திங்கள், மார்ச் 31, 2014

நகை வாங்க போறீங்களா? முதலில் இதைப் படியுங்கள்!!!

நகைகள் வாங்கச் செல்லும்முன் தங்கத்தின் வெள்ளியின் அன்றைய தின மதிப்பீடு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 

1. நகைகள் வாங்கச் செல்லுமுன் எந்த நகை வாங்கச் செல்கிறோம் என்பதை உறுதி செய்த பின்னரே கடைக்குச் செல்ல வேண்டும்.
*
2. தரமான கடைகளில் நகைகளை வாங்குங்கள் காரணம் வீதிக்கு வீதி நகைக்கடைகள் உள்ளன.
*
3. நீங்கள் எவ்வளவு பணத்திற்கு நகைவாங்கப்போகிறீர்கள் என்பதனை கடைக்குச் செல்லுமுன் தீர்மாணிக்க வேண்டும்.

4. செய்கூலி எவ் வளவு சதவீதம் சேதாரம் எவ்வளவு சதவீதம் போடப்படுகிறது என்பதனை கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும்.
 
5. நீங்கள் குறித்துக்காட்டும் வடிவத்தில் நகை செய்வதற்கான பணத்தினை கேட்டுத் தீர்மானித்து முற்பணம் கொடுத்து பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

6. நகைகள் செய்வதற்காக ஓடர் கொடுக்கும் போது எவ்வளவு தங்கத்தில் செய்யப்படுவதாக பதியப்பட்டுள்ளதோ அதேபோல் நகைவேலை முடிவடைந்த பின்னர் கடையிலிருந்து எடுத்துவரும்போது நகையின் அளவை நிறுத்துப் பார்க்கவேண்டும்.


7. நகைகள் வாங்கும்போது கற்கள் பதித்த நகைகளை வாங்குவதை விடுத்து பொன்னாலான ஆபரணங்களை வாங்கினால் பணத்தின் தரத்திற்கு ஏற்ப நகை காணப்படும்.

8. நீங்கள் வாங்கும் நகை எந்த வகையைச்சார்ந்தது என்பதை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.இல்லையேல் நீங்கள் வாங்கும் தங்க நகையில் குறியீடுகள் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

கைகளை பாதுகாப்பது எப்படி?

நகைகளை அணிவதற்கு முன்னதாகவே பவுண்டேஷனோ பவுடரோ போட்டுக்கொள்ளுங்கள். நகைகளை அணிந்த பின் இவற்றைப்பூசிக்கொண்டால் நகைகள் பொலிவிழந்து விடும்.

1. நகைகளை கழற்றி பத்திரப்படுத்தும் போது வெல்வெட் துணியில் போட்டு வைப்பது நல்லது. வெறும் தகரப் பெட்டிகளில் போட்டுவைத்தால் கீறல்கள் விழுந்து பொலிவு கெடும்.

2. ஒவ்வொரு நகையும் தனித்தனி பெட்டிகளில் போட்டுவைத்தால் எப்போதும் புத்தம் புதிதாகவே காட்சி தரும்.

3. நிரந்தரமாக அணிந்து கொள்ளும் நகைகளை வாரந்தோறும் சுத்தம் செய்யவேண்டும்.

4. கழுவி சுத்தம் செய்யும் போது இளஞ்சுடுநீரில் ஷாம்புவைக் கலந்து மென்மையான தூரிகையால் தேய்த்து கழுவினால் “பளிச் சென்றிருக்கும்


நன்றி: இருவர்உள்ளம்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு

இன்றும் வருவது கொல்லோ, நெருநலும் 
கொன்றது போலும் நிரப்பு. (1048)
 
பொருள்: நேற்று என்னைக் கொன்றது போல எனக்குத் துன்பத்தைச் செய்த வறுமை இன்றும் என் பக்கம் வருமோ? வந்தால் நான் என்ன செய்வேன்? என்றே வறுமையால் துன்பப் பட்ட ஒவ்வொரு ஏழையின் சிந்தனையும் இருக்கும்.

இன்றைய சிந்தனைக்கு

பகவத் கீதை 

உலகம் ஒரு விளையாட்டு மேடை. வாழ்வு ஒரு பெரிய விளையாட்டு. அதை நன்கு விளையாடத் தெரிந்தவர்களுக்கு, வாழ்க்கையை எளிதாக்கத் தெரிந்தவர்களுக்கு அது ஒரு கொண்டாட்டம். மற்றவர்களுக்கு அது திண்டாட்டம்.

ஞாயிறு, மார்ச் 30, 2014

வறுமையில் வாடிக், கடந்த ஜனவரியில் மடிந்த தமிழ் மன்னரின் வாரிசு!

இலங்கை மன்னரின் கடைசி வாரிசு வறுமையில் மரணம்.
 இலங்கையில் ஆட்சி செய்த, கடைசித்  தமிழ் மன்னரின் வாரிசான, பிருதிவிராஜ், வறுமையில் வாடி, வேலூரில், கடந்த 17.01.2014, மாரடைப்பால் இறந்தார்.
இலங்கை, கண்டியில்மதுரை  நாயக்கர் வம்சத்தை  சேர்ந்த, தமிழ் மன்னர்கள்கி.பி.,1739 - 1815 வரை, ஆட்சி செய்தனர். இலங்கையில்   ஆட்சி செய்த, கடைசித் தமிழ் மன்னர் 'கண்ணுச்சாமி' என்ற விக்ரமராஜசிங்கன் ஆவார் . இவர் மீது, நான்கு முறை, போர் தொடுத்தது ஆங்கில  அரசு, இறுதியில், கண்டியைக் கைப்பற்றியது. போரின் இறுதியில் மன்னரும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாக இருந்து வந்தனர். சூழ்ச்சிக்காரர்கள் உதவியுடன் அவர்களை சிறைபிடித்தனர். மன்னனையும், ஏழு பட்டத்தரசிகளையும் கைது செய்து, கப்பல் மூலம், தமிழகம் கொண்டு வந்து, 1816ல், வேலூர் கோட்டையில் இருந்த ' கண்டி மகாலில்'  16ஆண்டு 6 மாதங்கள் அவர்களைச்  சிறை வைத்தனர்.
கடந்த, 1832, ஜன., 30ம் தேதி, விக்ரமராஜசிங்கன் இறந்தார். அவரது உடல், வேலூர், காட்பாடி ரோடு, பாலாற்றங்கரையில் புதைக்கப்பட்டு, கல்லறை கட்டப்பட்டது.பாலாற்றங்கரையில் 1990ல் முத்து மண்டபம் கட்டபட்டது. இந்த மண்டபம் மன்னர் விக்கிரம ராஜசிங்கரின் கம்பீரத்தை பறைசாற்றுவதாக உள்ளது. அதன் அருகில், 1843ல் இறந்த, அவரது மகன் ரங்கராஜா கல்லறையும் அமைக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த, விக்ரமராஜ சிங்கரின் மகன் ரங்க ராஜாவுக்கு, கண்டி மகாலில், பிறந்தவர் தான், பிருதிவிராஜ். வாரிசுகள், ஒவ்வொருவராக இறந்த பின், பிருதிவிராஜை, யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பின், கண்டி மகாலை விட்டு, வெளியேறிய பிருதிவிராஜ், வேலூர், சாயிநாதபுரம் நடேச முதலி தெருவில் வசித்து வந்தார். இவரை அப்பகுதி பொதுமக்கள் 'இளவரசன்' என்றே அழைத்து வந்துள்ளனர்.
கூலி வேலைக்கு சென்று, பி.ஏ., படித்துள்ளார். தியேட்டர்களில், மேலாளராக பணியாற்றிய, பிருதிவிராஜுக்கு, உடல் நிலை பாதிக்கப்பட்டது. அப்போது, ஆட்சியில் இருந்த, தி.மு.க., அரசிடம், ‘தான், இலங்கையை ஆண்ட, கடைசி தமிழ் மன்னர் விக்ரம ராஜசிங்கன் வாரிசுஎன்றும், ஏதாவது, உதவி செய்யும்படி கேட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை, பிருதிவிராஜ் அனுப்பியுள்ளார்.
எந்த நடவடிக்கையும் இல்லாததால், சத்துவாச்சாரியில், தியேட்டர் ஒன்றில், டிக்கெட் கிழிக்கும் வேலை செய்த போது, விபத்தில் காலில் அடிபட்டதால், வீட்டுக்குள்ளேயே, பிருதிவிராஜ் முடங்கினார். 74 வயதான பிருதிவிராஜ், கடந்த 17.01.2014 அன்று  காலை, 7:40 மணிக்கு, மாரடைப்பால் இறந்தார்.
தியேட்டரில் மேலாளராக பணியாற்றிய போது, புஷ்பா என்ற பெண்ணை மணந்த, பிருதிவிராஜுக்கு, 2 மகன்கள் உள்ளனர்.(விக்கிரமன், விஜயகுமார்) ஒரு மகன், எலக்ட்ரிஷியனாகவும், இன்னொருவர், சி.எம்.சி., மருத்துவமனையில், ‘அட்டெண்டர்ஆகவும் பணியாற்றி வருகின்றனர். 
நன்றி: இலக்கியா மற்றும் அனலைதீவு அறநெறி 

இன்று நேரமாற்றம். மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் 30.03.2014 (ஞாயிற்றுக் கிழமை அதிகாலை) ஐரோப்பாவில்  'நேரமாற்றம்' நிகழ்கிறது  என்பதை ஐரோப்பிய வாசகப் பெருமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் 2.00 மணிக்கு கடிகாரங்கள் அனைத்திலும் நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப் பட்டு பின்னிரவு(அதிகாலை) 3.00 மணியாக மாற்றப் படும்.(கோடை கால நேரத்திற்கு மாற்றப் படுகிறது) நேற்றைய தினம் நள்ளிரவு உறக்கத்திற்கு செல்லும்போது கடிகாரங்களில் நேரத்தை மாற்றி வைத்துவிட்டு உறங்கச் சென்றவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் இதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந் நேர மாற்றம் கடந்த 09.03.2014 அன்று நிகழ்ந்தமையும், 

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 06.04.2014 அன்று குளிர்கால நேர மாற்றம் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத் தக்கது ஆகும்.



ஆசிரியபீடம் 
அந்திமாலை 

நேர மாற்றம் ஏன்,எதற்கு?

ஆக்கம். இ.சொ. லிங்கதாசன் 
இன்றைய தினம் (30.03.2014) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஐரோப்பாவிலும், கடந்த 09.03.2014 அமெரிக்கக் கண்டத்திலும்(அமெரிக்கா, கனடா) கடிகாரங்களில் நேரம் ஒரு மணித்தியாலம் முன் நகர்த்தப்பட்டு,நேரம் கூட்டப்படுகிறது. இது ஏன்? என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சுருக்கமாக இரண்டு வரிகளில் இக்கேள்விக்கு விடையளிப்பதாயின், இம்முயற்சி இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி விடலாம் அவையாவன,


  1. சூரிய ஒளியின் உச்சப் பயன்பாடு.
  2. மின்சாரம் மற்றும் எரிபொருள்களைச் சேமித்தல்.
இந்தப் பகல் ஒளியை அதிகமாகப் பயன் படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, நேர மாற்றம் பற்றிய திட்டம் முதல் முதலாக, இரு அறிஞர்களால் இரு வேறு நாடுகளுக்கு, ஒரே தருணத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. முதலாவதாக அறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின் அவர்களால் பிரெஞ்சு அரசுக்கு முன்மொழியப்பட்டபோது, அரசுப்பதவியில் இருந்தவர்களால் அவர் ஏளனம் செய்யப்பட்டார்.
இரண்டாவதாக 1907 ஆம் ஆண்டில் பிரித்தானிய அறிஞராகிய வில்லியம் வில்லெட் என்பவர் அப்போதிருந்த பிரித்தானிய அரசுக்கு பரிந்துரை செய்தபோது, இது ஒரு 'முட்டாள் தனமான' திட்டம் என்று பிரித்தானிய அரசும், உடனடியாக நிராகரித்தது.
இவ்விரு அறிஞர்களும் 'பகல் ஒளியை' அதிகமாகப் பயன்படுத்துவதற்காக, நேரத்தை மாற்றும் தமது திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்று பின்வருவனவற்றைப் பட்டியலிட்டனர்.
  1. முன்தூங்கி, முன்னெழுவதால் மக்களின் செல்வம், அறிவு, நலம் ஆகியவை அதிகரிக்கும்.
  2. ஐரோப்பாமுழுவதும் பகல் குறைவாகவும், இருட்டு அதிகமாகவும் இருக்கும் காலப் பகுதியாகிய சுமார் ஆறு மாதங்களிலுள்ள ஏறக்குறைய 183 இரவுகளிலும் ஐரோப்பாமுழுவதும் உபயோகிக்கப்படும், மெழுகுவர்த்திகள், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்கள்(அக்காலத்தில் இவையே பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டன) கோடிக்கணக்கான அளவில் சேமிக்க அல்லது மிச்சப்படுத்த முடியும், செல்வந்த மக்கள் பயன்படுத்திய மின்சாரத்தையும் கோடிக்கணக்கான அலகுகள் சேமிக்க முடியும்.
ஆனால் இவர்களது திட்டமானது பிரித்தானிய, பிரெஞ்சு அரசுகளால் 'உதாசீனம்' செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டது.

