திங்கள், செப்டம்பர் 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி

குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனன்இலனாம்; ஏமாப்பு உடைத்து. (868)


பொருள்: ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனாய் இருந்தால் அவன் துணை இல்லாதவன் ஆவான். அந்த நிலை அவனுடைய பகைவர்க்குச் சாதகமாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

உழைப்புக்கு நிகரான ஒரு வரம் மனிதனுக்குக் கிடைக்கப் போவதில்லை. உழைப்பானது தொந்தரவு, தீயொழுக்கம், தரித்திரம்(வறுமை) ஆகிய பெருந்தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகிறது.

ஞாயிறு, செப்டம்பர் 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி

கொடுத்தான் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து
மாணாத செய்வான் பகை. (867)


பொருள்: வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன(பொருந்தாதவற்றை) செய்வான் பகைமையைப் பொருள் கொடுத்தாவது பெற்றுக் கொள்ள வேண்டும். (அதாவது அவனுடன் நட்பு கூடாது)

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து

ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று.

பொருள்: ஒரு பெண்ணோடு தவறான உறவு வைத்திருப்பது மட்டும் விபச்சாரம் அல்ல. எந்த ஒரு ஆண்மகனும் ஒரு பெண்ணை ஆசையுடன்(காமத்துடன்)பார்த்தாலும் அதுவும் விபச்சாரத்திற்குச் சமம்.

சனி, செப்டம்பர் 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி

காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்
பேணாமை பேணப் படும். (866)

பொருள்: ஒருவன் தன்னையும் பிறரையும் அறியாக் கோபம் உடையவனாயும், மிகப்பெரிய ஆசை உடையவனாயும்இருந்தால் அவனுடைய பகைமை எளிதில் ஏற்றுக் கொள்ளப் படும்.

இன்றைய பொன்மொழி

திருமுருக கிருபானந்த வாரியார் 


எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகிவிடும். வைரம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது. அதுபோல் எந்தப் பாவம் செய்தாலும் போக்கிக் கொள்ளலாம். ஆனால் நன்றி மறந்த பாவத்தைப் போக்கவே முடியாது.

வெள்ளி, செப்டம்பர் 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி
 
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்புஇலன் பற்றார்க்கு இனிது. (865)   

பொருள்: ஒருவன் நீதிநூலை ஓதாமலும், அது விதித்த தொழில்களைச் செய்யாமலும், தனக்கு வரும் பழியை நோக்காமலும், நற்பண்பு இல்லாமலும் இருந்தால் அவன் பகைவர்க்கு எளியனாவான்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
நம்பிக்கையைக் கைவிடாது வாழ்பவனுக்கே அதிர்ஷ்டம் கைகொடுக்கிறது. நம்பிக்கையைக் கைவிடாதிருப்பதே அதிர்ஷ்டத்தின் ஆதாரம்.

வியாழன், செப்டம்பர் 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 87, பகை மாட்சி

நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும் 
யாங்கணும் யார்க்கும் எளிது. (864)
பொருள்: ஒருவன் வெகுளி நீங்காதவனாயும் நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாயும் இருந்தால் அவனை வெற்றி கொள்ளுதல் எக்காலத்திலும், எவர்க்கும் எளியதாகும்.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்

எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! நீங்களும்
விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள்.
உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால்
மனிதப் பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள்.

புதன், செப்டம்பர் 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 87 பகை மாட்சி

அஞ்சும் அறியான் அமைபுஇலன் ஈகலான் 
தஞ்சம் எளியன் பகைக்கு. (863)
பொருள்: அஞ்சுபவன், அறிய வேண்டுவனவற்றை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவர்க்கும் கொடுத்து உதவாதவன் என்னும் இத்தகையவன் பகைவர்க்கு எளியவனாவான்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

எந்த மலரும் பூக்கும்போது நான் பிணத்திற்கு மாலையாவேன் என்று சபதமிடுவதில்லை. நான் அர்ச்சனை மாலையாவேன் என்று கனவு காண்பதில்லை. அவற்றைப் பறிக்கும் மனிதர்கள்தான் அதைத் தீர்மானிக்கிறார்கள். இது போலவே இப்பூமியில் பிறக்கும் குழந்தைகளும் என்பதை புரிந்து கொள்.

செவ்வாய், செப்டம்பர் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி

அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான் 
என்பரியும் ஏதுஇலான் துப்பு. (862)
 
பொருள்: ஒருவன் அன்பு இல்லாதவனாய், வலிய துணையில்லாதவனாய், தானும் வலிமையற்றவனாய் இருந்தால் அவன் பகைவரது வலிமையை எவ்வாறு அழிக்க முடியும்.

