ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
அந்த மீனவனே பரிவான குரலில் கூறினான் "நாங்கள் இப்போது ஜெனோவாவிற்குச் செல்கிறோம், உன்னை உன் பெற்றோரிடம் ஒப்படைக்கப் போகிறோம்" இந்த வார்த்தைகளைக் கேட்ட கொலம்பஸின் முகம் மலர்ந்தது. "உண்மையாகவா" என்று சிறிது ஐயத்தோடு கேட்டான். "உண்மையாகவேதான், இதோபார் எங்கள் படகு உனது தேசத்தை நோக்கித்தான் செல்கிறது, அங்கு தொலைவில் தெரிவது ஜெனோவாக் கடற்கரை, உனக்குத் தெரிகிறதா? என்று கேட்டான்.
அங்கு அந்த மீனவன் காட்டிய திசையில், கடலின் மறு பக்கத்தில் கறுப்பாகவும், சிறிதும் பெரிதுமாகவும் கட்டிடங்களும், சிறு குடிசைகளும் தெரிந்தன. ஆனால் அது தனது ஊர்தான் என்பதை அவன் உணர்ந்து கொள்ளக் கூடிய அளவில் அது அருகாமையில் இல்லாததால் அவனால் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை. இருப்பினும் இந்த உரையாடலின் பின்னர் அவன் மனம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது, இன்று காலைவரை இருள் படர்ந்திருந்த அவனது மனத் திரையில் இப்போது ஒளிக்கற்றைகள் தோன்ற ஆரம்பித்தன. அவனது மகிழ்ச்சி அவனது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. "என்ன சந்தோசம்தானே? மீனவன் கடலலைகளின் இரைச்சலுக்கு மத்தியில் சத்தமாகக் கேட்டான்.
கடல் இரைச்சலுக்கு மத்தியில் பேசும்போது, சத்தமாக பேசுவது நடைமுறை என்பதைக் கொலம்பஸ் அறிந்தானில்லை, ஆதலால் அம்மீனவனின் இடி போன்ற குரல் அவனுக்கு அச்சத்தைத் தோற்றுவித்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு மெல்லிய குரலில் "ஆம்" என்று பதிலளித்தான். ஆனால் அவனது பதில் மீனவனின் காதில் எட்டாமலேயே காற்றில் கரைந்து போனது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.