புதன், அக்டோபர் 31, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் 
இழைத்துஇருந்து எண்ணிக் கொளல். (530)

பொருள்:அரசன், தன்னிடமிருந்து பிரிந்து சென்று திரும்பி வந்த சுற்றத்தானை அவன் வந்த காரணத்தை நிறைவேற்றி, அவன் குணங்களை ஆராய்ந்து தக்கவனாயின் அவனைச் சுற்றமாகத் தழுவிக் கொள்ள வேண்டும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

தெய்வ நம்பிக்கை என்பது ஒரு புறம் இருந்தால் கூட, உங்களிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு எதிலும் வெற்றி கிடைப்பது அரிது.

ஹலோவீன், ஏன், எதற்கு?

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
நாம் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த காலம் தொட்டே, அர்த்தம் தெரிந்தும், தெரியாமலும், உணர்ந்தும், உணராமலும், பல மேலைத்தேயக் கொண்டாட்டங்களைக் கொண்டாடி மகிழ்கிறோம். இவற்றில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, ஈஸ்டர் போன்றவை இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் உள்ள கிறீஸ்தவ மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவையாகும். இதற்குக் காரணமாக இலங்கையும், இந்தியாவும் மேற்கத்தைய நாட்டவர்களின் ஆட்சிக்குள் பல நூற்றாண்டுகள் உட்பட்டிருந்ததைக் கூறலாம்.
இதற்கடுத்தாற்போல், புலம்பெயர் மக்களிடையே இன்று பிரபலம் பெற்றுவரும் ஒரு கொண்டாட்டம் அல்லது விளையாட்டு ஒன்று உண்டென்றால் அது 'ஹலோவீன்' என்ற குழந்தைகளைக் குதூகலிக்க வைக்கும் விளையாட்டாகும்.
இது ஒரு மதச்சார்பற்ற விளையாட்டாக அமைந்திருப்பதால்,  நாம் குடி புகுந்துள்ள இந்தத் தேசங்களில், பெரும்பாலான பெற்றோர்கள் தயங்காமல் தமது பிள்ளைகளை கலந்து கொள்ள அனுமதிக்கின்றனர். "ரோமாபுரியில் ரோமானியனாக இரு"(Be a Roman, when you are in Rom) என்ற ஆங்கிலப் பழமொழி இங்கு மேற்கத்திய நாடுகளில் பிரபலம், அப்பழமொழிக்கு நிகரான பழமொழி ஒன்று நமது தமிழ் மக்கள் மத்தியில் உண்டு "ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு, ஊரே ஓடினால் ஒத்து ஓடு' என்பதுதான் அதுவாகும். அநேகமாக புலம்பெயர் தமிழ் சமூகத்தில் பெரும்பாலானோர் இக்கொள்கைக்கு அமைவாகவே வாழ்ந்து கொண்டிருப்பதாகவே, நான் கருதுகிறேன்.
இந்தச் சிறுவர் சிறுமியரைக் கவர்ந்திழுக்கும் 'ஹலோவீன்' கொண்டாட்டத்தில், அல்லது விளையாட்டில் நமது முன்னோர்களின் 'பேய், பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள், மந்திர, தந்திர வித்தைகள், சூனியக் கிழவி, திகிலூட்டும் ஆவிகள் பற்றிய நம்பிக்கைகள் பிரதிபலிப்பதையும், இழையோடியிருப்பதையும் காண முடியும். இதில் நீங்கள் பின்வரும் விடயங்களை குழந்தைகள் மத்தியில் அவதானிக்க முடியும்:
  1. பலவிதமான பயமுறுத்தும் மாறுவேடங்கள் அணிவது.
  2. மற்றவர்களைப் பயமுறுத்தி விளையாடுவது.
  3. மாறுவேட விருந்துகளில் கலந்துகொள்வது.
  4. பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது.
  5. திகிலூட்டும் திரைப்படங்களைப் பார்ப்பது.
  6. நம்மூரில் கார்த்திகைத் தீபத்திற்கு(விளக்கீடு) வீட்டிற்கு வெளியே அல்லது வாயிலில் 'சொக்கப்பனை' எரிப்பதுபோல், இங்கும் பூசணிக்காயில் செய்த அல்லது குடைந்து உருவாக்கிய திகிலூட்டும் உருவத்திற்குள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அடுத்தவர்களைப் பயமுறுத்துவது போன்றவை.

மேலே கூறப்பட்ட விடயங்களில் ஈடுபடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, சுவாரசியமான ஓர் விளையாட்டாக அமைந்ததில் வியப்பேதுமில்லை.
இவ்விளையாட்டின் வேர்கள் கிறீஸ்தவ சமயத்திலிருந்து வந்தாலும், இன்று உலகளாவிய ரீதியில் ஆங்கில மொழி, கலாச்சாரம் பின்பற்றப்படும் நாடுகளில் அனைத்து இன, மத மக்களாலும் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கருத்தில்கொண்டு ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஒக்டோபர் 31 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
இக்கொண்டாடம் முதலில் அமெரிக்காவில் 18 ஆம் நூற்றாண்டில் 'அனைத்துத் துறவியர் தினமாகவும்'(All saint's day) பிற்பட்ட காலப் பகுதியில் 'அறுவடைத் திருவிழாவாகவும்' கொண்டாடப் பட்டது. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக 'சாத்தான்கள்' விரட்டியடிக்கப்படும்' ஒரு சமய மற்றும் கலை நிகழ்வாக இது மாற்றம்பெற்று, இன்று அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளில் குழந்தைகளின் முக்கியத்துவமான கொண்டாட்டமாகவும், விடுமுறைத் தினமாகவும் மாறிவிட்டது.
இவ்விளையாட்டை விளையாட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்று கூறுகின்ற கிறீஸ்தவ மத அமைப்புகளும் உள்ளன. இவ்விளையாட்டு "சாத்தான்கள், பேய்கள் பற்றிய நம்பிக்கைகளைக்' குழந்தைகளின் மனதில் விதைக்கின்றன, சிறுவயதிலேயே அவர்களைப் பயந்த தன்மையுள்ளவர்களாக ஆக்குகின்றது" என்பது அவைகளின் வாதம். ஆனால் குழந்தைகள் சுவாரசியமாக விளையாடுகின்ற இந்த விளையாட்டில் பெரியவர்கள் ஏன் தலையிடவேண்டும்? என்பது எதிரணியினரின் வாதமாகும்.
ஆபிரிக்காக் கண்டத்தில் மத அமைப்புகளின் கண்டனங்களால் இவ்விளையாட்டு பெரிய அளவில் பிரபலம் பெறவில்லை, இருப்பினும் 'உலகமயமாக்கல்' என்ற சித்தாந்தத்தில் ஊறிப்போயிருக்கும், அமெரிக்காவின் நேச நாடுகளாகிய மேற்கத்திய நாடுகளில், மக்களின் அபிமானம் பெற்ற ஒரு கொண்டாட்டமாக இது திகழ்கிறது.

செவ்வாய், அக்டோபர் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக் 
காரணம் இன்றி வரும். (529)

பொருள்: உறவினராயிருந்தவர் ஏதோ காரணத்தால் விலகிச் சென்றிருந்தால், அப்பிரிவுக் காரணம் நீங்கியபின் மீண்டும் உறவினராக வந்து சேருவர்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து

எவனொருவன் தன்னை உயர்த்திக் கொள்கிறானோ அவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் ஒருவன் உயர்த்தப்படுவான்.

பொருள்: தான் பெரியவன் என்றும், உயர்ந்தவன் என்றும் எண்ணமுடையவன் அடுத்தவர்களால் இகழப்பட்டுச்  சிறுமைப் படுத்தப் படுவான். தான் சிறியவன் எனவும், சாதாரணமானவன் எனவும் எண்ணம் கொண்டு பணிவாக நடப்பவன் எவனோ அவன் தன் தன்னடக்கம் காரணமாக அடுத்தவர்களால் மதிக்கப் படுவான்.

திங்கள், அக்டோபர் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் 
அதுநோக்கி வாழ்வார் பலர். (528)

பொருள்: அரசன் எல்லோரையும் ஒரு தன்மையாகக் கருதாமல் அவரவர் தகுதியறிந்து மதித்து ஒழுகுவானாயின், அம்மதிப்பைக் கருதி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலராவர்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

தான் செலுத்தும் பக்திக்குக் கனவிலும் கைமாறு கருதாதவன் சிறந்த கடவுள் பக்தன்.

உடலினை உறுதி செய்!


தாதுப் பொருட்கள் (Minerals)
உணவில் காணப்படும் தாது உப்புகள் உடலில் பல இன்றியமையாத பணிகளைச் செய்கின்றன. தாதுப் பொருட்களாவன :
அ. கால்சியம் ஆ. துத்தநாகம் இ. இரும்பு ஈ. பொட்டாசியம் உ. மெக்னீசியம் ஊ. சோடியம்
வைட்டமின்களைப் போலவே தாதுப் பொருட்களையும் உடல் உறுப்புகள் தயாரித்து விட முடியாது. எனவே, இவற்றையும் உண்ணும் உணவு மூலமாகத்தான் உடல் பெறவேண்டும். இவை அடங்கிய உணவுகளாவன:
அ. பால் ஆ. பாலாடைக்கட்டி இ. மாமிசம் ஈ. முட்டை உ. கடலை ஊ. பீன்ஸ் எ. விதைகள்
ஏ. எலுமிச்சை ஐ. ஆப்பிள் ஒ. வாழைப்பழம் ஓ. உருளைக்கிழங்கு
ஆரோக்கியமான உணவு – அதாவது முழு தானிய அரிசி மற்றும் கோதுமை, பழ வகைகள் மற்றும் காய்கறிகள் – உண்ணும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைத்து விடுகின்றன. வைட்ட மின்கள் அல்லது மினரல்கள் தினமும் தேவைப் படுவதாலும் இதனை உடல் தானாக தயாரித்துக் கொள்ளாது என்பதாலும் இவை அடங்கிய உணவை தினமும் உண்ணுதல் அவசியமாகிறது. மேற்சொன்ன உணவு வகைகளை வழக்கமாக உண்ணாதவர்கள் மருத்துவரின் ஆலோ சனையைக் கேட்டு வைட்டமின் மாத்திரையைச் சாப்பிடுவது அவசியமாகிறது.
உப்பு (Salt)
நாம் அன்றாடம் உண்ணும் ஒரு தாதுப் பொருள் உப்பு. இது சோடியம் குளோரைடு என்னும் வேதிப் பொருளாகும். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 6 கிராம் உப்பு (2 கிராம் சோடியம்) போதுமானது. ஆனால், நாம் நமது தேவைக்கு அதிகமாகவே தினமும் உப்பு சாப்பிட்டு வருகிறோம். இது ஒரு பழக்கமாகி விட்டதால் உப்பின் சுவை நமக்கு மிகவும் பிடித்து விட்டது. அதிக உப்பு உடலில் பல ஆபத்துகளை விளைவிக்கும். உடலில் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துவதுடன் உடலில் உள்ள தண்ணீரை வெளியேற அனுமதிக்காமல் தேக்கி விடும். தொடர்ந்து இந்நிலை நீடித்தால் நச்சுப் பொருட்கள் வெளியேறாமல் உடலில் தேங்கி விடும். இதனால் உடல் நலம் கெட்டுவிடுகிறது.
நாம் உண்ணும் பல வகை உணவுகளில் தேவைக்கு அதிகமாகவே உப்பு உள்ளது. மீன், மாமிசம், ஆகியவற்றைச் சமைக்க அதிக உப்புச் சேர்க்கப்படுகிறது. எண்ணையில் பொரித்த சிப்ஸ் போன்ற உணவில் அதிகமாக உப்பு உள்ளது. நாம் விரும்பி உண்ணும் ஊறுகாயில் கூட அதிகப்படியான உப்பு உள்ளது. ஆக, நாம் தேவைக்கதிகமான உப்பினை அன்றாடம் உட்கொள்கிறோம் என்பது மட்டும் உறுதி யாகிறது.
உடலில் தேவைக் கதிகமாக உப்பு சேர விடாமல் தடுக்க ஊறு காய் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்றால் மிக குறைந்த அளவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதே போல எண்ணெயில் பொரித்த சிப்ஸ் போன்ற உணவு வகைகளையும் சாப்பிடுவதால் உப்பின் அடர்த்தி குறைக்கப்பட்டு பொட்டா சியம் என்ற தாதுப்பொருளின் கிரகிப்பு அதிகப்படுத்தப்படுகிறது. இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சுருங்கச் சொன்னால், உடல்நலம் காக்க உப்பின் அளவைப் பெருவாரியாக குறைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் (Water)
முழு உடல்நலத்திற்கு என்னென்ன உணவு வகைகள் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இதுவரை நாம் சிந்திக்காத ஒரு வகை உணவு இருக்கிறது. அது திரவ உணவு. அதுதான் தண்ணீர். தண்ணீரும் ஓர் உணவே.
‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் திருவள்ளுவர்.
நீரால் ஆனது இவ்வுலகம். நீரால் ஆனவை உயிரினங்கள். நாம் வாழும் பூமிகூட 72 சதவீதம் தண்ணீரைக் கொண்டதுதான். மனித உடல் மற்றும் தாவர உடல் கூட 80 சதவீதம் நீரால் ஆனது எனும்போது நீர் எவ்வளவு முக்கியமானது மேலும் 

