வியாழன், டிசம்பர் 31, 2015

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

எங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் எங்கள் உளங்கனிந்த புத்தாண்டு 2016 வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

"ஒன்றுபட்டு உயர்வோம் "
மிக்க அன்புடன் 
-ஆசிரியர் -

அந்திமாலை 

இன்றைய சிந்தனைக்கு

நகைச்சுவையான  தமிழ்நாட்டுப் பழமொழிகள் 


1. அவசரத்துக்கு அண்டாக்குள்ளயும் கை நுழையதாம். 

2. கோணல் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.

3. தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?

4. போகாமல் கெட்டது உறவு, கேளாமல் கெட்டது கடன்.

5. "அடியேன்னு கூப்பிட ஆத்துக்காரி இல்ல, குழந்தை பேரு கோபால கிருஷ்ணனாம்".

6. ஏண்டா ராமா கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டா, நீயே பொண்டாட்டியா இருன்னானாம்". 

  

செவ்வாய், டிசம்பர் 29, 2015

'கடற்கன்னி' என்பது உண்மையா? கட்டுக் கதையா?

கடற்கன்னி (Mermaid) என்பது மேற் பகுதி பெண்ணாகவும், கீழ்ப்பகுதி மீன் வாலும் கொண்ட ஓரு நீர்வாழ் உயிரினம் பற்றிய கற்பனை விபரிப்பாகும். கடற்கன்னி பற்றிய நாட்டாரியல் கதைகள் ஐரோப்பா, சீனா, இந்தியா என உலகலாவிய கலாசாரங்களில் காணப்படும் ஓர் விடயமாகும். முதன் முதலாக இது பற்றிய கதைகள் புராதன அசிரியாவில்(தற்போதைய 'ஈராக்') காணப்பட்டது. 'அட்டாகடிசு' எனும் தேவதை தன் மனிதக் காதலனைத் தவறுதலாகக் கொன்றதும், அவமானத்தினால் கடற்கன்னியாக மாறினாள் என அக்கதை கூறுகின்றது. இன்னுமொரு நாட்டாரியல் பின்வருமாறு கூறுகிறது: "அஃதாவது மனிதாபிமானம், நன்மை செய்தல் அல்லது மனிதனுடன் காதலில் வீழ்தல் ஆகிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு 'கற்பனையாக' இந்தக் 'கடற்கன்னி' பற்றிய கதைகள் இருக்கக் கூடும்" எனக் கூறுகின்றது.


ஆனால் இன்றுவரை உலகில் ஒரு தடவையேனும் மேற்கூறப் பட்ட படைப்பாகிய 'கடற்கன்னியை' கண்ணால் கண்டவர் எவருமில்லர். வித்தியாசமான தோற்றத்தைக் கொண்ட மீன் இனங்கள் மீனவர்களின் வலையில் பிடிபடும்போது அது 'கடற்கன்னி' என மீனவர்கள் நம்புவதும், அதுவே வதந்தியாகி, பத்திரிகைச் செய்திகளாக இடம்பெறுவதும் உண்டு. ஆனால் 'கடற்கன்னி' எனப் படுவது ஒரு கற்பனைப் படைப்பு என்பதை விஞ்ஞானிகள் அறிவர்.

திங்கள், டிசம்பர் 28, 2015

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்

நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ 
புணர்ந்துஊடி நிற்போம் எனல். (1260)  

பொருள்: தீயில் கொழுப்பை இட்டாற் போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிர்க்கு 'இசைந்து ஊடி நிற்போம்' என்று ஓடும் தன்மை உண்டோ? 

இன்றைய பொன்மொழி

கன்ஃபூஷியஸ் 

நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது;
நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது;
நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.