மேற்படி இரண்டு அறிஞர்களும் பிரெஞ்சு, இங்கிலாந்து அரசுகளுக்குப் பரிந்துரை செய்தபோதும் அவை அரசுப்பதவிகளில் அமர்ந்திருந்தவர்களால் ஏளனம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப் பட்டது என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டேன் அல்லவா? ஆனால் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் ஒரு சில வருடங்களின் பின்னர், 'முதலாம் உலகப் போரின்போது' ஜேர்மனி இச்செயற் திட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டது. முதல் உலகப் போர் தொடங்கிய ஒரு சில வருடங்களுக்குள் 30.4.1916 தொடக்கம் 1.9.1916 வரையுள்ள காலப் பகுதியில் இத்திட்டத்தை மக்கள்மத்தியில் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தினால், மக்களைக் குறைந்த அளவில் எரிபொருட்களையும், மின்சாரத்தையும் உபயோகிக்க வைக்கும் மறைமுகத் திட்டமே இது. ஆனால் இந்த மறைமுகத் திட்டம் பற்றிக் குறிப்பிடத் தக்க அளவில் புரிந்து கொள்ளாத 'ஜெர்மானிய மக்கள்' அப்போதைய அரசு அறிவித்த 'தாரக மந்திரங்களாகிய' "நாட்டுக்கு உதவுவோம், நாட்டைக் காப்போம்" என்ற வாசகங்களில் மெய்மறந்து, இத்திட்டத்திற்குப் பூரண ஆதரவு நல்கினர். இதன்மூலம் மக்களின் எரிபொருள், மின்சாரப் பாவனையைக் கணிசமான அளவில் குறைக்க முடிந்த ஜேர்மனி அரசினால் அவ்வாறு சேமிக்கப்பட்ட எரிபொருள் மற்றும் மின்சாரத்தைக் கொண்டு போதிய அளவில் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்ய முடிந்தது, எரிபொருட்களைப் படைத்துறை வாகனங்களுக்குப் பற்றாக்குறையில்லாமல் வழங்க முடிந்தது.

தனது 'எதிரி' இத்தகைய திட்டமொன்றின் மூலம் பயனடைகின்றான் என்பதை அறிந்த 'பிரித்தானியா' விடுமா என்ன? உடனடியாகவே இத்திட்டம் பிரித்தானியாவிலும் அதன் ஆட்சிக்குக் கீழ் இருந்த குடியேற்ற நாடுகளிலும், அமெரிக்காவிலும் அறிமுகப் படுத்தப் பட்டது. அக்காலத்தில் இலங்கை, இந்தியா உட்பட பல ஆசிய நாடுகள் 'பிரித்தானியப் பேரரசின்' ஆட்சிக்குட்பட்டிருந்ததால், வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை, இந்திய மக்கள் தாம் விரும்பியோ, விரும்பாமலோ இத்திட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டியவர்களானார்கள். ஆனாலும் ஒரு சில 'சோதிடர்கள்' இத்திட்டத்தினை எதிர்த்துக் குரலெழுப்பவும் தயங்கவில்லை. இருப்பினும் ஆளும் வர்க்கத்தினால் அவர்களின் வாய்களுக்குப் 'பெரிய பூட்டு' போடப் பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது இத்திட்டம் பலவருடங்கள் நீடித்ததால், இலங்கை, இந்திய மக்கள் இத்திட்டத்தின் பாலும், பிரித்தானிய அரசின்மீதும் கடும் வெறுப்பையும் கொண்டிருந்தனர். இவ்வெறுப்பு சுதந்திரப் போராட்ட இயக்கத்தினருக்கு சாதகமான அம்சமாக மாறியிருந்ததையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
அக்காலத்தில் இலங்கை, இந்தியா உட்பட பல ஆசிய நாடுகள் 'பிரித்தானியப் பேரரசின்' ஆட்சிக்குட்பட்டிருந்ததால், வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை, இந்திய மக்கள் தாம் விரும்பியோ, விரும்பாமலோ இத்திட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டியவர்களானார்கள். ஆனாலும் ஒரு சில 'சோதிடர்கள்' இத்திட்டத்தினை எதிர்த்துக் குரலெழுப்பவும் தயங்கவில்லை. இருப்பினும் ஆளும் வர்க்கத்தினால் அவர்களின் வாய்களுக்குப் 'பெரிய பூட்டு' போடப் பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது இத்திட்டம் பலவருடங்கள் நீடித்ததால், இலங்கை, இந்திய மக்கள் இத்திட்டத்தின் பாலும், பிரித்தானிய அரசின்மீதும் கடும் வெறுப்பையும் கொண்டிருந்தனர். இவ்வெறுப்பு சுதந்திரப் போராட்ட இயக்கத்தினருக்கு சாதகமான அம்சமாக மாறியிருந்ததையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

அடுத்து வந்த காலப் பகுதியாகிய 1947 மற்றும் 1948 ஆண்டுகளில் இந்தியாவும், இலங்கையும் படிப்படியாகப் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்ததன் பின்னர், இவ்வாறு ஐரோப்பியர்கள் போன்று கோடையிலும், குளிர்காலத்திலும் நேரத்தை மாற்றவேண்டிய தேவை இலங்கை, இந்திய அரசுகளுக்கு இருக்கவில்லை. ஆனால் எரிபொருள் பற்றாக்குறையோ, மின்சாரத்தைச் சிக்கனப் படுத்தவேண்டிய தேவையோ இவ்விரு அரசுகளுக்கும் ஒருபோதும் ஏற்படவில்லை என்று கூறமுடியாது. ஏனெனில் இந்திய அரசானது தனது நாட்டில் கிடைக்கின்ற சிறிய அளவு பெற்றோலியத்தைத் தவிர முழு நுகர்வுக்காக பெரும்பாலும் ஈராக் நாட்டின்மீதே தங்கியிருந்தது. ஆனால் 80 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஈரான், ஈராக் யுத்தம் மற்றும் 90 களின் தொடக்கத்தில் ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் அவர்கள் 'குவைத்' என்ற தனது சிறிய அண்டை நாட்டைக் கைப்பற்றியதன் விளைவாக ஏற்பட்ட அமெரிக்க(நேசநாட்டுப் படைகள்), ஈராக் யுத்தம் போன்றவற்றால் இந்தியாவிலும் எரிபொருட் பற்றாக்குறை ஏற்பட்டது. இருப்பினும் இந்திய அரசு இதனைச் சமாளிக்க சில சிறிய உத்திகளைக் கையாண்டது. முதலாவதாக எரிபொருட்களின் விலையைச் சற்று உயர்த்தியது, அதேபோல் பேருந்து, தொடரூந்துக் கட்டணங்களை உயர்த்தியது, இரவில் சிறிய நகரங்களிலிருந்து சாதாரண கிராமங்களுக்குப் பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை அரைவாசியாகக் குறைத்தது, ஏழை விவசாயிகளுக்குப் பயிர்ச்செய்கையின் பொருட்டு வழங்கிவந்த 'இலவச மின்சாரத்தினை' நிறுத்தியது. இவ்வாறாக எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரத் தட்டுப்பாடு போன்றவற்றை இந்திய அரசு சமாளித்துக் கொண்டது. இந்திய அரசானது ஒருபோதும் இத்தகைய நிலைமைகளில், ஐரோப்பியர்களைப்போல் 'நேரத்தை மாற்றுகின்ற' நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இதேபோலவே இலங்கை அரசும் இரண்டாவது உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட பல நெருக்கடிகளையும் ஒருவாறு சமாளித்தது. இதற்குக் காரணம் இலங்கை மக்களில் 10% மக்களே வாகனம் வைத்திருப்பவர்களாகவும், 15% மக்களே மின்சாரத்தை உபயோகிப்பவர்களாகவும் இருந்தனர். ஆனால் 1995 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட நிலைமையானது, இலங்கை அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியதுடன், ஐரோப்பியர்களைப்போல் சிந்திக்கவும் வைத்தது.

