திங்கள், ஆகஸ்ட் 15, 2011

தாய்லாந்துப் பயணம் - 14



ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.

தாய்லாந்தில் கடைகளோ, வாடி வீடுகளோ உள்ளே புகுந்ததும் முதலில் தெரிவது சுவாமிப் படம் தான். மிக அலங்கரித்து மின் விளக்குகள் பூட்டி சிறு கோயில் போல, மாடம் போல அழகாக சுவாமியை வைத்துள்ளனர்.
சிறு தட்டிலே வெத்திலை, பாக்கு, இவைகள் எங்களைப் போல அல்ல, வேறு மாதிரி வைக்கிறார்கள். என் கணவர் தட்டைப் பார்த்து அவர்களைக் கேள்விகள் கேட்ட போது அது வெத்திலை பாக்கு என்றனர். ‘ ‘ இங்கே பாருமப்பா இது வெத்திலை பாக்காம் ‘ ‘ என்று எனக்கும் காட்டினார். இவை தவிர பழம், பூக்களும், ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரும் வைக்கிறார்கள்.
எனது மசாஜ் பெண் சம்சாய் கூட ஒரு நாள் காலையில் நேரத்தோடு நாம் போன போது எங்களுக்கு முன்னாலேயே நாம் இருக்கிறோம் என்று கூச்ச நாச்சப் படாது, கை கூப்பி, நிறைய நேரம் கண்மூடி சாமி படத்தின் முன்னால், வணங்கியபடி இருந்த பின்பே மசாஜ்க்கு வந்தாள்.
நாம் உள்ளே போனதுமே சுவாமி படத்தைப் பார்த்ததும் ஒரு புனிதத் தன்மையான உணர்வு வருகிறது. ஒரு வேளை இவ்வுணர்வு நமக்குப் பழகி விட்டதாகவும் இருக்கலாம்.
வியாபாரத்திலும் அதாவது கடைகளிலும் முதன் முதலாக வாங்கும் பணத்தை அவர்கள் முறைப்படி ஆண்டவனைத் துதித்து இன்னும் பெருகுக! என்பது போலச் செய்து தான் பெற்றுக் கொள்கிறார்கள்.
அனைவரும் மிக மிகக் கடவுள் பக்தி கொண்டவர்களாகவே காணப்பட்டனர்.
அடுத்த சுற்றுலாவாக அரச மாளிகையுடன் மரகதம், பச்சைக் கல் புத்த கோயிலும் Royal palace & Emareld bodha பார்க்கச் சென்றோம்.
இதுவும் முதற் பயணம் போல, வேறும் பல்லின மக்களையும் 2, 3 வாடி வீடுகளில் சென்று ஏற்றிக் கொண்டு தான், மொழிபெயர்ப்பாளருடன் மினி வானில் சென்றோம். மேம்பாலக் காட்சியையும் ஒரு கிளிக் செய்தேன் வானுள் இருந்து.
போகும் வழியில் சிலொம் தெருவில் மகாமாரியம்மன் கோயில் இருந்தது.
1860ல் கட்டப்பட்டது இந்தக் கோயில். தனோம் சிலொம் வட்டாரத்தில் உள்ளது. சக்தியின் கோயில், உள்ளே உமாதேவியின் உருவம் உள்ளது என்கிறார்கள். தாய் மக்களும் இங்கு வந்து வணங்குகிறார்களாம். வாகனத்தில் போகும் போது புகைப் படம் எடுத்தேன்.
பட்டுனாம் ஒரு தொங்கல் என்றால் இது மறு தொங்கல் போல. அதனால் போகும் போதும் வரும் போதும் கோயிலைப் பார்த்து வந்தோம். விருந்தாளிகளின் கோயில் என்று தாய் மக்கள் இதற்குப் பெயர் வைத்துள்ளனராம்.
நிறைய இந்தியர்கள் தாய்லாந்தில் கடை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடக் கூடியது. 
போகும் வழியில் சைனா ரவுணையும் பார்த்தோம்.
சைனா ரவுண் பாங்கொக்கின் பழைய வட்டாரம். 1780ல் இங்கு 
வியாபாரிகளாக சீனர்கள் குடிபெயர்ந்தவர்கள். இவர்கள் இன்று தாய்லாந்து மக்களாகவே வாழ்கிறார்கள். பலர் சீன மொழி பேசவே தெரியாதவர்கள்.


இங்கு மிகவும் பிரபல்யமான தங்கக் கடைகள், சீனப் பாணியில் கட்டிடங்களும், சீன மொழியில் கடைப் பெயர்களும் அமைத்துள்ளனர். 1.4 மில்லியன் சீனர்கள் வாழ்கிறார்களாம்.
    
தங்க புத்தர் கோயில் உள்ளது. வற் றைமிற் என்று அழைக்கும் இக் கோயிலின் புத்தர் சிலை 3 மீட்டர் உயரமும், 5.5 தொன் சுத்த தங்கத்தால் அமைக்கப் பட்டுள்ளதாம். 
வாற் ரைமிற் (wat trimit) என்று கூறும் புத்த கோயில்.
இந்தப் புத்தர் சிலையின் கதையானது, துறைமுக விரிவு படுத்தலின் போது சாந்து பூசிய இச்சிலையைப் பாரம் தூக்கி மூலம் தூக்கி வரும் போது, பாரம் தூக்கியை இயக்குபவர் பூமிக்குக் கிட்டவாக உருவம் வரும் போது உருவத்தைத் தவற விட்டு விட்டாராம், விழுத்தி விட்டார். சிலை நொருங்கவில்லை. மேலே பூசிய சாந்துகள் உடைந்து விட்டது. உள்ளே இருந்த சொக்கத் தங்கமான உருவத்தைக் கண்டனர்.
முன்னைய ஆட்சியில் பர்மியர் தாய்லாந்தில் படை எடுத்த போது இப்படி இவ்வுருவத்தை சாந்து பூசிப் பாதுகாத்துள்ளனர். அப்படியே இது பல காலமாக பாதுகாக்;கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
சைனா ரவுணில் எல்லா விதமான சீன உணவுகளும் உணவகங்களில் பெற முடியுமாம். இவை வழியில் கண்ட சைனா ரவுணின் தகவல்கள். சீன பாணியிலமைந்த கட்டிடங்கள் அழகாகவே தெரிந்தன.
–பயணம் தொடரும்.—  

13 கருத்துகள்:

T.Nathan, Denmark சொன்னது…

Well done

Ramesh France. சொன்னது…

அற்புதமான பயணம் .

Arul, DK சொன்னது…

உங்கள் பயணக் கட்டுரையை அருமையாகத் தொடர்கிறீர்கள், பாராட்டுக்கள். இருப்பினும் தமிழை நன்கறிந்த உங்களிடமே தமிழ் தடம் புரளுகிறதே!. இதை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவேயில்லை.
ஒரேயொரு உதாரணம்:
"எனது மசாஜ் பெண் சம்சாய் கூட ஒரு நாள் காலையில் நேரத்தோடு நாம் போன போது எங்களுக்கு முன்னாலேயே நாம் இருக்கிறோம் என்று கூச்ச நாச்சப் படாது, கை கூப்பி, நிறைய நேரம் கண்மூடி சாமி படத்தின் முன்னால், வணங்கியபடி இருந்த பின்பே மசாஜ்க்கு வந்தாள்".
இவ்விடத்தில் ஒரு கேள்வி. சாமி கும்பிடுவதற்கும் யாராவது கூச்ச நாச்சப் படுவார்களா? உங்கள் அழகு தமிழையும், பயணக் கட்டுரையையும் தொடர்ந்து 'வாசித்து வருபவன்' என்ற முறையில் இந்தக் கருத்தை முன் வைக்கிறேன்.

vinothiny pathmanathan dk சொன்னது…

பயணக்கட்டுரை மிகவும் விறுவிறுப்பாக போகிறது. பாராட்டுக்கள்

vinothiny pathmanathan dk சொன்னது…

அருளின் கேள்வியுடன் நானும் ஒத்துப்போகிறேன் .இருந்த போதும் சில பேர் தனிமையில் இறைவனை கும்பிடும் போது உள்ளன்போடு உருகி வழிபடுவர். பக்கத்தில் யாராவது நின்றால் கண்மூடி சில நிமிடங்களிலேயே தம் வணக்கத்தை முடித்து விடுவர் .ஆனால் தாங்கள் அங்கே நின்றும் எந்த வித உறுத்தலுமின்றி இறைவனை மெய்யன்போடு வழிபட்டதைத் தான் வேதா அன்ரி அப்படிக் குறிப்பிட்டிருப்பார் என எண்ணுகின்றேன்.இது என் கருத்து மட்டுமே .

பெயரில்லா சொன்னது…

To Arul:-
ஆகா!......
சாமியறை என்பது வீட்டில் ஒரு தனிப்பட்ட இடம். அங்கு பார்வையாளராக யாரையும் அனுமதிப்பதோ தெரியாது. யாராவது வந்தால் கூட ஐயா, அம்மா - சாமி கும்பிடுகிறார்கள் என்று கூறி காத்திருக்க வைத்தே உள் எடுப்பார்கள். (எனக்கு வீட்டில் தனியே அமைதியாக இருந்து வணங்கவே பிடிக்கும்). கோயில் என்பது வேறு விடயம். சம்சாயின் வீடு அது. அவள் சொல்லியிருக்கலாம் காலைக் கடன் முடித்து விட்டு வருகிறேன் என்று. அவள் அப்படிக் கூறாது செய்தாள். ஒரு வேளை அது அவளுக்குப் பழகிப் போயிருக்கலாம். எனது கருத்தைத் தான் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். சகோதரர் கவனிக்க- வீடு- கோயில் - இரு வேறு வித்தியாசமான இடம்.

Arul, DK சொன்னது…

நீங்கள் அவ்விடத்தில் 'கூச்ச நாச்சம்' என்ற பதத்தைப் பிரயோகித்ததாலேயே நான் இவ்வாறு கேட்க நேர்ந்தது. மற்றும்படி எனக்கும் நேயர்களுக்கும் உங்கள் பதில் இன்னுமொரு தெளிவை உண்டாக்கியிருக்கிறது என்றே நம்புகிறேன்.

ஜோதிஜி சொன்னது…

தொடர்ந்து வாசிக்க விரும்பும் அளவிற்கு தெளிவான நடை. நன்றி.

பெயரில்லா சொன்னது…

நான் ஒரு தடவைக்கு இரு தடவை ''கூச்ச நாச்சம்'' என்ற பதத்தை என்னினேன் ஏதாவது கருத்து வரக் கூடும் என்று . ஆயினும் மனத்தைரியமாகவே அதைப் பாவித்தேன். இது பேச்சுத் தமிழாகத் தான் இருக்கலாம். எவரும் எளிதாகப் புரியக் கூடிய பதம். இவை அழியக் கூடாது. நாம் பாவித்தால் என்ன என்று எண்ணியதன் விளைவே இது. எல்லாம் நல்லதற்கே. பல நல்ல பதங்களைக் கூச்ச நாச்சமின்றிப் பாவிப்போம். கருத்துகள் யாரும் கூறுங்கள், நாகரீகமாகக் கூறுங்கள். மகிழ்வாக கலந்துரையாடுவோம். அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி.
இரண்டாவது தலைமுறையினரும் இவைகளை அறியட்டுமே! நன்றி.

Arul, DK சொன்னது…

அன்பான சகோதரியே,
நம் நாட்டில்(இலங்கையில்)மிகவும் வெட்கப் படத்தக்க விடயங்களைப் பற்றிக் கூறும்போதே இவ்வாறு 'கூச்ச நாச்சம்' என்ற வார்த்தை பயன்படுகிறது. "ஒரு கூச்ச நாச்சம் இல்லாமல் இவ்வாறு சொல்லி விட்டான்", "ஒரு கூச்ச நாச்சம் தெரியாமல் இவ்வாறு செய்து விட்டாள்" என்றெல்லாம் சொல்வதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைத்தேன்.பரவாயில்லை இந்தக் "கூச்ச நாச்சம்" என்ற சங்கதியை இத்துடன் விட்டு விடுவோம்.

Kumar சொன்னது…

Very good article

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

பெயரில்லா சொன்னது…

அன்பின் சகோதரி இராஐராஜேஸ்வரி! எனக்கும் கருத்திட்டமைக்கு மனமார்ந்த நன்றியம்மா. ஆண்டவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

கருத்துரையிடுக