ஞாயிறு, அக்டோபர் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும் 
அன்னநீ ரார்க்கே உள. (527)

பொருள்: காக்கைகள் தமக்கு இரை கிடைத்தால் மறைக்காமல் தன் இனத்தையும் அழைத்து அவற்றோடு சேர்ந்துண்ணும். பல்வகை ஆக்கங்களும்(செல்வங்கள்) அக்காக்கையைப் போன்ற இயல்புடையார்க்கே உள்ளனவாம்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

நீங்கள் யாரையாவது ஏமாற்றிவிட்டால் அவர்கள் ஏமாந்து விட்டதாக அர்த்தமில்லை...,அவர்கள் உங்களை அதிகமாக நம்புகிறார்கள் என்று அர்த்தம்.

அதிசயிக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம்

அம்பர் (amber) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக் குறைய கல்போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் ஆகும்.

தீட்டப்படாத அம்பர் கற்கள்
அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை பொன்னம்பர் பூவம்பர் மீனம்பர் தீயின்வயிரம் செம்மீன் வயிரம் மலக்கனம் கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது. மரப்பிசினில் விழுந்துவிட்ட சிறு பூச்சிகளும் அப்படியே காலத்தால் உறைந்திருப்பது பார்க்க வியப்பூட்டுவதாகும். இப்படி தொல் பழங்காலத்து பயினி மரம் போன்ற மரங்களின் மரப்பிசினில் விழுந்து விட்ட பூச்சிகளில் சில இன்று நிலவுலகில் இல்லாமல் முற்றுமாய் அற்றுப்போய்விட்டவை. இந்த அம்பர் கட்டிகள் பால்ட்டிக் கடற்கரைகளிலும் கடலடியிலும் கிடைக்கின்றன. சில சிறு அம்பர் கட்டிகள் மீனின் வயிற்றில் இருந்தும் எடுத்துள்ளனர்.



திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் 'அம்பர்' எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது. வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேலாக அம்பர் எனும் விலை உயர்ந்த வாசனை திரவியம் உற்பத்தியாகும் விதம் குறித்து, பலரும் பல விதமாக கூறுகிறார்கள். ஆனால் அம்பர், திமிங்கலம் உமிழும் எச்சத்திலிருந்து உற்பத்தியாகிறது என்பதுதான் உண்மை.



ஆழ்கடலில் வசித்து வரும் திமிங்கலம், அன்றாட உணவாக, கணவாய் மீனையே விரும்பி உட்கொள்கிறது. கூரிய முட்களை உடைய இந்த மீனை, சாப்பிடும்போது இதன் முட்கள் தொண்டையில் குத்தி விடும். இதன் காரணமாக ஜீரண சக்தியை இழக்கும் திமிங்கலம், தொண்டையில் மாட்டிக்கொண்ட முள்ளை வெளியேற்ற, வாந்தி எடுக்கும்போது ஒரு வகை திரவம் வெளியேறுகிறது. இதுவே திமிங்கலத்தின் எச்சம் என்பர். பெருங்கடலில் மிதந்து வரும் அம்பர், கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது மேலும் 

