ஆக்கம்:மனோகரன் பி.கே, சென்னை.
1) கவலை கவலைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். ‘மதிப்பெண் குறைந்து விட்டது’, ‘கேட்ட சப்ஜெக்ட் கிடைக்கவில்லை’, ‘பிடித்த கல்லூரியில் படிக்க வாய்ப்பில்லை’ என்பது போன்ற கவலைகள் படிக்கும் மாணவனுக்கு. ‘வேலை இல்லை’, ‘போதிய சம்பளம் கிடைக்கவில்லை’ போன்ற கவலைகள் படித்த இளைஞனுக்கு. இப்படி அவரவர்க்கு ஆயிரம் கவலைகள்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமானவர் தாமஸ் ஆல்வா எடிசன். எடிசன் பலமுறை தோல்வி கண்டவர். ஒரு முறை எடிசனின் ஆய்வுக்கூடம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அந்த நேரத்திலும் கூட தன் மனைவியை அழைத்து ‘அம்மாவைக் கூப்பிடு, இது மாதிரி ஒரு தீ விபத்தை அம்மா இனிமேல் எங்கேயும் பார்க்க முடியாது’ என்றாராம். சோதனைகள் பல வந்த போதும் அவர் மனம் கலங்கியதில்லை. கவலை கொண்டதில்லை.
நாடு முழுவதும் பேசப்படுபவர். உலக நாடுகளே அண்ணாந்து பார்க்கக் கூடிய அளவுக்கு உயர்ந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள். அவருடைய மாணவப் பருவத்தில் தனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகத்தை விற்கும் அளவுக்கு வறுமையில் இருந்த போதும் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டார்.
‘மாமனிதன் யாரெனில் எவன் ஒருவன் தவிர்க்க முடியாததை துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டு அதைப் பொறுமையுடன் தீர்த்துக் கொள்கிறானோ அவன்தான்’ என்கிறார் தத்துவப் பேரறிஞர் நீட்சே.
வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்கள் இருக்கும். சில சமயங்களில் துன்பத்தின் காரணமாக கவலை கொள்ள நேரிடும். தவறில்லை, ஆனால் அதை விடாப்பிடியாகக் கொண்டு வாழக் கூடாது. கவலையே வாழ்க்கையாகி விடக்கூடாது.
அது ஒரு கிராமம். கிராமத்துக்கு துறவி ஒருவர் வந்தார். ஊர் மக்கள் ‘எங்கள் கவலைகள் ஒழிய வேண்டும். நாங்கள் விரும்புவது எல்லாம் நடக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்’ என்று துறவியிடம் வேண்டினார்கள்.
எல்லாவற்றையும் மௌனமாக கேட்டுக் கொண்ட துறவி அடுத்த நாள் அந்த கிராமத்தில் ஓர் அசரீரியை ஒலிக்கச் செய்தார். ‘நாளை பகல் 12 மணிக்கு இந்தக் கிராமத்தில் ஓர் அதிசயம் நடக்க இருக்கிறது. அந்த நேரம் உங்கள் எல்லா கவலைகளையும் ஒரு கற்பனையான சாக்குப்பையில் கொண்டுபோய் ஆற்றில் போட்டு விடுங்கள். பிறகு அதே கற்பனைக் கோணிப்பையில் நீங்கள் விரும்பும் வீடு, நகை, நட்டு அனைத்தையும் அதில் போட்டு வீட்டுக்கு கொண்டு வருவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனை பலிக்கும்.
அதன்படி அடுத்த நாள் மக்கள் தங்களின் பிரச்சனைகளை மூட்டை கட்டி ஆற்றில் போட்டு விட்டு கார், பங்களா, நெக்லஸ் என்று தாங்கள் சந்தோஷம் என்று கருதிய அனைத்து பொருட்களையும் கற்பனை மூட்டையில் கட்டியெடுத்துக் கொண்டு ஊர் திரும்பினார்கள்.
திரும்பியவர்கள் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனார்கள். ஆம், அசரீரி சொன்னது அப்படியே பலித்து விட்டது. கார் வேண்டும் என்று நினைத்தவரின் வீட்டு முன் நிஜமாகவே கார் நின்றிருந்தது. மாடி வீடு வேண்டும் என்று கேட்டவரின் வீடு மாடி வீடாக மாறியிருந்தது. எல்லோருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை,
ஆனால் அந்த சந்தோஷம் கொஞ்ச நேரம்தான். பிறகு, ‘ஐயையோ, நாம் ஒற்றைவட தங்க செயின் கேட்டோம். அதுதான் கிடைத்தது. ஆனால் அடுத்த வீட்டுப் பெண் ரெட்டை வடச்செயின் கேட்டு வாங்கி விட்டாளே! நாம் வீடுதான் கேட்டோம். ஆனால் எதிர்வீட்டுக்காரர் பங்களா கேட்டு வாங்கி விட்டாரே! நாமும் அது போல கேட்டிருக்கலாமே! சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டோமே’ என்று மீண்டும் கவலைப்படத் தொடங்கி விட்டார்கள்.
கடல் முழுவதும் நீர், என்றாலும் கப்பல் மட்டும் கம்பீரமாகச் செல்கிறது, மனம் எனும் கப்பலுக்குள் கவலை என்னும் நீர் புகாத வரை அமைதிக்குப் பஞ்சமில்லை, ஆனந்தத்துக்கு அளவில்லை.
(2) கோபம்
“அழுக்காறு அவா, வெகுளி இன்னாச்சொல்’ அதாவது பொறாமை, பேராசை, கோபம், கடுஞ் சொற்கள் ஆகிய நான்கினையும் ஒதுக்கி வாழ்வதே அறம் என்கிறார் வள்ளுவர்.
இதில் கோபம் மிகவும் கொடியது. கோபத்தின் போது அமிர்தத்தை சாப்பிட்டாலும் இனிப்பாக இருக்காது. மகிழ்ச்சியாக இருக்கும்போது மிளகாயைக் கடித்தாலும் காரமாகத் தெரியாது.
கோபம் தோன்றும் போது மிருக குணம் வெளிப்படும். அப்போது கண்கள் சிவக்கும். நாடித்துடிப்பு அதிகரிக்கும். இதயம் படபடக்கும். மூச்சு வாங்கும். கோபம் வந்தால் முக மலர்ச்சியும் அக மகிழ்ச்சியும் அகன்று விடும்.
கோபம் நிறைந்த மூளையில் பகுத்தறிவு வேலை செய்யாது. கோபம் பகுத்தறிவின் விரோதி.
தீயினும் கொடியது சினம். ‘கொள்ளி’ என்பது நெருப்பிற்கு ஒரு பெயர். விறகைப் பற்றிய நெருப்பானது விறகைக் கொண்டே தன்னைக்காட்டி நிற்கும். விறகு முழுவதும் எரிந்து அழியும் போது தானும் இல்லாது போகும். அதுபோல மனிதனைப் பற்றிய கோபம் அவன் இயல்பாகிய அன்பையும் அறிவையும் அழித்து விட்டு தானும் இல்லாது போகும்.
இரும்பிலிருந்தே உருவாகி இரும்பையே அழிக்கும் துரு போன்றது கோபம். அது நம்முள் உண்டாகி நம்மையே அழிக்கும் நோய்க்கிருமி.
கோபம் என்னும் கொடிய நாகத்தை ‘பொறுமை’ என்னும் மகுடியால் கட்டுப்படுத்த வேண்டும். கோபத் தீயை ‘அன்பு’ என்னும் குளிர் நீரால் அணைத்துவிட வேண்டும்.
கண்டிப்பு வேறு. கோபம் வேறு. கோபம் வெறுப்பை உண்டாக்கும். கண்டிப்பு ஒழுங்கை உண்டாக்கும். கண்டிப்பு கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் கோபம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது.
கோபத்தின் தாக்கத்திற்கு முதலில் ஆளாவது மனம். கோபத்தின் பிடியில் மனம் சிக்கிக் கொண்டால் உடல் முழுவதும் அதற்கு அடிபணிய வேண்டியதுதான். அதன் பிடியில் சிக்காமல் மனம் பண்பட்டு விட்டால் கோபம் அடிபணிந்து விடும்.
