ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 5.8
அல்லைப்பிட்டி 1977
'மணற் பாங்கான' நிலம் உள்ள கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் எங்கள் இரண்டு கிராமங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் இரண்டு இணையங்களில் அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பற்றிய புகைப் படங்களையும், காணொளிகளையும் பார்த்தபோது இதயம் வலித்தது. முப்பது வருடத்திற்கு முந்திய தலைமுறையும், சமூக விரோதிகளும் செய்த தவறுக்கான விலையை தற்போது அங்கு வாழும் அப்பாவி, சராசரி மக்கள் செலுத்துகின்றனர்.
மேலே குறிப்பிட்ட வரிகளுடன் கடந்த இரு வாரங்களுக்கு முற்பட்ட இத்தொடரின் அல்லைப்பிட்டி பற்றிய பார்வையை நிறைவு செய்திருந்தேன். தீவகக் கிராமங்கள் பற்றி மேலும் சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முன்பாக உங்களோடு சர்வதேசம் பற்றிய ஒரு சில பொது அறிவுத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவற்றிற்கும் இத் தொடருக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம். சம்பந்தம் இருக்கிறது என்பதை இத் தொடரின் முடிவில் நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
உங்களுக்குத் தெரியுமா?
- இத்தாலியின் தலைநகரமாகிய ரோம்(Rome) நகரத்தில் வசிக்கும் இத்தாலியர்களின் எண்ணிக்கையை விடவும் அமெரிக்காவின் நியூயோர்க்(New York) நகரத்தில் வசிக்கும் இத்தாலியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
- அயர்லாந்தின் தலைநகரமாகிய டப்ளினில்(Dublin) வசிக்கும் ஐரிஷ் இனத்தவர்களின்(அயர்லாந்துக் காரர்கள்) எண்ணிக்கையை விடவும் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் வசிக்கும் ஐரிஷ் இனத்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.
உலகில் ஒரு நாடு இன்னும் 47 வருடங்களில் தண்ணீரில்(கடலில்) மூழ்கி விடும். அதன் பின்னர் அந்நாட்டின் பெயரை உலக வரைபடத்தில் இருந்து அழித்துவிட வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல் அந் நாட்டின் பெயரை உலக நாடுகளின் பெயர்ப் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டிய நிலை ஏற்படும். அந்நாடு எது?
மேலேயுள்ள கேள்விக்கு உங்களில் ஓரிருவராவது விடையை ஊகித்து இருப்பீர்கள். அதற்கான விடை 'மாலைதீவு'(மாலைதீவுகள்) என்பதாகும். கற்பனை செய்து பாருங்கள். 298 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவையும், நான்கு லட்சம் மக்கள் தொகையையும் கொண்ட ஒரு நாடு திடீரென்று உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் ஒரு கால கட்டத்தை நினைத்துப் பாருங்கள். அம்மக்கள் வெளிநாடுகளில் குடியேறி, ஓரளவு செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் "எங்களுக்கென்று ஒரு நாடு இருந்தது, அதன் பெயர் 'மாலைதீவு', பூமியை மனிதர்கள் வெப்பம் அடையச் செய்ததால், அந்தார்டிக்காவின் பனிமலைகள் உருகியதால், கடலின் நீர்மட்டம் உயர்ந்ததால், எங்கள் நாடு கடலில் மூழ்கி விட்டது. எங்கள் நாட்டில் நாங்கள் அனைவரும் சுயமாக உழைத்துச் சம்பாதித்து, அழகான, நிறைவான வாழ்க்கை வாழ்ந்தோம். இப்போது எல்லாமே கனவாகிப் போய்விட்டது. எமது மக்கள் பல நாடுகளில் பல இன்னல்களுக்கு மத்தியில், பலவிதமான தொழில்களைச் செய்து கொண்டு, வாழ்க்கையோடு போராடியபடி, திபெத்திய, பாலஸ்தீன அகதிகள் போல 'அகதி வாழ்க்கை' வாழ்ந்து வருகின்றனர்"
எனக் கூறும் நிலையை, அந்தக் கால கட்டத்தை நினைத்துப் பாருங்கள். அம் மக்களுக்கு ஏற்பட இருக்கும் துன்பகரமான, சோகமான எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கையில் நம்மையும் அந்தச் 'சோகம்' பற்றிக் கொள்கிறது அல்லவா? இப்போது 1 வயதாக இருக்கும் மாலைதீவுக் குழந்தை வளர்ந்து பெரியவன்/பெரியவள் ஆகியதும் தனது 48 ஆவது பிறந்த தினத்தை இன்னுமொரு நாட்டில் இயற்கைப் பேரிடர் அகதி(Natural disaster Refugee) எனும் பெயரோடு கொண்டாடும் நிலையை சற்று எண்ணிப் பாருங்கள்.....
இன்னும் 52 வருடங்களில் மாலைதீவுகள் தண்ணீரில் மூழ்கப் போகின்றன என ஐந்து வருடங்களுக்கு முன்னரே விஞ்ஞானிகள் எச்சரித்து விட்டனர். 'மாலைதீவு' அரசாங்கம் அந்த ஆபத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான முன்னேற்பாடு முயற்சிகளில் இப்போதே இறங்கி விட்டது. இலங்கையிலும், இந்தியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் பெருமளவு நிலத்தைக் கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளது. மாலைதீவு நாடு சுற்றுலாத் துறையால் அதிக வருமானத்தைச் சம்பாதிக்கும் நாடு என்பது நீங்கள் அறிந்தது. மாலைதீவு கடலில் மூழ்கினால் அக்கால கட்டத்தில் மாலைதீவின் சொத்துக்களை வேறு நாடுகளுக்கு பாதுகாப்பாக எவ்வாறு நகர்த்துவது? என்பன போன்ற திட்டங்கள் பற்றி அரசு இப்போதே சிந்திக்க ஆரம்பித்து விட்டது. மாலைதீவு ஒரு இஸ்லாமிய நாடு என்பதால் அரபு நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வரும் ஒரு நாடு. மாலைதீவு எதிர்காலத்தில் தனது முதலீடுகளை அரபு நாடுகளில் மேற்கொள்வதற்கும் சிந்தித்து வருகிறது. நாட்டை விட்டு மக்கள் வெளியேறும் நிலை ஏற்படும் போது ஒவ்வொரு வெளிநாட்டிலும் தனது மக்களில் எத்தனை பேரைக் குடியேற்றுவது என்பது சம்பந்தமாகவும் மாலைதீவு அரசு சிந்தித்து வருகிறது.
(இன்னும் சொல்வேன்)
5 கருத்துகள்:
இனிய பொங்கள் நல் வாழ்த்துகள். மிகவும. ஒரு சோகமான நிலையிது. அதற்கிடையில் சுற்றுலா போய் வருவோமா?
அருமையான தொடர். பாராட்டுக்கள்.
Very good. following like this
Thanks. Very good story
All tha best to Anthimaalai.
கருத்துரையிடுக