சனி, ஜனவரி 09, 2016

கவியரசு கண்ணதாசன் பார்வையில் 'காதல்'

தாய்மையின் குழைவும் தந்தையின் பரிவும் பூமியின் பொறுமையும் பொறுப்புள்ள புன்னகையும் துணை வாடத் தான் வாடும் ஓருயிர் உணர்வும் எங்கே தோன்றுகின்றனவோ அங்கே வாழ்வதுதான் காதல்!

காமம் முன்னால் தள்ள, நாணம் பின்னால் இழுக்கும் நாடகமே காதலில் சுவை.

இளமைக் காதலுக்கு இதயமில்லை. நடுப்பருவக் காதலுக்கு இதயமே தலைவன்.

காதல் உன்னதமானதென்று முதன் முதலில் சொன்னவனே, அதில் தோல்வி கண்டவனாகத்தான் இருந்திருப்பான்!


அர்த்தமில்லாமல் வாழ்கிறோம் என்பதை உணரும்போது, சிலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்... நிறையபேர் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

தன்னைப் பார்ப்பதற்காக மனிதன் கண்ணாடியைப் படைக்காமலிருந்தால், உலகத்தில் காதலில் பாதி குறைந்திருக்கும்.
கண்ணையே படைக்காமல் இருந்திருந்தால், காதல் எவ்வளவு புனிதமாக இருந்திருக்கும்!

கண்ணும் கண்ணும் பார்க்கின்றன. மனமும் மனமும் நினைக்கின்றன. உடலும் உடலும் துடிக்கின்றன. இது காதல்!

இளமையிலே காதல்தான் ஒவ்வோர் உயிருக்கும் முதற்கொள்கை.

சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க்களங்களை இதுதான் ஏற்படுத்திற்று.

நீதிமன்றத்தில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளைக் கவனிக்கிறது. தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு
இது தலைமை வகிக்கிறது.

படுகொலைகளிலே பாதியை இதுதான் விவசாயம் செய்கிறது. அரசியல் தலைவர்கள் பெறமுடியாத இடத்தைப்
பத்திரிகைககளின் மூலம் இது பெறுகிறது.

இது காதல்!
காதல் இரண்டு வகைப்படும். ஒன்று, தோல்வியுறுவது! மற்றொன்று, முப்பது வயதுக்கு மேல் வருவது!

இயற்கையை முறியடிக்க, எல்லா வழிகளையும் கண்ட விஞ்ஞானிகள், காதலையும் முறியடிக்க முயன்றார்கள்.
அவர்கள் வெற்றி பெற்றிருக்கக் கூடும், அவர்களுக்கு காதல் இல்லாமலிருந்தால்!

கைகோர்த்துக்கொண்டு, கடற்கரைக்குப் போகும் காதல் நாகரிகம், வெகு விரைவில் காதலைக் கசப்பாக்கிவிடுகிறது.


நாம் மீண்டும் பழங்காலத்துக்குத் திரும்பியாகவேண்டும். தாழிட்ட கதவும் தடைப்பட்ட காதலுமாகத் தலைவனும் தலைவியும் போராடும் இலக்கியச் சுவைக்குத் திரும்பியாக வேண்டும்.

'காதல் கவி' கண்ணதாசன் பற்றிய சில குறிப்புகள்:

பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி(சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு)

பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 சண்டமாருதம் ஆசிரியர்
1949 திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி,
பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை
1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962-63இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.

நன்றி: ஃபாத்திமா, இலங்கை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக