வியாழன், மே 05, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.3

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
 சாப்பிட்டு முடித்ததும் அம்மா 'நேர்மையின் மறு அவதாரமாக' நண்பகலில் நடந்த சம்பவத்தை அப்பாவிடம் கொஞ்சம் 'மென்மையான' முறையில் எடுத்துக் கூறினார். எங்கள் அப்பாவிடம் எப்போதுமே ஒரு வழக்கம் இருந்தது. அதாவது 'பர்மிய, பாகிஸ்தானிய' இராணுவ ஆட்சியாளர்கள் போல, திடீர் புடீர் என முடிவுகளை எடுப்பது. அது அற்ப விடயமாக இருந்தாலென்ன, மிகப்பெரிய விடயமாக இருந்தாலென்ன அவர் அப்படித்தான் முடிவுகளை எடுப்பார். அன்று அவர் எங்களை அடிக்கவில்லை. ஆனால் அவர் எடுத்த முடிவு என்னை மிகப்பெரும் திகைப்பிற்கு உள்ளாக்கியது.
அவரது பதில் இதுவாக இருந்தது:- "நாளையில இருந்து 'சின்னவன்'( எங்கள் குடும்பத்தில் பிள்ளைகளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிக்கும்வரை என்னை அவ்வாறுதான் அழைத்தார்கள்) பள்ளிக்கூடம் போகத் தேவையில்லை, அவன நீ(என் தாயாரை) வீட்டில படிப்பி" என்று ஒரே போடாகப் போட்டார். எனக்கோ பயங்கரத் திகைப்பு. என் பாலர் வகுப்பு என்ற ஒரு 'வசந்தகாலக் கனவு' என் அண்ணனதும், அவனது நண்பர்களதும் 'மாங்காய்' ஆசையால் மூன்றே நாளில் தகர்ந்து தவிடுபொடியாகிவிட்டதே!

இவ்விடத்தில் பெற்றோர்களுக்கு ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன்.
#################################################
பள்ளிக்கூடத்திலிருந்து உங்கள் பிள்ளைகள் திரும்பி வரும்போது சில பிள்ளைகள் மாங்காய், புளியங்காய், நெல்லிக்காய், கொய்யாக்காய் போன்றவற்றைத் தேடிச் செல்வதுண்டு. நான் மேலே குறிப்பிட்டவற்றில் கொய்யாக்காய் தவிர்ந்த ஏனையவை மிகவும் 'புளிப்பாக' இருக்கும் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமாகும். இதில் ஒரு முக்கியமான விடயத்தை நாமெல்லோரும் மறந்து விடுகிறோம். மேற்குறிப்பிட்ட மாங்காய் புளியங்காய் வகையறாக்களில் இருக்கும் 'சிட்ரிக் அமிலம்'(Citric Acid) காரணமாகவே மேற்படி காய்கள் புளிப்பாக இருக்கின்றன. மேற்படி சிட்ரிக் அமிலம் மனிதனின் இரைப்பை, குடல் போன்றவற்றைக் 'கொடூரமாகத்' தாக்கும் வல்லமை கொண்டது. இதைக் குழந்தைகள் அறியமாட்டார்கள். அவர்களது மென்மையான 'இரைப்பை', 'குடல்' போன்றவற்றை அவர்கள் ஆசைப்பட்டுத் தேடி உண்ணும், மாங்காய், புளியங்காய், போன்றவை சிறு வயதிலேயே பதம்பார்த்துவிடுகின்றன. இதன் காரணமாக அவர்கள் சிறு வயதிலேயே 'குடற் புண்' போன்ற உபாதைகளுக்கு ஆளாகி விடுகின்றனர். குடற்புண்ணானது காலப்போக்கில் 'இரைப்பைப் புற்றுநோய், 'குடற் புற்றுநோய்' போன்றவை உருவாக வழிவகுத்து விடுகிறது. இவைகளை நம் சிறார்கள் அறிய மாட்டார்கள். இவர்களை மேற்படி விடயங்களில் கவனம் செல்லவொட்டாது தடுப்பது பெற்றோர்களின் கடமையாகும். "ஜப்பானியர்கள் தமது உணவுகளில் 'ஊறுகாய்களை' அதிகம் உபயோகிப்பதால் இரைப்பைப் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்" என மருத்துவ ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
#################################################

அப்பா என் அம்மாவிடம் நாளை முதல் என்னைப் படிப்பிக்கின்ற பொறுப்பை ஏற்குமாறு கூறியதற்குப் பல காரணங்கள் உள்ளன.
(தொடரும்)

புதன், மே 04, 2011

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்

ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை.

செவ்வாய், மே 03, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். (97) 

பொருள்: பிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒரு சிறிதும் விலகாத சொற்கள், சொல்பவனுக்கு இன்பமும் தந்து நன்மையையும் பயக்கும்.

நாடுகாண் பயணம் - புரூணை

நாட்டின் பெயர்:
புரூணை (Brunei Darussalam)

முழுப் பெயர்:
புரூணை நாடு அமைதியின் இல்லம்.

அமைவிடம்:
போர்ணியோத் தீவுக்கு வடக்குப் பக்கம், தென்கிழக்கு ஆசியா.

எல்லைகள்:
வடக்கு - தென் சீனக் கடல் 
தெற்கு, கிழக்கு, மேற்கு - மலேசியாவின் சரவாக் மாநிலம் (Sarawak)

தலைநகரம்:
பண்டார் சேரி பேகவான் (Bandar Seri Begawan)

பரப்பளவு:
5,765 சதுர கிலோமீட்டர்கள் 

சனத்தொகை:
401,890 (2011 மதிப்பீடு)

பிரித்தானியாவிடமிருந்து முழுச் சுதந்திரம்:
01.01.1984

அலுவலக மொழி:
மலாய் 

கல்வியறிவு:
92.7 %

ஆயுட்காலம்:
ஆண்கள் 73.9 வருடங்கள் 
பெண்கள்: 78.5 வருடங்கள் 

இனங்கள்:
மலாய் 66 %
சீனர் 11.2 %
பழங்குடியினர் 3.4 %
ஏனையோர் 19.1 %

சமயங்கள்:
இஸ்லாம் 67 %
 புத்தசமயம் 13 %
கிறீஸ்தவம் 10 %
ஏனையோர் 10 %


ஆட்சிமுறை:
முழு ஆட்சியதிகாரமுடைய, அரசியலமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அரசரால்(சுல்தான்) ஆளப்படும் நாடு.

அரசர்(சுல்தான்):
ஹசன்னால் போல்கியா(Hassanal Bolkiah)
(இவரது முழுப்பெயர் உலகிலேயே நீளமானதாகும்)

இளவரசர்:
அல் முக்தடி பில்லா(Al Muhtadee Billah)

நாணயம்:
புரூணை டாலர் (BND)
இணையத் தளக் குறியீடு:
.bn

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-673


விவசாய உற்பத்திகள்:
அரிசி, காய்கறி, பழங்கள், கோழி, முட்டை, ஆடுகள், இறைச்சிக்கான மிருகங்கள்.

கனிய வளங்கள்(இயற்கை வளங்கள்):
எரிவாயு, பெற்றோலியம்.
 
தொழிற்சாலை உற்பத்திகள்:
பெற்றோலியம், எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு உற்பத்தி.

ஏற்றுமதிகள்:
மசகு எண்ணெய்(கச்சா எண்ணெய்), எரிவாயு, துணிவகைகள்.

ஏற்றுமதிப் பங்காளிகள்(இந்நாட்டிலிருந்து ஏற்றுமதியைப் பெறும் நாடுகள்):
ஜப்பான், இந்தோனேசியா, தென்கொரியா, அவுஸ்திரேலியா.

