புதன், ஏப்ரல் 20, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.0


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
தோட்டங்கள் ஊடாக நடந்துகொண்டிருந்தாலும், குடிமனைகள் இருக்கும் பகுதியை எவ்வாறு சென்றடைவது என்பது எனக்குப் புலப்படவில்லை. காலில் மிகவும் சிறிய நெருஞ்சி முட்கள் குத்தத் தொடங்கின. ஒவ்வொரு பத்து மீட்டர் தூரமும் நடந்தபின்னர், என் காலில் தைத்த சிறிய முள்ளை காலிலிருந்து அப்புறப் படுத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டதால் என் நடையில் வேகம் தடைப்பட்டது. செருப்போடு நடந்து செல்வோர் 'பாக்கியவான்கள்' என்று நினைத்துக் கொண்டேன். எனக்குச் செருப்புக் கிடைக்காமல் போனதற்கும் என் அண்ணனே காரணம். ஏனெனில் தனக்குக் கிடைத்த செருப்பை பள்ளிக்கூடம் தொடங்கி இரண்டு நாடகளுக்குள் என் அண்ணன் தொலைத்ததால், நானும் செருப்பைத் தொலைக்கக் கூடும் என்று என் தந்தையார் கருதியதால், எனக்கு 'செருப்பு' வாங்கித் தரவில்லைப் போலும். பள்ளிக்கூடத்தில் டீச்சர் சொல்லித் தந்த பாடலாகிய: 
"குடைபிடித்து, செருப்புமிட்டுப் 
புத்தகமும் கொண்டு.
குடுகுடென நடந்து வரும் 
குழந்தைகளே கேளும்" 
பாடலை எல்லோரும் வகுப்பில் சேர்ந்து பாடும்போது, என் கண்களிலிருந்து நீர் வழிந்ததை, அந்தத் 'தேவதை' போன்ற டீச்சரோ, அல்லது என் பெற்றோர்களோ அறிய வாய்ப்பேதுமில்லை. இப்போது இனம்புரியாத பயமொன்று என்னைப் பற்றிக்கொண்டது. அதாவது என் அண்ணனும், நண்பர்களும் என்ன ஆனார்களோ? என்ற கேள்வியும், பயமுமே அதுவாகும். என் அண்ணனும் அவனது நண்பர்களும் அந்தக் கரிய உருவமுடைய மனிதர்களின் கைகளில் சிக்கியிருப்பார்கள், அவர்களை அந்த மனிதர்கள் 'கட்டி வைத்து' தடியால்(*பிரம்பால்) அடிப்பார்கள் என்பதை எண்ணும்போது அழுகை, அழுகையாக வந்தது. அதைவிடவும் எனது 'அருமைப் பெருமையான' சிலேட்டை விட்டுவிட்டு ஓடிவந்தேன் என்பதும் நினைவுக்கு வந்து, அதற்காக வீட்டில் கிடைக்கப் போகும் தண்டனையை நினைத்துப் பார்க்கும்போது உள்ளம் 'பகீரென்றது'. 
இத்தனை குழப்பங்களோடும், பயத்தோடும் நடந்துகொண்டிருந்த எனக்கு அதிக தூரம் நடந்தும்கூட எங்கள் வீடு தென்படாதது ஏமாற்றத்தையும், அழுகையையும் ஏற்படுத்தியது. இப்போது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தேன். நான் அழுதது அருகில் ஒரு தோட்டத்தில் தண்ணீர் ஊற்றிகொண்டிருந்த ஒரு கமக்காரரின்(*விவசாயியின்) காதில் விழுந்திருக்க வேண்டும், என்னை நோக்கி ஆழமாகப் பார்வையைச் செலுத்திய அந்த மனிதர் என்னை நோக்கி சத்தமாக "டேய் பொடியா இஞ்ச வா"(*டேய் பையா இங்கே வா) என அழைத்தார்.
தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன

நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

1 கருத்து:

நாதன், DK சொன்னது…

நல்ல தொடர்

கருத்துரையிடுக