சனி, அக்டோபர் 29, 2011

அந்திமாலையில் அறிமுகம்

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே,
இன்றைய தினம் உங்கள் 'அந்திமாலை'  ஒரு புதிய படைப்பாளியை உங்கள் முன்னால் அறிமுகம் செய்கிறது. அவர் கடந்த பல மாதங்களாக அந்திமாலையின் முகநூல் நண்பராக (Facebook) இருந்துவரும் திரு.சஞ்சயன் செல்வ மாணிக்கம் ஆவார். புலம்பெயர் மண்ணில் நோர்வேயின் தலைநகரமாகிய ஒஸ்லோவில்(Oslo) கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் இவர் தமிழின்மீதும், எழுத்துத் துறையின்மீதும் அடங்காத பற்றுக் கொண்ட, வளர்ந்துவரும் ஒரு எழுத்தாளர் ஆவார்.
ஆரம்ப காலங்களில் நோர்வேயிலிருந்து வெளியாகிய 'சுவடுகள்' எனும் இதழில் எழுதி தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பித்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து "சாதாரணமானவனின் மனது" (visaran.blogspot.com) எனும் பெயருடைய ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து, அதில் தொடர்ந்து தனது எண்ணங்களை அழகு தமிழில் எழுதி வருகிறார்.
இலங்கையில் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், இவரது பெற்றோர்கள் அரச உத்தியோகத்தர்களாக பணியாற்றிய காரணத்தால், அவர்களுக்குப்  பணியில் பல ஊர்களுக்கும் 'மாறுதல்' கிடைத்தபோதெல்லாம் அவர்களுடனே பல ஊர்களிலும் வாழ நேர்ந்தது. அந்த வகையில் தனது இளமைக் காலங்களில் கொழும்பு, மட்டக்களப்பு, ஏறாவூர், அக்கரைப் பற்று, பதுளை, பிபிலை எனப் பல பகுதிகளிலும் வாழ்ந்ததாகக் குறிப்பிடும் இவர், தனது உயர் தரக் கல்வியைக் கற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த பாடசாலையே தனக்கு தமிழ் மொழியின்மீதும், எழுத்தின்மீதும் தீராத 'காதலை' ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்.
தனது பள்ளிக் காலத்தில் தனக்கு தமிழின்மீது தீராத ஆர்வம் ஏற்படக் காரணமானவர்கள் எனத் தனது தாயாரையும், 'சர்மா' என்ற ஆசிரியரையும், 'விஜயரட்ணம்' எனும் ஆசிரியரையும் குறிப்பிடும் திரு. சஞ்சயன் அவர்கள் புலம்பெயர்ந்து 1987 ஆம் ஆண்டு தொடக்கம் நோர்வே நாட்டில் வாழ்ந்து வருகிறார். அந்நாட்டில் 'கணனித் துறையில்' மேற்படிப்பை நிறைவு செய்து, கடந்த பல ஆண்டுகளாக நோர்வேயின் வெளி நாட்டு அமைச்சு அலுவலகத்தில் 'கணனித்துறை அறிவுரையாளராக' கடமையாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். "எனது வாழ்க்கை எனும் தென்றலில் அசைந்தாடும் இரண்டு அழகுத் தோரணங்கள் அவர்கள்" எனத் தனது பிள்ளைகளைப் பற்றிக் கருத்துரைக்கிறார்.
வாசிப்பின்மீது தனக்கு இருக்கும் அளவு கடந்த ஈடுபாடு பற்றிக் குறிப்பிடும் இவர், "எழுத்தாளர்களான திரு. ராமகிருஷ்ணன், திரு. அ.முத்துலிங்கம் ஆகியோரின் 'பரம விசிறி' நான், அவர்களது 'ஏகலைவனாக' இருப்பதையே நான் விரும்புகிறேன்" என்கிறார்.
'எழுத்தைப் பற்றி' என்ன கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு "எழுத்து என்பது வாசகனின் மனதை அசைக்க வேண்டும், அவனது அடி மனதைச் சென்றடைய வேண்டும் என்பது எனது அவா" எனக் குறிப்பிடும் திரு.சஞ்சயன் அவர்கள் "எனக்கு எழுத்துலகின் விதிமுறைகள், நுட்பங்கள் என்று எதுவுமே தெரியாது, என் மனது எப்படி எழுதச் சொல்கிறதோ, அதையே எழுதி வருகிறேன்" என்கிறார் மிகவும் தன்னடக்கத்துடன். இன்றைய தினம் உங்கள் 'அந்திமாலையில்' இவரது ஆக்கங்களுள் ஒன்றாகிய "நினைவுக் கடலின் முத்துக்கள்" எனும் படைப்பு இடம்பெறுகிறது.
அந்திமாலையின் தளத்திற்குப் புதிய படைப்பாளியாக வருகை தந்திருக்கும் திரு.சஞ்சயன் செல்வமாணிக்கம் அவர்களை நல்வரவு கூறி வரவேற்பதில் பெருமையடைகிறோம்.

ஆசிரிய பீடம் 
அந்திமாலை.

10 கருத்துகள்:

Shanmugam Rajamanickam சொன்னது…

வரவேற்கிறோம்....

Arul, DK சொன்னது…

வருக, வருக. உங்கள் வரவு நல் வரவு ஆகட்டும்.

Ramesh, DK சொன்னது…

Welcome to this site.

Raja and Mala சொன்னது…

வாழ்த்தி வரவேற்கிறோம்.

Uthayan சொன்னது…

உங்கள் ஆக்கங்களை ஆர்வத்தோடு எதிர்பாக்கிறோம் , உங்களை வருக. வருக என வரவேற்கிறோம்

பெயரில்லா சொன்னது…

நல் வரவு! எழுத்துலகின் விதி முறையில் ஒன்று நம்மை மதித்து வாழ்த்துபவர்களை நாமும் மதித்து வாழ்த்துதல். இதை ரெம்பப் பேர் மறக்கிறார்கள். உமது பயணம் சிறக்கட்டும்.

Antony J, U.K சொன்னது…

welcome.

vinothiny pathmanathan dk சொன்னது…

உங்களை வாழ்த்தி வருக, வருக என வரவேற்கிறோம்.

Suthan frans சொன்னது…

Wel come to anthimaalai (Sangsayan)

Rayan சொன்னது…

I wish you all tha best

கருத்துரையிடுக