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

46. எதை விட்டால் மனிதன் மற்றவர்களுக்குப் பிரியமுள்ளவன் ஆகிறான்?
 மனிதன் கர்வத்தை விட்டால் மற்றவர்களுக்குப் பிரியமுள்ளவனாகிறான்.

47. எதை விட்டு விட்டால் மனிதன் துயரமடைவதில்லை?
 கோபத்தை விட்ட மனிதன் வாழ்வில் துயரம் அடைவதில்லை.

48. எதை விட்டவன் பொருள் உள்ளவன் ஆகிறான்?
 காமத்தையும், பேராசையையும்  விட்டவன் பொருள் உள்ளவனாகிறான்.

திங்கள், செப்டம்பர் 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி

வலியார்க்கு மாறுஎற்றல் ஓம்புக; ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. (861)
 
பொருள்: தம்மைவிட வலியவரிடம் மாறுபட்டு எதிர்த்தலைக் கைவிடல் வேண்டும். தம்மைவிட மெலியவர்மேல் பகை கொள்வதை மேற்கொள்ள வேண்டும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

அழுவதற்கு உனக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் சிரிப்பதற்கு இலட்சம் காரணங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்.

ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்


இகலான்ஆம் இன்னாத எல்லாம்; நகலான்ஆம்
நன்னயம் என்னும் செருக்கு. (860)

பொருள்: ஒருவனுக்கு மாறுபாடு காரணமாய் துன்பங்கள் உண்டாகும்; நட்பினால் நல்ல நீதி என்னும் பெருஞ்செல்வம் ஏற்படும்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 
 
தம் சகோதர, சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.
தம் சகோதரரையோ சகோதரியையோ 'முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்.
தம் சகோதரர் சகோதரியை 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

சனி, செப்டம்பர் 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்


இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. (859)

பொருள்: தனக்கு நற்காலம் வரும்போது ஒருவன் இகலைப் பற்றி நினைக்கமாட்டான். தனக்கு அழிவுக் காலம் வரும்போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

எது நமக்குத் தேவை என்பதைத் தெரிந்து கொள்ளாமலே அதை அடைவதற்காகப் படாதபாடு படும் போதுதான் மன நிம்மதி கெடுகிறது.

வெள்ளி, செப்டம்பர் 20, 2013

மூன்றாவது ஆண்டு நிறைவில் உங்கள் 'அந்திமாலை'

எம் நன்றிக்கு உரியவர்கள்

நாம் கடந்து வந்த மூன்று வருடங்கள் எனும் இச்சிறிய காலப் பகுதியில் இவ்  இணையம் வளர்வதற்கு உதவியும், ஊக்கமும், ஒத்துழைப்பும் நல்கிய நல்லுள்ளங்கள்:

திரு.சொ.சதீஸ்வரன், யாழ்ப்பாணம், இலங்கை.


'கவி வித்தகர்' திரு. பாலசிங்கம் சேவியர், அல்லைப்பிட்டி, இலங்கை.


திரு. ஜெயசுந்தரேஸ்வரா சந்திரபாலு, கனடா 

'கவிதாயினி' வேதா இலங்காதிலகம், www.kovaikkavi.wordpress.com ஓகூஸ், டென்மார்க்.

திரு. கரன் பாலராஜா நடராஜா, ரணாஸ், டென்மார்க்.

திரு. சு.சண்முகநாதன்(நல்லூர்ச் சண்) பெரடஸ்காவன், டென்மார்க்.
திருமதி. வினோதினி பத்மநாதன், ஸ்கெயான், டென்மார்க்.
திரு.தி. பரஞ்சோதிநாதன், ஸ்கெயான், டென்மார்க்.
திருமதி. வினோ ரூபி, சென்னை, இந்தியா. 

எமது நன்றிக்குரிய இணையங்கள், இணையத்துறை சார்ந்த நண்பர்கள்:
www.Google.com
www.blogger.com
www.youtube.com
www.extremetracking.com
www.99counters.com 

www.wikipedia.org

www.tamilmanam.net

www.indli.com

www.tamilveli.com

www.thiratti.com

www.tamil.com

திரு.கலையரசன், kalaiy.blogspot.com , நெதர்லாந்து.

திரு.ஜோ மில்டன், cdjm.blogspot.com, சிங்கப்பூர்.
திரு.கே.செல்லத்துரை
(www.alaikal.com) டென்மார்க்
முனைவர்.இரா.குணசீலன்
(www.gunathamizh.com) பெங்களூர், இந்தியா
திரு.ப.மகேஷ்பாபு
(tamilanveethi.blogspot.com) சென்னை, இந்தியா
திரு.பழனி  கந்தசாமி ,swamysmusings.blogspot.com

 
www.rammalar.wordpress.com , மலேசியா.

