திங்கள், அக்டோபர் 24, 2011

தாரமும் குருவும் . பகுதி - 4.9


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)

பகுதி 4.9

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)


சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டால்தான் நல்ல பாப்பா 
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா 

தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா?
சிலுக்குச் சட்டை சீனாப் பொம்மை பலூன் வேணுமா?
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா?
கலகலன்னு சிரிச்சுக் கிட்டு என்னைப் பாரம்மா...
(சின்னப் பாப்பா)
கோபம் தீர்ந்த அப்பா உன்னைக் கூப்பிடுவாரு-நீ 
கொஞ்சிக் கொஞ்சிப் பேசினால்தான் சாப்பிடுவாரு 
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது-உனக்குக் 
கொய்யாப்பழம் பறித்துத் தாரேன் அழவும் கூடாது.
(சின்னப் பாப்பா)
################################################


மேலேயுள்ள பாடலை எங்கோ கேட்ட ஞாபகம் வருகிறதா? உங்களுக்கு எங்கு, எச்சந்தர்ப்பத்தில் என்பது நினைவில் இல்லாவிட்டால், இப்பாடல் உங்கள் மனதில் பசுமையான நினைவு எதனையும் விதைக்கவில்லை என்று பொருள். ஆனால் எனக்கு இந்தப் பாடலை எங்கு கேட்க நேர்ந்தாலும் அடுத்த கணம் நான் அல்லைப்பிட்டியில் பாலர் வகுப்புப் படித்த அந்தக் கட்டிடமும்(அது கட்டிடம் அல்ல, அது தனியார் ஒருவருக்குச் சொந்தமான வீடு), எங்கள் அழகே உருவான 'கமலினி' டீச்சரும் நினைவுக்கு வருவார்கள். ஒரு தனியார் வீட்டில் பாலர் பாடசாலை என்று குறிப்பிட்டேன் அல்லவா? அது இந்து சமயத்தின்மீதும், தமிழின்மீதும் தீராத பற்றுக் கொண்ட ஒருவரின் வீடு. அந்த வீட்டின் ஒரு பகுதியே எங்கள் பாலர் பாடசாலை. அந்த வீட்டின் மேற்படி பகுதியை நான் மேலே குறிப்பிட்ட அந்தப் பெரிய மனிதர் வாடகை ஏதும் வாங்காமல் 'பாலர் பள்ளிக்காக' பகல் நேரங்களில் கொடுத்து உதவியிருந்தார் என்பது எனது நம்பிக்கை. மேற்படி பெரியவர் பார்ப்பதற்கு அசப்பில் 'திருநாவுக்கரசு நாயனார்' போல இருப்பார். இந்து சமயத்தவர் தவிர்ந்த ஏனைய வாசகர்கள் இவ்விடத்தில் தலையில் முடி அதிகம் இல்லாத, நெற்றியில் எப்போதும் திருநீற்றுக் குறியுடன் காணப்படும், வேட்டி கட்டிய 'சைவப் பழம்' போன்ற ஒரு மனிதரைக் கற்பனை செய்து பாருங்கள். மேற்படி பெரியவர் தனது வீட்டின் ஒரு பகுதியைப் பாலர் பள்ளிக்குக் கொடுத்து உதவியதற்கு 'வாடகை' வசூலித்தார் என்று இதை வாசிக்கும் யாருக்காவது தெரிந்திருந்தால்(அறிந்து வைத்திருந்தால்) 'தவறான தகவலை தந்ததற்காக' என்னை மன்னியுங்கள். எல்லோருக்கும் மரணம் வருவது உறுதி. ஆனால் அந்த வீட்டிலிருந்த மேற்படி தாத்தாவுக்கு 'சாவு' வராது என்பது எனது உறுதியான நம்பிக்கையாக இருந்தது. ஆனாலும் கிணறுகள் நிறைந்து கிடக்கும் ஒரு மார்கழி மாதத்தில் அந்தத் தாத்தா ஒரு கிணற்றுக்குள் தவறுதலாக வீழ்ந்து இறந்து போனார். அவர் இறக்கும்போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அவரது 'இறப்பு' எமது கிராமத்தை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேபோல் என்னையும் மிகவும் அதிர்ச்சி கொள்ளச் செய்தது. எனக்கு எந்த வகையிலும் உறவு முறை அல்லாத அந்தத் தாத்தா இறந்தபோது எங்கள் 'குடும்ப' உறவினர் ஒருவரை இழந்தது போன்ற துக்கத்தை அடைந்தேன். அதற்கான காரணம் எனக்கு இன்றுவரை புரியவில்லை.
