 |
ஆசிரியர் திரு.ரவிச்சந்திரன் |

கடந்த இரு வாரங்களாக எமது 'அந்திமாலை' இணையத்திலும், டென்மார்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் எமது நட்பு இணையமாகிய 'இனி' இணையத்திலும், நெதர்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் எமது மற்றொரு நட்பு இணையமாகிய 'கலையகம்' இணையத்திலும் ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டதுபோல், நான்கு பிரபல எழுத்தாளர்களின் நூல்களை டென்மார்க் வாழ் தமிழ் வாசகப் பெருமக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் சிறப்பான விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.10.2010) மாலை தெற்கு டென்மார்க்கிலுள்ள, 'வயன்' (Vejen) நகரில்அமைந்துள்ள Lindetorv மண்டபத்தில் 'இனி' வாசகர் வட்டம் ஒழுங்கு செய்திருந்த 'அமரர்.முல்லையூரான்' நினைவுக்கூடத்தில், நூற்றுக்கணக்கான ஆர்வமுள்ள பொதுமக்கள், ஐரோப்பாவின் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க் நாடுகளிலிருந்து வருகைதந்த ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளப் பெருமக்கள், கவிஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள், வாசகர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வானது மாலை 3.00 மணியளவில் விழாவில் முக்கிய பங்காற்றிய 'வயன்' நகரப் பெருந்தகைகளின் 'மங்கல விளக்கேற்றலுடன்' இனிதே ஆரம்பிக்கப் பட்டது. வரவேற்புரையை 'இனி' வாசகர் வட்டம் டென்மார்க்கைச் சேர்ந்த கரவைதாசன் அவர்கள் நிகழ்த்தினார்.
 |
பிரபல எழுத்தாளர்
திரு.வ.ஜீவகுமாரன் |
அதனைத் தொடர்ந்து டென்மார்க்கின் தலைநகரப் பகுதியில் வாழ்ந்துவரும் பிரபல எழுத்தாளரும், வெளிநாட்டவர் நூலகப் பிரிவின் தமிழ்ப்பகுதி ஆலோசகருமாகிய திரு.வ.ஜீவகுமாரன் அவர்கள் எழுதிய 'யாவும் கற்பனையல்ல' என்ற சிறுகதைத் தொகுதி நூல் அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. நூலாசிரியரை சபையோருக்கு அறிமுகம் செய்யும் 'அறிமுகவுரையை'ஆசிரியர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்த்தினார். அதன் பின்னர் மேற்படி நூலை அறிமுகம் செய்யும் 'மதிப்புரையை' திரு.முரளி அவர்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, நூலாசிரியர் திரு.ஜீவகுமாரன் தனது நூல்பற்றிய ஒரு சிறிய விளக்கவுரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து வாசகரின் மதிப்பீட்டு உரையை 'அந்திமாலையின்' நிர்வாகி திரு.இ.சொ.லிங்கதாசன் அவர்கள் நிகழ்த்தினார். அதன் பின்னர் இடம்பெற்ற வாசகரின் கேள்விகளுக்கு நூலாசிரியர் திரு.வ.ஜீவகுமாரன் அவர்கள் தனது அனுபவத்திலிருந்தும், தனது நூலிலிருந்தும் மேற்கோள்கள் காட்டிப் பதிலளித்தார். அதன் பின்னர் சபையோருக்கு தேநீர் இடைவேளை விடப்பட்டது.
 |
பிரபல அரசியல் விமர்சகர் திரு.கலையரசன் |
தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து, நெதர்லாந்தில் வாழ்ந்துவரும் நெதர்லாந்துக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும், பிரபல அரசியல் விமர்சகரும், 'கலையகம்' இணையத்தளத்தின் நிர்வாகியுமாகிய திரு.கலையரசன் அவர்கள் எழுதி, முதற்தடவையாக டென்மார்க்கில் வெளியீடு செய்யப்பட்ட 'ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா' என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது. மேற்படி நூலையும், நூலாசிரியரையும் சபையோருக்கு அறிமுகம் செய்து வைக்கும் அறிமுகவுரையை, டென்மார்க், கோர்சன்ஸ் நகரத்தில் வசிக்கும், உளவியல் நிபுணரான
 |
உளவியல் நிபுணர்
திரு.வி. ஸ்ரீ கதிர்காமநாதன் |
திரு.வி. ஸ்ரீ கதிர்காமநாதன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில், மானுடவியலிலிருந்தும், ஆபிரிக்க வரலாற்றிலிருந்தும் பல உதாரணங்களைக் கலையரசனின் நூலோடு ஒப்பீடு செய்து உரையாற்றினார். அதன் பின்னர் நூலுக்கான மதிப்பீட்டுரையை, இங்கிலாந்தில் வாழ்ந்துவருபவரும், 'எதுவரை' இதழின் ஊடகவியலாளருமாகிய திரு.எம். பௌசர் அவர்கள் நிகழ்த்தினார். அதன்பின்னர் வாசகர் உரையை 'அந்திமாலையின்' திரு.இ.சொ. லிங்கதாசன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில், நூலாசிரியருக்கும் தனக்குமிடையிலான 'நட்பு' பற்றியும், 'அந்திமாலைக்கும்', 'கலையகத்திற்குமிடையிலான' நட்பு பற்றியும் பாராட்டிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, நூலாசிரியர்களின் 'புத்தகவிற்பனை' இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து சபையோருக்கு இராப்போசனம் வழங்கப்பட்டது.

இரவுணவைத் தொடர்ந்து, செவிக்கு உணவு வழங்கும் விதமாக, 8.00 மணியளவில் 'மெல்லத் தமிழ் இனி' என்ற தலைப்பில் சுவையான கவியரங்கம் ஒன்று 'நடிக வினோதன் யோகராஜா' தலைமையில் இடம்பெற்றது. இக்கவியரங்கத்தில் கவிஞர்களான இணுவையூர்.சக்திதாசன், எம்.சி.லோகநாதன், வேலணையூர்.பொன்னண்ணா, கவிதாயினி.சுஜிக்கா மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மூத்த இடதுசாரிக்கவிஞரான.V.T.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் திரு.V.T.இளங்கோவனின் நூலாகிய 'இளங்கோவன் கதைகள்' என்ற நூலும், தமிழறிஞர்.திரு.த.துரைசிங்கம் அவர்களின் 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்' என்ற நூலும் அறிமுகம் செய்து வைக்கப் பட்டது இந்நிகழ்வானது எழுத்தாளர் திரு.ஜீவகுமாரன் மற்றும் ஒல்போ நகரத்தில் வசிக்கும் 'விநோதக் கலைஞர்' திரு.சி.ராஜகோபாலன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
 |
கவிதாயினி திருமதி.வேதா இலங்காதிலகம் |
இறுதியாக டென்மார்க் ஓகூஸ் நகரில் வசிக்கும் பிரபல கவிதாயினி திருமதி.வேதா இலங்காதிலகம் அவர்களின் 'உணர்வுப் பூக்கள்' எனும் கவிதைத் தொகுதி நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கவிஞர்.வேலணையூர் பொன்னண்ணா, திரு எம்.சி.லோகநாதன், திருமதி.சரஸ்வதி ராஜகோபாலன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
 |
திருமதி.சரஸ்வதி ராஜகோபாலன் |
மேற்படி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இந்நிகழ்வானது, நள்ளிரவு 11.00 மணிக்கு நிறைவு பெற்றது. ஏனைய கலைநிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெறாதபோதும் சபையோர்கள் அனைவரும் மாலை 3.00 மணியிலிருந்து, நள்ளிரவு 11.00 மணிவரை தமது பெறுமதியான நேரத்தைக் கலைக்காகவும், இலக்கியத்திற்காகவும் செலவு செய்திருந்தமை பாராட்டத்தக்க சிறப்பம்சமாகும்.
-அந்திமாலைக்காகத் தொகுத்தவர்-
உங்கள் இ.சொ.லிங்கதாசன்