வியாழன், அக்டோபர் 20, 2011

கடவுளின் குழந்தைகள்

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
இக்கட்டுரைக்கு 'பாழாய்ப்போன கடவுள்' என்றுதான் பெயரிடுவதற்கு எண்ணியிருந்தேன். ஆனால் இவன் பெரியார் பக்கம் போகிறானோ? என்று காரணமேயில்லாமல் என்மீது வீண்பழி சுமத்தப்படுவதை நான் விரும்பவில்லை. அதன் காரணமாகவே மேற்படி 'கடவுளின் குழந்தைகள்' என்ற தலைப்பை இட்டேன்.
ஒவ்வொரு தடவையும் துன்பங்கள், நெருக்கடிகள் அதிலும் பொருளாதார நெருக்கடிகள் வந்து உலுப்பும் போதெல்லாம் எனது பேர்த்தியார் உதிர்க்கும் வாசகம் இதுதான் "என்னை மட்டும் அந்தப் பாழாய்ப்போன கடவுள் ஏன் இப்படிச் சோதிக்கிறான்? இந்த வாசகத்தைக் கேட்டுக் கேட்டு வளர்ந்த எனக்கு அதுவே மனப்பாடம் ஆகி விட்டது. சின்னத் துன்பம் நேரும்போதெல்லாம், என் பேர்த்தியாரைப் போலவே நானும் கடவுளை நொந்து கொண்டேன். ஆனால் என் பேர்த்தியாரைப் போல் வாய்விட்டுத் திட்டுவதில்லை. இருப்பினும் துன்பம் நேரும்போதெல்லாம் கடவுளை மனதால் திட்ட மறப்பதில்லை. எவ்வாறு என் பேர்த்தியாருக்குக் கடவுள் பற்றிய போதுமான 'புரிதல்' இல்லையோ அதே போலவே எனக்கும் 'கடவுள்' பற்றிய போதுமான புரிதல் இல்லை. நான் கேட்டதை எல்லாம் கொடுக்காத 'கடவுள்மீது' எனக்கு ஒருவகை ஆத்திரம் கூட உண்டு எனலாம். உண்மையைச் சொன்னால் நான் ஒரு ஆத்திகனா, நாத்திகனா என்பது எனக்கே தெரியாது.
இவ்வாறு கடவுள்மீது எனக்கிருந்த ஆத்திரம் கடந்த செவ்வாய்க் கிழமை (18.10.2011) முதல் என்னிடமிருந்து விடைபெற்று விட்டது என்றுதான் கூறுவேன். நேற்று முன்தினம் முன்னிரவு 11.00 மணியளவில்  டென்மார்க்கின் தேசியத் தொலைக்காட்சிகளில் ஒன்றாகிய DR2  அலைவரிசையில் 'நேபாள நாட்டைப் பற்றிய' விவரணத் திரைப்படம் (Documentry film) ஒன்றைக் காட்டினார்கள். ஒன்றரைமணி நேரம்  நீடித்த அந்த உண்மைகளின் தொகுப்பைப் பார்த்து முடித்தபோது எனக்கு 'வாழ்க்கை' பற்றிய ஒரு புதிய கண்ணோட்டம் ஒன்று ஏற்பட்டது மட்டுமல்லாமல், யாரோ என் முகத்தில் அறைந்ததுபோல் இருந்தது.
மேற்படி விவரணத் தொகுப்பின் பெயர் 'கடவுளின் குழந்தைகள்' என்பதாகும். முழுக்க முழுக்க நேபாள மொழியில் உரையாடல்கள் நடைபெறும் இப்படத்தை தென்கொரியாவின் பிரபல விவரணத் தொகுப்பாளர் Yi Seung-Jun பதிவு செய்திருந்தார். படம் டேனிஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியபோது டேனிஷ் மொழியில் அடிக்குறிப்பு (Sub titles) போடப்பட்டதால் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. வழமையாக ஒரு நாட்டில் வாழும் மக்களின் துன்பமான வாழ்க்கை, வறுமை போன்றவற்றைப் படமாக்கும்போது கூடவே ஒரு அறிவிப்பாளர் தோன்றி எமக்கு அறிவுறுத்தல்கள், விளக்கங்கள் கொடுப்பார். ஆகக் குறைந்தது பின்னணியில் ஒரு அறிவிப்பாளரின் குரலாவது எமக்கு விளக்கங்களை வழங்கிக் கொண்டிருக்கும். ஆனால் மிகவும் புதுமையாக வறுமை, போஷாக்கின்மை, கல்வியின்மை போன்றவற்றை அந்தந்த பகுதியில் உள்ள மக்களே அதிலும் குறிப்பாகச் சிறுவர்களே பேசுவது போன்று படமாக்கியிருப்பதைப் பாராட்டியே தீரவேண்டும்.
எமது இலங்கையில் வறுமை, இந்தியாவில் வறுமை என்றெல்லாம் கோஷங்கள் எழுப்புபவர்கள் இந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பை ஒரு தடவை பார்க்க நேரிட்டால். வறுமை பற்றி வாய்திறக்கவே மாட்டார்கள் என்பது எனது அபிப்பிராயம்.
ஆற்றங் கரைகளில் எரிக்கப்படும் பிணங்களுக்காக ஆற்றில் விடப்படும் தீபங்களில் வைக்கப்படும் சில்லறை நாணயங்களை நீரில் மூழ்கிப் பல போராட்டங்களுக்கு மத்தியில் கைப்பற்றும் சிறுவர்களின் வாழ்க்கையையும் அந்தப் பணத்தை வைத்தே அவர்கள் தமது ஒரு வேளை உணவையும், தமது வறுமையில் வாடும் பெற்றோர், சகோதரன் அல்லது சகோதரிக்கும் உணவளிக்கிறார்கள் என்பதைப் பார்த்தபோது கண்கள் பனித்துவிட்டது. அது மட்டுமல்லாமல் பிணங்களுக்குப் போடப்படும் உடையை மேற்படி பிணத்தை எரிப்பவர்களிடம் 'இரந்து' பெற்று அதை நகரத்தின் இன்னொரு பகுதியில் உள்ள இவர்களை விடவும் கொஞ்சம் வசதி படைத்த 'ஏழைகளிடம்' விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் கால் வயிற்றுக் கஞ்சி குடிக்கிறார்கள் என்பதைக் கண்ணுற்றபோது எனக்கு இந்த இயற்கை பரிசளித்திருக்கும் எல்லாவற்றிற்காகவும் நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை.  பத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட எனது பேர்த்தியார் இந்த விவரணத் தொகுப்பைப் பார்க்க நேர்ந்திருந்தால் கடவுளைச் சபிப்பதை அடியோடு நிறுத்தியிருப்பார். என்னை ஒரு பட்டதாரியாகவும், அரச உத்தியோகத்தனாகவும் பார்க்க விரும்பிய, அந்த விருப்பத்தில் ஒன்று நிறைவேறியதைப் பார்க்காமலே போய்விட்ட என் அம்மம்மாவுக்கு இவ் விவரணத் தொகுப்பைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

