வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

நன்றுஆற் றல்உள்ளும் தவறுஉண்டு அவர்அவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை. (469)

பொருள்: ஒருவர்க்கு நன்மை செய்யும் போதும் அவரவர் இயல்பறிந்து பொருத்தமாகச் செய்ய வேண்டும். இயல்பு அறியாமல் செய்தால் குற்றம் உண்டாகும்.

இன்றைய பொன்மொழி

பெர்னார்ட் ஷா

கடந்த காலம் பற்றிய நினைவு மனிதனை அறிவாளி  ஆக்குவதில்லை. வருங்காலம் பற்றிய பொறுப்புணர்ச்சியே அறிவாளிக்கு அடையாளம்.

உடல் எடை குறையணுமா?


மாறிவரும் உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குண்டான உடலை குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்முடைய உடல் மீது அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

மனசால நினைக்கனும்:

நம்முடைய உடல் எடையை குறைக்கவேண்டுமெனில் உளரீதியாக நினைக்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். அப்பொழுதுதான் நாவை கட்டுப்படுத்தமுடியும். அதை விடுத்து கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு பின்னர் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பதில் எந்த பலனும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். எனவே உடல் எடை குறைப்பு பயிற்சியை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும்.


நமக்கான உணவு எது?:

நம்முடைய உடலுக்கு தகுந்த உணவு எது என்பதை நாம் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். ருசிக்காக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதை விடுத்து சத்தான உணவுகளை, குறைந்த கலோரி உள்ள உணவுகளை உண்ணவேண்டும் அப்பொழுதுதான் உடல் எடை எளிதாக குறையும். பாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை. 

நார்ச்சத்துள்ள உணவுகள்:

உடல் எடை குறைய முதலில் கவனம் செலுத்தவேண்டியது உணவு. அதுவும் சத்தான ராகி, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இது உடலுக்கு தேவையான சத்துக்களை நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது பசி தூண்டும் உணர்வையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தண்ணீர் குடிங்க:

உடல் எடையை குறைப்பதில் தண்ணீரின் பங்கு மிக முக்கியமானது. எனவே உணவுக்கு முன்னரே தண்ணீரை குடித்தால் பசி கட்டுப்படும் உணவும் குறைவாக எடுக்கும். இதனால் உடலுக்கு குறைந்த அளவு கலோரியே கிடைக்கும். தண்ணீரானது உடல் எடையை கட்டுக்குள் வைக்கும். 

மெதுவா சாப்பிடுங்க:

உணவை நன்றாக அரைத்து மென்று உண்பது உடலுக்கு ஏற்றது. ஏனெனில் ஜீரணத்திற்குத் தேவையான என்சைம்கள் நாவில் இருந்துதான் கிடைக்கின்றன. எனவே சத்தான உணவுகளை அள்ளி விழுங்காமல் நன்றாக மென்று அரைத்து உண்பது அதிக அளவு உணவு உட்கொள்வதை தடுக்கும். உடல் எடையும் கட்டுப்படும். 

நொறுக்குத் தீனிக்கு பை: 

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னர் நொறுக்குத் தீனிக்கு பை சொல்வது அவசியட். எனவே குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்து சுகர் ஃப்ரி சுயிங்கம் மெல்லுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

குறைந்த உப்பு, சர்க்கரைக்கு நோய்:

தினமும் உபயோகிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொள்வது உடலுக்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை உடலின் கலோரியை அதிகரிக்கிறதாம். ஜூஸ், மில்க்ஷேக் போன்றவற்றிர்க்கு சர்க்கரை உபயோகிக்காமல் பருகுவது உடல் எடையை குறைக்கும் என்பது நிபுணர்களின் அறிவுரை. அதேபோல் உப்பின் அளவையும் குறைத்தே உபயோகிக்க வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனையாகும்.

உடற்பயிற்சி தேவை:

உடற்பயிற்சி என்றாலே ஜிம் போய்தான் செய்யவேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே எளிமையான எக்ஸர்சைஸ்களை செய்யலாம். இதனால் உடலில் தேங்கும் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுவதோடு, உடல் நலமும் பாதுகாக்கப்படும். உடல் பருமனால் இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்க நடந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்லலாம். அதனால் கலோரியும் எரிக்கப்படும், உடலும் சிக் என்று ஆகும்.

