சனி, அக்டோபர் 29, 2011

நினைவுக் கடலின் முத்துக்கள்

ஆக்கம்: செ.சஞ்சயன், நோர்வே.
ஏறத்தாள 33 - 34 வருடங்களுக்கு முன்னான நினைவுச் சிப்பிக்குள் முத்தாய் ஒளிந்திருந்த கதை இது. ஏனோ இன்று நினைவில் கரை தட்டியது.

காலம் 1976 -77 கள். மட்டக்களப்பு மாவட்டத்தின்  பிரபல்யமான பாடசாலையாகிய மெதடிஸ்த மத்திய கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற  கனாக்காலம்.

என்னுடன் பதுளையில் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் படித்த நண்பனும் அவனின் இரு சகோதரர்களும் என்னுடன் விடுதியில் தங்கியிருந்தார்கள். ஆரம்ப காலங்களில், மட்டக்களப்பு மண்ணின் புழுதி, மனத்தையும் உடலையும் ஆட்கொள்ள முதல் எனக்கு நண்பனாக ப‌ழைய பதுளை நண்பன் மட்டுமே இருந்தான்.

இவர்களின் 'பதுளைத் தமிழ்' மட்டக்களப்புத் தமிழுக்கு புதிதாய் இருந்ததால் இவர்களின் தமிழ் வேடிக்கையாய் இருந்தது பலருக்கு. நக்கலுக்கும், கிண்டலுக்கும் உட்பட்டார்கள்.  காலப் போக்கில் மொழிவேறுபாடுகள் மறைந்து போயின. விடுதி வாழ்க்கை என்பது ஒரு வித இயந்திரத் தன்மையான வாழ்க்கை. நேரம் தவறாமால் எல்லாமே நடக்கும். சூரியன் உதித்து மறைவது போல.

காலையில் எழும்பி மாலையில் மயங்கும் வரை எல்லாமே அட்டவணையிடப்பட்டிருக்கும். மாணவ தலைவர்களின் மிரட்டல்களுக்கும், ஆசிரியர்களின் கண்டிப்புக்கும், இவ்றையெல்லாம் மீறி ”முற்றும் உணர்ந்த” எங்கள் அதிபர் பிரின்ஸ் காசிநாதரின் ”கழுகுக் கண்களையும்” மீறி எம்மால் எதையும் செய்ய முடியாதிருந்த காலம் அது.

காலையில் மேற் பக்கம் கருகியிருக்கும் ஒரு றாத்தல் பாண் மூன்றாக வெட்டப்பட்டு சம்பலுடன் பரிமாறப்படும். அன்றைய காலையுணவுக்கு பொறுப்பானவர்கள் எமது நண்பர்கள் எனின் மூன்றில் ஒன்று என்னும் விதி யாருக்கும் தெரியாமல் மீறப்பட்டு, எம்மிலும் சிறியவன் ஒருவனுக்கு காலையுணவு ஏறக்குறைய இல்லாது போயிருக்கும்.  பசியின் முன் நியாயம் அடிபட்டுப்போகும் என்பதை முதன் முதலில் உணர்த்திய இடம் எமது உணவுச்சாலையே.

அப்போதெல்லாம் பாடசாலை இரு நேரங்கள் நடைபெற்றது. மதிய இடைவேளை நீண்டிருக்கும். வெட்டி எடுத்த தண்டவாளத்தில் இரும்புத் துண்டால் அடித்து சாப்பாட்டு நேரம் அறிவிக்கப்பட்டதும் உணவுச் சாலையின் கதவுக்கருகில் வரிசையில் நின்று மாணவர் தலைவர்களின் கட்டளைப்படி உட்புகுந்து எனக்கு என்று வழங்கப்பட்ட இடத்தில் எனது அலுமீனிய தட்டில் இடப்பட்டிருக்கம் சோற்றின் அளவையும் கறிகளின் அளவையும் கண்கள் அளவெடுக்கும் வரை மனம் பெரும் பாடு படும். அன்று உணவு பரிமாறுவது எமது நண்பர்களில் ஒருவராக இருந்தால் எமது பாடு கொண்டாட்டம் தான். இல்லையேல் திண்டாட்டம். கொண்டாட்டமும் திண்டாட்டமும் . இரவையும் பகலையும் போல் மாறிக் கொண்டேயிருந்தது.

மாதத்தில் ஒரு நாள் அதாவது முழு நிலவன்று இரவு கல்வி நேரம் இல்லாதிருக்கும். விளையாட்டுகள் களைகட்டும். மகிழ்ச்சியின் உச்சத்தில் கண்ணயரும் வரை கொண்டாட்டமாய் கழியும் ஒரே ஒரு இரவு, அந்த முழு நிலவின் இரவொன்றே. இந்த ஒரு நாளுக்காவே வாழ்ந்திருந்த காலங்கள் அவை.

இவ்வாறு நானும் எனது பதுளை நண்பர்களும் விடுதி வாழ்க்கைக்கு இசைவாக்கம் அடைந்திருந்தோம். எனது வகுப்புத் தோழனும் இன்றைய காலத்தில் பாரீஸ் நகரத்தில் வசிப்பவருமாகிய நண்பர் ராஜேந்திரன் என்பவரும் எம்முடன் விடுதியில் தங்கியிருந்தா(ன்)ர்.

எங்களின் பெற்றோர்கள் விரும்பியதை நாம் பாடசாலையில் செய்தோமோ நானறியேன். ஆனால் நாம் விரும்பியதை தேவைக்கதிகமாகவே செய்தோம். நானும், எனது பதுளை நண்பர்கள் இந்துக்கள். இந்த ராஜேந்திரன் ரோமன் கத்தோலிக்கவர். பகலில் உயிர் நண்பர்களாய் இருந்த நாம் அதிகாலையில் மட்டும் எலியும் பூனையுமாய் இருக்க வேண்டிய காலம் எமக்குத் தெரியாமலே எம்மை சூழ்ந்து கொண்டது.

இந்துக்களின் சுவாமியறை ஒரு மண்டபத்தின் வலது கோடியிலும், ரோமன் கத்தோலிக்கத்தவரின் ஜெபி்க்கும் அறை இடது கோடியுலும் இருந்தது. இந்து மாணவதலைவர்கள் என்னிடம் தினமும் பூப்பறித்து சுவாமிப்படங்களை அலங்கரிக்கும் பொறுப்பை தந்த போது ரோமன் கதோலிக்கத்து பூஜையறையை மலர்களால் அலங்கரிக்கும் பொறுப்பு ராஜேந்திரனிடம் கொடுக்கப்பட்டது.

தினமும் யார் முதலில் பூப்பறிப்பது என்று பெரும் போட்டி ஆரம்பமாயிற்று. சிவனே என்று மணியடிக்கும்வரை தூங்கும் 'கும்பகர்ணனின் தம்பி' நான்.  நான் எழும்பும் போது பூக்கள் எல்லாம் ரோமன் கத்தோலிக்க ஜெபமண்டபத்தில் யேசுநாதரையும், புனித மரியாளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கும். முருகனும், சிவபெருமானும் பூக்கள் இன்றி பரிதாபமாய் இருப்பார்கள். இந்த சரித்திர தோல்வியை இந்து மாணவதலைவர்களால் தாங்க முடியாதுபோயிற்று. 

என்னிடம் இருந்த பொறுப்பு பறிக்கப்பட்டு பதுளை நண்பர்களிடம் கொடுக்கப்பட்டது. அடுத்த நாள் காலை யேசுவுக்கும், புனித மரியாளுக்கும் பூ இருக்கவில்லை. முருகனில் இருந்து சரஸ்வதி வரை என்று எல்லோரும் பூவினால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள்.

எங்கள் கடவுளின் மானம் காப்பாற்றிய வீரர்களாக எனது பதுளை நண்பனும் அவனின் சகோதரர்களும் அடையாளம் காணப்பட்டு பாராட்டப் பட்டார்கள். அவர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டோடியது.

இந்தத் தோல்வியை ரோமன் கத்தோலிக்க பக்கத்தில் ஈடு செய்ய நண்பன் ராஜேந்திரன் பணிக்கப்பட்டான். அன்றில் இருந்து  தொடங்கியது 'பெரும் யுத்தம்'. யார் முதலில் எழும்புகிறானோ அவன் எல்லா பூக்களையும் பறித்து தனது கடவுளுக்கு படைத்தான். மற்றவன் பூக்கள் தேடி விடுதியை விட்டு அலைய  வெளியே செல்ல வேண்டியேற்பட்டது.

5.30 க்கு எழும்பி பூ பறிக்கும் இவர்களின் போட்டியால் இவர்கள் எழும்பும் நேரம் காலை 5 மணியாகி, பின்பு 4 மணியாகி, அதன் பின்பு 3 மணியாகி இறுதியில்  சாமமாகியது. சாமத்தில் பூக்கள் பூக்காது என்பதால் இவர்கள் பூக்களின் மொட்டுக்களைப் பிடுங்கி தண்ணீரில் போட்டு சாமியறையில் வைக்கத் தொடங்கினார்கள். இதுவே நாளைடைவில் இரவு 10மணிக்கே பாடசாலை எல்லைக்குள் இருந்த நாளை பூக்க வேண்டிய சகல மொட்டுக்களும் பறிக்கப்பட்டு தண்ணீரில் இடப்பட்டு மறுநாள் கடவுள்களுக்கு படைக்கப்பட்டது.

பூக்கள் தேவைப்படாத இஸ்லாமிய நண்பர்களை இருபகுதியினரும் சமமாகப் பிரித்து எடுத்து "நீ எங்களுக்கு பூ பறித்து தர வேண்டும்" என்ற கூத்தும் சில காலம் நடந்தது. அவர்களும் அதிகாலையில் தொழுகைக்கு சென்று வரும் போதெல்லாம் இரு பகுதியினருக்கும் பூக்களை வெளியில் இருந்து கொண்டு வந்தது தந்தனர். 'மத ஒற்றுமையின்' உச்சம் அது.

நான்  மாணவர் தலைவராகி, பின்பு சிரேஸ்ட மாணவ தலைவராக வந்த பின்பும் இதே கூத்து தொடர்ந்தது. நானும் ரோமன் கத்தோலிக்க மாணவர்களை கட்டுப்படுத்தி என் பங்குக்கு என் தெய்வங்களுக்கு பூ பறிக்க வசதிசெய்து கொடுத்‌து "புண்ணியம்" தேடிக் கொண்டேன்.

ஏறத்தாள 33 வருடங்களின் பின் ஓர் நாள் எனது கல்லூரிக்குள் நுழைந்து எங்கள் கால்களின் தடங்களை தேடி நடந்து கொண்டிருந்தேன். மனம் காற்றிலும் கடுகி 33 வருடங்களைத் தேடி ஓட ஒவ்வொரு இடமும் ஆயிரம் கதை சொல்லிற்று.

மேசையில் சப்பாணி போட்டு இருந்து சங்கீதம் கற்பித்த மகாலிங்கம் மாஸ்டரின் வகுப்பறை, அதனருகே தண்ணீர்ப் பைப், பழைய கன்டீன். கன்டீனின் அருகே ‌அதே பழைய மணியடிக்கும் தண்டவாளத் துண்டு. அதற்கங்கால் விடுதியின்  உணவுச்சாலை, அதற்கப்பால் விடுதியாசிரியர் சுந்திரலிங்கம் அண்ணணின் அறையும், புகை படிந்து கரிய நிறத்திலிருக்கும் குசினி, கழிவு நீர் தேங்கி நிற்கும் கான். அதற்குப் பின்னால் குளிக்கும்  தண்ணீர்த் தொட்டிகள்,  தண்ணீர் டாங்க், கிணறு.

இப்படி எல்லா இடங்களையும் மனதால் நுகர்ந்து திரிகிறேன். என்னைக் கடந்தோடும் இன்றைய மாணவர்கள். அவர்களிடமும் ‌ எம்மிடமிருந்த அதே குறும்பு, குசும்பு, சேட்டைகள். விடுதியின் சுண்ணாம்புச் சுவற்றை தடவி சுகம் காணும் என்னை குறும்புக்கண்களால் அளவெடுத்துப் போகிறார்கள் சிலர். இங்கே படித்தீர்களா? Old boy?  என்று குசலம் விசாரித்தவனின் தலைகோதி புன்னகைத்து தலையாட்டினேன் வார்த்தைகள் ஏனோ வர மறுத்தன.

கெதியில இங்க ”புது பில்டிங்” வருது. பழைய hostel (மாணவர் தங்கும் விடுதி) ஐ உடைக்கப்போறாங்களாம் என்றான் அவன். புன்னகைத்து ”தெரியுமய்யா” என்றேன். 

அதிபரின் 'கந்தோர்' கதவினருகே நின்ற போது என்னையறியாது கழுத்து வரை மேற்சட்டை பொத்தான்களை கை தன்னிச்சையாக பூட்டிய பின்பே நான் என்ன செய்கிறேன் என்பது புரிந்து. பாடசாலை நாட்களில் மேற்சட்டை பொத்தான்கள் இன்றி இந்தக் 'கந்தோருக்குள்' உட்புகுவது தற்கொலைக்குச் சமம். அவ்வளவு கடுமையான அதிபர் எமது 'பிரின்ஸ் சேர்'. இன்றோ நிலமை வேறு. இருப்பினும்  தன்னிச்சையாக பூட்டப்பட்ட பொத்தான்களை களட்ட விரும்பமின்றி உட்புகுந்தேன்.

கண்ணாடிப் பெட்டியினுள் எமது காலத்துப் ”பெரு மண்டபத்தின்” இரு அத்திவாரக் கற்கள் ஞாபக சின்னங்களாய் இருக்க, இன்றைய அதிபர், பெருமையாய் தன் காலத்தில் கட்டப்பட்ட புதிய மண்டபத்தைப் பற்றி விபரித்தார். மகிழ்ச்சியாய் இருந்தாலும் எதையோ இழந்தது போலிருந்தது எனக்கு. 

அங்கிருந்து வெளியேறிய போது, போட்டி போட்டு பூப்பறித்த செம்பரத்தை, மல்லிகை, நந்தியாவட்டைப் பூ மரங்களை கண்கள் தேடின. புதிது புதிதாய் பூத்திருந்த சீமெந்துப் பூக்களின் சுவர்களின் மத்தியில் எங்களின் நட்பூக்கள் எமது எதையும் காணக்கிடைக்கவில்லை.

கடந்து ஓடிய மாணவர்களின் வேகத்தில் கிளம்பிய புழுதி மட்டும் பாடசாலையின் வாசனையுடன் இருந்தது.

...........

பூப்பறிப்பதில் கில்லாடியும், அதற்குப் பின்னான காலங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட ”பதுளை நண்பன்”  ஒருவனுக்கு இது சமர்ப்பணம்.

7 கருத்துகள்:

Raja and Mala சொன்னது…

பாடசாலை நாட்களை நினைவூட்டிக் கண்களில் கண்ணீரை வர வைத்தீர்கள். உங்கள் ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்.

Paransothinathan, Denmark சொன்னது…

Really a good article.

vinothiny pathmanathan dk சொன்னது…

நன்றாக இருந்தது. பாடசாலை நாட்கள் என்றுமே மனதை விட்டு அகலாதவை. அதுவும் hostel இல் தங்கியிருந்த உங்கள் சில ஞாபகங்கள் கண்ணீரை வரவழைத்தன.

Uthayan சொன்னது…

Very good remembering i like to reading

Seetha சொன்னது…

நாம் படித்த பாடசாலையும், கோவிலும், வீடும் தான் எப்போதும் நினைவில் வந்து
கொண்டு இருப்பவை. எல்லாத்திலும் எமது பெர்ரோர்ரையும் பாடசாலையையும்
என்றும் எம் மனதில் வந்தவண்ணமே இருக்கும், நான் கடந்த மாதம் எனது ஊருக்கு போய் வந்தேன். நான் படித்த பாடசாலையையும் பார்த்தேன். மிகவும் ஆனந்தம் அடைந்தேன். எல்லாவற்றிலும்
பள்ளி வாழ்வு மிகவும் சந்தோஷமான வாழ்வுதான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Suthan frans சொன்னது…

Ys it,s true

சஞ்சயன் சொன்னது…

பின்னூட்டங்களுக்கு நன்றிகள நண்பர்களே

கருத்துரையிடுக