திங்கள், ஜூன் 15, 2015

அறிவையாளும் யுக்தி


அறிவையாளும் யுக்தி அவன் தான் ஷோபாசக்தி! 
 

அல்லையூர் பெற்றெடுத்த அரிய மைந்தனே!
அவனியெலாம் புகழ் மணக்கும் எழுதுகோல் வேந்தனே!
பல்கலையும் நடமாடும் ஷோபா நீவாழ்க
பாக்களாலும் பூக்களாலும் உன் புகழை வாழ்த்தினேன் 

சிந்தையெல்லாம் இனிக்கின்ற செந்தமிழின் தேனாறே
எந்நிலையும் எடுத்தியம்பும் முந்து குரலொலியே
குந்தியிருந்து உந்தன் படைப்பை  

சிந்தைக்கு ஏற்றுதல் நமக்கன்றோ பெருமை
இயல் இசை நாடகம் உன் கைவந்த கலை
அதைத்தவிர  உனக்கு ஊரில் என்ன வேலை?
எமக்குத் தெரிந்த அன்று 
தெருப்புலவன், சுவர்க்கவிஞன்
இன்றோ புலத்தில்  குடிபெயர்ந்து
அருந்தமிழ் அன்னையின் ஆற்றல்மிகு பிள்ளையாய் 

அவதாரம் எடுத்தான் சிறந்து - எம்
மனக்கண்ணில் காண்கிறோம் வியந்து.

'தீபன்' ஒளிப்படத்தில் தீபமாய் ஒளிர்ந்தாய்
திறமையெனும் பாதையில் தீர்க்கமாய் நடந்தாய்
விருதுகள் பலபெற்று விவேகியாய் நிமிர்ந்தாய்
உலகம் வியந்திடக்  கலைஞனாய் உயர்ந்தாய்

பூந்தமிழ் மனமெல்லாம் பூத்திருந்து வாழ்க
ஏந்து புகழ்மோகனமாய் என்றென்றும் வாழ்க
மாந்தர்கள் வாழ்த்துகின்ற அறிஞனாய் வாழ்க
நீந்துகின்ற உயர் அறிவில் நீடு வாழ்க.


ஆக்கம் 'கவி வித்தகர்' பாலன் சேவியர்,
அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை 

வியாழன், ஏப்ரல் 30, 2015

கலைஞருக்கு மரியாதை

அன்புறவுகளே வணக்கம்.
நீண்டதொரு இடைவெளியின் பின் எழுதுகிறேன்.நீங்கள் அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.நானும் நலமே. முக்கியமான ஒரு நிகழ்வை உங்களிடம் பதிவு செய்கிறேன்.டென்மார்க்கில் வாழும் கலைஞர்களில் முக்கியமான, குறிப்பிடத் தக்க ஒருவரும், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முக ஆளுமை கொண்டவருமான கவிதாயினி.திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களை ஓகூஸ் தமிழர் ஒன்றியம் எதிர்வரும் சனிக்கிழமை அன்று(02.05.2015) விழா எடுத்துக் கௌரவிக்க உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், மேற்படி விழாவில் கலந்து கொண்டு கவிதாயினியை வாழ்த்தும் வாய்ப்பு அடியேனுக்கும் கிடைத்துள்ளது என்பதை மிகுந்த பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் உங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரைக் கௌரவிப்பது என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு செயல் மட்டுமன்றி, பொருத்தமும் நீதியும், தகுதியும் ஆன ஒரு செயலே ஆகும். மேற்படி நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர் புதியதொரு கொள்கையைக் கையில் எடுத்துள்ளனர். "திறமையாளர்களைத் தேடிப் பாராட்டுவதே புதிய திறமையாளர்களை உருவாக்கும் சிறந்த வழி" என்பதே அந்தத் தாரக மந்திரமாகும். இது நல்லதொரு நேர்மறையான முயற்சி என்பது அடியேனின் அபிப்பிராயம். இது நிச்சயம் வெற்றி பெறும் என்பதுடன் இவை தமிழ்ச் சமூகத்தையும், கலைஞர்களையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேற்படி விழாவின் நிகழ்ச்சி நிரலை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

"ஒன்றுபட்டு உயர்வோம்"
மிக்க அன்புடன் 
இ.சொ.லிங்கதாசன் 
ஆசிரியர் 
அந்திமாலை 
 
 


செவ்வாய், ஏப்ரல் 07, 2015

ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தின் அறிவித்தல்


அனைவருக்கும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தின் அன்பு வணக்கம் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி நாங்கள் ஓகூஸ் நகரத்தில் வசிக்கும்; 'கவிதாயினி' திருமதி வேதா இலங்காதிலகத்திற்கு விழா எடுப்பது பற்றிய படத்தை மேலே காண்கிறீர்கள். இந்த விழா நடைபெறும் தினத்தில் (02.05.2015) இவரை வாழ்த்த விரும்புபவர்கள் ஸ்கைப் மூலமாக மண்டபத்திற்கு நேரடியாகப் பேசும் வசதிகளைச் செய்துள்ளோம். தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். 0045 31258035 அல்லது மின்னஞ்சல் முகவரி arunga25@gmail.com இதை மிக விரைவாக எங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.