புரதம் அவசியம்: 

உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று சத்தான உணவுகளை தவிர்க்க வேண்டாம். அது உடலின் பலத்தை குறைத்துவிடும். உடலின் திசுக்களுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த உணவுகளை அவசியமான அளவில் உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். முட்டையின் வெள்ளைக்கரு தினமும் எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள் கருவை தவிர்த்து விடலாம். ஏனெனில் அதில் அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளது.
நன்றி: இதயபூமி 

வியாழன், ஆகஸ்ட் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

ஆற்றின் வருந்தா வருத்தம், பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். (468)

பொருள்: தகுந்த வழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக இருந்து காத்தாலும் முடியாமல் தவறிவிடும். 

இன்றைய சிந்தனைக்கு

பைதகரஸ் 

வாழ்க்கையின் தத்துவங்களைத் தேடி எங்கேயும் அலைய வேண்டாம். நாம் நிறைவான வாழ்க்கை வாழ்வதும், அடுத்தவரை வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக இருக்கட்டும்.

முடி வளர சித்தமருத்துவம்


முடி உதிர்வதை தடுக்க
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:
நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

நன்றி: சிவாஸ்டார் 

புதன், ஆகஸ்ட் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (467)

பொருள்: செய்யத் தொடங்கும் எச்செயலையும் நன்கு ஆராய்ந்தே தொடங்க வேண்டும். செய்யத் தொடங்கிய பிறகு ஆராய்ந்து கொள்வோம் என்று நினைப்பது குற்றமாகும்.

இன்றைய சிந்தனைக்கு

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்

1. சாந்தமாகப் பேசுங்கள். 

2. ரசித்து நடந்து செல்லுங்கள். 

3. ஆழ்ந்து சுவாசியுங்கள். 

4. போதுமான நேரம் உறங்குங்கள்.

5. பயமின்றிச் செயல்படுங்கள்.

6. பொறுமையாகப் பணி  செய்யுங்கள்.

7. உண்மையாக இருங்கள்.

8. சுவையாகச் சாப்பிடுங்கள்.

9. சரியானவற்றை மட்டுமே நம்புங்கள்.

10. நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள்.

11. யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

12. சரியாகத் திட்டமிடுங்கள்.

13. நேர்மையோடு சம்பாதியுங்கள்.

14. தொடர்ந்து சேமியுங்கள்.

15. திறமையாகவும், அளவாகவும் செலவு செய்யுங்கள்.

16. எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள்.

இவைகள்தான் மகிழ்ச்சியான வாழ்விற்கான தாரக மந்திரங்கள். மேற்கூறிய  வண்ணம் நடந்தால் வாழ்வில் யாதொரு குறையுமின்றி வாழ்வீர்கள். 

யாருக்கு மீண்டும் மறுபிறவி கிடையாது…?


மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது.  யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை..
பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது. இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன.  நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.
நன்றி: pagejaffna.com

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (466)

பொருள்: ஒருவன் தனது நிலைமைக்குத் தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாது விடுவதாலும் கேடு அடைவான். 


இன்றைய பொன்மொழி

முகம்மது நபி

உங்கள் கூடாரங்கள் பிரிந்திருக்கட்டும், உங்கள் இதயங்கள் சேர்ந்திருக்கட்டும்.

குதியில் வலி ஏற்படுகிறதா?


உங்கள் பாதத்தில் வலி ஏற்படுகிறது. அந்த வலி நீங்கள் காலையில் படுக்கையை விட்டு எழுந்து பாதத்தை நிலத்தில் வைக்கும் போது கடுமையாக இருக்கிறது. தொடர்ந்து நடக்கும்போது வலி குறைந்து விடுகிறது. இத்தகைய வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கிய காரணம் பிளான்டர் பியடிஸ் (Planter Fascitiis) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் நோய்தான். எம்மவர்கள் இதனைப் பொதுவாகக் குதிவாதம் என்பார்கள். ஆனால் இது தவறான அர்த்தத்தைக் கொடுக்கும் பெயராகும். வாதம் என்பது மூட்டுகளில் ஏற்படும் நோய். ஆனால் இது மூட்டுக்களில் ஏற்படும் நோயல்ல. எனவே உண்மையில் வாதம் அல்ல. பாதத்தின் அடிப்பகுதில் உள்ள சவ்வுகளின் அழற்சியாலேயே இந்நோய் ஏற்படுகிறது. மூட்டுகளில் அல்ல.
அத்துடன் பக்க வாதம் என்றும் பாரிச வாதம் என்று சொல்லப்படும் நோய்க்கும் இதற்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது என்பதும் குறிப்படத்தக்கது.
எனவே இது ஆபத்தான நோயல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். சில்லறைத் துன்பங்களைக் கொடுக்கும் நோய் மட்டுமே.
இந் நோயின் அறிகுறிகள் என்ன என்பதை முதலில் தெளிந்து கொள்ளுங்கள்.
இந்நோயின் முக்கிய அறிகுறி உங்கள் பாதத்தின் குதிப்பகுதியில் ஏற்படும் வலிதான். சிலவேளைகளில் அப்பகுதி சிவக்கலாம், வீங்கலாம், அல்லது சூடாக இருப்பதையும் நீங்கள் உணரக் கூடும். இவை அழற்சியின் அறிகுறிகளாகும். உங்கள் பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தடித்த உள்ளங்காலுக்குரிய சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சியால்தான் இந்நோய் ஏற்படுகிறது.
குதிவாதத்தினால் ஏற்படும் வலியானது முன்பே சொல்லியது போல முக்கியமாக அதிகாலையில் நீங்கள் படுக்கை விட்டு எழுந்து முதல் அடி வைக்கும்போது மிக அதிகமாக இருக்கும். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். ஆனால் கவனியாது விட்டால் நாட் செல்லச் செல்ல வலி நாள் முழுவதும் உங்களுக்குத் துன்பம் தரக் கூடும்.
குதிவாதம் ஏற்படக் காரணம் என்ன?
குதிவாதம் ஏற்படக் காரணங்கள் பலவாகவோ அன்றி ஒன்றோடு ஒன்று தொடர்புடைய வெவ்வேறாகவோ இருக்கலாம். உங்கள் குதிப் பகுதியிலும் காலின் கெண்டைப் பகுதியிலும் உள்ள தசைகளின் இறுக்கம் காரணமாக இருக்கலாம், மாறாக பாதப்பகுதியின் தளர்ச்சியும் காரணமாகலாம், அல்லது நீங்கள் செய்யும் உடற்பயிற்சியைத் தவறாகச் செய்வதும் காரணமாகலாம் , அல்லது உங்கள் பாதத்தின் இயற்கையான வளைவுப் பகுதிக்கு நீங்கள் கொடுக்கும் அதிகரித்த வேலைப் பளுவாகவும் இருக்கலாம். உதாரணமாக மிக நீண்ட தூரம் ஓடுதல், அதி வேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்ற பயிற்சிகளைக் கூறலாம்.
பொருத்தமற்ற அதாவது அளவற்ற காலணியை நீங்கள் உபயோகிப்பதும் குதிவாதத்திற்குக் காரணமாகலாம். அல்லது உங்கள் தொழில் காரணமாவோ அல்லது பொழுது போக்குப் பழக்கம் காரணமாகவோ, நீங்கள் குதிக்காலுக்குரிய சவ்வுக்கு அதிக வேலை கொடுத்து ஊறு விளைவிப்பதாலும் இருக்கலாம்.
எப்படி சிகிச்சையளிக்கப்படுகிறது?
உங்கள் வைத்தியர் உங்களுக்கு ஆலோசனை, பயிற்ச்சி முறைகள், மாத்திரைகள், ஊசி ஏற்றுதல் போன்ற பல்வேறு வகையான சிகிச்சைகளில் ஒன்றையோ அல்லது சிலவற்றைச் சேர்த்தோ அளிக்கக் கூடும். அவர் உங்களுக்கு அளிக்கும் சிகிச்சை உங்கள் குதிவாதம் ஏற்படுவதற்கான காரணத்தை அகற்றுவதாக இருக்க வேண்டும். அத்துடன் அதன் வேதனையைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும் அத்துடன் சிகிச்சையானது உங்கள் பாதத்தில் ஏற்பட்ட அழற்சியைத் தணிக்கவும் வேண்டும்.
முதலாவதாக உங்கள் பாதணியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் உள்ளங்காலுக்குரிய சவ்வுக்கு ஏற்பட்டுள்ள அதிக வேலைப்பளுவைக் கொடுக்காத, அதன் வேதனையைக் குறைப்பதற்கு ஏற்ற காலணிகளை நீங்கள் தேர்ந்து அணிய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலணி உங்கள் உள்ளங்காலின் இயற்கையான வளைவுக்கு இசைந்து ஒத்தாசை வழங்குவதான அமைப்புடையதாக இருக்க வேண்டும். அத்துடன் உங்கள் பாதணியின் அளவு உங்களுக்கு மினவும் பொருத்தமுள்ளதாக இருக்க வேண்டும்.
குதிவாதநோய் ஏற்பட்டுள்ள விளையாட்டு வீரர்களும்,மற்றும் துடிதுடிப்பான வாழ்க்கை முறை கொண்டவர்களும் தமது பாதங்களுக்கு மேலதிக வேலை கொடுப்பதைக் குறைக்க வேண்டும். அதாவது பாய்தல், ஓடுதல், துள்ளல் போன்றவற்றைச் செய்யும் நேரத்தைக் குறைக்க வேண்டும். உங்கள் பாத வளைவுக்கு ஏற்ற விசேட பாதணிகளும் சிலவேளை தேவைப்படலாம்.
