பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு. ‘பைவ்ஸ்டார்’, ‘தூள்’, ‘சிவகாசி’,
‘திண்டுக்கல் சாரதி’, ‘மாப்பிள்ளை’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
சிட்டிபாபுவுக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்தது. இதற்காக அவர் பைபாஸ்
அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் படங்களில்
நடிக்காமல் வீட்டில் ஓய்வு எடுத்தார்.
தற்போது அவர் மீண்டும் சில படங்களில் நடிக்க தொடங்கினார். கடந்த சில
தினங்களுக்கு முன்பு அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை
முகப்பேரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள்
தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிட்டிபாபு உடல்நிலை மோசமாகி கோமா
நிலைக்கு சென்றார்.
இதை அடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐ.சி.யூ., பிரிவில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை
அளித்து வந்தனர். இருப்பினும் அவரது உடல் நிலையில், முன்னேற்றம்
ஏற்படவில்லை. தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று (8.11.2013) சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
நடிகர் சிட்டிபாபுவுக்கு 49 வயதாகிறது. ஜரினா என்ற மனைவியும், இரண்டு
மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த
பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செய்தி: மாலைமலர்