திரு.குமரையா வித்தியாதரன்
மண்ணில்: 16.05.1956
விண்ணில்: 20.02.2016
|
தாங்க முடியாத இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல எமக்கும்தான். நல்ல முறையில் எல்லோருடனும் வேறுபாடு எதுவும் காட்டாது பழகக் கூடிய, உதவும் உள்ளம் கொண்ட, அறிவுசால் ஆளுமை படைத்த ஒரு இனிய நண்பரை இழந்து விட்டோம். அன்னாரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.
எந்த அளவுக்கு தனது கொள்கைகளில், கருத்துக்களில் பிடிவாதமாக இருப்பாரோ அதே அளவு மென்மையான சுபாவமும், குழந்தை உள்ளமும் கொண்டவர் என்பது நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று. நல்ல செயல் ஒன்றை செய்ய வேண்டும் என்றால் எந்தவித தயக்கமும் இல்லாமல் உதவிக்கரம் நீட்டக் கூடியவர். துணிச்சல் மிக்கவர். தனது கருத்துக்களை எந்த இடத்திலும் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் இயல்பு கொண்டவர். இதனால் எந்த இழப்பு ஏற்பட்டாலும் அதனை இட்டுக் கவலைப்படும் குணம் அவரிடம் கிடையாது எனலாம். தனது கொள்கைகளை எந்த இடத்திலும், யாருக்காகவும், எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கவோ, சமரசம் செய்து கொள்ளவோ அவர் தயாராக இருந்ததில்லை. அவரைப் பொறுத்தவரை சரி என்றால் சரி; தவறு என்றால் தவறு என்று எவரிடத்திலும் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார். சொல்லிலும், செயலிலும் என்றும் நேர்மையாகவே வாழ்ந்தார். அவரைப் புரிந்து கொண்டவர்களுக்கு அவர் ஒரு நல்ல மனிதர். புரிந்து கொள்ளாதோர் அவரை ஒரு 'முரட்டுத் தனமான' மனிதராகவே பார்த்தனர்.
நமது நகரத்தில் கடந்த முப்பது வருடங்களாக வாழ்ந்த தமிழர்களில், அறிவாளிகளில் அன்னாரும் முக்கியமான ஒருவர்.விளையாட்டு, பொது அறிவு, அரசியல் என பல துறைகளில் ஆர்வமும் அறிவும் படைத்தவர். அன்னாரின் திடீர் இழப்பு எம்மையெல்லாம் அதிர்ச்சியிலும், ஆறாத் துயரத்திலும் ஆழ்த்தி விட்டது. அன்னாருக்கு எங்கள் அஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கிறோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் - வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (குறள் 50)
இங்ஙனம்
அன்னாரின் பிரிவால் துயருறும்
ஃபிரெடெரிக்ஸ்ஹாவன்(Frederikshavan) ஷேபி(Sæby) நகர நட்புகள்.
முக்கிய குறிப்பு: அன்னாருடைய இறுதிக் கிரியைகள் இன்றைய தினம்(24.02.2016) டென்மார்க், ஃபிரெடெரிக்ஸ்ஹாவன் நகரத்தில் இலக்கம் 160, Brønderslevvej , 9900 Frederikshavn இல் உள்ள Gærum Kirke தேவாலயத்தில் காலை 10.00 மணி தொடக்கம் நண்பகல் 1.00 மணிவரை நடைபெற்று பூதவுடல் Hjørring நகரத்தில் உள்ள மின்னணு மயானத்தில் தகனம் செய்யப் படும் என அவரது குடும்பத்தினர் அறியத் தந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக