வெள்ளி, அக்டோபர் 07, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

எதைக் கண்டு ஒரு மனிதனுக்குச் சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம்.

வியாழன், அக்டோபர் 06, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் 'சத்தியம்' மறுபடியும் எழுந்து நின்றுவிடும். இறைவனைப்போல் அதற்கும் தொடக்கமும், முடிவும் கிடையாது.  

புதன், அக்டோபர் 05, 2011

இன்றைய பொன்மொழி


மூத்தோர் சொல்

'நட்பு' நீ நின்றுவிடும்போது உன்னை உற்சாகப்படுத்தி இயங்க வைக்கும். தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையைப் போக்கி சிரிக்க வைக்கும், சந்தோசத்தில் உனக்காகப் பாட்டுப் பாடும்.

செவ்வாய், அக்டோபர் 04, 2011

நாடுகாண் பயணம் - குரோஷியா

நாட்டின் பெயர்:
குரோஷியா (Croatia)

வேறு பெயர்கள்:
குரோவாஷியா குடியரசு (Rupublic of Croatia) அல்லது ஹிரோவட்ஸ்கா குடியரசு(Republika Hrvatska) 

அமைவிடம்:
தெற்கு ஐரோப்பா 

தலைநகரம்:
ஷாக்ரேப் (Zagreb)

அலுவலக மொழி:
குரோஷியன் (Croatian)


அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழிகள்:
ஹங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, செக், சுலோவாக், செர்பியன்.

இனப் பிரிவுகள்:
குரோஷியர்கள் 89.6 %
செர்பியர்கள் 4.5 %
ஏனையோர் 5.9 %

சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம் 87,8 %
பழமைவாதக் கத்தோலிக்கம் 4,4 %
இஸ்லாம் 1,3 %
புரட்டஸ்தாந்துகள் 0,3 %
நாத்திகர் 5,2 %
ஏனையோர் 0,9 %


கல்வியறிவு:
98 %

ஆயுட்காலம்:
ஆண்கள் 72. 1 வருடங்கள் 
பெண்கள் 79.6 வருடங்கள் 

அரசாங்க முறை:
பாராளுமன்ற ஜனநாயகம் 

ஜனாதிபதி:
இவோ ஜோசிபோவிக் (Ivo Josipovic) *இது 4.10.2011 அன்று உள்ள நிலவரம் ஆகும்.

பிரதமர்:
ஜட்ராங்கா கோசோர் (Jadranka Kosor) *இது 4.10.2011 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


யூகோஸ்லாவியாவிடமிருந்து சுதந்திரப் பிரகடனம்:
25.06.1991

பரப்பளவு:
56,594 சதுர கிலோமீட்டர்கள்.

சனத்தொகை:
4,290,612 (2011 மதிப்பீடு)

நாணயம்:
குணா (Kuna /HRK)

இணையத் தளக் குறியீடு:
.hr

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 385


விவசாய உற்பத்திகள்:
கோதுமை, சோளம், இனிப்புக் கிழங்குகள், சூரியகாந்தி விதை, பார்லி, வாசனைத் திரவியங்கள், ஒலிவ மரத்தின் காய், புளிப்பான பழங்கள், திராட்சை, சோயா அவரை, உருளைக் கிழங்கு, கால் நடைகள், பாற் பண்ணைகள்.


தொழில் மற்றும் தொழிற்சாலைகள்:
இரசாயனம், பிளாஸ்டிக், இயந்திர உதிரிப் பாகங்கள், உலோகங்கள், மின்னியல் தொழில்நுட்ப உபகரணங்கள், முட்கம்பிகள், அலுமினியம், கடதாசி(பேப்பர்), மரத்தாலான பொருட்கள், கட்டிடப் பொருட்கள், துணிகள், கப்பல் கட்டுதல், பெற்றோலியம், பெற்றோலியம் சுத்திகரித்தல், உணவு, மதுபானம், சுற்றுலாத் துறை.


