ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
திறமையறிந்து கதாநாயகன் வேடம் தரப்பட்டதை என் குழந்தை மனம் அறியவில்லை.
இங்கும் அவர்கள் (குவீனி- தாமரை) இணை பிரியாத நண்பர்கள் தானா? நான் தனியாகக் கோவலனா!… என்று என் மனம் இரகசியமாக விசும்பியது, புழுங்கியது. (நான் மௌனமாகத் திரிந்தாலும் அவர்கள் என்னை ஒதுக்கியது என் மனதை வெகுவாகப் புண்ணாக்கியுள்ளது – என்பது இப்போது புரிகிறது)
ஒத்திகைகள் நன்கு நடந்தது. எமது வரிகள் எல்லாம் மனப்பாடமும் செய்தாகிவிட்டது. சிவராத்திரிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் போது, நான் நாடகத்தில் பங்கு பெறமாட்டேன் என்று மறுக்கத் தொடங்கினேன்.
ஆசிரியை, அவரது தங்கை, பக்கத்து வீட்டு அண்ணை (அவரும் நித்திரை விழிக்க வர இருந்தவர். கெந்திப் பிடித்து விளையாடும் போது சூரப்புலியாகக் கெந்துவார். நீண்ட கால்கள்) எல்லோரும் ” ஏன் என்ன காரணம்?” என்று தூண்டித் துருவி கேட்டனர். நான் பயங்கர மௌனம். முடியாது முடியாது தான் பதில்.
ஆசிரியரின் தங்கை கேட்டா ” உமக்கு நல்ல பாத்திரம் தானே தந்துள்ளோம்” என்று. வரமாட்டேன் வரவில்லை என்பது தான் என் பதில். தாமரையின் அக்கா சுகி தான் தாமரைக்கு நடனம் பழக்கியது. அவ கூட தனது திறமையைக் காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ” ஏனாம் பேபி வரமாட்டுதாம்? என்ன காரணம்?;” என்றாவாம்.
சிவராத்திரியும் முடிந்தது.
நித்திரை விழித்தார்களாம், நான் போகவில்லை. நாடகம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில், (அண்ணனிடம்) நடக்கவில்லையா என்று விசாரித்தேன். ” பேபி முடியாது என்று விட்டதே” அதனால் நாடகம் நடக்கவில்லை என்று பக்கத்து வீட்டு அண்ணை கூறினார். அதைப் பற்றி எனக்கு சாதக, பாதக சிந்தனையே தோன்றவில்லை. செய்தியாகக் கேட்டது போல இருந்தது.
அவ்வளவு தான். இது என் மனக் கணனியில் ஒரு மறந்த சொத்தாகிவிட்டது.
பின்பு ஒரு காலத்தில் இவைகளை எண்ணிய போது ஏன் இப்படி நடந்தேன் என்றால்
என் சின்ன மனம் அவர்களை, கத்தியின்றி, இரத்தமின்றிப் பழி வாங்கியுள்ளது. யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை இது நானாக எடுத்த செயல். யாருடனும் எதுவும் பேசாது மௌனமாக நடத்திய போர். இது வீட்டாருக்கும் தெரிய வரவில்லை. நான் கூறவும் இல்லை. என்னுள் இருந்தவை, இன்று எழுத்தில்.
பாருங்களேன் மனம்!…..அது கண்ணாடி! ..கீறலும், நொறுங்குதலும்!… செயல் தாக்கமும் பிரதி நடவடிக்கையும்!…எத்தனை விசித்திரமானது! எப்படி இயங்குகிறது…..யாருக்குமே… தெரியாது… இது சரியா..பிழையா..எப்படி நடந்தது என்று…..
இன்று வரை இரண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் நானறிந்த வரை மிகக் கவனமாக அவர்கள் மனதைக் கையாளுகிறேன். பிள்ளைகளை ஒதுக்குதல், வேற்றுமை காட்டுதல் என்பது மாபெரும் கொடுமை என்பதற்கு இது நல்ல உதாரண அனுபவம்.
வன்முறைகள் உலகில் மலிவதற்கும் நல்ல அடிப்படைக் காரணங்கள் உண்டு. காரணங்களைத் தேடிக் களையாது தண்டனையை நிறைவேற்றவே உலகு துடிக்கிறது.
எனது தமிழ் இந்தளவு வளர்ந்ததற்கு பாக்கியம் ஆசிரியர் அடிப்படைக் காரணமாகிறார். பிழை விட்டால் குட்டு, பென்சிலோடு காதைப் பிடித்து பல்லைக் கடித்தபடி திருகுவார். அழுததும் உண்டு.
ஒரு தடவை ஐந்தாம் வகுப்பில் உங்களுக்கு என்ன மிருகமாகப் பிறக்க ஆசை என்று முழு வகுப்பையும் கேட்டார். திகைப்பு! என்ன பதில் கூறுவது!…மிருகங்களின் ராஜா சிங்கம், எனக்கு சிங்கமாகப் பிறக்க பிடிக்கும் என்றேன். ஏன் இப்படிக் கூறினேன்! எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இன்று கேட்டால் சிங்கம் பற்றிய எந்த எண்ணமும் ஆர்வமுமே இல்லை. மானாகப் பிறக்க ஆசை என்பேன், மான் அழகு என்பதால்.
அக் காலத்தில் வகுப்பில் நான் தான் முதல், இக்காலத்தில் தான் ஸ்கொலசிப் பரீட்சையிலும் சித்தி பெற்றதும், ஸ்ரான்லிக் கல்லூரிக்கு ஆறாம் வகுப்பிற்கு மாறியதும்.
முதுமை வந்து பாக்கியம் ஆசிரியர் காலமாகி விட்டார். நான் மூன்று நூல்கள் செய்தும் அவரிடம் ஒரு முன்னுரை பெற முடியவில்லை என்பது எனக்குப் பெரிய குறை தான்.
தாமரை – செல் விழுந்து இறந்து விட்டார். குவீனிக்கு நல்ல வாழ்வு இல்லை, பிள்ளைகள் இல்லை, உறவுகளோடு வாழ்கிறார். (இவர்கள் பெயரை மாற்றியுள்ளேன். இவர்கள் உறவு எப்போதுமே என்னுடன் இப்படித் தான்.)
படிக்கப் போனவீடு ஊரில் கல் வீடாகிக் காட்சி மாறிவிட்டது. அன்று போல எதுவுமே இல்லை.
அம்மா, அப்பா, சகோதரர்களோடு வாழ்ந்த வாழ்வு, அத்தனையும், அத்தனையும்…
தொலைத்தவை எத்தனையோ!…..
துன்ப அகராதி துடைத்தழிக்க
நண்பனாக்கிய அழகுத் தமிழ்.
என்னைக் கவலைகள் தின்னத்தகாதென
கன்னற் தமிழைச் சரணடைந்தேன்.