சனி, ஜனவரி 21, 2012

தாரமும் குருவும் பகுதி - 5.9


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 5.9
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
இந்த எட்டு மணி விமானம் பறக்கும் சத்தத்தைக் கேட்டதும் யாருக்குப் பயம் வருகிறதோ இல்லையோ, மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 'கலக்கம்' அடைந்து விடுவார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பாணையோ(Bread), ரொட்டியையோ(சப்பாத்தி), புட்டையோ(பிட்டு) அப்படியோ போட்டுவிட்டு பசியுடன் பாடசாலையை நோக்கி 'திகில்' பிடித்தவர்களாக தெறித்து ஓடுவார்கள். காலப் போக்கில் ஒரு சில மாணவர்களுக்குக் காலையில் எட்டு மணிக் கப்பல் சத்தத்தைக் கேட்டதும் வயிற்றைக் கலக்கியதும் உண்டு.
அன்றும் வழமை போல எட்டு மணிக் கப்பல் பறக்கும் சத்தம் கேட்டதும் நானும் கலக்கம் அடைந்தேன். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த காலை உணவை(அது கஞ்சியா, ரொட்டியா என்பது நினைவில் இல்லை) அப்படியே வைத்துவிட்டு கையில் சிலேட்டை எடுத்துக் கொண்டு டீச்சர் வீட்டை நோக்கி ஓடினேன். டீச்சர் வீடு ஏறக்குறைய முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. எனது பேர்த்தியாருக்கும், டீச்சருக்கும் இடையிலான 'வரலாற்று முக்கியத்துவம்' வாய்ந்த??? ஒப்பந்தம் யாதெனில் எட்டுமணிக் கப்பல் பறக்கும்போது(அதாவது சரியாக எட்டு மணிக்கு) நான் டீச்சர் வீட்டு வாசலில் நிற்க வேண்டும். டீச்சர் என்னையும் அழைத்துக் கொண்டு பாலர் பள்ளிக்குச் செல்வார் என்பதே ஒப்பந்தமாகும். அன்று நான் சிறிது தாமதம் ஆகி விட்டேன் என்பது எனக்குப் புரிந்திருக்கவில்லை, இருப்பினும் டீச்சர் என்னை விட்டுவிட்டுப் போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் டீச்சர் வீட்டை நோக்கித் தலை தெறிக்க ஓடினேன். டீச்சர் வீட்டுப் படலை அடியில்(Gate) ஒரு அரை நிமிடம் நின்றிருப்பேன். டீச்சரைக் காணவில்லை. டீச்சர் புறப்பட்டுப் போய் இருப்பாவோ? என்று ஒரு சந்தேகமும் எழுந்தது. அவர்களின் வீட்டு வாசலுக்கு சென்று பார்க்கும் அளவுக்கு எனக்குத் 'துணிச்சல்' இல்லை. காரணம் டீச்சரின் பெற்றோர் ஒரு கறுப்பு+வெள்ளை நிறம் கலந்த ஒரு நாய் வளர்த்து வந்தார்கள். டீச்சர் மற்றும் டீச்சரின் பெற்றோர்களைப் போலவே அவர்கள் வளர்த்த நாயும் யாருக்கும் 'கெடுதல் செய்யாத' நாய் எனப் பின்னாளில் அறிந்து கொண்டேன். இருப்பினும் அவர்கள் அடிக்கடி கூறுகின்ற "அந்த நாய் கடிக்காது" என்ற உண்மையை நான் நம்புவதற்குத் தயாராக இருக்கவில்லை. எனக்கென்னமோ "உலகில் உள்ள அத்தனை நாய்களும் மனிதர்களைக் கடிக்கும்" என்பது என் மனதில் சிறு வயதில் பதிந்த 'அகராதி' ஆக இருந்தது.
மெதுவாகத் தயங்கித், தயங்கி "டீச்சர், டீச்சர்" என அழைத்தபடியே அவர்களின் வளவிற்குள் இறங்கி நடந்து, அவர்களின் வீட்டு வாசலை அடைந்தேன். வீட்டு வாசலில் அவர்களின் செல்ல 'நாய்' முன்னங் கால்களைத் தலையணை ஆக்கித் தூங்கிக் கொண்டிருந்தது. எனது சத்தத்தைக் கேட்டு அது விழிப்படைந்து விடக் கூடாது என 'இனிச்ச புளியடி முருகன், சரிவுப் பிள்ளையார்('சருகுப் பிள்ளையார்' திரிபடைந்து சரிவுப் பிள்ளையார் ஆனார்) போன்ற தெய்வங்களை வேண்டினேன். இருவருமே என்னைக் கைவிட்டார்கள். 'நைட் ஷிப்ட்' கண் விழித்துக் கடமை ஆற்றிய களைப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 'நாயனார்' கண் விழித்ததும் இல்லாமல், தலையைத் தூக்கி என்னை நோக்கி ஒரு அலட்சியப் பார்வையை வீசினார். என்னையும் ஒரு வேற்றுக் கிரகத்தில் வசிக்கும் 'பிராணி' என்று அது நினைத்துக் கொண்டதோ தெரியாது. மீண்டும் சுவாரஸ்யமாக உறங்கத் தொடங்கியது. அந்த நாய் என்னைக் கடித்துக் குதறப் போகிறது எனப் பயந்தபடி நின்றிருந்த எனக்குப் பலத்த ஆச்சரியம். உண்மையிலேயே அந்த நாய் கடிக்காது என்ற உறுதி மனதில் ஏற்பட்டது.
நான் சத்தமாகக் கூப்பிட்டதைக் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த 'அமைதியும்,அன்பும் மனித உரு எடுத்தது' போன்ற தோற்றமுடைய டீச்சரின் தாயார் கூறிய பதில் எனக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தந்து. "டீச்சர் இப்ப தானப்பு போறா, ஓடிப் போன எண்டால் பிடிச்சிடுவ" என்ற பதில் என்னைத் திகைப்படையச் செய்தது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் டீச்சருடனேயே பள்ளிக்கூடம் போய் வந்த எனக்கு, ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளிக் கூடத்தை எவ்வாறு சென்றடைவது என்பது தெரிந்திருக்கவில்லை. நான் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் டீச்சரைக் கண்டு பிடிக்க முடியுமா? என்ற கேள்வி மனதில் கனத்தது. ஏனைய தீவகக் கிராமங்களோடு ஒப்பிடுகையில் 'அல்லைப் பிட்டியில்' ஒழுங்கைகள் குறைவு. இருப்பினும் தன்னந் தனியே மூன்றாம் வட்டாரத்தில் இருக்கும் பாலர் பள்ளியை சென்றடைவது 'வாஸ்கோட காமாவின் ஆபிரிக்கப் பயணம்' போல எனக்குத் திகிலை ஊட்டியது. இருப்பினும் ஓரளவு துணிவை வரவழைத்துக் கொண்டு ஓடத் தொடங்கினேன்.
(இன்னும் சொல்வேன்)

6 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

''...ஓடத் தொடங்கினேன்....


மீதிக்காகக் காத்திருப்போம்....

Paransothinathan சொன்னது…

அருமையான தொடர்.

Suthan சொன்னது…

Very interasing

Ruban சொன்னது…

Good i am wating for anothar story.

Malar சொன்னது…

Good. i like to reading, very great story

Uthayan சொன்னது…

Thanks, Thasan following like this.

கருத்துரையிடுக