காலையில் படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்க முன்னரே பயிற்சிகளை ஆரம்பியுங்கள். எழுந்தவுடன் உங்கள் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து மஸாஜ் செய்தால் எழுந்து நடக்கும் போது வலி குறைவாக இருக்கும்.
அடுத்தது தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். இவை உங்கள் நோயைத் தணிப்பதில் நல்ல பலனைக் கொடுக்கும்.
முழங்காலுக்குக் கீழ் இருக்கும் கெண்டைக்கால் தசைகளுக்கான இழுவல் பயிற்சிகளும் குதிக்கால் வலிக்கு உதவும். மேலே காட்டிய படங்களில் உள்ளபடி இரண்டு விதமாக செய்யுங்கள். சுவரை உங்கள் கைகளால் தள்ளுவது போன்றவையே இப் பயிற்சிகள். முதலாவது படத்தில் காட்டியபடி உங்கள் இரு கைகளையும் மடிக்காது நேராக வைத்துக் கொண்டு சுவரைத் தள்ளுங்கள். தள்ளுபோது முன்னிருக்கும் கால் சற்று மடிந்திருக்க பின்னிருக்கும் காலிலின் குதிப் பகுதியில் பாரம் தங்குமாறு செய்யுங்கள். அடுத்த தடவை கால்களை மாற்றி வைத்துச் செய்யுங்கள்.
இரண்டாவது படத்தில் காட்டிய அடுத்த பயிற்சியின்போது உங்கள் கைகள் சற்று மடிந்திருக்க சுவரைத் தள்ளுங்கள். இது பாதத்தின் முற்பகுதியில் பாரம் தங்குமாறு செய்யும். உண்மையில் இவை உங்கள் தசைகளைப் பலமுறச் செய்து அதனால் எதிர்காலத்தில் வலிகள் தொடர்ந்து வேதனை அளிப்பதைக் குறைக்க உதவும்.
பாதத்தின் தசைநார்களுக்குக் கொடுக்கும் பயிற்சிகளில் துவாயைச் சுருட்டல், மார்பிள் அல்லது நாணயங்களை கால் விரல்களால் பொறுக்கல், மற்றும் காற் பெருவிரல் தட்டல் பயிற்சிகள் சுலபமானவை. பயிற்சிகளின் பெயர்களைக் கேட்டவுடன் பயந்துவிடாதீர்கள். மிகவும் சுலபமானவை. தொடர்ந்து செய்ய நல்ல பலனையும் கொடுக்கும்.
துவாயைச் சுருட்டல் பயிற்சி – ஒரு துவாயை தரையில் விரியுங்கள். படத்தில் காட்டியபடி உங்கள் பாதத்தை அதன் ஒரு ஓரத்தில் வைத்தபடி அருகே ஒரு நாற்காலியில் உட்காருங்கள். துணியை உங்கள் கால்விரல் நுனிகளால் பற்றி உங்கள் பக்கமாக சுருட்டிச் சுருட்டி இழுங்கள். பல முறை இவ்வாறு செய்யுங்கள்.
இன்னுமொரு பயிற்சி கால் விரல்களால் மார்பிள்களை பொறுக்குவதாகும். சில மார்பிள்களை, அல்லது சில நாணயங்களை அல்லது சோடா மூடிகளை நிலத்தில் போட்டு வையுங்கள். அருகில் உயரம் குறைந்த ஒரு கோப்பையை வையுங்கள். உங்கள் குதிக்கால் நிலத்தில் படும்படி உட்கார்ந்து கொண்டு மார்பிள்களை உங்கள் கால் விரல்களால் பொறுக்கி எடுத்து அருகில் ஏற்கனவே வைத்த கோப்பைக்கள் போடுங்கள். நாணயங்களை இவ்வாறு பொறுக்கிப் போடுவது இன்னும் நல்ல பயிற்சியாகும்.
கால்விரல் தட்டல் (Toe Tab) இன்னுமொரு நல்ல பயிற்சியாகும். இது ஒரு நுணுக்கமான ஆனால் சிறந்த பயிற்சியாகும். உங்கள் பாதத்தின் குதிப் பகுதி தரையில் திடமாக இருக்கும்படி வைத்தபடி கால் விரல்களை மட்டும் மேலே உயர்த்துங்கள். இப்பொழுது நான்கு விரல்கள் உயர்ந்தபடி நிற்க பெருவிரலால் மாத்திரம் தரையைத் தட்டுங்கள். இனி மறுபுறமாகச் செய்யுங்கள். அதாவது பெருவிரல் உயர்ந்து நிற்க மற்ற நான்கு விரல்களால் தரையைத் தட்டுங்கள்.
இவ்வாறு பலமுறை செய்ய வேண்டும். ஒரு தவணையில் பத்து முறையாவது செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொரு தவணையிலும் ஜம்பது முறையாவது செய்யும்படி பயிற்சியை அதிகரியுங்கள்.
குதியில் ஏற்பட்ட அழற்சியைத் தணிக்க ஐஸ் மஸாஸ் சிலருக்கு உதவக் கூடும். ஒரு சிறிய பேப்பர் கோப்பையில் நீரை வைத்து குளிர்சாதனப் பெட்டி மூலம் ஐஸ் ஆக்குங்கள். கோப்பையிலிருந்து ஐஸ் வெளியே தெரியும் பகுதியை பாதத்தின் வலிக்கும் இடத்தின் மேல் வைத்து அழுத்துங்கள். மிதமான அழுத்தத்துடன் சுற்றுவட்டமாக 5 முதல் 10 நிமிடங்களுக்கு அழுத்துங்கள். இதுவும் குதிவாதத்தின் வலியைத் தணிக்க உதவும்.
ஆழம் குறைந்த பேசினுக்குள் ஐஸ் கலந்த நீரினுள் பாதத்தை 5 முதல் 10 நிமிடங்களுக்கு வைத்திருப்பதையும் மேலை நாட்டு வைத்தியர்கள் சிபார்சு செய்கிறார்கள். ஆயினும் எம்மவர்கள் குறைந்த சூடுள்ள நீரில் பாதத்தை வைத்திருப்பது கூடிய சுகத்தைக் கொடுப்பதாக உணர்கிறார்கள்.
வலியையும் அழற்சியையும் தணிக்கும் வலிநிவாரண மாத்திரைகளும் உங்களுக்கு நிச்சயம் உதவும். வைத்தியரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அத்தகைய மாத்திரைகள நீங்கள் உட்கொள்ள சுகம் தெரியும்.
சில வேளை ஹைட்ரோகோட்டிசோன் ஊசி மருந்தை வலி அதிகமுள்ள இடத்தில் உங்கள் வைத்தியர் போடவும் கூடும்.
உங்களுக்கு ஏற்ற சிகிச்சை முறையை வைத்தியரின் ஆலோசனையுடன் தீர்மானியுங்கள். மனந்தளராமல் தொடர்ந்து செய்யுங்கள் சுகம் கிடைக்கும்.
நன்றி: யாழ்மின்னல் 