ஒரு முறை புத்தர் தனது சீடருடன் சென்று ஒரு வீட்டில் பிச்சை கேட்டார். புத்தரைப் பார்த்து அந்த வீட்டிலிருந்த பெண்மணி திட்டி விரட்டினாள். தன் குருவைத் திட்டியதால் சீடர் கோபம் கொண்டார்.
அந்தப் பெண்ணுக்கு சரியான பாடம் புகட்ட சீடர் புத்தரிடம் அனுமதி கேட்டார். அவர் ஒன்றும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தார். நல்ல வெயில், தன் கையிலிருந்த கமண்டலத்தை சீடரிடம் கொடுத்து விட்டு ஓய்வெடுத்தார்.
மீண்டும் மாலையில் பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது சீடரின் கையிலிருந்த கமண்டலத்தைப் பார்த்த புத்தர் ‘இது யாருடையது?’ என்று கேட்டார். அதற்கு சீடர் ‘சுவாமி! இது உங்களுடையது’ என்றார்.
உடனே புத்தர், அந்தக் கமண்டலத்தை ஒருமுறை வாங்கிப் பார்த்து விட்டு ‘இல்லை, இதை உனக்கு பரிசாகக் கொடுத்து விட்டேன். அது உன்னுடையதுதான்’ என்று திரும்பவும் சீடரிடம் கொடுத்து விட்டார்.
அன்று இரவு ‘இந்தக் கமண்டலம் யாருடையது?’ என்று மீண்டும் கேட்டார். அதற்கு சீடர் ‘சுவாமி, இது என்னுடையது!’ என்றார். புத்தர் சிரித்துக் கொண்டே இன்று மாலை ‘இது உங்களுடையது’ என்றாய். இப்போதோ, ‘இது என்னுடையது’ என்கிறாய்,
‘சுவாமி, கமண்டலத்தைத் தாங்கள் எனக்கு பரிசாகக் கொடுத்து விட்டதாகச் சொன்னீர்கள். நானும் அதை ஏற்றுக் கொண்டதால் ‘என்னுடையது’ என்றேன். ஆனால் முதல் முறை அதை நான் என்னுடையதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆகவே, ‘உங்களுடையது’ என்றேன்.
புன்னகையுடன் புத்தர் சொன்னார். ‘இதுபோல்தான் அந்தப் பெண்மணி திட்டிய வார்த்தைகளை நான் என்னுடையதாக எடுத்துக் கொள்ளவில்லை. அது அந்தப் பெண்மணிக்கே சொந்தம். அதனால்தான் நீ பாடம் புகட்ட அவசியம் இல்லை என்று விட்டு விட்டேன்’ என்றார்.
கோபம் நம்மை ‘கொல்லாமல்’ இருக்க நாம் கோபம் கொள்ளாமல் இருப்போம்!
(3) அனுபவம்
வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்வதில் பேருதவி புரிவது அனுபவ அறிவு. அனுபவ அறிவு என்பது தனிமதிப்புக் கொண்டது. வாழ்க்கை முழுவதற்குமே அனுபவ அறிவு உதவும். அனுபவம் என்பது தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு ஏற்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு ஏற்பட்டு அதன் மூலம் பெற்றதாகவும் இருக்கலாம்.
‘அனுபவம் என்பது நமக்கு என்ன நடக்கிறது என்பதல்ல – நமக்கு ஒன்று நடக்கும் போது நாம் என்ன செய்கிறோம் என்பது தான்’ என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு. ஒவ்வொன்றையும் நாமே அனுபவித்துத்தான் பாடங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதற்குக் காலம் போதாது.
பிற மனிதர்களின் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்ப்பது வேறு. அவர்கள் எப்படி வெவ்வேறு அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்பது வேறு. மற்றவர் அனுபவங்களைப் பரிசீலிக்கும்போது, அதில் அவர்கள் புத்திசாலித்தனமும் தெரியலாம். தவறான போக்கும் தெரியலாம். தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நமக்கு எந்தெந்த சூழலில் குழப்பம் இருக்கிறதோ, தெளிவு அல்லது தகவல் தேவைப்படுகிறதோ, அப்போது அதேபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்த பிற மனிதர்களிடம், அவர்கள் அனுபவம் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வது உபயோகமாய் இருக்கும்.
