ஞாயிறு, ஜனவரி 08, 2012

தாரமும் குருவும் பகுதி - 5.7

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 5.7
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
சித்தியிடம் பொம்மை வாங்கிக் கொண்டு அம்மம்மா(பேர்த்தியார்) வீட்டை நோக்கி ஓடிய எனக்கு அடுத்த நாள் அந்தப் பொம்மை பயன்படப் போவதில்லை என்ற விடயம் தெரியாது.
அடுத்த நாள் வழமை போலவே பாலர் பாடசாலைக்குப் போகவேண்டும் என்ற காரணத்திற்காகவே பொழுது புலர்வதற்கு முன்பாக எனது பேர்த்தியாரால் அழ்ந்த உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பப் பட்டேன். என்னதான் சொல்லுங்கள், கோடி ரூபாய் தருவதாகச் சொன்னாலும் மழை பெய்யும் மாதங்களில், பனி பெய்யும் மாதங்களில் அதிகாலைத் தூக்கத்தை விட்டுவிடத் தயாராக இல்லாத பலர் இவ்வுலகில் இருக்கிறார்கள். அந்த இன்பத்தை விட்டுவிடத் 'தயாராக இல்லாதவர்கள்' வரிசையில் அடியேனுக்கு முதலிடமோ, இரண்டாமிடமோ கண்டிப்பாகக் கிடக்கும். இவ்வாறு அதிகாலைத் தூக்கத்தை விட்டுவிடத் தயாராக இல்லாத என் போன்றவர்களை 'சோம்பேறிகள்' என்று அழைக்கும் வழக்கம் எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, எங்கள் நாட்டிலும் இருந்தது. "சொன்னால் சொல்லி விட்டுப் போகிறார்கள், நமக்கு என்ன வலிக்கவா போகிறது? இவ்விடத்தில் 'பனி பெய்யும் மாதம்' என்று நான் குறிப்பிடுவது இலங்கையில், தமிழகத்தில் தை,மாசி மாதங்களில் அதிகாலை வேளைகளில் பெய்யும் பனியை. அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்பாக பெய்யும் பனியால் புற்றரை எங்கணும் வெண்மையுடன் கூடிய ஈரப் பதம் இருக்கும். மரங்களில் செடிகளில் இருந்து சொட்டுச் சொட்டாக பனித்துளிகள் வடிந்தபடி இருக்கும். எவ்வளவுதான் பனி பெய்தாலும் எங்களூரில் விவசாயிகள் அதிகாலையில் கண்ணுறக்கம் கலைந்து எழுந்து விடுவார்கள். அவர்களின் மனைவிமார்கள் தருகின்ற இனிப்பான/இனிப்பில்லாத தேநீரை 'அமுதம்' என ரசித்து அருந்தி விட்டுத் தம் தோட்டங்களில் வேலை பார்க்கச் சென்று விடுவார்கள். ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு, மேய்ச்சல் தரவைகளில்(புற் தரவைகளில்) கட்டுவதற்கு பலர் அக் கால்நடைகளுடன், கால் நடையாகக் கிளம்பி விடுவார்கள். இவ்வாறு குளிரிலும், பனியிலும்கூடக் 'கிராமம்' விழித்து எழுந்து, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கையில் இழுத்துப் போர்த்தி உறங்குபவர்களைச் 'சோம்பேறி' என நாமகரணம் சூட்டாமல் விடுவார்களா என்ன? இவ்வாறு எமது சமூகமானது சில விடயங்களை குறைவாக மதிப்பீடு செய்வதிலும் அர்த்தம் இருக்கிறது என்பதை ஐரோப்பிய நாட்டிற்கு வந்தபோது கண்டு கொண்டேன். இங்கு நாம் வசிக்கும் மேற்கத்திய நாடுகளில் காலையில் மழை கொட்டிக் கொண்டிருக்கிறதோ, பனி கொட்டியதால் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டதோ இல்லையோ நீங்கள் குறித்த நேரத்தில் வேலைக்குச் சமுகம் அளிக்க வேண்டும். கால நிலையைக் காரணம் காட்டி வேலைக்குத் தாமதமாகச் செல்ல முடியாது. சென்றோமா? அவ்வளவுதான் ஓரிரு 'மன்னிப்பு' வழங்கல்களுக்குப் பின்னர் வேலை பறி போய் விடும். உங்கள் வேலையில் அடுத்த நாள் இன்னுமொருவர் அமர்த்தப் பட்டிருப்பார். இது புலம்பெயர் தேசத்தில் உள்ள வாசகர்கள் அறிந்த விடயம். இருப்பினும் இலங்கையில், தமிழகத்தில் வாழும் வாசகர்களுக்காக இதைக் குறிப்பிடேன். ஆதலால் இலங்கையில் அதிகாலையில் இழுத்திப் போர்த்திக் கொண்டு உறங்குபவர்களை சமுதாயம் எவ்வாறு பார்த்ததோ, அவ்வாறேதான் மேற்கத்திய சமூகமும் பார்க்கிறது. இரண்டு சமூகங்களின் பார்வையும் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகிறதல்லவா? இங்கு ஐரோப்பிய நாட்டில் அதிகாலையில், குளிர் வாட்டிக் கொண்டிருக்கின்ற, பனியோ, மழையோ கொட்டிக் கொண்டிருக்கும் காலத்தில் அதிகாலையில் கடிகாரத்தில் 'அலாரம்' அடிக்கும்போது எழுந்தே ஆகவேண்டிய 'கட்டாயம்' உள்ள இந்த வாழ்க்கை இருக்கிறதே அந்தக் 'கசப்பு' புலம்பெயர் தேசத்தில் உள்ள சகலருக்கும் பரிச்சயமான ஒன்று. என்ன செய்வது? நாமெல்லாம் 'சூழ்நிலையின் கைதிகள்'. நமது ஊரில், சிறு வயதில், குளிர் காலங்களில் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிய அந்த அழகிய 'பொற்காலங்களை' நினைத்து நிம்மதி கொள்வதைத் தவிர நமக்கு வேறு தெரிவுகள் இல்லை. வார இறுதி நாட்களை(Week ends) விடுமுறை நாட்களாக மாற்றிய அரசாங்கங்களும் அதன் தலைவர்களும் வாழ்க! அந்த நாட்களிலும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் உழைக்கின்ற என் தமிழ் உறவுகளுக்காக என்னால் பரிதாபப் படாமல் இருக்க முடிவதில்லை. 
ஊரில் வாழ்ந்த காலப் பகுதிகளில் வார விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயங்களும் எனக்கு இருந்ததுண்டு. இப்போதெல்லாம் 'வாழ்க்கை' என்றால் என்னவென்று தெரிந்த பின்னர் கோடி ரூபாய் சம்பளம் கிடைத்தாலும் வார இறுதி விடுமுறை நாட்களில் வேலைக்குப் போவதில்லை என்ற வைராக்கியத்தில் இருக்கிறேன்.
சரி, அந்தப் பனிக்காலத்தில் என் பேர்த்தியார் அதிகாலையில் என்னைத் துயில் எழுப்பியதைப் பற்றிக் கூறப் புகுந்த நான் வேறு பக்கம் எனது பார்வையைத் திருப்பி விட்டேன். நான் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதை மறந்து விடாதீர்கள். இது 'ஆயிரத்தொரு இரவுக் கதைகள்' போல கதை, கதைக்குள் ஒரு உப கதை, அதற்குள் ஒரு கதை என விரிந்து செல்லும். சலிப்பு ஏற்படுத்தாமல் இதை நகர்த்திச் செல்வது எனது பொறுப்பு.
அன்றைய தினமும் 'எட்டுமணிக் கப்பலுக்கு' டீச்சர் வீட்டில் நிற்க வேண்டும் என்ற பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தேன். 'எட்டு மணிக் கப்பல்' என நான் குறிப்பிட்டதும் கப்பலில் சென்று டீச்சர் வீட்டை அடைந்தேன் என்றோ, பள்ளிக்கூடம் போனேன் என்றோ நினைத்து விடாதீர்கள். இங்கு டென்மார்க்கிலும், இத்தாலியிலும் காலையில் பிள்ளைகள் கப்பலில் பள்ளிக்குச் சென்று திரும்பவும் மாலையில் கப்பலில் வீடு திரும்புவதைப் பார்த்து ரசித்திருக்கிறேன். இந்தியாவில் கேரள மாநிலத்தில் பல்கலைக் கழக மாணவர்கள் படகில் மறு கரைக்குச் சென்று கல்வி கற்பதை இயக்குனர் சேரன் அவர்கள் 'ஆட்டோகிராப்' என்ற திரைப்படத்தில் காட்டியிருப்பார். அதே போலவே எங்கள் கிராமத்திலும் எட்டுமணிக் கப்பலுக்குப் பள்ளிக் கூடத்தில் நிற்க வேண்டும் எனும் 'பதட்டம்' பல வருடங்களாக மாணவர்களை ஆட்டிப் படைத்து வந்தது. சரி உங்கள் பொறுமையை அதிகம் சோதிக்காமல் எட்டு மணிக் கப்பல் என்றால் என்னவென்று கூறி விடுகிறேன்.