சனி, அக்டோபர் 27, 2012

உளமார்ந்த நன்றிகள்

இன்றைய தினம்(27.10.2012) மையம் இணையத்தில் (www.mayyam.com) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி  நடைபெற்ற கலந்துரையாடலில்(Forum/Chat) எமது இணையத்தின் பெயரும் அதில் சிங்கப்பூரைச் சேர்ந்த நண்பர் ஜோ.மில்டன் அவர்கள் கடந்த 16.10.2011 அன்று எழுதிய 'பச்சை விளக்கு' எனும் தலைப்பிலான கட்டுரையும் இடம்பெற்றிருந்தன. இதன் மூலம் பல புதிய வாசகர்கள் எமது தளத்திற்கு வருகை தந்தனர். மேற்படி தளத்தில் எமது இணையத்தின் பெயரை அறிமுகம் செய்த நண்பர்.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் நண்பர் ஜோ.மில்டன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

-ஆசிரியர்- 
www.anthimaalai.dk

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குஉடையார் மாநிலத்துஇல். (526)

பொருள்: ஒருவன் கொடைக்குணம் உடையவனாகவும், கோபம் இல்லாதவனுமாக இருந்தால், அவனைப் போலச் சுற்றத்தாரைப் (உறவினரைப்) பெற்றிருப்பவர் இப்பெரிய உலகில் வேறு எவரும் இரார்.

இன்றைய பொன்மொழி

கவிப்பேரரசு வைரமுத்து

வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு,
தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு.

வெள்ளி, அக்டோபர் 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய 
சுற்றத்தால் சுற்றப் படும். (525)

பொருள்: உதவி செய்தும், இனிமையாகப் பேசியும் வாழ்பவனை உறவினர் சூழ்ந்து இருப்பர். 

இன்றைய சிந்தனைக்கு

சுப்பிரமணிய பாரதியார் 

கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தை வணங்கினாலும் சரி, வணங்காவிட்டாலும் சரி, தெய்வம் நமக்கு அருள்  புரியத் தடையேதும் இல்லை. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே போதும். தெய்வ  அருளுக்குப் பாத்திரமாகி விடுவோம்.


சாப்பாடுக்கு பின்பு பழம் வேண்டாமே:


இன்று விருந்து பலமா? ஒரு பழம் சாப்பிடுங்க என்று சொல்லுவாங்க.நம்மூர் பழக்கமே இது தானே.. ஆனால் இது பெரிய தவறு.அப்ப பழங்களை எப்ப சாப்பிடனும் என்று கேட்கிரிங்களா?சாப்பாட்டுக்கு முன்பு தான் பழங்களை சாப்பிடனும்.. அதுக்கான காரனம் இது தான். இதனை நான் ஒரு நூலில் பாடித்து தெரிந்துக்கொண்டேன்.

1
வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளி கொண்டுவரும். இதன் பயனாக உடல் எடை குறையும். உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்..
***

2
சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரமாகும் உணவுகள் செரிக்க நேரமாகும். உணவுகள் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் மற்றும் ஜீரணமாக உதவும் அமிலங்கள் சேர்ந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். வயிற்றுக்குள்ளே உணவு கெட்டுப் போகும். இதனால் தான் உணவுக்கு முன்பு சாப்பிடனும்..
***

3
பழஜீஸ் சாப்பிடுவதை விட பழமாக சாப்பிடவும். அப்படி சாப்பிடுவதால் நார்சத்து நிறைய கிடைக்கும் சத்தும் முழுமையாக கிடைக்கும். பார்க்க படிக்க சின்ன விஷயமாக இருந்தாலும் இது உடலுக்குள் சென்று செய்கின்ற வேலை மிக பெரியது. ஆகையால் இனி யோசித்து சாப்பிடுங்கள்

நன்றி: இருவர்உள்ளம் 

வியாழன், அக்டோபர் 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்; செல்வம்தான் 
பெற்றத்தால் பெற்ற பயன். (524)

பொருள்: ஒருவன் செல்வம் பெற்றதனால் அடையக்கூடிய நன்மை யாதென்றால் தன் சுற்றத்தாரால் தான் சூழப்படும் வகையில் அவர்களைத் தழுவி வாழ்தலாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

பார்க்கக் கண்களைக் கொடுத்த ஆண்டவன் பாராதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறான். இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே புத்திசாலி.

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?


தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும்.தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர்பலமுறையில் சொல்வார்கள்ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்ததுஇருகால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாகநம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதேதியானம் என அழைக்கப்படுகிறதுஇந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறுநன்மைகள் உள்ளதுஅதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுத்துள்ளேன்.
  • ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது.
  • இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டு படுத்துகிறது.
  • உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைக்கிறது.
  • உங்கள் மனதை பரப்பரப்பில் இருந்து நிம்மதி அடைய செய்கிறது.
  • நம்முடைய உடல் பகுதிகள் சீராக இயங்க உதவுகிறது.
  • உடல் எடையை குறைக்கலாம்.
  • உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
  • உடல் சக்தி வீணாவதை தடுக்கும்.
  • தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும்.
  • மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.
  • ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  • தேவையில்லாமல் கோபப்படுவதை குறைக்கும்.
  • மாணவர்களின் படிக்கும் சக்தி அதிகரிக்கும்.
  • பேராசையை தவிர்க்கும்.
  • உடலின் சக்தி,வேகம் அதிகரிக்கும்.
  • கண்பார்வை அதிகரிக்கும்.
  • அமைதியான மன நிலையை கொடுக்கும்.
  • மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.
  • முடிவு எடுக்கும் திறனை அதிகபடுத்தும்.
  • மற்றவர்களிடம் இருந்து உங்களின் நிலையை அதிகரிக்கும்.
  • போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் மீண்டு வர துணை புரியும்.
  • ஓயாமல் எதையாவது யோசித்து கொண்டிருப்பதை தடுத்து மனதை ஒருநிலைபடுத்தும்.
  • சுவாச பிரச்சினைகளை தீர்க்கும்.
  • புகை பழக்கத்தில் இருந்து மீள முடியும்.
  • எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும்.
  • லட்சியங்களை எளிதில் அடைய உதவும்.
  • ஒரு தகவலை உள்வாங்கும் திறனை அதிகரிக்கும்.
  • எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் மன்னிக்க மனதை தயார் செய்யும்.
  • நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் தங்களுக்கும்இறைவனுக்கும் இடையே இனம் புரியாத ஆழமான உணர்வை உருவாக்கும்.
  • நண்பர்கள் வட்டம் பெருகும்.
  • தக்க சமயத்தில் தகுந்த முடிவை எடுக்கும் திறனை அதிகர்க்கும்.
  • சமூகத்தில் தங்களின் நிலை உயரும்.
  • கிடைத்தை வைத்து சந்தோசப்படும் அறிவை கற்று கொடுக்கும்.
  • மன அழுத்தம்மனநோய் உள்ளவர்கள் மேலும் 

புதன், அக்டோபர் 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் 
கோடுஇன்றி நீர்நிறைந் துஅற்று. (523)

பொருள்: சுற்றத்தாருடன் மனம் கலந்து பழகாதவனுடைய வாழ்வு, குளப்பரப்பு கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போல வீணே அழியும்.

இன்றைய பொன்மொழி

அடொல்வ் ஹிட்லர் 

உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். இலக்குகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது. 