அனுபவத்திற்கும் வயதிற்கும் தொடர்பு உண்டு, வயது ஏற ஏற அனுபவத்தின் அளவும் ருசியும் அதிகரிக்கும். வாழ்க்கை என்பது வாழும் நாட்களைக் கொண்டு கணக்கிடுவது அல்ல. எத்தனை தழும்புகள், விழுப்புண்கள், வடுக்களை பெற்றிருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. வாழ்க்கையின் சுகமே சுமையில் தான் இருக்கிறது. Life is nothing but Memories – வாழ்க்கை என்பது வெறும் நினைவுகளைக் கொண்டது. ஓடி ஓடி உழைத்து ஓய்ந்து உட்கார்ந்த காலத்தில் அசைபோட்டுப் பார்க்க நமக்கு அனுபவங்கள் இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் அனுபவங்களைப் பெற ‘ரிஸ்க்’ எனப்படும் இடர்பாடுகளை மனமுவந்து ஏற்க வேண்டும். அரசன் நினைத்தால் எத்தனை புலி, சிங்கத்தை வேண்டுமானாலும் கொன்று வந்து அரண்மனையில் குவிக்க முடியும். ஆனால் அரசன் அதை விரும்புவதில்லை. வில்லெடுத்து தானே வேட்டைக்குச் செல்கிறான். எந்த நிமிடத்தில், எந்த கோணத்தில், எந்த மிருகம் தன்னை வந்து தாக்கும் என்று தெரியாத நிலை, என்றாலும் அத்தகைய அச்சம் நிறைந்த, பயம் கலந்த வாழ்விலும் ஒரு சுகம் இருப்பதால்தான் அரசன் வேட்டைக்குச் செல்கிறான். இந்த நியதி வேட்டைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தும்.
‘அனுபவம் ஒரு விலை உயர்ந்த நகை, கூடுதலான விலை கொடுத்தே வாங்க வேண்டும்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். ‘அனுபவம் ஒரு நம்பகமான விளக்கு அதைத் துணையாகக் கொண்டு வழிநடக்கலாம்’ என்கிறார் மற்றோர் அறிஞர்.
அனுபவங்களில் சம்பந்தப்பட்ட மனிதர்களை மறந்துவிட்டு, அவற்றின் பாடங்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும்.
பிறர் செய்த நல்லவற்றில் மட்டும் அல்ல, பிறர் செய்த தவறுகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு மைதானத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. காவல் நாய்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தன. மேய்ப்பவன் மரத்தடியில் உட்கார்ந்து புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.
தூரத்தில் வேலியின் உட்புற ஓரமாக ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை வேலிக்குளிருந்த ஓநாய் பார்த்தது. வேலிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு ஓநாய் எதையோ பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஆட்டுக்குட்டி, ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டது.
அதற்கு மாமிசத்தை உணவாகக் கொள்ளும் ஓநாய் ‘நண்பனே! பச்சைப் புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன். புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும், எனக்கு கொஞ்சம் புல் கிடைத்தாலும் போதும். அதைக் கொண்டு பசியாறுவேன்’ என்றது.
அதற்கு ஆட்டுக்குட்டி ‘உன் பசிக்கு புல் போதும் என்கிறாயே! என்னைப் போல் புல்லைத் தின்பவன்தான் நீ என்றால் நான் உன்னுடன் சேர்ந்து நண்பனாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லிக் கொண்டே அந்த ஆட்டுக்குட்டி வேலி இடுக்கில் நுழைந்து ஓநாய் பக்கம் போயிற்று. உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.
பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள்.
நன்றி:thannambikkai.org
2 கருத்துகள்:
நல்ல கருத்துக்கள் கொண்ட பதிவு வாழ்த்துக்கள்.
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
கருத்துரையிடுக