திரு.செ.ஆனந்தக்கரசு, allaiyoor.blogspot.com, பிரான்ஸ்.

திரு.ராஜா poovarasu-raja.blogspot.com, பிரான்ஸ்
www.theevagam.com இலங்கை

www.senniyoor.com , இலங்கை.

www.mandaitivu.ch , சுவிட்சர்லாந்து.
www.ithyapoomi.org நெதர்லாந்து

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்


இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்; அதனை 
மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. (858)

பொருள்: வேற்றுமைக்குப் பணிந்து போதல் ஆக்கம் தரும். அதனை எதிர்த்து வெல்லக் கருதினால் கேடு வரும்.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்

சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

வியாழன், செப்டம்பர் 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்


மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். (857)

பொருள்: மாறுபாட்டை விரும்புகின்ற தீவினையாளர் வெற்றி பொருந்துவதற்குக் காரணமான நீதி நூற்பொருளை அறியமாட்டார்.

இன்றைய சிந்தனைக்கு

மார்ட்டின் லூதர் 

1. கேட்பதையெல்லாம் நம்பிவிடாதீர்கள்.

2. செய்ய வேண்டும் என்று நினைப்பதையெல்லாம் செய்து விடாதீர்கள்.

3. தெரிந்ததையெல்லாம் சொல்லி விடாதீர்கள்.

4. இருப்பதையெல்லாம் உபயோகித்து விடாதீர்கள்.

புதன், செப்டம்பர் 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்


இகலினும் மிகல்இனிது என்பவன்  வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. (856)

பொருள்: இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிப் போதலும் அழிதலும் விரைவில் உள்ளன.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

முயற்சியை நீ சிறுகதையாக்கினால் உன் வாழ்க்கையில் வறுமை தொடர்கதை ஆகி விடும்.

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்


இகல் எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரோ 
மிகல்ஊக்கும் தன்மை யவர். (855)

பொருள்: வேற்றுமையை எதிர்த்து ஒற்றுமையை விரும்பி நடக்கின்றவரை யாராலும் வெல்ல முடியாது.

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்
  

43. மனித வாழ்க்கையின் இலாபங்களில் உத்தமமானது(உயர்வானது) எது?
 மனித வாழ்க்கையின் இலாபங்களில் உயர்வானது நோயின்மை ஆகும்.

44. சுகங்களுள் உயர்வானது எது?
 சுகங்களுள் உயர்வானது திருப்தி 

45. யாரோடு ஏற்பட்ட நட்பு குறைவடையாது?
சாதுக்களோடு(துறவிகளோடு) ஏற்பட்ட நட்பு என்றைக்குமே குறைவடையாது.

திங்கள், செப்டம்பர் 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்


இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். (854)

பொருள்: இகல் என்று சொல்லப்படும் கொடிய துன்பம் இல்லையானால் அதுவே ஒருவனுக்குச் சிறந்த இன்பத்தைத் தரும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

உயர்ந்த மனிதனின் பிள்ளையாகப் பிறப்பது தற்செயலாக நிகழ்கிறது. உயர்ந்த மனிதனாக வாழ்வது நம் கையில்தான் உள்ளது.

ஞாயிறு, செப்டம்பர் 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 86 இகல்

இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத் 
தாவில் விளக்கம் தரும். (853)
பொருள்: ஒருவன் இகல்(பகை) என்னும் துன்ப நோயை நீக்கிவிட்டால் அது அவனுக்கு அழிவில்லாத புகழைக் கொடுக்கும்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 
 
கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கு கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவர்.
கட்டளைகளைக் கடைபிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவர்.
மறைநூல் அறிஞர், பரிசேயர்(சமயத் தூதுவர்கள்) ஆகியோரின் நெறியை விட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில் நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது.

சனி, செப்டம்பர் 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 86இகல்


பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி 
இன்னாசெய் யாமை தலை. (852)

பொருள்: தம்மோடு பொருந்தாமையைக் கருதி ஒருவன் வெறுப்பவற்றை செய்த போதிலும் அவனோடு மாறுபடுதலைக் குறித்து அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் நல்லது.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

ஒன்று நடந்துதான் தீரும் என்றால் அதிலே கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது?. அது போலவே நடந்து முடிந்தவைகளை நினைத்து வருந்துவதிலும் யாதொரு பயனும் இல்லை.