இறக்குமதிப் பங்காளிகள்(இந்நாட்டிற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள்):
சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • தென்கிழக்காசியாவின் செல்வந்த நாடுகளுள் ஒன்று.
  • தென்கிழக்காசியாவின் கல்வியறிவு அதிகமுள்ள நாடுகளுள் ஒன்று.
  • கல்வியறிவு அதிகமுள்ள நாடாக இருப்பினும், இந்நாட்டில் 'மருத்துவப் பல்கலைக் கழகம்' இல்லாமையால் வருடாந்தம் நூற்றுக்கணக்கான மருத்துவர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.
  • ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய 'ஊடகத்துறை' அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
  • நாட்டின் அரசரே பிரதமராகவும் உள்ள நாடு இதுவாகும்.
  • இந்நாட்டு அரசர்(சுல்தான்) எண்பதுகளில் உலகின் முதலாவது பணக்காரராக விளங்கினார். தற்போது கார்லோஸ் ஸ்லிம்(மெக்சிக்கோ), பில் கேட்ஸ்(அமெரிக்கா) போன்றோர் முதலாம் இரண்டாம் இடங்களைப் பிடித்ததால் உலகின் 'செல்வந்த அரசர்கள்' வரிசையில் மட்டும் இரண்டாவது இடத்தில் உள்ளார். (முதலாமிடத்தில் சவூதி அரேபிய மன்னர்) 
  • இலங்கை - இந்தியாவுக்கிடையில் 'கச்சதீவு' சம்பந்தமாக இழுபறி நிலை உள்ளதுபோல் இந்நாட்டிற்கும் அண்டை நாடுகளுக்குமிடையில் 'தீவுகள்' சம்பந்தமான இழுபறி தொடர்கிறது. அதேபோல் இந்நாட்டிற்கும் மலேசியாவுக்குமிடையில் 'லிம்பாங்' (Limbang) எனும் பிரதேசம் சம்பந்தமாகவும் இழுபறி நிலை தொடர்கிறது.
  • இந்நாட்டின் 90% வருமானம் பெற்றோலிய ஏற்றுமதி மூலமே கிடைக்கிறது.
  • இந்நாட்டில் மக்களிடம் அரசு வரி எதுவும் அறவிடுவதில்லை.
  • ஐரோப்பிய நாடுகளில் உள்ளதுபோல் மக்களின் கல்வி, சுகாதாரம், மருத்துவம், உணவு போன்ற சகல விடயங்களையும் அரசு கவனித்துக் கொள்கிறது.



திங்கள், மே 02, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


மக்களின் பணியாளனை வாழ்த்துவோம்

கிராம சேவையாளர் பணியில் பதினைந்து வருடங்களைப் பூர்த்தி செய்யும் திரு.சின்னத்துரை இரத்தினேஸ்வரன் அவர்கள்.

இலங்கையில், யாழ் மாவட்டத்திலுள்ள அல்லைப்பிட்டி(J/10) கிராம அலுவலர் திரு.சின்னத்துரை இரத்தினேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம்(02.05.2011) கிராம அலுவலர் சேவையில் இணைந்து பதினைந்தாவது வருடத்தைப் பூர்த்தி செய்கிறார்.


1995 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி அன்று மேற்படி கிராம அலுவலர் பணியில் இணைந்து கொண்ட திரு இரத்தினேஸ்வரன் அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அவர் பிறந்து வளர்ந்த ஊர் மக்களுக்குத் தனது சேவையினை ஆற்றி வருகிறார்.
1962 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஒன்பதாம் திகதி அல்லைப்பிட்டியில் பிறந்த இரத்தினேஸ்வரன் அவர்கள் அக்கிராமத்தில் பல கல்விமான்களை உருவாக்கிய அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். பல்கலைக் கழகம் வரை சென்று கல்வி பயில வேண்டும் என்ற தணியாத தாகமும், திறமையும் அவரிடம் இருந்தபோதும் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையும், அவரது குடும்ப நிலைமையும் அதற்கு உகந்ததாக அமையப் பெறவில்லை.


ஓர் அரசாங்க உத்தியோகத்தில் இணைந்து கொள்வதற்கு திரு இரத்தினேஸ்வரன் அவர்கள் பத்து வருடங்களுக்கும் மேலாகக் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இவரது அயராத முயற்சியின் காரணமாக 1995 ஆம் ஆண்டில் மேற்படி கிராம அலுவலர் நியமனம் கிடைத்தது. இவர் இப்பணியில் இணைந்த காலப்பகுதியானது மிகவும் நெருக்கடிகளும்,சவால்களும் நிறைந்ததாகும். இருப்பினும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தனது பணியினைத் திறம்படச் செய்தார், செய்தும் வருகின்றார்.அது மாத்திரமின்றி கிராம அலுவலர் என்ற எல்லைக்குள் நின்று விடாமல் 'ஊராக வளர்ச்சி', சமூக மேம்பாடு போன்றவற்றிலும் மிகுந்த அக்கறை கொண்டவர்.


ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்குள்ள அதிகாரத்திற்கு எந்த வகையிலும் குறையாத அதிகாரம் ஒரு கிராம சேவையாளருக்கு உண்டு என்ற விடயம் நம்மில் பலர் அறியாதது.ஆனாலும் திரு இரத்தினேஸ்வரன் அவர்களைப் பொறுத்தமட்டில் தன்னை ஓர் சாதாரண பொதுமகனாகவே நினைத்து, கர்வம் இல்லாது மக்களோடு இணைந்து, இயல்பான வாழ்வு வாழ்ந்து வருகிறார். நம் ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களில் இவரும் ஒருவர்.
'கிராம சேவையாளர்' எனும் பணியானது ஒரு காத்திரமான பணியாகும். ஓர் கிராமத்துக்கும் அங்குள்ள மக்களுக்கும் அரசினால் நியமிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி கிராம சேவகரேயாவார். அக்கிராமத்தில் என்ன நடந்தாலும், நடைபெற இருந்தாலும் கிராம அலுவலரின் பங்களிப்பு அல்லது அனுமதி பெறப்பட்டு இருத்தல் வேண்டும்.அந்த அளவுக்கு இச்சேவை வீரியம் கொண்டதாகும்.ஓர் வீட்டில் இயற்கை மரணமொன்று நிகழ்ந்தால்கூட மேற்படி மரணம் சம்பந்தமான 'மரண விசாரணை' நடைபெற்று முடியும்வரை, இறந்தவரின் குடும்பத்தவரைவிட, கிராம சேவகரின் வேலைப்பழு அதிகரித்துவிடும். அது இரவு,பகல் என்று பாகுபாடும் பார்க்கமுடியாத அளவு செயற்திறன் கொண்டதாகும்.

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கென்று அரசினால் நடாத்தப்பட்ட ஆங்கிலம் மற்றும் சிங்களம் தரம் 3 என்ற பாடங்களில் திரு இரத்தினேஸ்வரன் அவர்கள் சிறப்புத் தேர்ச்சி அடைந்துள்ளார்.நம்மூரில் வாழும் மிகவும் அரிதான மும்மொழிகளிலும் தேர்ச்சி உள்ளவர்களில் இவரும் ஒருவர்.
ஒரு கிராமத்திற்கு அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரே கிராம சேவையாளராக நியமனம் பெறவது என்பதுதான் சிறப்பான விடயமாகும். ஏனெனில் அவரால்தான் அந்த ஊர் மக்களின் தேவை அறிந்து சேவையாற்றுவது இலகுவாக இருக்கும்.அம்மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதும், அணுகுவதும், விசாரிப்பதும் எளிதானதாக அமையும்.
அந்த வகையில் பதினைந்து வருடங்களை தன் கிராம மக்களுக்குச் சேவை செய்வதில் அர்ப்பணித்துப் பதினாறாவது ஆண்டில் கால்பதிக்கும் திரு இரத்தினேஸ்வரன் அவர்களை வாழ்வில் மென்மேலும் வளர்ச்சிகண்டு, மக்களுக்கும், நாட்டிற்கும் சிறந்த சேவையை வழங்கவேண்டும் என்று இறைவனை வேண்டுவதோடு, ஊர் மக்கள் சார்பாகவும், என் சார்பாகவும் எமது முதல் தர கிராம அலுவலர் அண்ணன் இரத்தினேஸ்வரன் அவர்களை 'அந்திமாலை' இணையத்தளம் ஊடாக மனதார வாழ்த்துவதில் பெருமகிழ்வு அடைகிறேன். 

நன்றி.

உள்ளார்ந்த அன்புடன் 
வை.பிரணவன் 
2 ஆம் வட்டாரம்.
அல்லைப்பிட்டி 
யாழ்ப்பாணம் 
இலங்கை 

ஞாயிறு, மே 01, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின் (96)

பொருள்: ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நன்மை தரும் சொற்களை ஆராய்ந்து இனிமையாகப் பேச வல்லவனாயின் அவனுக்குப் பாவங்கள் நீங்கிப் புண்ணியம் பெருகும்.