்குக் காட்டும் பளிங்கைப் போல் ஒருவனுடைய மனத்தில் நிகழும் உணர்ச்சியை அவன் முகம் பிறர்க்கு அறிவித்து விடும்.

இன்றைய சிந்தனைக்கு

தாமஸ் ஆல்வா எடிசன் 
  

மனிதன் பல ஆயிரம் கண்டுபிடிப்புகளைச் செய்தாலும், சாதனைகளைப் படைத்தாலும் பூமியில் இயற்கையாக வளரும் ஒரு புல்லுக்கு உயிர் கொடுப்பது இந்தப் பிரம்மாண்டமான இயற்கையே ஆகும். ஒரு புல்லுக்கு மனிதன் செயற்கையாக உயிர் கொடுக்கும் காலம் வரும்வரை மனிதனின் அத்தனை கண்டுபிடிப்புகளையும் பார்த்து இந்த மாபெரும் இயற்கை சிரித்துக் கொண்டே இருக்கும்.


இயற்கை அழகு என்றால் என்ன?

ஒன்றை நாம் அழகு என்று கூறும்போது அப்பொருள் பற்றிய ஓர் உயர்ந்த கருத்தை மற்றவர்க்கு நாம் சிபார்சு செய்கின்றோம்.

அழகு என்றால் என்ன? அதன் வரையறை என்ன? எம்கண்ணுள் கரைந்து எண்ணத்திரையில் விரியும் கவர்ச்சியா அது? எந்த அளவுகோலை வைத்து அழகை அளப்பது? அழகு பார்ப்பவர் மனதைக் கவர்ந்து அவரை மகிழ்ச்சி அடையச்செய்கின்றது. ஒருவர் கண்ணுக்கு அழகாகத் தெரிவது மற்றவர் கண்ணுக்கு அழகற்றதாகத் தோன்றாது. எனவே உலகில் உள்ள எவருமே அழகிற்கு வரைவிலக்கணம் கூறிவிட முடியாது.

ஒருவரைப் பார்த்து அழகானவர் என்றுசொல்லும் போது அவர் ஆரோக்கியமானர் என்பதையும் சுட்டாமல் சுட்டுகின்றோம். உண்மையில் மனிதரின் வெளியழகு வேறாகவும் உள்ளழகு வேறாகவும் பார்க்கப்படுகின்றது. இவ்விரு அழகும் ஒன்று சேர்ந்திருப்பது மிகமிக அபூர்வம். உலகின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களில் பெரும் பாலானவர்கள் பேரழகுடைய வாகளாக இருக்கவில்லை. எனினும் அவர்களிடம் பெண்மை கலந்த மென்மை இழையோடுவதைக் காணலாம். அந்த அகஅழகே அவர்களின் தனித்துவத்தை மற்றவர்க்கு எடுத்துக்காட்டியது. அதுவே உலகை அவர்களின் பின் செல்ல வைத்தது. இதனால் அழகின் உண்மைத் தன்மை எது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

மனித அழகிற்கும் உடலில் உள்ள உறுப்புகளுக்கும் என்ன தொடர்பு? ஒரு சிற்பி வடிக்கும் சிற்பத்தின் ஒவ்வொரு உறுப்பும் நேர்த்தியாகவும், கணிதமுறைப்படி அழகாகவும் கண்ணிற்கு விருந்தாகவும் இருந்தால் அதனை மிக அழகான சிற்பம் என்கிறோம். அதுபோல் மனிதரின் ஒவ்வொரு உறுப்புகளின் தனிப்பட்ட அழகுகள் யாவும் சேர்ந்தே உடலின் முழு அழகையும் உருவாக்கின்றது.

எனவே எமது ஒவ்வொரு உறுப்பையும் அழகானதாக வைத்துக்கொள்ள வேண்டும். எமது உறுப்புகளை அழகு படுத்துவதற்கு முன் ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. ‘அழகில் இயற்கை அழகே செயற்கை அழகைவிட நிரந்தரமானது”. இது மனித அழகிற்கு மட்டுமல்ல உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

உங்களிடம் இருக்கும் அழகிற்கு அழகுசெய்ய நீங்கள் என்ன செய்யவேண்டும்? அழகைப்பற்றிய அடிப்படை அறிவு சிறிது இருந்தால் போதும். உங்கள் இயற்கை அழகை நீங்களே மெருகூட்டிக் கொள்ளலாம். முதலில் உங்கள் அழகை நீங்களே எடைபோடப் பழகுங்கள். உங்கள் அழகை மெருகூட்ட எவை நல்லவை எவை தீயவை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் அமைதியாக வேலையற்று இருக்கும் நேரங்களில் உங்களை நீங்களே அலங்கரித்துப் பாருங்கள். உடை என்றாலும் சரி, ஒப்பனை என்றாலும் சரி எப்படி அலங்கரிக்கும் போது நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் எனக் கருதுகின்றீர்களோ அதனை படம் பிடித்துக் கொள்ளுங்கள். இப்படி வெவ்வேறு விதமாக அலங்கரித்து எடுத்த படங்களை வைத்து எதில் நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்பதை நீங்களே தெரிவு செய்து கொள்ளுங்கள்.
உங்களை அலங்கரிப்பதற்கும் உடை உடுத்துவதற்கும் இருபது... மேலும் 