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

வகையறச் சூழாது எழுதல் பகைவரைப் 
பாத்திப் படுப்பதுஓர் ஆறு. (465) 

பொருள்: நன்கு ஆராய்ந்து பாராமல் செயல்பட ஆரம்பிப்பது, பகைவரை வளர்க்கும் வழியாகும்.

இன்றைய பொன்மொழி

விலாடிமிர் பெரிக் வால்ட்டேர்

செல்வத்தை இழப்பவன்  நிறைய இழப்பான். நண்பர்களை இழப்பவனின் இழப்பு  அதைவிட அதிகம். ஆனால் மன  உறுதியை இழப்பவன் அனைத்தையும் இழக்கிறான்.

எடை குறைய பூண்டை சாப்பிடுங்க!!!


இந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் பூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை என்று சாப்பிடாமல் தவிர்ப்பர்.
ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை கொண்டது. மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.
ஏனெனில் இதில் அலிசின் என்னும் பொருள் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. எப்படியெனில் அலிசின் (allicin) உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும்.
மேலும் இதில் சல்பர் இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.
ஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை குறைந்து இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நன்றி: யாழ்மின்னல் 

ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

தெளிவில் அதனைத் தொடங்கார்; இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர். (464)

பொருள்: தமக்கு இழிவாகிய குற்றம் உண்டாதலைக் கண்டு அஞ்சுகின்றவர்கள், தெளிவில்லாத செயல்களைச் செய்யத் துணிய மாட்டார்கள்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

நான் என்ற உணர்வு நிச்சயமாகத் தவறில்லை. நான் மாத்திரம் தான் என்ற உணர்வுதான் தவறு.

சனி, ஆகஸ்ட் 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடையார். (463)

பொருள்: பின்னே கிடைக்கக் கூடிய இலாபத்தை எதிர்நோக்கி மூலதனத்தை இழந்துவிடும் காரியத்தை அறிவுடையோர் மேற்கொள்ள மாட்டார்கள்.


