சனி, அக்டோபர் 01, 2011

தாரமும் குருவும் . பகுதி - 4.6


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)

பகுதி 4.6

அல்லைப்பிட்டி 1977
ஒவ்வொரு ஊரும் ஒரு அடையாளத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒரு கிராமத்திற்கும் இன்னொரு கிராமத்திற்கும் இடையில் 'குமுதம்' இதழில் வருவது போல ஆகக் குறைந்தது 'ஆறு' வித்தியாசங்களாவது இருக்கும், நாம்தான் அவற்றையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. இவ்வாறு கிராமங்களுக்கு இடையிலேயே இவ்வளவு வேறுபாடு எனும்போது நகரங்களுக்கிடையில் 'அறுபது' வித்தியாசங்களாவது இருக்காதா என்ன? ஆனால் மக்கள் ஒரு கிராமத்தையோ, நகரத்தையோ ஏதாவது ஒரு பிரபலமான விடயத்துடன் தொடர்பு படுத்தி விட்டார்கள் என்றால் போதும் அது பின்னர் 'காலாதி காலத்திற்கும்' நிலைத்து விடும்.
நமது யாழ் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 'நல்லூர்' என்றதும் நல்லூர்க் கந்தன் ஆலயம் நினைவிற்கு வருகிறதா இல்லையா? ஆனைக்கோட்டை என்றால் 'நல்லெண்ணெய்' ஞாபகத்திற்கு வருகிறது. புத்தூர் என்றால் நிலாவரைக் கிணறு ஞாபகத்திற்கு வருகிறது.(என் நண்பன் ஒருவனுக்கு புத்தூர் என்றால் 'வாழைக் குலை' நினைவிற்கு வருகிறதாம்!!!) பருத்தித் துறை என்றால் எது ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ 'பருத்தித் துறை வடை' ஞாபகத்திற்கு வந்து விடுகிறது.(இந்த வடையை இலங்கையின் சகல மாவட்டங்களிலும் உள்ளவர்களாலும் தயாரிக்க முடியும் என்பதுடன் தமிழ்நாட்டிலும் இவ்வடை 'தட்டை' எனும் பெயரில் கிடைக்கிறது என்பதும் வேறு விடயங்கள்).
இதே போலவே தமிழ்நாட்டில் மதுரை என்றால் 'மல்லிகைப் பூவும், திருநெல்வேலி என்றால் அல்வாவும், மணப்பாறை என்றால் முறுக்கும்("மணப்பாறை மாடு பூட்டி, மாயவரம் ஏரு பூட்டி" என்பதெல்லாம் கருப்பு வெள்ளைக் காலம்), காஞ்சிபுரம் என்றால் 'பட்டுச் சேலையும்' திண்டுக்கல் என்றால் 'பூட்டும்', திருப்பாச்சி(திருப்பாச் சேத்தி) என்றால் அரிவாளும்(இலங்கையில் இதைக் 'கொடுவாக் கத்தி' என்கிறோம்.) நினைவிற்கு வருவதாக தமிழக மக்கள் கூறுகின்றனர்.
சரி எனது கிராமமாகிய 'அல்லைப்பிட்டி' எனும் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு ஏதாவது நினைவிற்கு வருகிறதா? வராவிட்டால் ஒரு இரண்டு வாரங்கள் மட்டும் பொறுத்திருங்கள். உங்களோடு நிறைய பேசவேண்டியது இருக்கிறது. இன்று உங்களோடு அதிக நேரம் பேச முடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன். எதற்கும் இன்றைய தொடரை நான் ஆரம்பித்த வரியை மீண்டும் ஒரு தடவை பாருங்கள்.
(இன்னும் சொல்வேன்)

3 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

ஒவ்வொரு ஊருக்குமான ஸ்பெஷல் நன்றாக இருக்கிறது. உங்கள் ஊர் ஸ்பெஷல் என்ன? அறிய ஆவல் ? சிலவேளை நிறைய பிட்டிகள் இருக்குமோ?எனக்கு ஒரு சந்தேகம். அல்லை என்பது என்ன?

பெயரில்லா சொன்னது…

ஆறு வித்தியாசம் வருவது குமுதத்தில் ஆனந்த விகடனில் அல்ல.!

இ.சொ.லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

தவறைச் சுட்டிக்காட்டிய வாசகர் 'பெயரில்லா' அவர்களுக்கு நன்றிகள். 'ஆறு வித்தியாசங்கள்' என்ற பொழுதுபோக்குச் சித்திரம் இடம்பெறுவது 'குமுதம்' இதழில் ஆகும். இடம்பெற்ற தவறுக்கு வருந்துகிறேன்.

கருத்துரையிடுக