இங்ஙனம்
க .துஷ்யந்தன் 
ஓகூஸ்  தமிழர் ஒன்றியம்
டென்மார்க் 

சனி, மார்ச் 28, 2015

இன்று நேரமாற்றம். மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் 28.03.2015 சனிக் கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் அதிகாலை 2.00 மணிக்கு( 29.03.2015 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)  ஐரோப்பாவில்  'நேரமாற்றம்' நிகழ்கிறது  என்பதை ஐரோப்பிய வாசகப் பெருமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இன்றிரவு சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் 2.00 மணிக்கு கடிகாரங்கள் அனைத்திலும் நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப் பட்டு பின்னிரவு(அதிகாலை) 3.00 மணியாக மாற்றப் படும்.(கோடை கால நேரத்திற்கு மாற்றப் படுகிறது) ஐரோப்பிய வாசகர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். தன்னியக்கமாகவே மாறும் தன்மையுள்ள கணனிகள், கைத்தொலைபேசிகள், கடிகாரங்கள் வைத்திருப்போர் தவிர்ந்த ஏனையோர் இன்றிரவு உறங்கச் செல்லும்போது நேரத்தை 1 மணித்தியாலம் அதிகரித்து வைத்தபின் உறங்கச் செல்லுதல் சாலச் சிறந்தது. 
ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந் நேரமாற்றம் கடந்த 08.03.2015 அன்று நிகழ்ந்தமையும், 

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 05.04.2014 அன்று குளிர்கால நேர மாற்றம் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத் தக்கது ஆகும்.



ஆசிரியபீடம் 
அந்திமாலை 

ஞாயிறு, பிப்ரவரி 01, 2015

நவீன புத்தர்

ஓஷோ சொன்ன குட்டிக் கதைகள்:-

அறிவுரைக்கான தகுதி  

ஒரு பெண் தனது குழந்தையினால்
மிகவும் தொந்தரவுக்குள்ளானாள். அவளுக்கு ஒரே ஒரு குழந்தை. அவளது கணவன் இறந்துவிட்டான். அவள் பெரும் பணக்காரிதான். ஆனால் அவளுக்கு வாழ்வில் மிகவும் சலிப்பாகிவிட்டது. அவள் தனது குழந்தைக்காகத்தான் வாழ்ந்தாள். சில சந்தர்ப்பங்களில்

குழந்தைகள் மிகவும் தொந்தரவாகி விடுவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த பையன் இனிப்பைத் தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. டாக்டர்கள் இது மிகவும் தவறான பழக்கம். அவனது உடல்நிலை
கெட்டுவிடும் எனக் கூறி விட்டனர். ஆனால் அந்த குழந்தை கேட்பதேயில்லை.

அவள் ஒரு சூஃபி ஞானியிடம்
அடிக்கடி செல்வாள். ஒருநாள் அவள் தனக்குள் இவ்வாறு சிந்தித்தாள் "இவன் நான் சொல்வதை கேட்பதேயில்லை, அவர் அவருக்கு அருகில் வரும் அனைத்து மக்களையும் ஈர்க்கும் சக்தியுடையவராக இருக்கிறார். அதனால்
இவன் அவர் சொன்னால் கேட்கக் கூடும்". என்று நினைத்தாள்.

அதனால் அவள் அந்த குழந்தையை அந்த
ஞானியிடம் கூட்டி சென்று, "இவன் இனிப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதேயில்லை.
நானும் ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.  கேட்க மாட்டேன் என்கிறான். அதற்கு பதிலாக
பட்டினி கூட கிடக்கிறான். டாக்டர்கள் உடல்நிலை கெட்டுவிடும் என்கிறார்கள். அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். எனது கணவர் இறந்துவிட்டார். இவன் எனது
ஒரே குழந்தை இவனுக்காகத்தான் இருக்கிறேன். என்னால் இவன் பசியாக இருப்பதை பார்க்க
முடியாது, அதனால் இவனுக்கு இனிப்பு கொடுக்க வேண்டி வருகிறது. இனிப்பு இவனுக்கு
'விஷம்' என்று தெரிந்தே கொடுக்க வேண்டி வருகிறது. சர்க்கரை 'வெள்ளை விஷம்'. அதனால்
நான் இவனை இங்கே கூட்டி வந்தேன். இவனுக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள். நீங்கள்
மனிதரில் தெய்வம். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு பலன் இருக்கக் கூடும்" என்றாள்.

அந்த ஞானி குழந்தையை பார்த்தார்.
அவர், "என்னால் இந்த குழந்தைக்கு இப்போது அறிவுரை கூற முடியாது. ஏனெனில் இப்போது நானே இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு
வாரங்கள் கழித்து வாருங்கள். அதற்குள் இந்த இரண்டு வாரங்களும் நான் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறேன். இதை என்னால் செய்ய முடிந்தால் பிறகு என்னால் அறிவுரை கூற
முடியும். இல்லாவிடில் இந்த அறிவுரை கூற சரியான ஆள் நானல்ல" என்றார்.

அந்த பெண்மணியால் நம்பவே முடியவில்லை. அவர் கூறிய பதில்  இன்னும் அபாயகரமானது என்று அப்பெண் நினைத்தாள். ஆனால் அந்தக் குழந்தை மிகவும் ஈர்ப்படைந்தான்.
அவன் அந்த ஞானியின் காலில் விழுந்தான். அவன், "என் அம்மா பல பேரிடம் என்னை அழைத்து
சென்றிருக்கிறாள். அத்தனை பேரும் உடனே எனக்கு அறிவுரை கூறினர். ஆனால் நேர்மையான முதல் ஆள் நீங்கள்தான். இரண்டு வாரங்கள் கழித்து வருகிறேன். நீங்கள் என்ன
சொன்னாலும் செய்கிறேன். நான் உங்களை நம்புகிறேன்" என்று கூறினான்.

குழந்தையின் முன் தனது தவறை ஒத்துக் கொண்ட ஒரு வளர்ந்த மனிதன், "நானே இப்போது இனிப்பு விரும்பி சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறேன், அதனால் இப்போது அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை. அதனால்
இரண்டு வாரங்களில் இந்த அறிவுரையை நானே கடைபிடித்து பார்க்கிறேன். நான்
தோற்றுவிட்டால், என்னை மன்னித்துவிடு. என்னால் அறிவுரை கூற முடியாது. நான்
வென்றுவிட்டால் அப்போது அறிவுரை கூறுவேன். ஒரு வயதான மனிதன் நானே வென்றுவிடும்போது
உனக்கு இள வயது, அதிக ஆற்றலுடன், அதிக புத்திசாலித்தனமாக இருக்கிறாய். உன்னாலும்
வெற்றியடைய முடியும். அதனால் ஒரு முயற்சி செய்து பார் என்று கூற முடியும்" என்றார்.

அந்த தாய் மிகவும் அதிர்ச்சியடைந்தாள். அந்த ஞானி கூறிய இரண்டு வாரங்களில் அவரால் அதைக் கடைப்பிடிக்க
முடியாவிட்டால் எல்லாமும் முடிந்தது. பின் அந்த குழந்தையைக் கூட்டிச் செல்ல வேறு எந்த இடமும் இல்லை எனத் திகைத்தாள்.

இரண்டு வாரங்கள் சென்றபின் அவர்கள் திரும்பி வந்தனர். ஞானி அந்த குழந்தையிடம், "மகனே, அது கடினம்தான். ஆனால்
இயலாதது அல்ல. இந்த இரண்டு வாரங்களும் இனிப்பு சாப்பிடாமல் என்னால் சமாளிக்க
முடிந்தது. நான் இனி என் வாழ்வு முழுவதும் இனிப்பு சாப்பிடப் போவதேயில்லை என உனக்கு உறுதியளிக்கிறேன். இப்போது உனக்கு அறிவுரை கூற எனக்குத் தகுதி இருக்கிறது என நீ
நினைக்கிறாயா?  எனக்கு நீ  அனுமதியளித்தால்
என்னால் உனக்கு அறிவுரை கூற முடியும்" என்றார்.

அந்த பையன், "எதுவும் கூற வேண்டிய
தேவையில்லை. எனக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கு எனது நன்றிகள். உங்களை போன்ற ஒருவர் எனக்கு அறிவுரை கூறுவதற்காகத் தனது வாழ்நாள் பூராவும் இனிப்பு சாப்பிடாமல்
இருப்பது, தானே ஒரு உதாரணமாக, வழிகாட்டியாக இருப்பது என்பது 'நம்பிக்கையுணர்வு' வைக்க தகுதியானதே. நான்
உங்கள் மேல் நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். இந்த வினாடியிலிருந்து இனிமேல்
நானும் இனிப்பு சாப்பிடப் போவதில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்றான்.

நன்றி:ஓஷோ சாஸ்வதம், அவினாசி, திருப்பூர், தமிழ்நாடு.