இன்றைய பழமொழி

ரஷ்யப் பழமொழி

உண்மை எப்போதும் தனியாகச் செல்லும்; பொய்க்குத்தான் துணை வேண்டும்.

கெடுவார், கேடு நினைப்பார்!

ஆக்கம்: பிரவீன் சுந்தர், கோயம்புத்தூர், இந்தியா  
ஒரு காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.

எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள் யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.

ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா ? என்று கேட்டது.

நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது

ஆமை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது

சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன்.அவர்கள்வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.ஆனால் நான் ஒரு நாளும், ஆமையை
கொட்டியது இல்லை ,இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது.

தேள் ஆமையின் முதுகில் கொட்டியது .ஆனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து. உடனே தேள் ஆமையைப் பார்த்து

ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை, ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.

ஓகோ ;அப்படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமையை கொட்ட ஆரம்பித்த்து .

தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடு விளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந்தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.


நீதி:
------
ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் நமக்கு உதவி
செய்தாராயின்,அவரின் உதவியை நாம், நம் வாழ் நாளில் என்றுமே மறந்துவிடலாகாது.

அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அதனால் நமக்கு தீமையே வந்து சேரும்

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல். (462)

பொருள்: ஒரு செயலைச் செய்வதற்கு முன் அறிவுடையவரோடு கலந்து ஆராய்ந்து செய்யின் அவர்க்குப் பெறுதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

மனம் திறந்து பேசுங்கள். ஆனால் மனதில் பட்டதை எல்லாம் பேசாதீர்கள். சிலர் புரிந்து கொள்வார்கள், சிலர் பிரிந்து செல்வார்கள்.

அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !


வாய்க்கு ருசியாக காரமாகவோ, புளிப்பாகவோ எதையும் சாப்பிட முடியாத நிலை, கொஞ்சம் சாப்பிட்டால் கூட புளித்த ஏப்பம் என இன்றைக்கு பெரும்பான்மையோரை வாட்டி எடுக்கிறது அல்சர். 

சாப்பிட வேண்டிய நேரத்தில் சரியாக சாப்பிடாமல் விடுவதும், பாஸ்ட் புட், எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள்,காபி, டீ போன்றவற்றை உள்ளே தள்ளுவதும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. அதேபோல் அதிக டென்சன், மன அழுத்தம் போன்றவையும் அல்சர் ஏற்பட காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நம் வயிற்றுக்குள் குடலை பாதுகாக்கும் திரை போன்ற அதைப்பு பாதிக்கப்படுவதாலோ, அதில் புண்கள் உருவானாலோ வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது இதுவே அல்சர் எனப்படுகிறது. இந்த புண்களினால் சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக்குழியிலேயே நிற்பது போல உணர்வு ஏற்படும். நெஞ்சு எரிச்சலும், புளித்த ஏப்பமும் அடிக்கடி வந்து தொந்தரவை ஏற்படுத்தும்.

சாதாரண தலைவலி, காய்ச்சல் என்றால் தாங்களாகவே மருந்தகங்களுக்கு சென்று எதையாவது மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். இவ்வாறு அடிக்கடி மாத்திரை சாப்பிடுவது ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் போன்ற மாத்திரைகள் உட்கொள்வதும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. ஏனெனில் ஆன்டிபயாடிக் உட்கொள்ளும் போது மருத்துவர்கள் தரும் பி.காம்பளக்ஸ் மாத்திரைகளை உட்கொள்வதும் அவசியம். தவிர்க்கும் பட்சத்தில் மருந்தின் வீரியத்தினால் வயிற்றில் புண்கள் ஏற்படுகின்றன.

ஒரு சிலருக்கு பரம்பரை காரணமாகவும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், அதிக உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் காரணமாகவும் அல்சர் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டென்சன் ஏற்படும் போது அமிலம் அதிகமாக சுரக்கிறது. இதுவும் அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

எந்த காரணம் கொண்டு உணவுகளை தவிர்க்க கூடாது. மேலும் அல்சர் உள்ளவர்கள் எளிதில் ஜீரணமாகும் வகையில் உணவுகளை உட்கொள்ளவேண்டும். அல்சர் வந்தவர்களுக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. மூன்று வேளையும் மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். 

எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கவேண்டும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரியில் கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம்.