சனி, மார்ச் 29, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு

அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும் 
பிறன்போல நோக்கப் படும். (1047)

பொருள்: அறத்தோடு தொடர்பு இல்லாத வறுமையுடையவன் பெற்ற தாயாலும் பிறன் போலக்(அந்நியன் போல) கருதப் படுவான்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

இதுதான் வாழ்க்கை என்றோ, இவ்வளவுதான் வாழ்க்கை என்றோ எண்ணி விடாதீர்கள். மனித வாழ்க்கை என்பது எண்ண முடியாத பல திருப்பங்களைக் கொண்ட மிகப்பெரிய ஆறு.

வெள்ளி, மார்ச் 28, 2014

டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் தாய்மொழி எது?

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
மறைந்த சிம்மக் குரலோன் டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் தாய்மொழி எது? என்று கேட்டால் நம்மில் பலரும் கண்ணை மூடிக்கொண்டு 'தமிழ்' என்று கூறி விடுவர். ஆனால் உண்மையில் அவரது தாய்மொழி தற்போது அழிந்து போகும் நிலையில் உள்ள 'சௌராஷ்டிரா' மொழி ஆகும். இந்த மொழியைப் பேசுவோர் குஜராத் மாநிலத்திலிருந்து வியாபார நிமித்தமாகவும், படை எடுப்புகளின்போதும் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுவதும் பரவியபோது தமிழ் நாட்டிற்கும் வந்து சேர்ந்தனர். தற்போது இவர்கள் தமிழ் நாட்டில் 'சிறு பான்மையினர்' ஆவர். இவர்கள் தங்கள் வீடுகளில் 'சௌராஷ்டிர' மொழியையும், வீட்டிற்கு வெளியே 'தமிழ்' மொழியையும் அழகாகப் பேசுகின்றனர். இந்தியா முழுவதும் இம்மொழியைப் பேசுவோர் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் இந்தச் சமூகத்தவர் விரும்பிப் பார்ப்பது 'தமிழ்த் திரைப்படங்களே' ஆகும். இவர்கள் தமது மொழியில் விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களையும் தயாரித்துள்ளனர். இவர்கள் தயாரித்த 'ஈகொஸ் எனோ'(Egos Eno) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. "இசைக்கு மொழியில்லை" என்பது உண்மையானால் 'கிண்டல்' செய்யாமல் பார்வையிடவும். அதுதான் அவர்களது மொழிக்கும், அமரர்.டி.எம்.எஸ் அவர்களுக்கும் நாம் செய்யும் மரியாதை.

காணொளி உதவிக்கு நன்றி: Chitrakala Suraj

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 105 நல்குரவு

நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் 
சொல்பொருள் சோர்வு படும். (1046)

பொருள்: மெய்ந்நூல் பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னாலும் வறுமையுடையார் கூறும் சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயனற்றுப் போகும்.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் தத்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும். உன்னால் முடிந்தால் அந்த ஏழைக்கு ஒரு வேளை உணவாவது அளி. அது சமயப் பணியை விட மேலானது.

வியாழன், மார்ச் 27, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் 
துன்பங்கள் சென்று படும். (1045)
 
பொருள்: வறுமை என்று சொல்லப்படும் துன்பத்தால் பலவகைத் துன்பங்களும் வந்து சேரும்.