ஆக்கம்: தர்மினி, பிரான்ஸ்
வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும்.
அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சடங்கைச் செய்ய வேண்டும் என்றார்.அந்தச் சிறுமிக்கு பதினொரு வயது.அது நடந்து ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்ட போதும் அவரது கவலையெல்லாம் மகளுடைய சாமத்தியச்சடங்கை ஒரு கொண்டாட்டமாகத் தாங்கள் செய்யாமல் விட்டால் , மற்றவர்கள் தங்களை மதிக்க மாட்டார்கள் என்பதாக இருந்தது.அடுத்த வருடத்திலாவது அக் கொண்டாட்டத்தை நடத்தியே தீருவது என்பதே அவர் பேச்சாயிருந்தது.
எதற்கு அந்த அநாவசிய வேலை?அது உடலில் இயற்கையாக நடக்கும் ஒரு செயற்பாடு.அப்படியான சடங்கொன்றைச் செய்ய ஏன் கஷ்ரப்பட வேண்டும்? எங்கள் பழக்கவழக்கம் , கலாச்சாரம் எனும் சாட்டுப்போக்குகள் நமக்கு இப்போது என்ன அவசியத்துக்கு? என்று நான் அவருடன் கதைத்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘அது எப்பிடிச் செய்யாமல் இருக்கிறது?” என்பது தான் அவரது அழுத்தமான கேள்வி.
அது பற்றி மகளுக்குத் தெளிவு ஏற்படுத்துவதும் பயப்பிட எதுவுமில்லை என்று உரையாடவதும் தானே தாய் செய்ய வேண்டியது.அசெளகரியமாக உணர்ந்து கொள்ளும் மகளை ஆதரவாக அரவணைப்பதும் அது பற்றிப் பேசுவதுமல்லவா செய்ய வேண்டியது.ஆனால் பெற்றோர் உடனடியாக பெரும் எடுப்பில் ஒரு கொண்டாட்டம் செய்வது தான் பிரதான வேலை என்று ஓடித்திரிவார்கள்.
பலரும் இந்த நீராட்டுவிழா பற்றிப் பேசிவிட்டார்கள்.ஆனாலும் வெகுசனம் மத்தியில் அது மாற்றப்படாத எண்ணம் தான். புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரும் சனி ,ஞாயிறு என்றால் கிலி கொள்கிறார்கள்.அவை ஓய்வெடுக்க வேண்டி விடுமுறை நாட்களாயிருந்தாலும் எம் மக்கள் ஏதாவதொரு சாட்டுச் சொல்லிக் கொண்டாட்டங்களைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். நல்ல குளிர் காலத்தில் தான் இந்தப் பிரச்சனைகள் சற்று ஓய்ந்திருக்கும்.ஒரே நாளில் இரண்டு மூன்று விழாக்களுக்குச் சுற்றிச் சுழன்றோடுபவர்களெல்லாம் இருக்கிறார்கள்.
நேரம் விரயமாவது ஒருபுறமெனில் அதற்கான ஆடை ,அணிகலன்கள் வாங்குவது , அன்பளிப்புச் செய்யப் பணம் ஒதுக்குவது என்று சிரமங்களை அடைகிறார்கள். கோபிப்பார்கள், குறைநினைப்பார்கள் என்று எல்லாக் கொண்டாட்டத்திலும் தலைகாட்டுவதே கடமை எனப் பலர் துன்புறுகின்றனர். ஆயினும் நெருக்கமானவர்களின் வைபவங்களில் உளமாரப் பங்கெடுப்பதென்பது வேறு.ஆனால் புறுபுறுத்துக் கொண்டே சென்று வருபவர்கள் தான் பலரும்.ஆனாலும் அதே துயரத்தை விரைவில் மற்றவர்களுக்கும் அவர்கள் வழங்கத் தயாராகிவிடுவர்.ஒரு மகிழ்ச்சி தரும் கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதை இனிய அனுபவமாக உணராமல் அதுவொரு துன்பமாக மற்றவர்களால் நினைக்கப்படுகிறது. அதற்குக் காரணங்கள் அவை வெறும் பணச்சடங்குகளாகப் இருக்கின்றன. அவரவர் பவிசும் பவரும் காட்ட இக்கொண்டாட்டங்களை நடாத்துகின்றனர்.
வருடாவருடம் வந்து கொண்டிருக்கும் பிறந்த நாளை மண்டபம் வாடகைக்கு எடுத்துச் செய்கின்றனர்.அதுவும் நாற்பது ,ஐம்பது ,அறுபது, வயதான கொண்டாட்டங்கள் நடாத்தப்படுவதும் நடக்கின்றது.கத்தோலிக்கரென்றால் ஞானஸ்நானம், முதல்நன்மை என்று இன்னும் நீள்கிறது.திருமணங்கள் போட்டி போட்டுப் பெரும் எடுப்புகளுடன் கடன்பட்டு நடத்தப்படுகின்றன.
தங்கள் பெண்பிள்ளைகள் பருவமடைந்தால் அது ஒன்றிரண்டு வருடங்களாகத் திட்டம் போடப்பட்டு நடத்தும் விழாவாகிவிடுகிறது.தற்போதைய உணவுகளால் பெண்கள் சிறுவயதிலேயே தம் முதல்மாதவிடாயை அடைந்துவிடுகின்றனர்.பத்துப் பதினொரு வயதுச் சிறுமிகள் இச்சடங்கிற்கான காரணம் என்ன என்ற கேள்வியையே யோசிக்க முடியாமல் இருக்கின்றனர்.அவர்கள் சிறுவயதிலிருந்து சென்று வரும் விழாக்கள் அது வழமை தானே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.தமது உறவுச் சிறுமிகள், தமிழ் நண்பிகள் அலங்கரிக்கப்பட்டு அந்நிகழ்வின் கதாநாயகியாக நிற்பது கவர்ந்திருக்கலாம்.விதம் விதமாகப் போட்டோவும் வீடியோவும் எடுப்பது பிடித்திருக்கலாம்.பெற்றோர் செய்வது சரியென்று நம்பலாம்.ஆனால் அக்குழந்தைகளின் பெற்றோர் எல்லாம் அறிந்தும் அக்கொண்டாட்டத்தைச் செய்கின்றனர்.பல ஆண்டுகளாக உறவினர்களதும் நண்பர்களதும் விழாக்களுக்குச் சென்று அன்பளிப்பாகக் கொடுத்ததை வசூலிக்க இது ஒரு வாய்ப்பென்று கணக்குப் போடுகின்றனர்..பல மாதங்களாக மண்டபம் தேடி அலைகின்றனர். அழைப்பிதழ்களை அச்சடிக்கின்றனர். தமது பெண் குழந்தையை சில நூறு பேர் முன்னிலையில அலங்கரித்து க் காட்சிக்கு நிறுத்துகின்றனர்.இவை போதாதென்று பார்ப்பனனை அழைத்து விளங்காத மந்திரங்களைச் சொல்ல வைத்து காசும் கொடுத்துவிடுகின்றனர்.அச்சிறுமியை மண்டபத்தின் நடுவில் நிறுத்தி தமக்கான வரவுகளை வசூலித்துக் கொள்கின்றனர்.இதைத் தவிர வேறென்ன உண்டு?
பலரும் சொல்லும் காரணம் இது தான், ‘உறவுகள், ஊரவர்கள் ஒன்று சேர்வது’.நண்பர்களை உறவுகளைச் சந்திக்க ஒன்றாக உணவருந்திக் களிக்க ஒரு நாளைத் தீர்மானித்து ஒன்று சேரலாமே.அவ்வாறான உறவுகளும் நட்புகளும் மகிழ்ச்சியாக ஒன்று சேரத் தயாராவதில்லை.அவரவர்கள் தாம் கொடுத்த பணத்தை வாங்குவதற்குக் கணக்குப் போட்டபடியே தான் காசை மடித்து என்பலப்பில் வைக்கிறார்கள்.சனங்கள் தமக்குள் அப்படித் தான் கதைத்துக் கொள்கிறார்கள். இத்தனை வருடங்களாகக் கஸ்ரப்பட்டு உழைத்துக் கொண்டு போய்க் கொடுத்த காசை திரும்ப வாங்க வேண்டுமென்கிறார்கள்.
இன்னும் அதிக வேதனையைத் தருவது தமது பெண்குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் காசை வசூலிப்பது தான். புலம்பெயர்ந்து வந்த பின்னர் கூட தேவையற்ற இச்சடங்கை ஏன் செய்ய வேண்டுமென்று பிள்ளைகளே சிந்திக்க முடியாதளவு இதெல்லாம் நம் கலாச்சாரம் என்று சொல்லிச் சொல்லி அவர்களைச் சுயமாகச் சிந்திக்க முடியாதவாறு தான் வளர்த்து வருகின்றனர்.
இங்கு கொண்டாட்டங்கள் என்பது வெறும் கொடுக்கல் வாங்கல்களை வைத்துச் செய்யப்படும் வியாபாரங்களாகி விட்டன.தமது பகட்டைக்காட்டும் அளவு கோல்களாக்குகின்றனர்.