புதன், ஏப்ரல் 23, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 108 கயமை

மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன 
ஒப்பாரி யாம்கண்டது இல். (1071)

பொருள்: கயவர்கள் உருவத்தால் முழுக்க, முழுக்க நன் மக்களைப் போலவே இருப்பர். ஆனால் குணத்தால் அவர்கள் மனிதர்களாக இருக்க மாட்டார்கள். இந்த பிரித்தறிய முடியாத கடினமான ஒற்றுமை மனிதர் தவிர்ந்த வேறு எந்தப் பொருள்களிலும் நாம் கண்டதில்லை.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

வெற்றி பெற்ற மனிதர்களைப் பாருங்கள். அவர்கள் அதிகம் பேசுவதில் தமது நேரத்தை வீணடிப்பதில்லை. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் உண்மை யாது? அதிகம் பேசுவோர் செயல் புரிவதில்லை. செயல் புரிவோர் அதிகம் பேசுவதில்லை.

செவ்வாய், ஏப்ரல் 22, 2014

பழச்சாறு (ஜுஸ்) குடிப்பதற்கு முன்பு இதைப் படியுங்கள்.

நன்றி: healthyfoodteam.com
பழச்சாறு.. உடலுக்கு மிகவும் நல்ல உணவு வகையில் முதலிடத்தில் இருப்பது. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சரி, அதிக நாள் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் சரி முதலில் கொடுப்பது பழச்சாறு தான்.
மேலும், வீட்டில் இருக்கும் நோயாளிகளுக்கும் நாம் அடிக்கடி பழச்சாறு கலந்து கொடுத்து வருவோம். பழச்சாறு என்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் உடலுக்கு மிக அதிக நன்மை கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால், பழச்சாறு என்பது நாம் நினைப்பது போல மிகவும் நல்ல உணவாக இல்லாமல், அதில் சில குறைபாடுகளும் இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதாவது, பழச்சாறு தயாரிக்கும் போது, பழத்தை நன்கு மசித்து அதில் உள்ள நார் சத்துக்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறோம். இதனால், பழத்தின் முக்கிய நன்மையான நார்சத்து நமக்குக் கிடைக்காமலேயே போய் விடுகிறது.
அடுத்ததாக ருசிக்கு பழச்சாறில் சர்க்கரையை சேர்க்கிறோம். இது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும். அதுவும் நோயாளி ஒருவர் தொடர்ந்து பழச்சாறை அருந்தி வந்தால், அவரது உடலில் சர்க்கரையின் அளவு கண்டபடி ஏறி இறங்க வாய்ப்பு ஏற்படும்.

எனவே, மிகவும் முடியாத நிலையில் இருக்கும் போது பழச்சாறு கொடுப்பதில் தவறில்லை. ஒருவரால் நன்கு பழத்தை மென்று சாப்பிட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது அவருக்கு பழச்சாறு தேவையில்லை. பழத்தை சாப்பிடும் போது, ஒரு வகையில் வாய் சுத்தம் செய்யப்படுகிறது. ஜீரண உறுப்புகளுக்கு எளிதாக ஜீரணம் செய்யக் கூடிய உணவு பொருள் கிடைக்கிறது. தேவையற்ற சர்க்கரை சேர்வதில்லை.

நன்றி: தினமணி

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்

கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்லோ இரப்பவர் 
சொல்லாடப் போஒம் உயிர். (1070)

பொருள்: தம்மிடமுள்ள பொருளை மறைப்பவர் 'இல்லை' என்று கூறிய அந்தக் கணத்திலேயே பிச்சை கேட்டவரின் உயிர் போய்விடும். ஆனால் தமது பொருளை மறைத்து வைத்துப் பினனர் 'இல்லை' என்று சொல்லும்போது அந்த உயிர் எங்கே போய் ஒளிந்து கொள்ளுமோ? 

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

சிந்தனையும் செயலும் ஒன்ராகிவிட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதாகப் பெற்று விடலாம். இந்த 'உண்மை' வாழ்வின் இறுதிக் கட்டத்திலேயே நம்மில் பலருக்குத் தெரிகிறது

திங்கள், ஏப்ரல் 21, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்

இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள 
உள்ளதூஉம் இன்றிக் கெடும். (1069)

பொருள்: பிச்சை எடுத்து வாழுகின்ற கொடுமையான வாழ்க்கையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும். இனி உள்ளதையும்(பொருட்கள், பணம் முதலியவற்றை) மறைத்து வைத்துக்கொண்டு இல்லையென்று கூறியவரின் கொடுமையை நினைத்தால் கரைந்து நின்ற உள்ளமும் இல்லாது அழிந்து விடும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

எறும்பைப் பாருங்கள், அது நமக்கு எதையும் உபதேசித்துக் கொண்டிருப்பதில்லை. ஆனால் அது உணர்த்தும் சுறுசுறுப்பு உபதேசங்களை விட மேலானது.