தொலைத்தவை எத்தனையோ - 7

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

வளவு, நிலம் என்று அன்று வாழ்ந்த வாழ்வு இன்று எப்படியெல்லாம் மாறிவிட்டது. தாய் நிலத்தில் வாழ்ந்த வாழ்வைக் கனவிலே தான் காண முடிகிறது. (போகலாமே, பார்க்கலாமே என்கிறீர்களா!)
அங்கு வாழ்நிலையே மாறிவிட்டது.
கணனியில் பல படங்களைப் பார்க்கும் போது நினைவு பொங்கியெழுகிறது. ஏக்கம் பெருகுகிறது.
சமீபத்தில் இலுப்பம் பூவைப்பார்த்தேன். எத்தனை நினைவுகள்!….
நான் வாழ்ந்த வீட்டின் முன்புறத்தில் பக்கமாக பெரிய வளவு. அதில் பெரிய இலுப்பை மரங்கள் 2ம், சிறியதாக வேறும் இருந்தது.
இதில் பூக்கள் பூத்து விழும் போது, நிலத்தில் முத்து சிதறியதான அழகு. 
கொட்டிக் கிடக்கும் அதனழகைப் பூரணமாக ரசிப்பதற்காகவே தம்பி தங்கைகளுடன் சேர்ந்து மரத்தின் கீழே சருகுகளைக் கூட்டி, கற்களைப் பொறுக்கி, பெரிய புற்களை வெட்டி, அழகாக்கி மாலையில் எதிரே அமர்ந்து ரசிப்போம். அதிகாலையிலும் பார்க்கும் போது மனமகிழ்வாக இருக்கும். நாமாக முன்னெடுக்கும் இந்த வேலைகளிற்கு அப்பா மறைமுகமாக ஆதரவு தருவார்.
உரித்துச் செதுக்கிய குட்டிக்குட்டித் (மினி மினித்) தேங்காய் –  முடியோடு இருப்பது போன்ற தோற்றம் கொண்டது இலுப்பைப் பூ. 
இது மட்டுமா!  இன்னம் பல….
அப்பா மண்வெட்டியை எடுத்துக் கொண்டு ”..பேபி (Baby – my village name) வருகிறாயா கொச்சாட்டிக்கு? (பனை வளவிற்கு)” என்று கூப்பிட்டதும், அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பேன். ( எனக்கு 8 வயதிற்குள் தானிருக்கும்.)
”…ஏனப்பா?…” என்று கேட்டபடி போவேன். 
”…வாவேன்…” என்றபடி கூட்டிப் போவார்..
அங்கு போனதும் என்னை மறந்து புல்லுப் பூக்களை நான் பிடுங்கிச் சேகரிப்பேன். கரடு முரடற்ற, வழவழப்பான கற்களைச் சேர்த்துப் பொறுக்குவேன். ( அவை கொக்கான் வெட்டவும், வேறு விளையாட்டிற்கும் உதவும்). 
இப்படி என்னை மறந்து நான் உலாவ மறு பக்கம் அப்பா இரட்டைக் கட்டில் போட்டது போல ஈரமண்ணை சேர்த்து அணைத்து  உயரமான பாத்தி ஒன்று செய்திட்டார்.
எப்படி இப்படி அப்பாவால் முடிகிறது! என என்னுள் நான் ஆச்சரியப்பட்டேன். 
அப்பா மெலிந்த தேக வாகு கொண்டவர்.
சில வேளைகளில் தான் அப்பா இப்படிச் செய்வார்.  
மற்றும் வேளைகளில் சின்னப் பொடி வந்து கூலிக்குச் செய்து தரும். அப்போதும் சின்னப் பொடிக்கு தேனீர் கொடுக்க என்று நானும் வீட்டுப் பெரியவர்களுடன் கூடச் சென்று செய்யும் வேலைகளைப் பார்ப்பதுண்டு.
 
மிகுதியை  மறு அங்கத்தில் பார்ப்போம்.

செவ்வாய், அக்டோபர் 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா 
ஆக்கம் பலவும் தரும். (522) 

பொருள்: அன்பு அழியாத நல்ல சுற்றம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் அஃது அவனுக்குக் குறைவில்லாத செல்வங்கள் பலவற்றைத் தரும். 

இன்றைய பொன்மொழி

பிரடெரிக் தியோடர் விஷர்

விவாதம் செய்வது நிழல்களுடன் போராடுவதற்குச் சமம். ஒரு விவாதத்தில் நீ வென்று விடலாம்;ஆனால் நல்ல நண்பனை இழந்து விடுவாய்.

திங்கள், அக்டோபர் 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


பற்றுஅற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் 
சுற்றத்தார் கண்ணே உள. (521) 

பொருள்: ஒருவர் செல்வத்தை இழந்து வறியவனாய் வாழும் போதும், தமக்கும் அவனுக்கும் உள்ள உறவுகளைக் கொண்டாடும் இயல்புகள் சுற்றத்தாரிடமே உள்ளன.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

முயற்சியற்ற மனிதர்களிடம் நட்புக் கொள்ளாதே. அவர்களின் முயற்சியின்மை  உன்னையும் முயற்சிக்க விடாது. உனது முயற்சிக்கும் முட்டுக்கட்டை போட்டு விடும்.