வெள்ளி, செப்டம்பர் 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 86 இகல்


இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்
பண்புஇன்மை பாரிக்கும் நோய். (851)

பொருள்: எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறு படுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோயை, மாறுபாடு என்று சொல்வர் அறிஞர்.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்
கோபத்தை நமது கைகளில் பற்றிப் பிடித்துகொண்டு இருப்பது வேறொருவர் மீது எறியும் நோக்கத்துடன் ஒரு தீக்கங்கை(நெருப்புத் தணலை) உங்கள் கைகளில் பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்றது. தீக்காயம் ஏற்படுவது உங்களுக்குத்தான்.

வியாழன், செப்டம்பர் 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 85 புல்லறிவாண்மை


உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான், வையத்து 
அலகையா வைக்கப் படும். (850)

பொருள்: உலகில் எல்லோரும் 'உண்டு' என்பதை 'இல்லை' என்று சொல்லும் ஒருவன், உலகத்தில் உலாவும் ஒரு பேய் என்று கருதப்படுவான்.

இன்றைய சிந்தனைக்கு

நாலடியார்
ஒருவரிடம் நாம் கொண்டிருக்கும் நட்பு மகிழம்பூவைப்போல் இருக்க வேண்டும்; தாமரைப் பூவைப் போல் இருக்கக்கூடாது. தாமரை மலர் மலர்ந்தால் அப்படியே இருப்பதில்லை. மாலையில் குவிந்துவிடும். ஆனால் மகிழம்பூ மலர்ந்தால் மீண்டும் குவிவதே இல்லை.

புதன், செப்டம்பர் 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 85 புல்லறிவாண்மை


காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதவன் 
கண்டானாம் தான்கண்ட வாறு. (849)

பொருள்: அறிவற்றவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையில் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

நம்மிடம் ஏதும் இல்லை என்று நினைப்பது ஞானம். நம்மைத் தவிர  மற்றவர்களிடம் ஏதும் இல்லை என்று நினைப்பது ஆணவம்.

செவ்வாய், செப்டம்பர் 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 85 புல்லறிவாண்மை


ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்உயிர் 
போஒம் அளவும்ஓர் நோய். (848)

பொருள்: தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் அறிந்து கொள்ளாதவனாய் இருப்பவனுடைய உயிர் நீங்கும் வரை அவனுக்கு நோயாக இருந்து வரும்.

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

39. மனிதன் முக்கியமாகக் பின்பற்ற வேண்டிய மார்க்கம் எது?
 மனிதன் முக்கியமாகப் பின்பற்ற வேண்டிய மார்க்கம் தர்மம்.

40. மனிதனுக்குச் செல்வத்தைக் கொடுப்பவற்றுள் முக்கியமானது எது?
 மனிதனுக்குச் செல்வத்தைக் கொடுப்பவற்றுள் முக்கியமானது 'சாமர்த்தியம்'(திறமை).

41. செல்வங்களுள் உத்தமமானது(உயர்வானது) எது?
 செல்வங்களுள் உத்தமமானது 'கலையறிவு'

திங்கள், செப்டம்பர் 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 85 புல்லறிவாண்மை



அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும் 
பெரும்இறை தானே தனக்கு. (847)

பொருள்: அரிய மறைப்பொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான்.

இன்றைய பொன்மொழி

நபிகள் நாயகம்
  
எண்ணங்கள் எப்போதும் மேலானவையாக இருந்திடல் வேண்டும். பரிசுத்தமான மனம்தான் நல்லதை நினைக்கும், நன்மை செய்யத் தூண்டும்.

ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை

அற்றம் மறைத்தலோ புல்அறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. (846)
 
பொருள்: அறிவில்லாதவன் தன்னிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காதபோது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் போன்ற அறிவற்ற தன்மையாகும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

உழைப்பும், முயற்சியும் இல்லாதவன் அடுத்தவர்களுக்கு உதவ நினைப்பது வீரமில்லாத பேடி ஒருவன் கையில் வாள் எடுத்து ஆண்மையைக் காட்டுவது போன்றது.

சனி, செப்டம்பர் 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
 
 
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும். (645)

பொருள்: அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடந்தால், அவர் குற்றமறக் கற்ற பொருளைப் பற்றியும் மற்றவர்களுக்கு ஐயம் உண்டாகும்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 

கொடுங்கள். அதன் மூலம் உங்களுக்குப் பலமடங்கு திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையினால் அளக்கிறீர்களோ அதே அளவையினால் உங்களுக்கும் அளக்கப்படும். -லூக்கா 6:38-

வெள்ளி, செப்டம்பர் 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை

வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை 
உடையம்யாம் என்னும் செருக்கு. (844)
 
பொருள்: தனக்கு எல்லாம் தெரியும் என்னும் ஆணவமே அறிவு முதிர்ச்சியில்லாத்தனம் எனப்படும்.