செவ்வாய், நவம்பர் 13, 2012

தீபாவளி - ஏன்? எதற்கு?

ஆக்கம்: இ.சொ. லிங்கதாசன் 
இன்றைய தினம் உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் தீபாவளித் திருநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அவர்களது மகிழ்ச்சியில் 'அந்திமாலையும்' பங்குகொள்கிறது. அத்துடன் இந்தப் பண்டிகையின் பின்னணி, மற்றும் தோற்றம் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்து சமயத்தவர் ஒருவரிடம் தீபாவளி எதற்காகக் கொண்டாடப் படுகிறது? என்று கேட்டால் "கிருஷ்ண பரமாத்மா, நல்லோர்களைக் காப்பதற்காக 'நரகாசுரனை' அழித்தபோது, அவன் இறக்கும் தருணத்தில் கிருஷ்ண பரமாத்மாவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தான் என்றும், அவ்வேண்டுகோளில் "நான் மடிந்த தினத்தை மக்கள் எல்லோரும் மகிழ்வாகக் கொண்டாட வேண்டும்" என்றும் கோரியிருந்தான், அதன்படியே மக்கள் காலங்காலமாக இப்பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள் என்று கூறுவார்.
உண்மை அதுவா? அந்த ஒரேயொரு ஐதீகம் காரணமாகத்தான் இப்பண்டிகை கொண்டாடப் படுகிறதா? என்ற கேள்விக்கு எனக்குக் கிடைத்த விடையை தகவல் திரட்டாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தீபாவளி, ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு முன் தினம் வரும் நரக சதுர்த்தசி திதியில் கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும்சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தைப்பொங்கலை இந்துக்கள் தவிர்ந்த ஏனைய மதத்தவர்களான தமிழர்களும் முக்கிய பண்டிகையாகக் கருதுவதுபோல் 'தீபாவளி' கருதப்படுவதில்லை. இது முழுக்க முழுக்க ஒரு இந்துப் பண்டிகை என்பதால் இந்து சமயத்தைச் சேர்ந்த தமிழர்களாலும், இந்தியாவின் வட மாநிலங்களிலுள்ள இந்துக்களாலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.அதேபோன்று மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வாழும் தமிழர்களும் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். புலம்பெயர் மக்கள் மத்தியில் இப்பண்டிகை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறவில்லை.'தீபாவளி' பெயர்க் காரணம்:
'தீபம்' என்றால் ஒளி அல்லது விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சில 'இருள்' உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம்  போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை இந்நாளில் எரித்துவிட வேண்டும் என்பதே பொருளாகும்.
தீபாவளியின் புராண வரலாறு:

இந்துக்கள் தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர் அவையாவன:

  • இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் என்கிறது ஒரு புராணக் கதை.
  • இன்னொரு புராணக் கதையின்படி கிருஷ்ணரின் இரு மனைவியருள் ஒருத்தியான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன். அப்போது கிருஷ்ணர் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவ்வசுரனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருஷ்ணர் தனது திறமையால் அந்நரகாசுரனை  கொல்கிறார்.
  • கிருஷ்ணர்நரகாசுரன் என்ற அந்த அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

சீக்கியர்களின் தீபாவளி

  • 1577-இல் இத்தினத்தில் சீக்கியர்களின் புனிதத் தலமாகிய  தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதை சீக்கியர்கள் இந்நாளில் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.


சமணர்களின் தீமாவளி

  • மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

கொண்டாடும் முறை:
பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள்(பலகாரங்கள்) தயாரித்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்துப் பெறுவர். தீபாவளிஇலேகியம் (சமிபாட்டை இலகு படுத்துவது) அருந்துவதும் மரபு. தமிழ் நாட்டில் தீபாவளி அன்று அனைவரும் அதிகாலை 3 மணிக்கு எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும்குங்குமத்தில்கௌரியும்சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள்,ஏரிகள்குளங்கள்கிணறுகளிலும், நீர்நிலைகளிலும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். இந்துப் பண்டிகைகளில் அனைவரும் ஒற்றுமையாய், மிக மகிழ்வோடு கொண்டாடும் ஒரு தலைசிறந்த பண்டிகை 'தீபாவளி' என்றால் மிகையாகாது.

நன்றி: விக்கிப்பீடியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக