வெள்ளி, அக்டோபர் 12, 2012

செவ்வாய்க் கிரகம் விற்பனைக்கு!!!

டேனிஷ் மொழியில்: 24timer.dk
தமிழில்: இ.சொ.லிங்கதாசன்

செவ்வாய்க் கிரகத்திலிருந்து பூமியை நோக்கி வந்த துண்டுச் சிதறல்களில் சுமார் 186 கிராம் எடையுள்ள கல் ஒன்று ஜெர்மனியைச் சேர்ந்த அரும் பொருட்கள் சேகரிக்கும் ஒருவரிடமிருந்து டேனிஷ்(டென்மார்க்) இயற்கை வரலாற்றுத் துறை மற்றும் தொல்பொருட் காட்சியகத்தினால் 744.000 டேனிஷ் குரோன்கள் (சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதற் தடவையாக செவ்வாய்க் கிரகத்தில் என்ன உள்ளது என்பதை டேனிஷ் தொல்பொருள் மற்றும் இயற்கை வரலாற்றுத் துறை நிபுணர்களால் கண்டறிய முடியும். மேற்படி செவ்வாய்க் கிரகத்தின் துண்டுச் சிதறல்களில் சுமார் 7கிலோ கிராம் எடையுள்ள துண்டுகள் கடந்த வருடத்தின் ஜுலை மாதத்தில் வட மேற்கு ஆபிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டின் தென் பகுதியில் வீழ்ந்தன. மேற்படி துண்டுகளில் உள்ள கனிமத்திற்கு மேட்டியோரிட் (Meteorite) என்று பெயர். மொராக்கோ நாட்டில் கிடைக்கப்பெற்ற துண்டுகளில் சுமார் 186 கிராம் எடை கொண்ட ஒரு துண்டை மட்டும் டேனிஷ் இயற்கை வரலாற்று அருங் காட்சியகம் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் அமெரிக்க டாலர்கள் விலை கொடுத்து வாங்கியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் சுமாராக 500 கிலோகிராம் (½தொன்) எடை கொண்ட செவ்வாய்க் கிரகத்தின் துண்டுச் சிதறல்கள் பூமியை நோக்கி வருகின்றன. இவற்றில் பெரும் பகுதி கடலிலும், நீர் நிலைகளிலும் வீழ்ந்து விடுகின்றன. பூமியில் வீழும் சிறிய தொகையான துண்டங்கள் மனிதர்களால் கண்டுபிடிக்கப் படுவது மிகவும் அபூர்வம் ஆகும்.

நன்றி: RITZAU செய்திச் சேவை, டென்மார்க். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக