திங்கள், மே 16, 2011

தாரமும் குருவும் - பகுதி 3.6

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
என்னை எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள 'செல்லி அக்காவின்' வீட்டிற்கு என் அம்மா படிக்க அனுப்பினார் என்று கூறியிருந்தேன் அல்லவா? "வீட்டில் பிள்ளை அதிகமான நேரத்தை விளையாட்டில் கழிக்கிறான், ஆதலால் அயலில் இருக்கும் டியூசன் டீச்சரிடம்' நாலு எழுத்து படிக்கட்டும்" என்பது எனது தாயாரின் கருத்தாக இருந்திருக்க வேண்டும். மேற்படி 'செல்லி அக்கா' தனது வீட்டில் வைத்து முதலாம் வகுப்பு தொடக்கம் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு 'டியூசன்' சொல்லிக் கொடுத்து வந்தார். கிராமங்களில் 'டியூசன் டீச்சர்' ஆவதற்கு அடிப்படைத் தகுதி எதுவும் தேவைப்படுவதில்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். அதேபோலவே மேற்படி 'செல்லி அக்காவுக்கும்' ஏதாவது அடிப்படைத் தகுதி இருந்ததா என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் 'பத்தோடு பதினொன்றாக' என்னையும் 'வருமானம்' கருதிச் சேர்த்துக் கொண்டார் என்பதும், பாலர் வகுப்புப் படிக்கும் பிள்ளைக்குக் கற்பிக்கும் திறமையோ,பக்குவமோ,பொறுமையோ அவரிடம் இல்லை என்பதை நூற்றுக்கு நூறு வீதம் என்னால் அடித்துக் கூற முடியும்.