மேலேயுள்ள பாடலையும் 'கமலினி' டீச்சரையும் தொடர்பு படுத்திய நான், திடீரென்று உங்களை வேறு திசையில் அழைத்துச் சென்று விட்டேன். பாலர் வகுப்பில் ஆசிரியைகள் ஆத்தி சூடியையும், கொன்றை வேந்தனையும்,பாரதியார் பாடல்களையும், குருவிகள் பற்றிய பாடலையும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில் எங்கள் கமலினி டீச்சர் மேற்படி 'சினிமாப் பாடலை' எங்கள் பாடத் திட்டத்தில்???(Syllabus) துணிந்து சேர்த்ததுமல்லாமல் அதை அன்றைய என்னையொத்த தலைமுறையினரின் மனங்களில் மிகவும் ஆழமாக பதியவும் செய்திருக்கிறார் என்பதை நினைந்து வியக்கிறேன். மேற்படி பாடல் ஒரு சினிமாப் பாடல் என்பதை அறிந்து கொள்ளும்போது எனக்கு இருபது வயது ஆகியிருந்தது. என்னோடு பாலர் வகுப்பில் ஒன்றாகப் படித்த நண்பர்/நண்பிகளில்  ஒருவராவது இத்தொடரை வாசித்து, நாங்கள் கமலினி டீச்சருடன் சேர்ந்து இப்பாடலைப் பாடும்போது என்ன செய்தோம் என்பதை மனக்கண்முன் கொண்டு வந்தால் எனக்கு மகிழ்ச்சியே.
எனது ஊகத்தின்படி இலங்கையில் பாலர் பாடசாலைக்கு என்று பெரிதாக பாடத்திட்டம் (Syllabus) எதுவும் இருக்காது. ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடல்களையும், கதைகளையும், ஒன்று, இரண்டு, மூன்று எனத் தொடக்கி நூறு வரையும் அ, ஆ தொடக்கி வரையும் சொல்லிக் கொடுப்பர்.நான் சொல்வது இலங்கையில் 1970 களில் நிலவிய சூழல் ஆகும். அதன் பின்னர் 1980 களின் தொடக்கத்தில் ஒவ்வொரு அரசாங்கப் பாடசாலையிலும் பாலர் வகுப்பு என்பது கட்டாயமாக்கப் பட்ட பின்னர், பாலர் வகுப்பிற்கென்று ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டபின்னர் பாலர் வகுப்புப் பிள்ளைகளுக்கென்று பாடப் புத்தகமும், பாடத் திட்டமும் அரசினால்  தயாரிக்கப் பட்டு விட்டது.
"ஓடி விளையாடு பாப்பாவை" எங்களுக்குக் கற்றுக் கொடுத்த அதே கமலினி டீச்சர் மேற்படி 'சினிமாப் பாடலையும்' எங்கள் மனங்களில் பதிய வைத்த விந்தையை இப்போது நினைக்கும்போதும் ஆச்சரியமாக உள்ளது. என்னோடு பாலர் வகுப்பில் படித்த மாணாக்கர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் முக்கால்வாசிப் பேருக்கும் மேற்பட்டோர் இப்பாடலை நினைவில் வைத்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. "இளமையில் கல்வி சிலையில் எழுத்து" அல்லவா?
இப்பாடலை எங்கள் கமலினி டீச்சர் கற்றுக் கொடுத்த விதமே சற்று வித்தியாசமானது என்று கூறினேன் அல்லவா? அதை அறிந்து கொள்ள இரண்டு வாரங்கள் பொறுத்திருங்கள்.