எட்டு மணிக் கப்பல் 
அது இலங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதி. சாதாரண மக்களின் வீடுகளில் நேரம் பார்ப்பதற்குக் கடிகாரங்களோ, வானொலிப் பெட்டிகளோ இல்லாத காலம். கிராமப் பகுதிகளில் பணக் காரர் வீடுகளிலும், நடுத்தர மக்களில் ஒரு சிலரின் வீடுகளிலும் மட்டுமே கடிகாரங்களும், வானொலிப் பெட்டிகளும் இருந்தன. பெரும்பாலான அடித்தட்டு மக்கள் 'நேரம்' பார்ப்பதற்கு அடுத்த வீட்டில் இருக்கும் கடிகாரத்தையோ, வானொலிப் பெட்டியையோ நம்பியிருந்தனர். அதை விடவும் ஒரு நாளில் மூன்று தடவைகள் மட்டும் அதாவது காலை ஆறு மணி, நண்பகல் பன்னிரண்டு மணி, மாலை ஆறு மணி ஆகிய நேரங்களில் 'மாதா' கோவிலில் ஒலிக்கும் மணியோசையை வைத்து இப்போது எத்தனை மணி? எனத் தெளிவடைவோரும் இருந்தனர். மாதா கோவிலில் மட்டுமன்றி, ஏனைய கிறீஸ்தவத் தேவாலயங்களிலும் நான் மேலே குறிப்பிட்ட நேரங்களில் மணி ஒலித்தது. இதில் காலையில் ஒலிக்கும் மணி ஓசையை மட்டும் திரிந்தாதி மணி/திருந்தாதி மணி என எனது பாட்டனார் அழைத்ததாக ஞாபகம். மதியம், மற்றும் மாலையில் ஒலித்த மணிகளும் 'திருந்தாதி' மணியா? என்பதைக் கிறீஸ்தவ மக்களின் கவனத்திற்கு விட்டு விடுகிறேன்.


இதை விடவும் நேரம் இப்போது 'எட்டு மணி' என்பதைக் குறிப்பாக உணர்வதற்கு எமது கிராம மக்கள் பயன்படுத்திய இன்னொரு மார்க்கம்தான் 'எட்டு மணிக்' கப்பல் எனும் புதிய கண்டு பிடிப்பாகும். கப்பல் என்றவுடன் கடலில் செல்லும் கப்பலை நினைத்து விடாதீர்கள். வானில் பறக்கும் ஆகாய விமானத்தைத்தான் கிராம மக்கள் தொண்ணூறுகள் வரையில் 'கப்பல்' என அழைத்தனர். இப்போதும் கிராமங்களில் 'விமானத்தை' கப்பல் என அழைக்கும் ஆச்சிகளும், அப்புக்களும் இருப்பார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அக்காலத்தில் யாழ்ப்பாணம் 'பலாலி' விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி(திருச்சி) விமான நிலையத்திற்கு தினமும் காலை 'எட்டு மணிக்கு' எயார் சிலோன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டுச் செல்லும். அந்த விமானத்தை எங்கள் கிராமத்தவர் 'எட்டு மணிக் கப்பல்' என்று அழைப்பது வழக்கம். இந்த விமானம் திருச்சியை நோக்கிப் பறக்கும்போது எங்கள் தீவகக் கிராமங்களாகிய மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய கிராமங்களின் வான் பரப்பின் ஊடாகப் பறந்து செல்வது வழக்கம். (அந்த எயார் சிலோன் என்ற பெயர் காலப் போக்கில் ஆட்சி மாறியதும் 'எயார் லங்கா' வாக மாறி இப்போது 'ஸ்ரீ லங்கன் எயர் லைன்ஸ்' ஆக மாறியிருப்பது நீங்கள் அறிந்த விடயம்.) இந்த எட்டு மணி விமானம் பறக்கும் சத்தத்தைக் கேட்டதும் யாருக்குப் பயம் வருகிறதோ இல்லையோ, மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 'கலக்கம்' அடைந்து விடுவார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பாணையோ(Bread), ரொட்டியையோ(சப்பாத்தி), புட்டையோ(பிட்டு) அப்படியோ போட்டுவிட்டு பசியுடன் பாடசாலையை நோக்கி 'திகில்' பிடித்தவர்களாக தெறித்து ஓடுவார்கள். காலப் போக்கில் ஒரு சில மாணவர்களுக்குக் காலையில் எட்டு மணிக் கப்பல் சத்தத்தைக் கேட்டதும் வயிற்றைக் கலக்கியதும் உண்டு.
(இன்னும் சொல்வேன்)  

4 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

எட்டு மணிக் கப்பல்......
I can also remember....
good...
vaalthukal....

Paransothinathan சொன்னது…

நல்ல தொடர். எட்டு 'மணிக் கப்பல்' விடயத்தை மீண்டும் நினைவூட்டியது இந்தத் தொடர். இதனைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களில் நானும் ஒருவன்.

vinothiny pathmanathan dk சொன்னது…

உண்மைதான் .என் ஆச்சி கூட கப்பல் என்றே குறிப்பிடுவார். இந்த வார தொடரும் நன்றாக இருந்தது .பாராட்டுக்கள்

Lingathasan சொன்னது…

கருத்துரைத்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள். உங்கள் பாராட்டுக்கள் என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டும் 'ஊட்டச் சத்து' என்பதை மறுபடியும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்

கருத்துரையிடுக