வெள்ளி, டிசம்பர் 23, 2011

விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த மர்மப் பொருள் !

ஆபிரிக்க நாடான நமீபியாவில் விண்வெளியில் இருந்து இரும்புக் குண்டு ஒன்று விழுந்தது. தலைநகர் விண்ட்கொயக்கில்(Windhoek) இருந்து 750 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்த அந்த இரும்புக் குண்டு 1.1 மீட்டர் அதாவது 43 'இஞ்ச்' நீளமும், 35 செண்டி மீட்டர் அகலமும் கொண்டது.
இந்தக் குண்டின் எடை 6 கிலோ இருந்தது. இரு 'அரை வட்டங்கள்' வெல்டிங் செய்து ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குண்டு விழுந்ததால் பூமியில் 3.8 மீட்டர் அகலத்தில் 33 செ.மீட்டர் ஆழம் ஏற்பட்டது. இந்தக் குண்டு எங்கிருந்து எப்படி விழுந்தது எனத் தெரியவில்லை. எனவே, இது குறித்து நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தக் குண்டு கடந்த நவம்பர் மாதம் மத்தியில் விண்ணில் இருந்து விழுந்தது. இரும்பினால் ஆன இந்தக் குண்டினால் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. வெடிக்கக்கூடிய தன்மையற்றதாக அது இருந்ததாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி வில்கோ தெரிவித்தார்.
தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று விண்வெளியில் இருந்து குண்டுகள் விழுந்துள்ளன.
நன்றி: www.tamilkurinji.in  

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு. (224)

பொருள்: உதவி பெற்ற பிறகும் அதைப் பெறுபவனுடைய முகம் மலராவிடில் ஒருவன் செய்யும் தானமும் யாசித்தலைப் போல் துயரத்தைத்தான் தரும்.

இன்றைய பொன்மொழி

சுவாமி சின்மயானந்தர் 

வாழ்க்கையில் கொஞ்சமாகச் செல்வம் வைத்திருப்பவனை 'ஏழை' என்று சொல்ல முடியாது. "இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்" என்று ஏங்குகிறவன்தான் என்றைக்குமே பிச்சைக்காரன். ஒரு முழு சாம்ராஜ்ஜியத்திற்குமே அவன் அதிபதியாக ஆகி விட்டிருந்தாலும் சரி அவன் பிச்சைக் காரனே.    

வியாழன், டிசம்பர் 22, 2011

கண்டங்கத்திரி தாவரத்தின் அறிவியல்

ஆக்கம்:  வினோ ரூபி, சென்னை இந்தியா
கண்டங்கத்திரி தாவரத்தின் அறிவியல் பெயர் சொலேனம் சுரட்டேனஸ் பர்ம். இது ஒரு மருந்து வகை தாவரம்.

இந்த தாவரம் முழுவதும் முட்களாக காணப்படும், மலர்கள் கொத்தாக இருக்கும், கனிகள் கோள வடிவத்தில் இருக்கும், விதைகள் தட்டையானவை.

இதன் இலைகளின் சாற்றை மிளகுடன் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்து மூட்டு வலிக்கு மருந்தாக பயன்படுகிறது.

இதன் வேர் ஆஸ்துமா எதிர்ப்பு குணம் கொண்டது. இருமல், காய்ச்சலைப் போக்கும், கனிகளின் சாறு தொண்டை வலியைக் குணமாக்குகிறது.

இருமலுக்கு கனிகளைக் காய வைத்து, பொடியாக்கி, தேனுடன் கலந்து பயன்படுத்தலாம்.

விதைகளை எரித்து அதில் இருந்து வரும் புகையை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களை நுகரச் செய்யலாம், அப்போது உடலில் உள்ள சளி நீங்கும். செரிமானத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் 
குலன்உடையான் கண்ணே உள. (223)  

பொருள்: 'யான் வறியவன்' என்னும் துன்பச் சொல்லை ஒருவன் சொல்வதற்கு முன் அவனுக்கு உதவும் பண்பு நற்குடியிற் பிறந்தவர்க்கே உண்டு. 

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வந்தால் கண் தெரிவதில்லை. இருட்டிலேயே நடந்து வந்தால் கண் நன்றாகத் தெரிகிறது. துன்பத்திலே வாழ்பவனுக்குத்தான் அறிவு பல வகையில் வேலை செய்கிறது.

புதன், டிசம்பர் 21, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நல்லாறு எனினும் கொளல்தீது; மேல் உலகம் 
இல்லெனினும் ஈதலே நன்று. (222) 

பொருள்: நல்ல அறச்செயலுக்கே என்றாலும் பிறரிடம் யாசித்துப் பெறுவது தீமையே. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.