ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
வற் அருண் கோயிலின் உயரம் 66.80 மீட்டர் என்றும், 86 மீட்டர் என்றும் பல வித்தியாசமான தகவல்களாகக் கூறுகின்றனர். கோபுர சுற்று வட்டம் 234 மீட்டர் கொண்டது என்றார் மொழிபெயர்ப்பாளர்.
ஆதி காலத் தலைநகர் அயோத்தியா காலத்தில் 1820ல் வற் மகோக் The olive temple என்று இது கட்டப்பட்டது. பின் தோண்புரி தலைநகராக, இதன் பெயர் மாற்றப்பட்டு, பின்னர் ராமா2 ராமா3 ஆகிய அரசர்கள் அனைவரும் பெயரை மாற்றி மாற்றி, ராமா4 இந்தப் பெயரை அருண்ரட்சாவரராம் என்று வைத்தாராம்.
நடுவில் இருக்கும் கோபுரம் இந்தியாவின் மகாமேரு மலையை அடையாளப் படுத்துகிறதாம். கம்போடியா பாணியில் இது கட்டப்பட ஏழு வருடம் எடுத்ததாம்.
இக் கோபுர நுனி ஏழு முட்கருவிகள் கொண்ட திரிசூலம் மாதிரியுள்ளது. பலர் இதை சிவபெருமானின் திரிசூலத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறுகின்றனர். கம்போடியாவிலிருந்தே தாய்லாந்திற்கு சைவசமய நம்பிக்கை வந்துள்ளது.13,14ம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து பிக்குகள் தாய்லாந்திற்குச் சென்று எழுத்து மூலமாக பாளி மொழியில் தேரவாட புத்தமதத்தைப் பரப்பினார்களாம். அது இன்று அங்கு இலங்காவம்ச புத்த மதமாக அறியப்பட்டள்ளது.
இக் கோபுரத்தைச் சுற்றி நான்கு மூலையிலும் சட்டலைட் குண்டுகள் போல, நான்கு உயரமான கோபுரங்கள் தூண்கள் போல உள்ளது. இவை சிப்பி, சோகிகள், வண்ணப் பீங்கான் துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தூண்கள் போன்ற கோபுரங்கள் அக் காலத்தில் சீனாவிலிருந்து படகுகள் வர பாதுகாப்பான வழி காட்டிகளாகப் பாவிக்கப்பட்டன. சொல்லப் போனால் கலங்கரை விளக்கமாகப் பாவிக்கப் பட்டனவெனலாம்.
இக் கோபுரங்களின் அடிப்பாகத்தில் சீனப் போர்வீரர்கள், மிருகங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. உண்மையில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத வனப்பில் இக் கோபுரம் இன்னொரு அழகில் இருந்தது.
அத்தனை அழகையும் புகைப்படக் கருவியுள் அடக்கவும் முடிய வில்லையென்று பட அட்டைகளை( picture post cards) யும் வாங்கித் தள்ளினேன்.
தண்ணீர் ராக்சியென்றும், பணம் கொடுத்து பெரிய படகுகளில் சவாரியென்றும் ஆறு முழுதும் படகு, தோணி என்று மக்கள் நிறைந்து திருவிழா போல ஜே…ஜே.. என்று காணப்பட்டனர்.
மறுபடியும் படகுச் சவாரியுடன் இந்த இரண்டு கோயில்களும் பார்த்த சுற்றுலா மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
மறுபடி வந்து நாம் கடை வீதி சுற்றினோம். மாலை 6 மணிக்கு கடை பூட்டும் நேரம் தானே என்கிறீர்களா! மாலை 5 மணிக்குக் கடை திறந்து இரவு பத்து வரை திறக்கும் மாலைச் சந்தைகள் உண்டு. கொழும்பு உலக சந்தை போல சிறு சிறு சதுரக் கடைகளாக எல்லாப் பொருட்களும் உண்டு. ஆகவே எந்த நேரமும் ஆறுதலாகப் பொருட்கள் கொள்வனவு செய்ய முடியும்.
பொருட்களை வாங்கினால் நாம் சுமக்கத் தேவையில்லை. எமது கார்கோ ஏன்சியின் விசிட்டிங் காட்டை அந்தக் கடையில் கொடுத்து எமது பெயரையும் எழுதிக் கொடுத்தால் வாங்கிய பொருட்களைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு போய் ஏஜென்சிக் கடையில் கொடுத்து விடுவார்கள். இதை கடைக்காரர்கள் ஒரு சேவையாகச் செய்கிறார்கள்.
ஏஜென்சிக் காரர்கள் பெயர்களை எழுதி அவற்றை வேறாக சேகரித்து வைத்து, இறுதியில் எம்மையும் அருகில் வைத்துக் கடல் வழிப் பொதியாகக் கட்டிக் கப்பலுக்கு அனுப்புகிறார்கள். இது எமக்கு மிக சுலபமாக இருந்தது.
—–பயணம் தொடரும்.—–
6 கருத்துகள்:
Oh, I see... Good :-)
supe
Beautiful.
nice
நல்ல கட்டுரை
allcommenters.. Thank you very much. God bless you all.
கருத்துரையிடுக