வியாழன், ஆகஸ்ட் 04, 2011

மண்டை ஓடுகளின் நடுவில்

ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்.
1999 இறுதியில் நான் சிங்கையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் வேலைநிமித்தமாக 'கம்போடியா' செல்ல வேண்டியிருந்தது. அப்போது அந்த நாட்டைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஹிட்லரை விட பன்மடங்கு கொடூரமான 'போல்பாட்' தன் சொந்த நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பகுதியை கொன்று குவித்து 25 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அந்த போல்பாட் இறந்து ஒரு வருடம் தான் ஆகியிருந்தது.

உங்களில் பல பேர் அந்த வரலாறை அறிந்திருப்பீர்கள் என்றாலும் இங்கு சுருக்கமாக குறிப்பிடுகிறேன். இயற்கை வளத்திற்கும், கலாச்சாரப் பெருமைக்கும் குறைவில்லாத நாடு கம்போடியா. ஒரு காலத்தில் கம்போடியாவில் இருந்த 'கமேர்' பேரரசுவின் கீழ் இன்றைய தாய்லாந்தின் பெரும் பகுதி, தெற்கு வியட்நாம், லாவோஸ் போன்ற பகுதிகள் அடங்கியிருந்தன. பிற்காலத்தில் அந்த பேரரசு நலிவடைந்து
1863-ம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது. பின்னர் 1953-ல் சுதந்திரம் பெற்றது. வியட்நாம் போரின் போது 1965-ம் ஆண்டு அமெரிக்க படைகள் இங்கு குவிக்கப்பட்டு வியட்நாம் போருக்கான தளமாக ஆக்கப்பட்டது. வியட்நாம் ஆதரவு கம்போடிய கம்யூனிஸ்டுகள் அமெரிக்க படைகளை எதிர்த்து சண்டை செய்ய, அமைதி கீழறுக்கப்பட்டது. 1975-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் சார்பு 'கெமர் ரூஜ்' (Khmer Rouge) என்ற அமைப்பு திடீரென்று தலைநகர் புனாம் பென் -ஐ கைப்பற்ற புதிய ஆட்சி மலர்ந்தது.
இந்த கெமர் ரூஜ் (Khmer Rouge) -ன் தலைவர் தான் போல்பாட். கம்போடியாவின் கிராம புறத்தில் பிறந்த இவன் சிறிது காலம் பிரான்ஸில் சென்று பயின்ற போது கம்யூனிஸ்டு சிந்தனை வளர்ந்து, படிப்பை முடிக்காமலேயே நாடு திரும்பினான். சீனாவில் நடந்த 'கம்யூனிஸ்ட்' மாற்றத்தைப் போல கம்போடியாவிலும் நிகழ்த்த வேண்டும் என்பது அவனது நோக்கம். நாடு திரும்பிய போல்பாட் கிராமப் புற படிக்காத இளைஞர்களையும், இளம் பெண்களையும் ஒன்று சேர்த்து ஆயுதப்பயிற்சி கொடுத்து ஒரு கொரில்லா இயக்கமாக மாற்றினான்.
கிராமத்தில் கஷ்டப்பட்டு உழைத்தும் மக்கள் வறுமையில் வாடும் போது நகரங்களில் படித்தவர்கள், வியாபாரிகள் சுகபோகமாக வாழ்வது இவர்கள் கண்ணை உறுத்தியது. உடல் உளைப்பின்றி வாழும் அனைவரும் 'எதிரிகளாக' கொள்ளப்பட்டனர்.
1975 ஆண்டு கெமர் ரூஜ் (Khmer Rouge) அமைப்பு புனாம் பென் -ஐ கைப்பற்றிய போது, அமெரிக்க படைகளால் அமைதியிழந்திருந்த மக்கள், இவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். 'கிராமத்தான்கள்' சேர்ந்து தம்மை மீட்டு விட்டதாக தெருக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. "நகரத்து மக்கள் ஒட்டு மொத்தமாக நகரத்தை காலி செய்து கொண்டு உடனே கிராமப்பகுதிகளுக்கு விவசாயம் செய்ய புறப்பட வேண்டும்" என உத்தரவிடப்பட்டது. மறுத்தவர்கள் கொல்லப்படனர்.

மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் இப்படி அத்தனை பேரும் விவசாய நிலங்களில் துப்பாக்கி முனைகளில் வேலை செய்ய பணிக்கப்பட்டனர். மறுத்தவர்கள், வேலை செய்ய திராணியற்றவர்கள் கொல்லபட்டனர். நகரங்கள் இழுத்து மூடப்பட்டன. நாணயம் நிறுத்தப்பட்டது. மருத்துவ மனைகள் பூட்டப்பட்டன. 'கல்விக்கூடங்கள்' சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டன. 'கம்போடியா' உலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.

பல இடங்களில் மக்களை ஒன்றாகக்  கூட்டி அவர்களில் மருத்துவர் யார்?, பொறியாளர் யார்?, ஆசிரியர் யார்? என்று கேட்டு அவர்களுக்கு முக்கியமான வேலைகள் இருப்பதாக அழைத்துச் செல்வார்கள். பின்னர் அவர்கள் திரும்பியதே இல்லை.
புனாம் பென் -னுக்கு புறநகர் பகுதியில் 'கொலைக்களம்' ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் உயிரோடு புதைகுழிகளில் கொல்லப்பட்டனர். தோண்டத்தோண்ட பிணங்களில் மண்டை ஓடுகள் இருக்கும் அந்த பகுதி 'Killing Field' என்று அழைக்கப்படுகிறது. இப்போது சில மண்டை ஓடுகளை எடுத்து பல மாடி கோபுரத்தில் காட்சிப்பொருளாக வைத்துள்ளனர்.

இப்படியாக
4 வருடங்கள் நீடித்த இந்த அராஜகத்தில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் .அவர்கள் பெரும் பாலும் படித்த ஆண்கள். 1979 -வியட்நாம் படைகள் கம்போடியாவில் நுழைந்து கெமர் ரூஜ் (Khmer Rouge) -ஐ வென்றது கெமர் ரூஜ் (Khmer Rouge) தாய்லாந்து அருகிலுள்ள அடர்ந்த காடுகளில் தஞ்சம் புகுந்தது. ஒரு காலத்தில் நாட்டின் பிரதமராக இருந்து இத்தனை படுகொலைகளையும் செய்த 'போல்பாட்' கடைசி வரை எந்த தண்டனையும் இன்றி, 1998-ல் காட்டிலேயே மரணமடந்தான். அவனுடைய இறுதி காரியத்தை செய்தது அவன் மனைவி மட்டும் தான்.

சுத்தமாக கல்வி, வர்த்தகம், உள்நாட்டு கட்டமைப்பு என்பவை முற்றாக துடைத்தெறியப்பட்ட, ஆண்களில் 'பெரும்பகுதி' கொல்லப்பட்ட ஒரு நாட்டின் நிலையை நினைத்துப்பாருங்கள். இன்று கிட்டத்தட்ட அனைத்து குடுப்பங்களிலும் ஆண்களை இழந்து ஒரு தலைமுறை தான் ஆகியிருக்கிறது.
பெண்களில் 30% -க்கு மேல் எய்ட்ஸ் நோய் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. 30 ஆண்டு கால 'வடுக்கள்' இன்னும் மறையவில்லை. மக்களின் முகங்களில் இனம்தெரியாத ஒரு சோகம், 'விரக்தி' கண்டுகொள்ளமுடிகிறது. உள்நாட்டு சண்டைகளும், ஆட்சி அதிகார மோதல்களும், 'ஊழலும்' இன்னும் நீடிக்கின்ற இந்த நாடு, 'மண்டை ஓடுகளின்'  நடுவிலிருந்து எழுந்து வருவதற்கு மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது. நகரங்கள் ஓரளவு வளர்ந்து விட்ட போதிலும், கிராமங்களில் வறுமை தாண்டவமாடுகிறது. என் கண் முன்னரே துப்பாக்கிச் சண்டையை பார்த்திருக்கிறேன். இந்தியாவோடு நீண்ட கலாச்சார தொடர்புடைய நாடு கம்போடியா. ஒரு காலத்தில் இந்துக் கலாச்சாரம் இங்கு தழைத்தோங்கியிருக்கிறது. 12-ம் நூற்றாண்டில் கட்டபட்ட 'அங்கோர் வாட்' என்னும் உலகின் மிகப்பெரிய, 'பழமையான கோவில்' விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இது இரண்டாம் 'சூரியவர்மன்' என்னும் மன்னனால் கட்டப்பட்டது. அடர்ந்த காடுகளுக்கு நடுவில் சுமார் 40 க்.மீ சுற்றளவில் ஆங்காங்கே இப்படி பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. பொதுவாக 'அங்கோர்' என அழைக்கப்படுகிற இந்த பகுதியில் 'அங்கோர் வாட்' என்பது முதன்மையான கோவில். கம்போடிய தேசியக்கொடியில் இதன் உருவம் இடம் பெற்றுள்ளது. இது தவிர சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரம்மாண்டமான கோவிலும், மன்னர்களுக்காக கட்டப்பட்ட பல கோவில்களும், இப்படி சுமார் 30 கோவில்கள் உள்ளன .