நான் இவ்வாறு கூறுவதற்கும் காரணம் இருக்கிறது. எனக்கு அவர் கல்வி கற்பித்த விதத்தை வைத்தே என்னால் இதனைக் கூற முடியும். எனக்கு முதலாவது நாளில் என் கையைப் பிடித்து வீட்டு நிலத்தில் பரப்பிய மணலில்  ஓரிரு தடவைகள் 'அ' '' எழுதப் பழக்கினார் என்பது என்னவோ உண்மைதான்.ஆனால் இரண்டாவது நாளிலிருந்து அவர் என்னைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவரது வீட்டிற்கு 'டியூசன்' படிக்க வந்த நான்கு அல்லது ஐந்து, என்னைவிட ஓரிரு வயது மூத்த மாணவ, மாணவிகளுடன் 'சும்மா' உட்கார்ந்திருப்பதுதான் எனது 'படிப்பு' என்றாகியது. மூன்றாவது நாளில் திடீரென்று கனவுலகிலிருந்து விழித்துக் கொண்டவராக 'செல்லி அக்கா' எனது பக்கம் தனது 'பார்வையைத்' திருப்பினார். திருப்பியவர் திடீரென்று எனக்குப் 'பரீட்சை' வைக்க விரும்பினார். முற்றத்தில் சென்று சிறிது மணலை அள்ளி வரும்படி பணித்த செல்லி அக்கா, நான் உட்கார்ந்திருந்த இடத்தில் அதைப் பரப்புமாறு கூறினார். 'அ' தொடக்கம் 'ஊ' வரை எழுதுமாறு பணித்தார். எனக்கு ஒருதடவை 'குலை நடுக்கமே' வந்துவிட்டது. நான் முன்பு படித்த(மொத்தம் மூன்று நாட்கள்) பள்ளியிலும், என் அம்மாவிடம் படித்த ஓரிரு நாட்களிலும் 'அ' மற்றும் 'ஆ' ஆகிய இரு எழுத்துக்களை மட்டும்தானே எழுதக் கற்றுக் கொண்டேன். திடீரென்று என்னைப்போய் 'அ' தொடக்கம் 'ஊ' வரை எழுதச் சொன்னால் நான் எங்கே போவேன்? 
நான் எனக்குத் தெரிந்த 'அ' 'ஆ' ஆகிய இரு எழுத்துக்களையும் எழுதிக் கொண்டிருக்கையில் தனது கவனத்தை ஒரு மூன்றாம் வகுப்பு மாணவியிடம் திருப்பிய செல்லி அக்கா, திடீரென்று தன் அறையின் ஓரத்தில் கிடந்த ஒரு சிறிய 'ஈர்க்குக் கட்டு'(பனையோலை ஈர்க்கு) ஒன்றை எடுத்துக்கொண்டு எனக்குப் பக்கத்தில் அமர்ந்தார். அவர் என்னைக் கவனிப்பதை அறியாத நான் எனக்கு முன்னால் பரப்பப் பட்டிருந்த மணலில் ஒரு 'பூவை' வரைந்துகொண்டிருந்தேன். அதை அவதானித்த செல்லி அக்கா தன் கையிலிருந்த சிறிய 'ஈர்க்குக் கட்டால்' என்னை விளாசு விளாசென்று விளாசினார். எனது உடலில் பெரும்பாலான பகுதிகளில், அவர் அடித்த அடி, மிகுந்த உறைப்பான,விறைப்பான வலியைக் கொடுத்தது. நான் அடி தாங்க முடியாதவனாக நிலத்தில் புரண்டு அழுதேன். என்னைத் தூக்கி எடுத்து உட்கார வைத்த செல்லி அக்கா "நான் உன்ன ஆனா ஆவன்னா எழுதச் சொன்னால், நீ படமா கீறுகிறாய்? (வரைகிறாய்) என்று உறுக்கி, உலுப்பிக் கேட்டார். அடி அகோரம் தாங்க முடியாதவனாகிய நான், உடல் முழுவதும் எரிவு தாங்க முடியாத நிலையில் 'அரைவாசி' அழுகையோடு மலங்க, மலங்க விழித்துக்கொண்டிருந்தேன். அழுதுகொண்டிருந்த என்னைக் காட்டி ஏனைய மாணவ, மாணவிகளுக்கு செல்லி அக்கா ஒரு எச்சரிக்கையை விடுத்தார். "சொல்லுக் கேட்காத, ஒழுங்காப் படிக்காத ஆக்களுக்கெல்லாம்(பிள்ளைகளுக்கு) இதுதான் கெதி" என்பதுதான் அந்த எச்சரிக்கை. நான் அன்று வீடு திரும்பும்வரை அழுதுகொண்டேயிருந்தேன். உண்மையைச் சொன்னால் என் பெற்றோர்கூட என்னை ஒருபோதும் 'ஈர்க்குக் கட்டால்' அவ்வாறு மோசமாக அடித்ததில்லை. குழந்தையின் 'இயல்பு' அறிந்து கற்பிக்க முடியாத 'டியூசன்' ஆசிரியைகளுக்கு 'செல்லி' அக்கா' ஒரு மோசமான உதாரணம் என்றுதான் சொல்வேன்.

இவ்விடத்தில் இலங்கையிலும், தமிழகத்திலும் 'டியூசன்' எனும் பெயரில் பெற்றோரிடமிருந்து வருமானம் சம்பாதிப்பதற்காக பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளும் ஆயிரக்கணக்கான 'செல்லி அக்காக்களுக்கு' நான் கூற விரும்புவதெல்லாம் "உங்களிடம் கல்வி கற்க வரும் பிஞ்சுகளுக்கு கற்பிக்கும் அளவுக்கு உங்களிடம் திறமை,பொறுமை, பக்குவம் இவைகள் உங்களிடம் இல்லாவிட்டால், வெறும் வருமானத்திற்காக மட்டும் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர்கள், ஒரு இளைய சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியைத் தூண்டி விடும் 'மகோன்னதமான பணியை' இயற்கையும், சமுதாயமும் உங்களிடம் வழங்கியிருக்கின்றன. உங்களுடைய 'விவேகக் குறைவினால்' ஒரு சமுதாயத்தின் குருத்துகளை முளையிலேயே கசக்கி எறிந்து, சிறார்களின் ஆளுமையைச் சிதைக்காதீர்கள்".
(தொடரும்) 
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

seelan சொன்னது…

yes you right anthimaalai we want study our selp
thinking

கருத்துரையிடுக