ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
1432ல் தாய்லாந்து அங்கோர் சமஸ்தானத்தைக் கைப்பற்றிய போது, அதாவது கம்போடிய அங்கோர் சமஸ்தானத்தைக் கைப்பற்றிய போது புத்தர் சிலையையும் தம்மோடு தாய்லாந்து அயோத்தியாவிற்கு எடுத்து வந்தனர். இப்படியே காலத்திற்குக் காலம் அரசரும் இராசதானிகளும் மாறமாற இச் சிலையும் இடங்கள் மாறி, இன்று நிரந்தரமாக எமரெல்ட் (மரகதம், பச்சை) புத்தாவென இங்கு வைக்கப்பட்டுள்ளது.வெப்பம், மழை, குளிர் காலங்களிற்கென 3வகை தங்க ஆடைகள் இச் சிலைக்கு உள்ளதாகவும் விழாக்காலங்களில் இதைப் பாவிப்பதாகக் கூறப்படுகிறது.
ஏமரெல்ட் புத்த கோயில் பார்த்த பின்பு சிறிது தூரம் வாகனத்தில் பயணித்தோம்
மாபிள் பலஸ் எனும் இடம் வந்தோம். ” வாற் பெஞ்சமாபோபிற் டுசிற்வனராம் ” என்பது இந்த இடத்துத் தாய்லாந்து மொழிப் பெயா.
இத்தாலி Floranc carrera marble கொண்டு வந்து இந்தக் கட்டிடம் 1899ல் கட்ட ஆரம்பித்து 10 வருடத்தில் கட்டப்பட்டதாம். கிங் சுலாலொங் கோண் அதாவது ராம் 5 இதைக் கட்டினாராம். இராசகுமாரன் நாறீஸ் எனும் பிரபல கலைஞர் கிங் ராம் 4ன் மகன் இதை வரைந்தாராம், அதாவது டிசைன் பண்ணினாராம். இக் கட்டிடத்தில் சுற்றிவர உள்ள சாலையில் 53 புத்த உருவங்கள் உலகின் பல் வேறு இடங்களிலுமுள்ள அல்லது ஆசியாவில் உள்ள முழு உருவங்களும் இங்கு வைத்துள்ளனர். பிரதான சாலையில் 2.5 தொன் நிறையுள்ள வெண்கல புத்தர் சிலை உள்ளது. நீலநிற பின்னணி ஒளியில் இது துல்லிய அழகுடன் விளங்குகிறது.
வாசற் பகுதியில் வெள்ளை நிற மாபிளில் சிங்க உருவம் காவலுக்கு உள்ளது. அருகில் உள்ள நீரோடையில் அழகிய பாலம் என்று அனைத்தும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பாதணிகளைக் கழற்றி வெளியே வைத்துத் தான் கோயில் உள்ளே போக முடியும். உள்ளே மலர் அலங்காரம், மின்னொளி என்று மிக ஆடம்பரமாக இருந்தது. மக்கள் வந்து அமைதியாக இருந்து மௌனமாக தியானித்துத் செல்கின்றனர். நாமும் அப்படியே சிறிது நேரம் நிலக் கம்பளத்தில் அமைதியாக அமர்ந்திருந்து திரும்பினோம்.
மொழி பெயர்ப்பாளர் இறுதியாக எங்களை ஜெம் பலஸ்க்குக் கூட்டிப் போனார்.
அங்குள்ள உத்தியோகத்தர்கள் எமக்குக் குளிர் பானம் தந்து இரண்டிரண்டு பேராக எம்மை தமது கண்காணிப்பில் உள்ளே அழைத்துச் சென்று காட்டினார்கள்.
சொல்லவே தேவையில்லை. கண்கள் பறிக்கும் வண்ண வண்ண இரத்தினக் கல் நகைகள். வாங்கு வாங்கு என்று எம் தலையில் கட்டுவதிலேயே எம்மை அழைத்துச் சென்ற பெண்மணி குறியாக இருந்தார். இறுதியில் கல் வைத்த சுத்த வெள்ளி மோதிரம் ஒன்றை நான் வாங்கினேன். 600 பாத்., அதாவது 100 குரோணர்கள் தான். கணவரோ ‘இங்கு வந்த ஞாபகமாய் ஒரு வைர மோதிரம் வாங்கேன்!’ என்று மிகவும் வற்புறுத்தினார். எனக்கோ தங்க நகைகளில் உள்ள ஆசை விட்டுப் போய் விட்டது. “”மினுங்கும் வெள்ளைக் கற்கள் வைத்த இந்த வெள்ளி மோதிரம் வாங்குகிறேன். இதை மகள் பார்த்து விரும்பினால் அவளுக்கே கொடுத்திடுவேன், சம்மதமா ”" என்று கணவரிடம் கேட்டுத் தான் வாங்கினேன்.
இளையவர்களுக்கு தங்க நகையிலும் பார்க்க வெள்ளி தானே மிகவும் பிடிக்கும்! அதே போல இங்கு வர மகள் அதைப் பார்த்ததும் ஆசைப்பட்டாள். ‘ இந்தா உனக்குத்தானம்மா!’ என்று அவளுக்கே கொடுத்து விட்டேன்.
அன்றைய நாள் பயணம் முடிந்தது. மாலை 6 மணிக்கு அறைக்குத் திரும்பினோம்.
அங்கு நினைத்தவுடன் மழை வரும். யாரைப் பார்த்தாலும் குடையும் கையுமாகத்தான் செல்வார்கள்.
ஒரு நாள் சாமான்கள வாங்கி வரும் போது நல்ல மழை வந்தது. கடைகளில் ஒதுங்கி நின்று விட்டு மழை விட நடக்கத் தொடங்கினோம்.
சிறிது தூரம் வர முழங்காலளவு வெள்ளம் வழியில் நின்றது. செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக் கொண்டு, கால்சட்டையையும் முழங்காலுக்கு மேல் சுருட்டிக் கொண்டார் கணவர். நான் பாவாடை கட்டியதால் தப்பித்தேன். மாற்றி மாற்றி தெருக்களைச் சுற்றிச் சுழன்று ஆடைகளும், ஏன் நாமும் கூட நனையாது அறைக்கு வந்து சேர்ந்தோம். சிரி சிரியென்று சிரித்தபடி நல்ல ஜாலியாக அனுபவித்து வந்தோம். அறைக்குள் வர நல்ல இதமான சூடு சொகுசாக இருந்தது.
(மேலே உள்ள படத்தில் நிறங்கள் பலவான வாடகை வண்டிகளை (ரக்சி) பார்க்கிறீர்கள் இது அரச மாளிகைக் கட்டிடங்கள்.)