இவை அனைத்தையும் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கோர் வாட்-டின் இன்றைய நிலை சற்று 'புத்த கோவிலாக' மாற்றம் கண்டிருந்தாலும், அது விஷ்ணு-வுக்காக கட்டப்பட்ட கோவில் தான் .பிற்காலத்தில் மன்னர் பரம்பரை புத்த மதத்தை தழுவியதாலும், தாய்லாந்தின் கட்டுப்பாட்டில் இப்பகுதி சிறிது காலம் இருந்ததாலும், இதனை ஒரு புத்த ஆலயமாக மாற்றும் முயற்சிகள் நடந்திருப்பது கண்கூடாக தெரிகிறது. இந்து கடவுளர்களின் சிலைகளில் தலை மட்டும் அகற்றப்பட்டு 'புத்த தலைகள்' வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கோவிலின் நீண்ட சுவர்களில் சிற்ப ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ள 'இராமாயணக்கதைகள்', 'பாற்கடலைக் கடைந்த கதைகள்' அப்படியே இருக்கின்றன.

இது தவிர பெரிய சிவன் ஆலயம் ஒன்று இருக்கிறது. நான் அங்கு சென்ற போது அங்கிருந்தவர் எனக்கு அதை விளக்க முற்பட்டார். 'சிவன்', 'பார்வதி' என்று ஒவ்வொன்றாக காட்ட ,
நான் 'திருநெல்வேலிக்கே அல்வாவா?' -என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க, அவருக்குப் புரிந்து "ஓ! நீங்கள் இந்தியர், உங்களுக்கு தெரியாததா?" -என்று சிரித்தார். மகிழ்ச்சியாக இருந்தது. "நான் ஒரு இந்து அல்ல" என்ற போதும் இவற்றை என் நாட்டு கலாச்சார பரவலின் அடையாளங்களாகத் தான் பார்த்தேன். பெருமையாக இருந்தது.

இன்றும் 'இராமயணம்' தான் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படும் இதிகாசம். 'பிள்ளையார்' இங்கு மிகவும் பிரபலம். இப்போது முழுக்க முழுக்க புத்த நாடாக இருந்தாலும் இந்து கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் கிராமப்பகுதிகளில் தொடர்கின்றன. கல்யாணத்திற்கு வாழை மரம் கட்டி பந்தல் அமைப்பது முதல் பெயர்களில் கூட இந்திய 'வாடை' இருக்கிறது. இவர்களின் தேசிய மொழியாம்  'கெமர் மொழி' எழுத்து வடிவம் இந்திய மொழிகளின் சாயலில் இருக்கிறது, பல வார்த்தைகளும் வடமொழிச்சொற்களாக இருக்கின்றன. இங்குள்ள ஒரு நகரத்தின் பெயர் 'ரத்னகிரி' ரத்தினக்கற்கள் கிடைக்கும் மலைப்பகுதி என்பதை சொல்லத்தேவையில்லை.

மக்கள் நட்பு பாராட்டுபவர்களாகவே இருக்கிறார்கள் .அதிலும் இந்தியராக இருந்தால் கூடுதல் புன்னகை. சாதாரண மக்களும் இந்தியாவோடு உள்ள பண்டைய கலாச்சார தொடர்பை அறிந்திருக்கிறார்கள். சில நேரம் அலுவலக வேலையாக நான் நடந்து செல்லும் போது, பலரும் சினேகமாக சிரிப்பார்கள். நகரப்பகுதிகள் இப்போது சீன தாக்கத்தினால் கிராமங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது. நகரங்களில் மஞ்சள் நிற மேனியும், சாப் ஸ்டிக்கில் சாப்பிடுவதுமாகத்தான் பலர் இருக்கிறார்கள். ஒரு முறை நான் கிராமப்பகுதிகளுக்கு சென்ற போது, தவறி இந்தியாவுக்கு வந்து விட்டோமோ? என்று நினைத்தேன். ஆற்றுக்கரைகளில் பெண்கள் மார்போடு கச்சை கட்டிக்கொண்டு குளித்துக்கொண்டிருக்க, ஆண்கள் மீசை வைத்து, லுங்கி அணிந்து கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள். தட்டில் சோறு போட்டு நம்மைப்போல கையாலேயே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். 'மேனி நிறம்' கூட ஓரளவு கறுத்திருந்தது. "ஆகா ..நகரத்தில் நம்மைப்பார்த்து பலரும் சிரித்ததற்கு இதுவும் காரணமாக இருக்குமோ? ..பாதிப்பேர் நான் 'இந்தியன்' என்பதற்காக சிரிக்க, மீதி பேர் "இத பார்டா, நம்மூர் 'கிராமத்தான்' கையில கம்ப்யூட்டரோட டிப் டாப்-ஆ போறத" -அப்படீன்னு சொல்லி சிரிச்சிருப்பாங்களோ?

7 கருத்துகள்:

Ramesh France. சொன்னது…

Super.

பெயரில்லா சொன்னது…

நான் வாசித்து அனுபவித்தேன் நல்ல தகவல்கள். நன்றி சகோதரா!

vinothiny pathmanathan dk சொன்னது…

மிகச் சிறப்பாக இருந்தது உங்கள் படைப்பு. இதுவரை அறியாத பல தகவல்களையும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி .

Arul, DK சொன்னது…

Well done

Raja and Mala. சொன்னது…

அந்த நாட்டிற்குச் சென்று வந்த உணர்வை ஏற்படுத்துகிறீர்கள்.வரலாற்றின் பக்கங்களைப் புரட்டி எங்களை கண் கலங்க வைத்து விட்டீர்கள். உங்கள் பொறுமையான முயற்சிக்கு எங்கள் பாராட்டுக்கள்.

இ. சொ. லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

நண்பர் ஜோ மில்டன் அவர்களின் கட்டுரைக்குப் பக்க பலமாகச் சில தகவல்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். கம்போடிய மக்கள் இந்துக் கடவுளர்மீது பக்தி கொண்டிருப்பது மட்டுமன்றி, பேய், பிசாசுகள், பில்லி, சூனியம் போன்றவற்றிலும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்களின் பெயர்களில் இந்தியப் பெயர்களின் 'வாடை' இருப்பதாக நண்பர் எழுதியிருக்கிறார் அல்லவா. இவர்களது மொழியாகிய 'கமெர்' மொழி இந்தியாவின் தொன்மையான மொழிகளாகிய சமஸ்கிருதம்,பாளி ஆகியவைகளின் கலப்பு ஆகும்.எழுத்துக்களைப் பார்த்தால் 'சிங்கள மொழி' எழுத்துக்கள் போல் தோன்றும். டென்மார்க்கில் வாழும் எனது கம்போடிய நண்பிகளின் பெயர்கள் 'ராணி' மற்றும் 'ரத்தினா'இதேபோன்று நோர்வேயில் வாழும் எனது கம்போடிய நண்பிகளின் பெயர்கள் 'ரட்சனா' மற்றும் 'லக்கினா' என்பதாகும். தாய்லாந்து ,மலேசியா,கம்போடியா, லாவோஸ், வியட்னாம் ஆகிய நாடுகளில் 'கம்போடியாவில்' மட்டுமே பனைமரம் இலங்கைபோல அதிகமாகக் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல்,இந்தப் பிராந்தியத்தில் 'கம்போடியர்கள்' மட்டுமே "கள்ளைக் குடித்துவிட்டுப் பொண்டாட்டியை அடிக்கிறார்கள்". சோழன் ஆண்ட தேசம் அல்லவா?

kowsy சொன்னது…

நல்ல தகவல்களைத் தாங்கிவந்த கட்டுரைக்குத் துணைசேர்த்த லிங்கதாசன் அவர்களுடைய குறிப்பும் சிறப்பே

கருத்துரையிடுக