ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

பட்ட காலிலே..,

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
"பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்" என்ற பழமொழியை எனது பேர்த்தியார் அடிக்கடி கூறுவதை நான் சிறுவனாக இருந்த காலத்தில் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் இப்பழமொழியின் சரியான அர்த்தம் எனக்குத் தெரியாது. நான் நினைத்துக் கொண்டதெல்லாம் "அடிக்கடி காலில்தான் காயம் வரும், கெட்டவர்களின் குடியே(குடும்பமே) கெட்டுப் போகும்" என்பதுதான். ஆனால் நான் வளர்ந்துவரும் காலப் பகுதியில்தான் அப்பழமொழி கூறும் செய்தி என்ன என உணர்ந்துகொண்டேன். இன்றுவரை அப்பழமொழியைப் பற்றிய போதிய தெளிவின்மை உள்ளவர்கள் யாராவது இருப்பின் அவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம்.
பட்ட காலிலே படும் = "எந்தக் காலில் அடிபட்டுக் காயம் ஏற்படுகிறதோ, அந்தக் காலில் அடிக்கடி துரதிர்ஷ்ட வசமாக அடி விழும்(படும்)"
கெட்ட குடியே கெடும் = "எந்தக் குடும்பத்தில் ஒரு துன்பம் நேர்கிறதோ, அக்குடும்பத்தில் துரதிர்ஷ்டவசமாக அடுக்கடுக்காய்த் துன்பங்கள் நேரும்" என்பதே அப்பழமொழி நமக்கு உணர்த்தும் செய்தியாகும். 
சரி இவ்வாறு ஒரு மனிதனுக்குத் தொடர்ந்து துன்பங்கள் நேர்வது இயற்கையின் 'சதி' அல்லாவா? ஒரு மனிதனுக்கு மட்டுமே அடுக்கடுக்காய்த் துன்பம் விழைவது பிரபஞ்ச சக்திகள் செய்யும் 'ஓர வஞ்சனை'. அப்படியானால் இவ் உலகம் ஒரு ஒழுங்கின்படி இயங்கவில்லை, அவ்வாறு இயங்குவதாகக் கூறப்படுவதெல்லாம் 'சுத்தப் பொய்' என்று விதியை நொந்துகொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னால் பல்கலையில் பயின்றுகொண்டிருந்தபோது தமிழ்ப் பாடத்தில் படித்த, மனப்பாடம் செய்த பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.
அப்பாடல் விவேக சிந்தாமணியில் இராமச் சந்திரக் கவிராயர் எனும் புலவர் 'ஒரு மனிதனுக்கு ஒரே நேரத்தில் எத்தனை துன்பங்கள் நேர்கிறது' என்பதை மிகவும் தெளிவாக, ஆனால் அழகாக வர்ணிக்கிறார். முதலில் அவரது வரிகளின் பக்கம் நமது பார்வையைச் செலுத்துவோம்:

"ஆவீன மழைபொழிய இல்லம் வீழ,
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக,
மாவீரம் போகுதென்று நெல் கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச் 
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத் 
தள்ளவொணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் 
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் 
குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே,
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்,
பாவிமகன் படுந்துயர் பார்க்கொணாதே" '

இப்பாடலின் வரிகளில் பெரும்பாலானவை எல்லோருக்கும் புரிந்து கொள்ளக் கூடியவையாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை, இருப்பினும் இது கொஞ்சம் கடினத் தமிழாக உள்ளது என்று கருதுபவர்களுக்காக மட்டும் அதன் விளக்கத்தைத் தருகிறேன்.
மேற்படி குடியானவனுக்கு ஒரே நேரத்தில் வந்த துன்பங்களின் பட்டியல் இதுதான்:
வீட்டில் வளர்க்கும் பசு கன்று போட(ஈன) ஆரம்பிக்கிறது, அந்நேரம் பார்த்து மழை பொழிய ஆரம்பிக்கிறது, அவ்வேளை குடிசை வீடு (காற்றில்) விழுந்து விடுகிறது, இந்த இக்கட்டான சூழலில் இல்லத்தரசிக்குக்(மனைவிக்கு) கடும் சுகயீனம் ஏற்படுகிறது, இது போதாதென்று வீட்டில் வேலையாளாக இருந்த ஒருவன் இறந்து விடுகிறான். மழையில் நனைந்து பாழாகிப் போய்விடாமல் காப்பாற்றும் முயற்சியில் விதை நெல்லை விதைப்பதற்காக எடுத்துகொண்டு வயலை நோக்கி ஓட, வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்கிறான், அந்நேரம்பார்த்து உறவினர் ஒருவர் இறந்த செய்தியைக் கொண்டு ஒருவன் எதிரே வருகிறான், இந்தத் துன்பங்கள் போதாதென்று தவிர்க்க முடியாத விருந்தாளி ஒருவனும் வந்து சேர்கிறான். அந்தோ பரிதாபம்! அவ்விருந்தாளியைப் பாம்பு கடித்து விடுகிறது, இந்த மட்டில் துன்பங்கள் முற்றுப் பெறவில்லை, பூமியில் பயிர்செய்து சம்பாதித்ததற்கான கூலியை(பங்கை) கேட்டு அரசனின் ஏவலாட்கள் வர, குருக்கள் தனது 'தட்சணைக்' காசைத் தருமாறு கேட்க, பாவலர் ஒருவர் பாடல் பாடியமைக்காகத் தரவேண்டிய பரிசைத் தந்துவிடுமாறு கேட்க, இந்தப் 'பாவி மகன்' படுகின்ற துயரத்தை யாராலும் கண்கொண்டு பார்க்க முடியமா? என்று அந்தத் துன்பியல் பாடலின் பட்டியலை முடிக்கிறார்.
நமக்கு முன்னமே பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழ்ப் புலவர் ஒருவர் இவ்வாறு ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துன்பங்களின் பட்டியலை நமது கைகளில் ஏன் தந்து மறைந்தார்? என்ற கேள்விக்கு என்னிடம் ஒரேயொரு விடைதான் உள்ளது.
"உனக்கு ஒரு துன்பம் என்றால் கலங்கிப் போய்விடாதே, உன்னைவிடவும் நூறு துன்பங்களோடும் இப்புவியில் ஒரு மனிதன் வாழ்ந்துகொண்டுதான் இருப்பான்" என்பதே அப்புலவன் எனக்கும், உங்களுக்கும் போதிக்கும் பாடமாகும்.
இதேபோல் நாம் மட்டும்தான் அடுக்கடுக்கான துன்பங்களைக் கண்டு கலங்கி நிற்கிறோமா என்றால் அதுதான் இல்லை. ஒரு ஆங்கிலேய நண்பரிடம் கேட்டேன் உங்கள் மொழியில்(ஆங்கிலத்தில்) ஒரே மனிதனுக்குப் பல துன்பங்கள் வருவதைப் பற்றிய பழமொழி ஏதாவது உண்டா? என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே "ஓ இருக்கே, எங்கள் ஆங்கிலத்தில் Misfortune never comes alone (துரதிர்ஷ்டம் எப்போதும் தனித்து வராது, அடுக்கடுக்காய்த் தான் வரும்) என்று ஒரு பழமொழி வைத்திருக்கிறோம் என்றார். நான் தற்போது வாழ்ந்துவரும் டென்மார்க் நாட்டில் பேசப்படும் மொழியின் பெயர் டேனிஷ் (Danish / Dansk) என்பதாகும். இம்மொழியில் ஆங்கில, பிரெஞ்சு, ஜேர்மன், லத்தீன் வார்த்தைகள் தாராளமாக கலந்து காணப்படுகின்றன. இருப்பினும் ஆங்கில இலக்கணத்திற்கும், டேனிஷ் இலக்கணத்திற்கும் 'மலைக்கும் மடுவுக்கும்' இடையிலான வித்தியாசம் எனுமளவுக்கு மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில் மேற்படி ஆங்கிலேயே நண்பர் குறிப்பிட்ட அதே பழமொழிக்கு நிகரான ஒரு பழமொழியை டேனிஷ் மக்களும் தமது மொழியில் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து வியந்துதான் போனேன். En ulykke kommer sjældent alene. ( விபத்து / துன்பம் என்பது அடுக்கடுக்காய்த் தான் வரும், அது அபூர்வமாகத்தான் 'தனித்து' வரும்)
நான் மேலே குறிப்பிட்ட விடயங்கள் நமக்கு உணர்த்தும் செய்தியாவது "இன்பமும் துன்பமும் உலகம் முழுமைக்கும் பொது" என்பதே ஆகும். ஆகவே என் அன்பான உள்ளங்களே வான்மறை தந்த வள்ளுவனின் வாக்கின்படி "துன்பம் வரும் வேளையில் சிரிப்போம்"

இடுக்கண் வருங்கால் நகுக; அதனை 
அடுத்தூர்வது அஃதுஒப்பது இல். (குறள்621)

"துன்பங்களை வெல்லுகின்ற ஆற்றலை நம் அனைவர்க்கும் இப்பிரபஞ்ச சக்திகள் வழங்கட்டும்".

3 கருத்துகள்:

vetha. Elangathilakam சொன்னது…

''...துன்பங்களை வெல்லுகின்ற ஆற்றலை நம் அனைவர்க்கும் இப்பிரபஞ்ச சக்திகள் வழங்கட்டும்".

vinothiny pathmanathan dk சொன்னது…

துன்பங்கள் எப்போதும் தனியே வருவது அரிது என்பது என் அனுபவ உண்மை கூட .உங்கள் ஆக்கம் மிகவும் நன்றாக இருந்தது. அத்துடன் உங்கள் அல்லைப்பிட்டி பற்றிய தொடரை நீண்ட நாட்களாக காணவில்லையே முற்றுப்பெற்றதா?

இ. சொ. லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

ஒரு வாசகராவது எனது தொடர்களின் அடுத்த அத்தியாயத்தை எங்கே காணோம்? என்று கேட்பதற்கிடையில் எனது தொடர்களின் அடுத்தடுத்த அத்தியாயங்களினை எழுதிவிட ஆவல்தான். இருப்பினும் ஒரு வாசகி முந்திக் கொண்டார்.(யாழ் மாவட்டத்தில் ஒரு பழமொழி நிலவுகிறது: "கை முந்தினவன் சண்டியன்" என்று. இதை நகைச்சுவைக்காகவே குறிப்பிடுகிறேன்) என்ன செய்வது? ஒரு மனிதனை என்னென்ன சுமைகள் அழுத்த முடியுமோ, அத்தனையும் என்னையும் அழுத்துகின்றன. முடிந்த வரையில் எனது தொடர்களை விரைவில் ஆரம்பிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

கருத்துரையிடுக