தண்ணீர் மருத்துவம்

ஆக்கம்: ராதா (பெண்மணி இதழில் இருந்து)


கேட்பதற்கு அதிசயமாய் இருக்கிறதல்லவா? நம் உடலின் பலவிதமான பிணிகளை தீர்க்க தண்ணீர் மருத்துவம் மிகுந்த பலனை தருகிறது. மிகவும் எளிதான, செலவில்லாத, ஆரோக்கியமான வைத்திய முறை இது.

தண்ணீர் மருத்துவ முறைகள்:

காலையில் தூங்கி எழுந்ததும், பல் துலக்கும் முன்பாகவே 650 மி.லி. அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகரமோ எதுவும் உட்கொள்ள கூடாது.

45 நிமிடங்களுக்கு பின் வழக்கமான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

காலை உணவுக்கு பின்னர் 15 நிமிடங்களுக்கும், மதியம், இரவு உணவுக்கு பின்னர் இரண்டு மணி நேரத்திற்கும் எந்த வகையான உணவோ அல்லது பானமோ அருந்தக் கூடாது.

650 மி.லி. அளவு தண்ணீரை தொடக்கத்திலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 650 மி.லி. அளவு தண்ணீரை அருந்த பழகலாம்.

எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் தண்ணீர் மருத்துவ முறையை பின்பற்ற வேண்டும் என்பதை பார்ப்போமா?

உயர் ரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 1 நாள்

சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

மலச்சிக்கல் - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்

மூட்டு வலி - துவக்கத்தில் வாரம் மூன்று நாட்களும், இரண்டாவது

வாரத்தில் இருந்து தினமும் இம்முறையினைப் பின்பற்ற வேண்டும்.


பக்க விளைவுகள் எதுவும் இல்லாத மருத்துவ முறை இது. எனினும் தண்ணீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாக பின்பற்றினால் மிகவும் நன்மை தரும்.

ஆகவே தண்ணீர் மருத்துவத்தை முறையாக மேற்கொண்டு ஆரோக்யமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்வோமா?

ஞாயிறு, அக்டோபர் 21, 2012

மரண அறிவித்தல்

இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், மண்டைதீவு 6 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டிருந்து, இலக்கம் 20 பிரப்பங்குளம் வீதி, வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தைத் தற்காலிக முகவரியாகவும் கொண்டிருந்த திருமதி. செல்லையா கமலாம்பிகை அவர்கள் நேற்றைய தினம் (20.10.2012) சனிக்கிழமை காலமானார்.
திருமதி .செல்லையா கமலாம்பிகை
தோற்றம்: 02.11.1927
மறைவு: 20.10.2012



அன்னார் காலஞ்சென்ற வைரவநாதன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றசின்னக்குட்டி(வெள்ளையர்) மருதடியாள் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லையாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற யோகம்மா, காலஞ்சென்ற முத்துலட்சுமி, காலஞ்சென்ற இரத்தினவிநாயகம், காலஞ்சென்ற ராசசேகரம், காலஞ்சென்ற பரஞ்சோதி, மற்றும் படிகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மங்களநாயகி, சுந்தரநாயகி, நாகரத்தினம் ஆகியோரின் அன்புத் தாயாரும், மதியாபரணம், மகாதேவா, புவிமலர்தேவி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(22.10.2012 திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு  இலக்கம் 20  பிரப்பங்குளம் வீதி, வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக யாழ்/கோம்பயன்மணல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: செல்லையா நாகரத்தினம் (மகன்)
தொடர்புகளுக்கு:

செ.நாகரத்தினம் (மகன்) 0094-774 448 760
திருமதி சுந்தரநாயகி மகாதேவா (மகள்) 0094 -778 996 670 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்


நாடோறும் நாடுக மன்னன்; வினைசெய்வான் 
கோடாமை கோடாது உலகு. (520) 

பொருள்: தொழில் செய்கின்றவன் தன் கடமையைச் சரிவரச் செய்வானாயின் உலகம் கெடாது. ஆதலால் மன்னன் நாள்தோறும் அத்தகையவனைக்  கவனித்து வரவேண்டும்.