திங்கள், ஜனவரி 16, 2012

தமிழ் கத்தோலிக்கரும் பொங்கலும்

ஆக்கம்: ஜோ மில்டன்,சிங்கப்பூர். 


அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!


கொஞ்ச நாட்களுக்கு முன் என்னுடைய திருமண புகைப்படத்தை தற்செயலாகப் பார்த்ததும் என் நண்பர் கேட்ட கேள்வி "என்ன..உங்க wife கல்யாணத்துக்கு பட்டுப்புடவை கட்டியிருக்காங்க ?" .அவர் தமிழ் சினிமா பார்த்து எல்லாத்தயும் நம்புறவர்-ன்னு நல்லா புரிஞ்சது. எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டு கத்தோலிக்கர் யாரும் இவர் நினைக்குறமாதிரி ,சினிமால காட்டுற மாதிரி வெள்ளை கலர்ல பாரதிராஜா தேவதை உடை போட்டு கல்யாணம் பண்ணி நான் பார்த்ததில்லை .கேள்விப்பட்டதும் இல்லை . எல்லோரும் பட்டுப்புடவை தான் கட்டிக்குறாங்க. அதோடு தலையில ஒரு net வச்சு கிரீடம் மாதிரி அலங்காரம் பண்ணிக்கிறது ,கையில ஒரு பூச்செண்டு இவ்வளவு தான் வித்தியாசம்.

அப்புறம் ஒரு நாள் நண்பர் குடும்பத்தோடு சினிமா போகும் போது, நண்பருடைய மனைவி என் மனைவியை பார்த்ததும் புருவம் உயர்த்தினாங்க. "நீங்க குங்குமமெல்லாம் வைப்பீங்களா? ". அடடா! அதற்கும் விளக்கம் சொல்லியாகிவிட்டது.

இன்னொரு நாள் ஒரு சீன நண்பரோடும் ,தமிழ் நண்பரோடும் உணவருந்திகொண்டிருந்த போது ,சீன நண்பர் "எங்கே உங்கள் கல்யாண மோதிரம் ?" என்றார் .நான் "கல்யாண மோதிரம் கண்டிப்பல்ல. இந்திய வழக்கம் போல தாலி தான் அணிவிக்கிறோம். மோதிரம் இரண்டாம் பட்சம் தான்". அவர் சமாதானமாகிவிட்டார். தமிழ் நண்பர் புருவம் உயர்த்தி விட்டார் ..

"என்ன தலைவா ? நீங்களும் தாலியா கட்டுவீர்கள் ?"

"ஆமா! . மோதிரம் மாற்றிக்கொள்வதும் உண்டு. ஆனால் தாலி தான் பிரதானம். ஒரே வித்தியாசம். மஞ்சள் தாலி அல்ல. தங்கத்தாலி .மூன்று முடிச்செல்லாம் இல்லை. தாலியை கோர்த்து விடுவது.. அவ்வளவு தான். இன்னும் சொல்லப் போனால் எங்கள் ஊரில் கத்தோலிக்கர்கள் திருமணத்தையே 'தாலிக்கட்டு' என்று தான் சொல்லுவார்கள்"


என்னங்க! பொட்டு வைக்காத ,தாலி அணியாத தமிழ் கிறிஸ்தவர்கள் இல்லை என்கிறீர்களா? என்று உங்களில் பலர் கேட்கலாம் .. இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களில் சிறுபான்மையினர் ..தமிழ் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்களும், தென்னிந்திய திருச்சபையினர் (CSI) என்றழைக்கப்படும் protestants இவர்கள் இருவரும் தான் பெரும்பான்மை .மற்ற சபையினர் மிக மிக சிறுபான்மை (மொட்டை மாடியில் மைக் கட்டிக்கொண்டு ஊரிலுள்ளவர்களையெல்லாம் பாவிகள் என்று சொல்லுவது ..விவிலியத்தை பிட் நோட்டீஸ் மாதிரி வினியோகிப்பது எல்லாம் இவர்கள் தான்.இது பற்றி தனிப்பதிவு பின்னர்).

CSI கிறிஸ்தவர்களின் வழக்கங்களை முழுமையாக அறுதியிட்டு என்னால் கூற முடியாதெனினும் ,கத்தோலிக்க தமிழர்களை பற்றி கண்டிப்பாக என்னால் கூற முடியும். கத்தோலிக்க தமிழர்கள் திருமணத்தில் பட்டுப்புடவை அணிந்து தங்கத்தாலி கட்டுகிறார்கள். பொட்டு, குங்குமம் வைக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கிறிஸ்தவ கோவில் என்றால் அது 'மாதாக் கோவில்' தான். மாதாக்கோவில் என்றால் அது கத்தோலிக்க கோவிலாகத்தான் இருக்க முடியும். ஆனால் அங்கு நடைபெறும் (தமிழர்) திருமணக்காட்சியில் மட்டும் எல்லாம் தலை கீழாக காட்டப்படும். மணப்பெண் பாரதிராஜா படத்து தேவதை மாதிரி உடை அணிந்திருப்பார் .மோதிரம் மட்டும் மாற்றிக்கொள்வார்கள் ..தாலி கட்டுவது கிடையாது. மணப்பெண் பொட்டு வைத்திருக்க மாட்டார். இப்படி தமிழகத்தின் எந்த கத்தோலிக்க கோவிலில் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை .

நான் பார்த்தவரைக்கும், தமிழகத்தில் கத்தோலிக்கர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் போட்டு குழப்புவதில்லை. என்னுடைய மூதாதையர்கள் ,ஏன் எங்கள் ஒட்டு மொத்த ஊர் மட்டுமல்ல ,ஒட்டு மொத்த community-யே கத்தோலிக்கர்களாக மாறி 400 வருடங்கள் கழிந்து விட்டன ..மதம் மாறியிருக்கிறதே தவிர மற்ற வழக்கங்கள்( சாதி உட்பட என்பது வருத்ததுக்குரிய விஷயம்) பெரிதாக மாறவில்லை.எது நம்முடைய கலாச்சாரம் சம்மந்தப்பட்டது ,எது நம்முடைய மதம் சம்மந்தப்பட்டது என்பதில் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் (தமிழ் சினிமா தவிர) ..

திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது (ஒரு நிமிஷம் பொறுங்க!. அப்துல் கலாம், எழுத்தாளர் சுஜாதா படித்த அதே வகுப்பறையில் நானும் இயற்பியல் படித்தேன் என்று காலரை தூக்கி விட்டுக்கொள்கிறேன்) நண்பர்களோடு பலமுறை மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்றதுண்டு .ஒரு முறை நண்பர்களோடு நேராக உச்சிப்பிள்ளையார் சன்னிதி-க்கு சென்றேன் .நண்பர் ஒருவர் அங்கிருந்த அர்ச்சகரிடம் எங்கள் பெயரையெல்லாம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்னார். "ஜோ நமஹா.." என்று அவர் சொன்னது மட்டும் புரிந்தது .முடித்து விட்டு விபூதி கொடுத்தார் .வாங்கிக் கொண்டேன். விபூதிப் புதனன்று கோவிலில் பாதிரியார் "மனிதனே! நீ மண்ணாக இருக்கின்றாய். மண்ணுக்கே திரும்புவாய். மறவாதே என்றும் " என்று நெற்றியில் இட்டு விடுகிற சாம்பல் நினைவுக்கு வந்தது. நான் வணங்கும் தெய்வத்தை நினைத்துக்கொண்டு விபூதியை பூசிக்கொண்டேன்.

