ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 2.4

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)


எங்கள் கிராமத்தில் எந்த ஆசிரியையும்/ஆசிரியரும் மாணவரை 'வாங்கோ/போங்கோ' என மரியாதையாக அழைப்பதில்லை. பெற்றோர்கூட பிள்ளைகளை வாங்கோ/போங்கோ என மரியாதையாக அழைப்பது மிக மிக அபூர்வம். ஆனால் இந்த ஆசிரியை ஒரு ஏழை வீட்டுப் பிள்ளையைக் கூட மரியாதையாக 'விளித்தது' எனக்கு அந்த வயதில் தேனாக இனித்தது. அந்த டீச்சரை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
"நேற்று பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போகும்போது என்னப்பன் (*என்ன ராசா) நடந்தது?"
டீச்சரின் கேள்வியில் நான் நெகிழ்ந்து, நெக்குருகிப் போனேன். இந்த 'அன்புக்கே அடையாளமான' டீச்சரிடம் உண்மையை கூறாமல் மறைத்துவிட நான் ஒன்றும் கல் நெஞ்சம் படைத்த 'பெரிய மனிதன்' அல்லவே? ஒரு சராசரி ஐந்து வயது, கிராமத்துச் சிறுவன் தானே? அந்த டீச்சரின் அருகாமை,மற்றும் அவர் விசாரித்த விதம் எனக்கு 'பாதுகாப்பு உணர்வையும், பலத்தையும்' தந்தது, அதைவிடவும் நேற்று நடந்த சம்பவத்தை இனியும் மறைக்கும் தைரியம் என்னிடம் இல்லை என்றே கூற வேண்டும். நேற்று கந்தையாப்பா வீட்டு வளவில் நடந்தது என்ன? என்பதை விஜய் டி.வி. கோபிநாத் பாணியில் கூறி முடித்தேன். சம்பவத்தை விபரிக்கும்போதும் "கதை கேட்டு முடித்ததும் டீச்சர் உனக்கு அடிக்கக் கூடும்" என மனம் கூறியது, இருப்பினும் இந்த டீச்சர்தான் பிரம்பே உபயோகிப்பதில்லையே, பின்பு எவ்வாறு அடிப்பார்? அதைவிடவும் "சாட்சாத் 'லட்சுமி' போல காட்சியளிக்கும் டீச்சர்கள் அடிப்பதில்லை" என்பது எனது சித்தாந்தம்.
நான் சொன்னதை கேட்ட டீச்சர் என்னிடம் எதுவுமே கூறவில்லை. "சரி போய் இடத்தில இருங்கோ"(இந்தியத் தமிழில் "போய் உங்க இடத்தில உக்காருங்க") எனப் பணித்தார். என் மனதில் ஒரு நீண்ட அமைதி. கடந்த இருபது மணித்தியாலங்களுக்கு மேலாக சுமந்து கொண்டிருந்த ஒரு பாரத்தை இறக்கி வைத்த உணர்வு(நிம்மதி) அன்றைய தினமும் பாலர் பள்ளியில் ஆனந்த மயமாகவே கழிந்தது. வாழ்வில் மகிழ்வான ஒரு கால கட்டம் என ஒன்று உண்டென்றால் அது 'பாலர் பள்ளியில் பயிலும் காலம்' மட்டுமே என்றுதான் என்னைக் கேட்டால் கூறுவேன். ஆடலென்ன,பாடலென்ன, கதைகள் என்ன, அப்பப்பா! அது ஒரு ஆனந்த உலகம். அது இப்போதும் இலங்கையில் 'நாம் பயின்ற காலம் போல' தன் மகிமையை, மகத்துவத்தை இழக்காமல் இருக்கிறதா என்பதை நானறியேன்.
###############################################
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இதை முழுக்க மழுக்க வியாபாரம் ஆக்கி விட்டார்கள். பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
 என்பதே குழந்தை ஐந்து வயதிற்கும், ஆறு வயதிற்கும் இடையில் உலகை அறிந்து கொள்ளும், பாடசாலைக்குத் தன்னைத் தயார் செய்துகொள்ளும் பருவம்தானே? இவ்வாறிருக்கையில் தமிழகத்தில் வேலைக்குச் செல்கின்ற பெற்றோர் மூன்று வயதிலேயே பிள்ளையை Pre.K.G  எனும் வகுப்பிற்கு அனுப்பி விடுகின்றனர், அங்கே ஒரு நாளின் முக்கியமான கணப்பொழுதுகள் 'மன அழுத்தத்தை' நோயாகக் கொண்ட ஆசிரியைகளிடம் பிள்ளைகள் வளர்கின்ற காலமாக மாற்றப் படுகின்றது. அந்தப் பிள்ளை மலசலம் கழித்தால், கவனித்துக் கொள்வதற்கென சில 'ஆயாக்கள்'(சில பள்ளிகளில் வயதான பெண்மணிகள், சில பள்ளிகளில் குழந்தை வளர்ப்பு அனுபவம் இல்லாத இளம் பெண்கள்) நியமிக்கப் பட்டிருப்பார்கள். அவர்களது வேலை சுயமாக உணவை உண்ணமுடியாத பிள்ளைகளுக்கு 'ஊட்டி விடுதல்',பிள்ளைகள் 'மலசலம் கழித்தால்' கழுவி விடுதல் போன்றவை. நாள் முழுவதும் இந்தப் 'பணியில்' ஈடுபடுகின்ற 'ஆயாக்கள்' தங்கள் விரக்தி,வெறுப்பு போன்றவைகளை இந்தப் பிஞ்சுக் குழந்தைகள் மீது காட்டுவார்கள். இதனால் 'மலசலம்' கழிக்கவே அச்சப் படும், 'நடுங்கும்' பிஞ்சுகள் எத்தனை லட்சம் என்பதை இந்தப் பெற்றோர்கள் அறிவார்களா? அது மட்டுமா? அதற்கடுத்துவரும் பருவமாகிய நான்கு வயதில் பிள்ளை L.K.G எனும் வகுப்பிற்கு அனுப்பப் படுகிறது அங்கு பிள்ளையின் சோதனைக் காலம் ஆரம்பிக்கிறது, விளையாட்டில் மட்டுமே ஆர்வமுள்ள அந்தப் பிஞ்சுக் குழந்தையின் மூளைக்குள் தமிழ்,ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளும் வலிந்து திணிக்கப் படுகிறது. அதற்கடுத்த சோதனையான காலம் என்பது பிள்ளை ஐந்து வயதாகும்போது அனுப்பப்படும் U.K.G எனும் வகுப்பாகும். இங்கு பிள்ளையை முதலாம் வகுப்பிற்கு 'தயார் செய்கிறேன் பேர்வழி' என்று சில பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் அந்தக் குழந்தையை 'அடி பின்னி எடுத்து விடுவார்கள்'(இலங்கைத் தமிழில்'கண்ட பாட்டிற்கு அடிப்பார்கள்') இந்த வயதில் குழந்தையை அடித்தல் குழந்தையின் 'ஆளுமையைச் சிதைக்கும்' என்பதைப் பெற்றோர்கள் அறிவார்களா? அது மாத்திரமின்றி ஒரு குழந்தையால், ஆறு வயதிற்குப் பின்னர்தான் ஒழுங்காக எழுத, வாசிக்க முடியும் என 'அறிவியல் வல்லுனர்கள்' கூறியிருந்தும், மேற்படி ஐந்து வயதுக் குழந்தைக்கு மாதத்திற்கொரு தடவையோ, மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையோ பிள்ளைக்கு 'எழுத்துப் பரீட்சை' வைக்கின்ற பாலர் பள்ளிகளும் தமிழ்நாட்டில் உள்ளன. கொடுமையிலும் கொடுமை ஒரு வயது, இரண்டு வயதுப் பிள்ளைகளப் பராமரிப்பதற்கு என 'CREECH' எனும் பெயரில் குழந்தைகள் காப்பகங்கள் கூட தமிழகத்தில் தோன்றி விட்டதாக அறிந்தேன். இவ்வாறு 'குழந்தைப் பராமரிப்பு', 'பாலர் பள்ளி' வியாபாரங்கள் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கின்றன. அன்னையின் அரவணைப்பில் வளர வேண்டிய குழந்தை ஆயாக்களாலும், ஆசிரியர்களாலும் 'அடித்துத் துவைக்கப்பட்டு' 'ஆளுமை' அற்ற பிள்ளைகளாக வளர்கின்றன.
###############################################
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Good day! Τhis ρost cоulԁ not be written any bеtteг!
Reаԁing thiѕ рoѕt remіndѕ me of
my old rοom mate! Ηe alωаys κeρt сhatting аbout thiѕ.
ӏ wіll forward this post to him. Fairly
certain he will have а goоd гead. Thank уou fоr sharing!


Feеl frее to surf to my ωeb
blog :: sound equipment

பெயரில்லா சொன்னது…

That is a very good tip particularly to those fresh to
the blogosphere. Short but very precise info… Thank you for
sharing this one. A must read article!

Also visit my blog post - anniversary gifts for parents

கருத்துரையிடுக