திங்கள், அக்டோபர் 03, 2011

தாய்லாந்துப் பயணம் - 21


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
தாய்லாந்தில் மிகப் பெரிய விற்பனை நிலையமான Big C  க்குப் போய் மிக்ஸி வாங்கும் போது
ஒரு இளம் பையன் நின்றிருந்தான். அவன் சீனாவில் செய்த பொருள் நல்லதல்ல. மலேசியாவில் செய்தது தான் நல்லது வாங்குங்கள் என்று ஆலோசனை கூறினான். நாம் மலேசியாவில் செய்ததையே வாங்கினோம். அங்கும் எமது வாங்கும் பொருட்களின் பட்டியலில் வேறு இடங்களில் அகப்படாத சில பொருட்களை வாங்க முடிந்ததும் மகிழ்ச்சியாகவே இருந்தது. Big C யில் பொருட்களை வாங்கியதும்,
நேராக எமது காகோ ஏஜென்சிக் கடைக்கு வந்தோம்.
இப்போது நாம் வாங்கிய எமது பொருட்களைக் கடல் வழிப் பொதியாகக் கட்டும் இறுதி வேலையைச் செய்யக் கேட்டோம். பொருட்களின் பற்றுச் சீட்டுகள் எல்லா இடத்திலும் இரண்டு பிரதிகள் வாங்கி வைத்திருந்தோம். ஒன்றைக் கட்டும் பொதியுடனும் ஒன்றை எம்முடனும் வைத்துக் கொண்டு நாம் பார்த்துக் கொண்டிருக்கவே அனைத்தையும் பெரிய அட்டைப் பெட்டிகளில் கட்டி ஒட்டினார்கள். மறுபடி பொலிதீன் உரப் பைகளால் சுற்றிக் கட்டி, அடுக்கினார்கள்.
எல்லாம் எழுதி பணத்தையும் கட்டினோம். ஆமாம் முதலே கூறியிருந்தனர் காசாகவே தர வேண்டும், வங்கி மூலமோ, காசோலையோ வேண்டாம் என்று. நாமும் தயாராகவே இருந்தோம். அவர்களுக்குப் பயணமும் கூறிவிட்டு. வாடிவீட்டு வாசலில் நின்ற வாடகைக் காரை மாலை 8.00 மணிக்கு சுவர்ணபூமி விமான நிலையத்திற்குப் போகப் பேசி வைத்து விட்டு அறைக்கு வந்தோம்.
இரவு 11.55க்கு ஒஸ்ரியா வீயென்னாவிற்கு விமானம்.
வாடிவீட்டில் எப்போதும் நாம் வர கதவு திறந்து சேவை புரிந்தவர்கள், அறை துப்பரவாக்கி படுக்கைத் துணிகள் மாற்றிய பெண்கள் என்று சிலருக்கு அன்பளிப்புப் பணங்கள் கொடுத்தோம்.
இரவு 8.00 மணிக்கு ராக்சி ஏறினோம் 9.00 மணிக்கு சுவர்ணபூமியில் இறங்கினோம். சில சுவர்ணபூமி விமான நிலையப் படங்களை நீங்கள் பார்க்க வேண்டும். பாற்கடலைப் பரந்தாமன் கடைகிறாரோ என்று எண்ணும் படி இவை இருந்தது. அதன் கருத்து, ஏன், என்பவை எமக்குப் புரியவில்லை. பாருங்கள்.  ஆச்சரியத்தில் போய் இறங்கியதும் நான் விரும்பி எடுத்த படங்கள்.
பயணம் சுலபமாக முடிந்தது.
சனிக்கிழமை நமது வீடு டென்மார்க் வந்து சேர்ந்தோம்.
பயணத்தில் இங்கிருந்து போகும் போது யன்னலூடாக இமாலயாப் பனி மலைக்காட்சியைப் பார்த்தது மறக்க முடியாதது. நான் பார்க்க, சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஆவலாக அதைப் பார்த்தது மறக்க முடியாதது. நான் பார்த்துக் காட்டியதால் பலர் அக்காட்சியை ரசித்ததும் மறக்க முடியாதது. இன்னும் சில விமான நிலையப் படங்களையும் பாருங்கள். So beautiful.    
இந்தப் பயண அனுபவத்தை உங்களுடன் நான் பகிர்ந்ததில் மிகவும் மகிழ்கிறேன்.
கவிதை எழுதுவது எப்படி எனக்கு மிகவும் பிடித்தமானதோ அப்படியே, இரண்டாவதாகப் பயண அனுபவம் எழுதுவதிலும் மகிழ்வடைகிறேன். இந்த சந்தர்ப்பம் உருவான இலண்டன் தமிழ் வானொலிக்கும், கருத்துகள் தந்த நேயர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இறுதியாக தாய்லாந்தின் தாய்லாந்து மொழிப் பெயரை உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன். தயவு செய்து பொறுமையாக நான் 2 மைல் நீளமான பெயரைக் கூறும் வரை ப்ளீஸ்! கேளுங்கள். எனக்கும் இது புரியவில்லை. ஏன் இப்படி இவ்வளவு நீளப் பெயர் என்று மொழி பெயர்ப்பாளரைக் கேட்டேன். அவருடன் அன்று ஒரு தாய்லாந்துப் பெண்ணும் வந்திருந்தார். சிரிக்கிறர்கள்.
முதல் தடவை இதைக் கூறும் போது எழுதி வைத்தேன். இரண்டாம் தடவை தாய்லாந்து மொழி பெயர்ப்பாளன் நிக், ” வேதா! தாய்லாந்துப் பெயரைக் கூறுகிறாயா?” என்று கேட்டார். மறுபடி நான் அதைக் கூறி அவர்களை அசத்தினேன். எழுதியதைப் பார்த்துத் தான் கூறினேன். இதோ கேளுங்கள். இது தான் அந்தப் பெயர்.
Grunteb /city of angels)
Mahanakon Armon Tathna Kosin Mahindra Ayothiya Mahadilok Popnoprat Rajathany purirum yadomratchnywet Mahachadan amoniman akuathan chasith saka vishnu gampasit
"மகானக்கோன் ஆர்மோன் ரத்னா கோசின் மகின்டிறா அயோத்தியா மகாடிலொக் பொப்னோப்றாற் ராஐதானி புறிறும் யதோம்றட்சினிவெற் மகாசடன் அமோனிமான் அக்குஆதன் சாசித் சகா விஸ்ணு கம்பாசிற்."
இது தான் அந்தப் பெயர்.
நான் என் கணவருக்குக் கூறினேன், ‘ ‘தாய்லாந்துப் பயணக் கதை முடிகிறதப்பா”  என்று.  ”ஓகோ! தாய்லாந்தின் தாய்லாந்து மொழிப் பெயர் கூறிவிட்டாயா?”     என்றார் இறுதியில் கட்டாயம் கூறுவேன் என்றேன். இதோ கூறிவிட்டேன்.
சரி நேயர்களே! ஆண்டவன் சித்தம் இருந்தால் மறுபடியொரு பயணக் கதையில் சந்திப்போம்.
நன்றியுடன் வணக்கம்.
வேதா. இலங்காதிலகம்.  
ஓகுஸ், டென்மார்க்.

ஞாயிறு, அக்டோபர் 02, 2011

ஆன்மீகம் - 3


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.


சரஸ்வதி துதி.   
ம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்                                                                                              ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஒம்
சுந்தர வதனி சுகுண மனோகரி மந்தகாசமுடை மதிவதனி
   எனும் ராகத்தில்……)
சிந்து பாடும் அடியார்கள் கரங்கள்
ஏந்தி உன்னைத் தொழுதிடவே
காந்த ஒளியுடை அருள் முகத்தோடு
சிந்திடுவாய் உன் காட்சியினை…..                      ( ஓம் சக்தி ஓம் )
ந்துகளான தேவர்கள், பாணர்கள்
வந்து புடை சூழ அலங்காரமாக
துந்துபி நாதங்கள் ஒலித்திடவே
சுந்தரமாயிங்கு வந்திடுவாய்.                                    (ஓம் சக்தி ஓம்…)
ரமுடை வீணை அணியாக
உரமுடன் வாழ்ந்திட நூலொன்று
கரத்தினில் ஏந்திய மதுரவாணி
பிரம்மவிலாசினி வருவாய் அருள்வாய்.          (ஓம் சக்தி ஓம்…)
லர்ந்த தாமரை ஆசனம்அமர்ந்த
அலர்ந்த முகத்தழகு நாயகி
அறிவின் அரசி அர்ச்சிக்கிறோம்.
அற்புத நாயகி சரணம் சரணம்.                                ( ஓம் சக்தி ஓம்….)
ரஸ்வதி பூசையென்பதால் இசையெடுத்து, யேர்மனிய சிறுமி காயத்திரி சிவநேசன் இலண்டன் தமிழ் வானொலியில் பாடினார் )

சனி, அக்டோபர் 01, 2011

தாரமும் குருவும் . பகுதி - 4.6


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)

பகுதி 4.6

அல்லைப்பிட்டி 1977
ஒவ்வொரு ஊரும் ஒரு அடையாளத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒரு கிராமத்திற்கும் இன்னொரு கிராமத்திற்கும் இடையில் 'குமுதம்' இதழில் வருவது போல ஆகக் குறைந்தது 'ஆறு' வித்தியாசங்களாவது இருக்கும், நாம்தான் அவற்றையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. இவ்வாறு கிராமங்களுக்கு இடையிலேயே இவ்வளவு வேறுபாடு எனும்போது நகரங்களுக்கிடையில் 'அறுபது' வித்தியாசங்களாவது இருக்காதா என்ன? ஆனால் மக்கள் ஒரு கிராமத்தையோ, நகரத்தையோ ஏதாவது ஒரு பிரபலமான விடயத்துடன் தொடர்பு படுத்தி விட்டார்கள் என்றால் போதும் அது பின்னர் 'காலாதி காலத்திற்கும்' நிலைத்து விடும்.
நமது யாழ் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 'நல்லூர்' என்றதும் நல்லூர்க் கந்தன் ஆலயம் நினைவிற்கு வருகிறதா இல்லையா? ஆனைக்கோட்டை என்றால் 'நல்லெண்ணெய்' ஞாபகத்திற்கு வருகிறது. புத்தூர் என்றால் நிலாவரைக் கிணறு ஞாபகத்திற்கு வருகிறது.(என் நண்பன் ஒருவனுக்கு புத்தூர் என்றால் 'வாழைக் குலை' நினைவிற்கு வருகிறதாம்!!!) பருத்தித் துறை என்றால் எது ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ 'பருத்தித் துறை வடை' ஞாபகத்திற்கு வந்து விடுகிறது.(இந்த வடையை இலங்கையின் சகல மாவட்டங்களிலும் உள்ளவர்களாலும் தயாரிக்க முடியும் என்பதுடன் தமிழ்நாட்டிலும் இவ்வடை 'தட்டை' எனும் பெயரில் கிடைக்கிறது என்பதும் வேறு விடயங்கள்).
இதே போலவே தமிழ்நாட்டில் மதுரை என்றால் 'மல்லிகைப் பூவும், திருநெல்வேலி என்றால் அல்வாவும், மணப்பாறை என்றால் முறுக்கும்("மணப்பாறை மாடு பூட்டி, மாயவரம் ஏரு பூட்டி" என்பதெல்லாம் கருப்பு வெள்ளைக் காலம்), காஞ்சிபுரம் என்றால் 'பட்டுச் சேலையும்' திண்டுக்கல் என்றால் 'பூட்டும்', திருப்பாச்சி(திருப்பாச் சேத்தி) என்றால் அரிவாளும்(இலங்கையில் இதைக் 'கொடுவாக் கத்தி' என்கிறோம்.) நினைவிற்கு வருவதாக தமிழக மக்கள் கூறுகின்றனர்.
சரி எனது கிராமமாகிய 'அல்லைப்பிட்டி' எனும் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு ஏதாவது நினைவிற்கு வருகிறதா? வராவிட்டால் ஒரு இரண்டு வாரங்கள் மட்டும் பொறுத்திருங்கள். உங்களோடு நிறைய பேசவேண்டியது இருக்கிறது. இன்று உங்களோடு அதிக நேரம் பேச முடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன். எதற்கும் இன்றைய தொடரை நான் ஆரம்பித்த வரியை மீண்டும் ஒரு தடவை பாருங்கள்.
(இன்னும் சொல்வேன்)