வேலை தேடி சென்னையில் எங்கள் ஊர் நண்பர்களோடு தங்கியிருந்தேன். சொந்தமாக சிறு தொழில் செய்து வந்த நண்பர் எனக்கும், அவரோடு வேலை செய்த சகோதரருக்கும் ,இன்னொரு நண்பருக்கும் அடைக்கலம் தந்திருந்தார். வீடு என்பதை விட அறை என்று சொல்லலாம் ..வீட்டு சொந்தக்காரர் பக்கத்தில் தான் இருந்தார். அவருக்கு ரெண்டு குடும்பம். நல்ல நாட்களில் மட்டுமே அவரை இங்கு பார்க்க முடியும். மற்ற அனைவரும் எங்கள் எல்லோரோடும் நன்கு பழகுவார்கள். அன்பானவர்கள்.. அன்றைக்கு பொங்கல் தினம். எல்லோரையும் போல, பசங்கள் என்பதால் கொஞ்சம் விமர்சையாகவே நாங்களும் காலையிலயே பொங்கல் போட்டோம். முதல் காரியமாக கொஞ்சம் பொங்கல் எடுத்து வீட்டுக்காரர் குடும்பத்துக்கு கொடுக்க நான் எடுத்துச்சென்றேன். எதிர்பார்த்த மாதிரி வீட்டுக்காரர் இருந்தார்.

"பொங்கல் போட்டோம்.. வாங்கிக்குங்க!"

"என்ன தம்பி! நாங்க தானே உங்களுக்கு தரணும்.. நீங்க எப்படி பொங்கல் போட்டீங்க?"..கொஞ்ச நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஏன்?"

"இல்ல..நீங்க கிறிஸ்தவங்களாச்சே"

"அதுக்கு !.பொங்கல் இந்து பண்டிகைன்னு உங்களுக்கு யார் சொன்னது? பொங்கல் .உழவர் திருநாள் ..அது மட்டுமல்ல ..தமிழர் திருநாள்.. உங்கள பத்தி தெரியாது ..நாங்கள்ளாம் தமிழர்கள் "

கொஞ்சம் வியப்பாக பார்த்தார் ..அவரிடம் அதிகம் பேசாத என்னிடம் அவர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் .

"ஓ! எதுவா இருந்தாலும் எங்களுக்கு முன்னால நீங்க பொங்கல் கொண்டு வந்தது சந்தோஷம்"

வீட்டுக்கார அம்மா புன்சிரிபோடு "குடுங்க தம்பி" என்று வாங்கிக் கொண்டார்.

என் நினைவு எங்க ஊருக்கு சென்றது .வருஷம் முழுவதும் காசு சேர்த்து வைத்து வகுப்பு தோழர்களெல்லாம் பொங்கலன்று தென்னந்த்தோப்புக்கு சென்று பொங்கல் போடும் நினைவுகள் வந்தது ..பொங்கல் அன்று எங்கள் தேவாலயத்தின் பலிபீடம் கரும்பினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் .கோவில் சார்பாக பொங்கல் செய்து ,திருப்பலியின் நடுவே ,எல்லோரும் வரிசையாக சென்று பாதிரியாரிடமிருந்து ஒரு கரண்டி சர்க்கரைப்பொங்கலை கைகளில் பிரசாதம் போல் வாங்கி உண்டது மனக்கண்முன் நின்றது.

எங்கள் ஊர் கன்னியர் மடத்திலுள்ள கன்னியர்கள் செய்த அந்த சர்க்கரைப்பொங்கல் சுவை இன்னும் இனிக்கிறது..

7 கருத்துகள்:

சேக்காளி சொன்னது…

மிகவும் நல்ல ஊர் உங்கள் ஊர்

பெயரில்லா சொன்னது…

hmm oonam maathiri, tamilar ellaam pongal koNdaada veeNdum.

ஜோ/Joe சொன்னது…

சேக்காளி,
மிக்க நன்றி .

ஜோ/Joe சொன்னது…

பொருத்தமான படங்களை சேர்த்து அசத்திவிட்டீர்கள்

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

வணக்கம்!
நல்ல சமூகவியல் கட்டுரை. இன்னும் தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அந்தோணியார் பொங்கல், செபஸ்தியார் பொங்கல், வனத்த சின்னப்பர் பொங்கல் என்று கிராமங்களில் தமிழ் மரபோடு பொங்கல் வைப்பதை பார்க்கலாம்.

ஜோ/Joe சொன்னது…

நன்றி தமிழ் இளங்கோ

Mahi_Granny சொன்னது…

" தமிழகத்தில் கத்தோலிக்கர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் போட்டு குழப்புவதில்லை'. அழகான தேவையான விளக்கம்.thanks. Joe.

கருத்துரையிடுக