பாடலின் காணொளியை இங்கே பார்வையிடுங்கள்:

காணொளி உதவிக்கு நன்றி:MMK Chakravarthi மற்றும் Real Music
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

6 கருத்துகள்:

amalathas சொன்னது…

அந்த தனியார் வீட்டின் ஒரு விறாந்தை பாடசாலைக்கென்றே தானமாகக் கொடுக்கப் பட்டது. மிகுதி கருத்துரைக்கு மீண்டும் வருகிறேன்.

vinothiny pathmanathan dk சொன்னது…

இன்றைய இணைப்பும் சுவாரஸ்யமாக இருந்தது. தாசன் உங்களுக்கு கிடைத்த கமலினி டீச்சர் உண்மையிலே அவவும் லக்கி தான் .இப்பவும் அவரின் புகழ் சொல்லும் ஒரு மாணவர் (அதுதான் நீங்கள்) ஆசிரியருக்கு கிடைத்திருப்பது பற்றி தான் சொல்கிறேன் .

amalathas சொன்னது…

அந்த வீடு சமுக ஆர்வலரும், சைவப் பெருந்தகையும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் அல்லைப் பிட்டிக்கான முக்கிய உறுப்பினருமான உயர்திரு. அமரர் நடராசா அவர்களினுடையது.(எனது ஞாபக சக்தி சரியாய் இருந்தால்,) அந்தப் பாலர் பள்ளி, 1976 இல் ஆரம்பிக்கப் பட்டது. அதன் முதல் ஆசிரியை செல்வி மரிய மலர் வரப்பிரகாசம் அவர்கள்; எனது தொட்டம்மாவும்(ஞானத்தாய்), அயலவரும், உறவினராகவும் இருந்ததால், கிழக்குத்தெரு மிசன் ஹவுஸ் ஆங்கில பாலர் பள்ளியில் படித்த என்னை, அப்பா மேற்குறிப்பிட்ட பள்ளிக்கு மாற்றினார்.முதல் நாள் தொட்டம்மாவுடன் பள்ளிக்குச்சென்று திரும்பினேன். மறுநாள் தவிர்க்க முடியாத காரணத்தால் தொட்டம்மா ஆசிரிய சேவையை நிறுத்தி விட்டதால், நான் மீண்டும் மிசன் ஹவுசுக்கே செல்லத் தொடங்கிவிட்டேன்.(உங்கள் பாலர் பள்ளியில் நான் ஒருநாள் மாணவன்). அதன்பின் செல்வி கிருபாலினி தவவிநாயகம், அவரைத் தொடர்ந்தே நீங்கள் சொல்லும் கமலினி ரீச்சர்.
எனினும் எனது தம்பி, தங்கைஉங்கள் பள்ளியிலேயே உங்களின் ரீச்சரிடம்தான் படித்தார்கள்.அவர்கள் பாடி இந்தப் பாடலை கேட்டிருக்கிறேன். ஆனால் முதன் முதலில் baaba black sheep உம் are you sleeping உம் பாடுகின்ற எங்கள் ஆங்கில வழி பாலர் பள்ளியில், என் சகதோழியும் உங்கள் மைத்துனியுமான பரிமளகாந்தி என்கிற ராதா ப்ரில் வைத்த மஞ்சள் நிற சட்டையுடன் பாடியதுதான் இந்தப் பாடலைக் கேட்டதும் ஞாபகம் வருகிறது.
மிகுதி கருத்துரையை நாளை தொடர்கிறேன்.

இ. சொ. லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

சகோதரி வினோதினி அவர்களுடைய கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், நன்றிகள். நண்பர் அமலதாஸ் அவர்களுடைய 'பென்னாம்பெரிய' கருத்துரைகளுக்கும் உளமார்ந்த நன்றிகள். ஓரிரு வரிகளில் கருத்துரை எழுதுவதற்கே நேரமில்லாமல் ஓடித்திரியும் வெளிநாட்டு வாழ்க்கையில் உங்கள் பொன்னான நேரத்தைச் செலவு செய்தமைமையை மதித்துப் போற்றுகிறேன். எனது தொடரில் ஒருவரைப் பாராட்டும்போது மட்டும் உண்மையான பெயரைக் குறிப்பிட்டு எழுதி, தூற்ற வேண்டிய நபருக்கு மட்டும் வேறு பெயர் கொடுக்க நான் விரும்பவில்லை. முடிந்தவரை உண்மையான பெயர்களை உபயோகிப்பதைத் தவிர்ப்பதே எனது நோக்கமாக இருந்தது.மேற்படி தாத்தாவின் பெயரை நான் எழுதாமல் விட்டதற்கும் அதுவே காரணம்.
தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் கருத்துரைகள் எனக்குச் சக்தியை அளிக்கின்றன.

amalathas சொன்னது…

டெய்சி பாப்பா டெய்சி பாப்பா
சத்தம் போடாதே
அம்மா வாற நேரம் பார்த்து
சத்தம் போடாதே.
இந்தப் பாடல் வரிகளையும் எனது தம்பி தங்கை மூலம் நான் கேட்டிருக்கிறேன். உண்மையிலேயே இப்படி ஒரு மழலையர் பாடலை இதற்கு முன்னரும், பின்னரும் நான் கேட்டதில்லை. இது நிச்சயமாய் உங்கள் கமலினி ரீச்சர் இயற்றியதாகவே நான் நம்புகிறேன்.(வேறு யாருக்காவது இப்பாடல் தெரியுமா?)
எனினும் அழுகின்ற என் குழந்தையை சமாளிக்க இன்றுவரை இந்தப் பாடல்தான் எனக்கு உதவுகிறது.(என் குழந்தைக்கு இப்ப 8 வயது)
நன்றி கமலினிரீச்சர்! நன்றி தாசன்!!.
கருத்துரை முடிந்தது.

Malar சொன்னது…

Very good following like this story , thanks you

கருத்துரையிடுக