புதன், ஏப்ரல் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்

குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள் 
என்ன பயத்தவோ கண். (705)

பொருள்: முகக் குறிப்புகளைக் கொண்டு உள்ளக் குறிப்பை உணராவிட்டால் ஒருவனுக்கு கண்கள் இருந்தும் பயன் இல்லை 

 

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்
 

நம் எண்ணங்கள் யாவும் பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். பிறருக்கு நன்மை செய்பவன் தனக்குத் தானே நன்மை செய்தவன் ஆகிறான்.

செவ்வாய், ஏப்ரல் 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்


குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை 
உறுப்போ ர்அனையரால் வேறு. (704)

பொருள்: ஒருவன் மனத்தில் கருதியதை அவன் கூறாமலே அறிந்துகொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவர்.

இன்றைய பொன்மொழி

மகாத்மா காந்தி 

இந்தப் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுடைய தேவையையும் பூர்த்தி செய்ய இந்த இயற்கையால் முடியும். ஆனால் மனிதர்களின் பேராசையை நிறைவேற்ற இந்த இயற்கையால் முடியவே முடியாது.

அலர்ஜி நோய் அல்ல. அது உடலில் ஏற்படுத்தும் திடீர் மாற்றம்

உடம்பில் அலர்ஜி ஏற்பட்டால் அரிப்பு ஏற்படும். உடல் தடிப்புகள் உருவாகும். உதடு வீங்கும். மூச்சு வாங்கும். அலர்ஜி என்பது எல்லா வயதிலும் வரும். அலர்ஜியை குணப்படுத்த முடியும். சில அலர்ஜிக்கு 3 நாள் சிகிச்சை பெற வேண்டியது இருக்கும். 3 மாதம், 9 மாதம், ஒரு ஆண்டு கூட சிகிச்சை பெறவேண்டியது இருக்கும். எந்த உணவுகளை உட்கொண்டால் அலர்ஜி ஏற்படுகிறதோ அதனை உட்கொள்ள கூடாது.
காலை எழுந்தவுடன் விடாது தும்மல்…. கண்களில் தொடர்ந்து நீர் வடிதல்….இவை எல்லாம் அலர்ஜியின் அடையாளங்கள். மேற்கத்திய நாடுகளில் மட்டுமே அலர்ஜி பாதிப்பு அதிகம் என நம்பிக்கொண்டிருந்த காலம் போயே போச்சு. இப்போது இந்திய மக்கள் தொகையில் 25 சதவீத மக்கள் ஏதாவது ஒரு அலர்ஜி பாதிப்புக்கு ஆளாகின்றனர் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உணவு பொருட்கள் மூலம் ஏற்படும் அலர்ஜியால் பாதிக்கப்படுபவர்களில் 30 ஆயிரம் பேருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 100 முதல் 200 பேர் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை பெறமுடியாமல் இறந்து விடுகின்றனர். அலர்ஜி ஒரு நோயா…எப்படி எப்படி ஏற்படுகிறது. விளக்குகிறார் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் மன்வீன்கார்.
அலர்ஜி என்பது நோய் அல்ல. அது உடலில் ஏற்படுத்தும் திடீர் மாற்றம். இதற்கு பிரதான காரணம் மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை. சில உணவுவகைகளை உட்கொண்டால் உடம்பில் தழும்புகள் போல் காணப்படும். இது அலர்ஜியாகும். மீன் வகையில் பிரான்ஸ் உட்கொண்டால் சிலருக்கு சேராது. உடலில் தடுப்புகள் ஏற்படும். கத்தரிக்காய் சாப்பிட்டால் சிலருக்கு ஒத்து வராது. பெரும்பாலனவர்களுக்கு மாத்திரை சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். பூச்சி கடித்தாலும் உடலில் அரிப்பு ஏற்படும்.
இதுவும் அலர்ஜிதான். வெயில் உடலில் பட்டால் சிலருக்கு முகம், கை ஆகியவற்றில் வட்டவடிவில்... மேலும் 

திங்கள், ஏப்ரல் 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்

குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள் 
யாது கொடுத்தும் கொளல். (703)

பொருள்: ஒருவரது முகக் குறிப்பினாலேயே அவரது கருத்துகளை உணர்கின்றவரை எதைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்.