படத்தைத் தயாரித்த இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு அவர்களின் முயற்சிக்குத் தலை வணங்குகிறேன்.

படம் பற்றிய விளக்கம்:
கீழே மேற்படி திரைப்படத்தின் காணொளியை இணைத்துள்ளேன். நேபாள மொழியில் வரும் உரையாடல்களின் மொழி பெயர்ப்பு ஆங்கில மொழியில் அடிக்குறிப்பாக (Sub Titles) வருகிறது.
மேற்படி விவரணத் திரைப்படம் மூன்று சர்வதேச விருதுகள் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

காணொளி உதவிக்கு நன்றி: டங்கல் ஈஸ்வர் (Dangol Ishwor)

4 கருத்துகள்:

Seetha சொன்னது…

நல்ல ஆக்கங்களை தரும் உங்களுக்கு நன்றிகள்
Thasan All tha best

Malar சொன்னது…

Very very sad movie, how can this people are eating and staying this world,,,,,,,,,,,,,,Only God can give tha peopl All,,,

vinothiny pathmanathan dk சொன்னது…

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனிலும் கொடிது இளமையில் வறுமை
என்ற ஔவையார் வரிகள் தான் என் நினைவில் வந்தன .

Seelan சொன்னது…

Very sad story

கருத்துரையிடுக