அல்சர் வந்தவர்கள் ஸ்ட்ராங்கான காபி, டீயை குடிக்கக் கூடாது. அதேபோல் அதிகமான இனிப்புகள், பொரித்த உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி- இவற்றை அறவே தவிர்க்கவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

உணவு உட்கொண்ட உடனே படுக்கைக்கு செல்லக்கூடாது. ஏனெனில் அது நெஞ்சு எரிச்சல் ஏற்பட வழிவகுக்கும். எனவே மூன்று மணிநேரம் கழித்தே உறங்கவேண்டும். நள்ளிரவு நேரத்தில் எண்ணெய் பலகாரங்களை உட்கொள்வது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள்.
நன்றி: இதயபூமி 

வியாழன், ஆகஸ்ட் 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

அழிவதூஉம்  ஆவதூஉம்  ஆகி  வழிபயக்கும் 
ஊதியமும் சூழ்ந்து செயல். (461)

பொருள்: ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன், அச்செயலைச் செய்வதால் வரும் நன்மை, தீமைகளையும் செய்து முடித்தபின் வரும் பயன்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்றைய சிந்தனைக்கு

கவியரசு கண்ணதாசன் 

மலரைப் பார்! கொடியைப் பார். வேர் எப்படியிருக்குமென்று  பார்க்க  முயற்சிக்காதே! அதைப் பார்க்க  முயன்றால் உன்னால் மலரையும் கொடியையும் அதன் அழகையும் பார்க்க முடியாது.

ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமான அரளி

எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.

இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.

வறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.

அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.

அரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.


நன்றி: சிவாஸ்டார் 

புதன், ஆகஸ்ட் 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை

நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை; தீஇனத்தின்
அல்லல் படுப்பதூம் இல். (460)

பொருள்: ஒருவனுக்கு நல்லோர் சேர்க்கையினும் சிறந்த துணையும் வேறு இல்லை. தீயோர் கூட்டுறவினும் துன்பம் தரும் கொடிய பகையும் இல்லை.

இன்றைய பழமொழி

ரஷ்யப் பழமொழி

உண்மை ஊர் சுற்றக் கிளம்பும்போது, பொய் பாதி உலகத்தைச் சுற்றி வலம் வந்துவிடும்.

உடல் சிலிம் ஆக வேண்டுமா?

உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும்.

சுறுசுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்.


நன்றி: இருவர் உள்ளம் 

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை


மனநலத்தின் ஆகும் மறுமை; மற்றுஅஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. (459)

பொருள்: மனத்தின் நலத்தால் மறுமை இன்பம் உண்டாகும். அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

இன்றைய பொன்மொழி


மூத்தோர் சொல்


ணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்.

திங்கள், ஆகஸ்ட் 20, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை


மனநலம் நன்குஉடையார் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து. (458)

பொருள்: மன நன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.



இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

வாழ்க்கையில் தன்னுடைய சுய புத்தியின் மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு என்றுமே ஒளிமயமான எதிர்காலம் இருக்கமுடியாது.

நம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும்

ஆக்கம்: பிரவீன் சுந்தர், கோயம்புத்தூர், இந்தியா  

ஒரு ஊரில் நண்பர்களான இரண்டு இளைஞர்கள் ஒருநாள் வெளியூருக்குச் சென்றார்கள். போகும் வழியில் இரவு நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டது. இருந்தாலும் இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசியபடியே பயம் தெரியாமல் நடந்தார்கள்.

நேரம் நகர்ந்துகொண்டே போனதில், இரவும் வளர்ந்து கும்மிருட்டு ஆனது. சரி. ஏதாவது ஒரு மரத்தில் ஏற
ி இரவைக் கழித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தபோதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது.

எதன்மீதோ தடுக்கி எப்படியோ உருண்டு அழமான கிணறு ஒன்றில் விழுந்துவிட்டார்கள் அவர்கள். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் நீரில் மூழ்கவில்லை என்றாலும் மிக ஆழமான பாசிபடர்ந்த கிணறு என்பதாலும், இருட்டு என்பதாலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. கிணற்றில் விழுந்த நிலவின் பிம்பம் மட்டுமே துணையாக இருக்க இருவரும் விடியும்வரை கிணற்றுக்குள்ளேயே இருந்தார்கள்.

விடிந்தது. வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் இருண்டுபோனது. காரணம், கிணறு அவர்கள் நினைத்ததைவிட மிக மிக ஆழமாக இருந்தது. அதைவிட மோசமாக, அதில் இருந்து ஏறி வர எந்தப்பிடிப்போ படிகளோ எதுவுமே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், எப்போதோ இயற்கைச் சீற்றத்தின்போது ஏற்பட்ட வெகு ஆழமான பள்ளம்போல் இருந்தது அது. சேறும் சகதியும் நிறைந்திருந்த அதில் இருந்து வெளியேறுவது எதாவது அதிசயம் நிகழ்ந்தால்தான் முடியும்.

நிலவரம் என்ன என்பது தெரிந்ததுமே இளைஞர்களில் ஒருவன் கலவரம் அடைந்து சேர்ந்து போனான் மற்றவனோ சற்று நேரம் அமைதியாக தியானத்தில் அமர்ந்தான். பிறகு யோசிக்க ஆரம்பித்தான். அப்போது, கிணற்றின் ஒரு மூலையில் காட்டு மரம் ஒன்றின் கனமான வேர் பரவி இருப்பது அவன் கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று கிணற்றுக்குள் மூழ்கியவன் அதன் அடியில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்தான். அந்தக் கல்லால் வேரைத் தட்டித்தட்டி சிறு கழி போல் இரு துண்டுகளை வெட்டி எடுத்தான்.

இந்த வேர்க்குச்சிகளை பிடிமானமாகப் பயன்படுத்தி மேலே ஏறுவோம்... வா.. ! என்று மற்றவனை அழைத்தான். ஆனால் அவன் பயந்து நடுங்கி வர மறுத்தான். அவனைச் சுமந்து கொண்டு வெளியேறுவது முடியாத விஷயம். அதே சமயம் நண்பனை கிணற்றுக்குள்ளேயே விட்டுவிட்டுப் போகவும் முடியாது.

என்ன செய்து ? மறுபடியும் யோசித்தான் இளைஞன். ஒரு சில நிமிடங்களுக்குப் பின் தன் நண்பனிடம் நண்பா எனக்கு ஒரு மந்திர வார்த்தை தெரியும். அதைச் சொன்னால் எந்தவித பயமும் நமக்கு வராது. அதைத்தான் நான் இவ்வளவு நேரம் சொல்லி தியானம் செய்தேன். நீயும் சொல். உனக்கும் அச்சம் இருக்காது. சுலபமாக நாம் வெளியேறிவிடலாம் என்றான். அதைக் கேட்டதுமே இரண்டாவது இளைஞன் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது. அவசர அவசரமாக கேட்டான், என்ன மந்திரம் அது, சொல்...! இளைஞன் சொன்னான் நமஇவெயா

நமசிவாய தெரியும்.. இது என்ன நமஇவெயா... ? உனக்கு கிணற்றை விட்டு வெளியேற ஆசை இருக்கிறதா இல்லையா ? இருக்கிறது.. ! அப்படியானால் கேள்வி எதுவும் கேட்காமல் மந்திரத்தைச் சொல் ...! இரண்டாவது இளைஞன் மந்திரத்தைச் சொன்னான். அவன் மனதிலும் நம்பிக்கை எட்டிப் பார்த்தது. அப்புறும் என்ன, இருவரும் சிரமப்பட்டு வெளியில் வந்தார்கள்.

கொஞ்சநேர ஓய்வுக்குப் பின் அவர்கள் பயணம் தொடர்ந்தது. வழியில் இரண்டாவது இளைஞன். நண்பனிடம் கேட்டான். எனக்குத் தெரியாமல் நீ எப்போது மந்திர தந்திரங்களைக் கற்றாய் ? நீ சொன்ன மந்திர வார்த்தையைச் சொன்னபோது எனக்குள் ஒருவித ஆற்றல் பொங்கி எழுந்தது. அபூர்வமான இந்த மந்திரத்தைப்போல் இன்னும் ஏதாவது தெரியுமா உனக்கு ? அவற்றையும் சொல்லித்தருகிறாயா?

முதல் இளைஞன் சிரித்தான்.. நண்பா என்னை மன்னித்துவிடு. எனக்கு மந்திரம் எதுவும் தெரியாது. நான் உனக்கு செல்லித் தந்தது. மந்திர வார்த்தையும் அல்ல.. ! அப்படியானால் என்னை ஏன் ஏமாற்றினாய் ? நான் ஏமாற்றவில்லை. உன் மனதில் இருந்த எதிர்மறை எண்ணத்தை வெளியே தள்ளி, நீ நம்பிக்கையுடன் செயல்பட உதவினேன். அவ்வளவுதான். நீ சொன்ன மந்திர வார்த்தை..! ? அது, நம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும் என்ற வார்த்தையின் முதல் எழுத்துக்கள்தான். புரிந்ததா?

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை



மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம்; இனநலம் 
எல்லாப் புகழும் தரும். (457)

பொருள்: இவ்வுலகில் வாழும் மக்களுக்கு மனம் நலமுடையதாக இருந்தால் அது செல்வத்தைக் கொடுக்கும். சேரும் இனம் நல்லதாக இருந்தால் அது செல்வத்தோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.