இன்றைய பொன்மொழி

கன்பூசியஸ் 
 

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாமே!

இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த  நீரை தான் பயன்படுத்துகின்றனர். கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் உபயோகிப்பது  குளிர்ந்த நீரை தான். இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி  வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது.  இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது  காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்றும் மருத்துவர்கள்  எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது குளிர்ந்த நீரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.  குளிர்ந்த தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும  பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே குளிர்ந்த  தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

நன்றி:  தினகரன் 

ஞாயிறு, ஏப்ரல் 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் 
தெய்வத்தோடு ஒப்பக் கொளல். (702)

பொருள்: பிறன் மனத்தில் நிகழும் கருத்தை ஐயத்திற்கு இடம் இல்லாமல் நிச்சயமாக அறியக் கூடிய திறம் உடையவனை மனிதனாயினும் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 

புத்திசாலியான மகன் தந்தையை மகிழ்விக்கிறான். ஆனால் புத்தியில்லாத முட்டாளோ தாய்க்குப் பாரமாயிருக்கிறான்.

சனி, ஏப்ரல் 20, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்

கூறாமை நோக்கிக் குறிப்புஅறிவான் எஞ்ஞான்றும் 
மாறாநீர் வையக்கு அணி. (701)

பொருள்: அரசனால் குறித்த (நினைத்த) கருமத்தைக் குறிப்பால் அறியும் அமைச்சன் எப்போதும் கடல் சூழ்ந்த உலகத்திற்கு ஒர் அணிகலன் ஆவான்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

  

சில்லறை விடயங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள் பெரிய சாதனைகளைச் சாதிக்க முடியாமலே போய் விடுகிறார்கள்.

வெள்ளி, ஏப்ரல் 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்

'பழையம்' எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் 
கெழுதகைமை கேடு தரும். (700)

பொருள்: 'அரசனுக்கு யாம் பழைமையானவராய் உள்ளோம்' எனக் கருதி தகுதியில்லாதவற்றைச்  செய்யும் உரிமை அமைச்சருக்குக் கேட்டைத் தரும்.

இன்றைய சிந்தனைக்கு

வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஏழு விடயங்கள் 

1. சிந்தித்துப் பேச வேண்டும் 

2. உண்மையைப் பேச வேண்டும் 

3. அன்பாகப் பேச வேண்டும் 

4.  மெதுவாகப் பேச வேண்டும் 

5. சமயம்(தருணம்) அறிந்து பேச வேண்டும் 

6. இனிமையாகப் பேச வேண்டும் 

7. பேசாதிருக்கவும் பழக வேண்டும்.

வியாழன், ஏப்ரல் 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்


கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார் 
துளக்குஅற்ற காட்சி யவர். (699)

பொருள்: நிலைபெற்ற தெளிந்த அறிவினை உடையவர், 'அரசனால் யாம் நன்கு மதிக்கப்பட்டோம்' என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்.

இன்றைய பழமொழி

தமிழ்நாட்டுப் பழமொழி
  

"உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன்; உடையார்பாளையத்தில் போய் உடும்பு பிடிப்பேன் என்றானாம்". 

இதனை ஒத்த மற்றுமொரு பழமொழி:-

"கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத குருக்கள்; வானம் ஏறி வைகுண்டத்தைக் காட்டுவேன் என்றாராம்"

புதன், ஏப்ரல் 17, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்


இளையர்; இனமுறையர், என்றுஇகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். (698)

பொருள்: மன்னரை, 'இவர் எமக்கு இளையவர்;  எனக்கு இன்னமுறை உடையவர்' என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்  

ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்குக் கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.

பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.
பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும். வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி,
முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.
கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

நன்றி:  யாழ்மின்னல் 

செவ்வாய், ஏப்ரல் 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்



வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் 
கேட்பினும் சொல்லா விடல். (697)


பொருள்: மன்னன் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை  ஒரு போதும் சொல்லாமல் விட்டு விட வேண்டும்.

இன்றைய பொன்மொழி

 மூத்தோர் சொல்


நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக் கொள்.

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே

உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன். உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.

திருநெல்வேலி தொல்பொருட்காட்சிசாலையில் வைக்கப்பட்டடுள்ள, பூம்புகார் கடற்கரையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கப்பலின் அடிப்டையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்உருவாக்கிய சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி
"தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என கடலோடி என்னும் நூலின் ஆசிரியர் நரசய்யா செரிவிக்கிறார்.

பல்லவர் காலத்து கப்பல் பொறித்த நாணயம்

கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?
காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆவார்கள்.


கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு... மேலும் 

திங்கள், ஏப்ரல் 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்
 

குறிப்பஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல
வேண்டுப வேட்பச் சொலல். (696)


பொருள்: மன்னனிடம் ஏதாவது சொல்ல வேண்டுமானால் அவரது உள்ளக் குறிப்பை அறிந்து, காலத்தைக் கருத்திற்கொண்டு, அவருக்கு வெறுப்புத் தராத சொற்களை அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

உன்னால் பலருடன் ஒத்துப் போக முடிந்து ஒரு சிலருடன் மோதல் என்றால் தவறு உன்னுடையதல்ல. வெகு சிலருடன் மட்டும் ஒத்துப் போக முடிந்து பலருடன் மோதல் என்றால் உன்னிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று பொருள்.

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. (695)

பொருள்: மன்னன் மறைபொருள் பேசும்போது எப்பொருளையும் உற்றுக் கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவராகச் சொன்னால் மட்டுமே, கேட்டல் வேண்டும்.

இன்றைய சிந்தனைக்கு

டாக்டர்.எம்.ஆர்.காப்மேயர்

பிறரைப் பாராட்டுங்கள்; பாராட்டுக் கிடைக்கும். பிறரை மதியுங்கள்; மதிப்புக் கிடைக்கும்.அன்பு செலுத்துங்கள்; அன்பு தேடி வரும். இவை ஒற்றை வழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள்.

தமிழ் புத்தாண்டுக் கவிதை


கடுகு சிறுசு பலனோ பெரிசு

சமையல் அறையில் முன்னணி இடத்தை பெற்ற பொருளில் முக்கியமானது கடுகு. இதில் உள்ள  ஹோமோபிராசினோலைட் என்ற மூலப்பொருள் தசைகளுக்கு வலு சேர்ப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது.
கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.

அதுமட்டுமல்ல,  பசியை தூண்டி சிக்கலில்லா செரிமானத்துக்கு உதவுகிறது.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

கடுகானது மைக்ரேன் தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. அதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தடீஸ், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவைகளை குணமாக்குகிறது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

ஜீரணக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுகு சிறந்த மருந்தாகும். ஜீரணத்தை தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.

நன்றி:  தினகரன் 

சனி, ஏப்ரல் 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல் 

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து. (694)

பொருள்: வல்லமை அமைந்த அரசர் அருகே இருந்தால், காதோடு காதாகப் பேசுவதையும் பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும் நீக்க வேண்டும்.

இன்றைய பழமொழி

இத்தாலியப் பழமொழி

குழந்தை கேட்கும் 'ஏன்' என்ற கேள்விதான் தத்துவத்தின் சாவி(ஞானத்தின் திறவு கோல்)

"காலை உணவு சாப்பிட்டால் அறிவு திறன் அதிகரிக்கும்'

வாஷிங்டன்: "காலை உணவு சாப்பிடும் குழந்தைகளின், பேச்சு திறன், செயல்பாட்டு திறன் அதிகரிக்கும்' என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இரவு உணவுக்கு பின், நீண்ட நேரத்துக்கு பின், காலை உணவு உண்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளை செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
காலை உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கும், தொடர்ந்து காலை உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய, அமெரிக்காவின், பென்சில்வேலியாவில் உள்ள, "ஸ்கூல் ஆப் நர்சிங்' பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
சீனாவில் உள்ள, 1,269 குழந்தைகளிடம், ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், காலை உணவு சாப்பிடாத குழந்தைகளின் பேச்சு திறன் மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அடிக்கடி அல்லது தொடர்ந்து காலை உணவு சாப்பிடும் குழந்தைகள், நல்ல அறிவு திறன் கொண்டவர்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து, ஆய்வின் தலைவர் ஜியாங்ஹாங் லியூ கூறியதாவது: குழந்தைகளின் அறிவு திறன் அதிகரிக்க போதுமான உணவு அவசியம். காலை உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கு உடனடி மற்றும் நீடித்த பாதிப்புகள் ஏற்படும். குழந்தை பருவத்தில் ஏற்படும் நடத்தை குறைபாடுகளையும், வளர்ந்த பின் சமூகத்தை எதிர்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களையும் தடுக்க, குழந்தைகள் காலை உணவு உண்பது அவசியம். எனவே, குழந்தையின் காலை உணவில் பெற்றோர் அக்கறை செலுத்துவதுடன், பள்ளிகளும் போதிய நேரத்துக்கு பின், வகுப்புகளை துவங்குதல் அல்லது பள்ளியிலேயே குழந்தைகளுக்கு உணவு அளித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு, ஜியாங்ஹாங் லியூ கூறினார்.

நன்றி: தினமலர் 

வெள்ளி, ஏப்ரல் 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்

போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின் 
தேற்றுதல் யார்க்கும் அரிது. (693)

பொருள்: அரசன் சினங்கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதானதால் அரசனைச் சார்ந்திருப்பவர் பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.