ஞாயிறு, ஜூலை 31, 2011

மன இறுக்கம் எனும் 'மன அழுத்தம்'

ஆக்கம்: வினோதினி பத்மநாதன்
ஸ்கெயான், டென்மார்க்.

நான் வாசித்து கேட்டு அறிந்து கொண்ட விடயங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் என நினைக்கின்றேன். நீங்களும் இதனை அறிந்து அதன்படி முயன்று
ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.

இன்று புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் நம்மில் பலரது பிரச்சனை 'மன இறுக்கம்'. இதனை
எவ்வாறு தீர்க்கலாம்? எல்லோரிடமும் நம் வேதனைகளை சட்டென்று சொல்லி விட முடியாது. அதன் விளைவு நாம் அதனை எண்ணி எண்ணியே மனதிற்குள் வேதனைப்பட்டுக் கொள்கின்றோம். இறுதியில் மன இறுக்கதிற்கு ஆளாகின்றோம். அப்படிப்பட்ட மன
இறுக்கத்திலிருந்து விடுபட சில எளிய வழிமுறைகளைப் பார்ப்போமா?

இதோ உங்களுக்காகச் சில ஆலோசனைகள்:

மன இறுக்கத்தை போக்கும் வழிமுறைகள்

1) சத்தான உணவைச் சாப்பிடுங்கள்!
'ருசியான உணவு' என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித 'மந்த' நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2) நன்றாக உறங்குங்கள்!
நல்ல ஆழ்ந்த உறக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே இளைப்பாறுகின்றன (Refresh). 
தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் 'உடல்நலக்குறைவு' நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணிநேரத் தூக்கம் அவசியம்.

3) நடவுங்கள்! ஓடுங்கள்!
தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும், மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும்,  மெனக்கெட்டு செல்லவேண்டுமா?
எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40 வயதுக்காரர் 20 வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4) ஓய்வெடுங்கள்!
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். 'ஓய்வெடுத்தல்' என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மூச்சை மெல்ல விடுங்கள்.
கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5.) சிரியுங்கள்!
மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு" என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு.
சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக
முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும்.
எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர்களை யாவரும் விரும்புவர்.
அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

(தொடரும்) 

இன்றைய பொன்மொழி

வோல்டன் 
உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.

சனி, ஜூலை 30, 2011

ஒரு நடிகனின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது அவமானமா?


ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்

உலகில் திரைப்பட கலைஞர்களுக்கு மட்டுமென்றில்லை, எழுத்தாளர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு, பல துறைகளில் புகழ்பெற்று விளங்குபவர்களுக்கு ரசிகர் இருப்பது ஒன்றும் புதிய செய்தியில்லை ..இந்த 'ரசிகர்' என்ற பதம் ஒருவரின் கலை மீது தனி அபிமானம் வைத்திருக்கும் ஒருவன் என்பதைத் தானே குறிக்க வேண்டும் ..ஆனால் நம் நாட்டில் ,அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 'ரசிகர்' என்று சொல்லிவிட்டால் , பொழுதண்ணைக்கும் வேலை வெட்டிகளை மறந்து அபிமான நடிகருக்கு மன்றம் அமைத்து ,போஸ்டர் ஒட்டி , கோஷம் போட்டுக் கொண்டிருக்கும் சிலரை மட்டும் குறிப்பதாக ஒரு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது ,அல்லது சிலர் அப்படி கற்பித்துக் கொள்கிறார்கள்.
ஒருவர் தன்னை சாருவின் ரசிகர் ,ஜெயமோகனின் ரசிகர் என்று சொன்னால் அது பெருமை போலவும் , இன்னொருவர் தன்னை கமல் ரசிகர் ,ரஜினி ரசிகர் என்று சொன்னால் அது ஏதோ அவமானத்துக்குரியது போலவும் கட்டமைக்கப்படுகிறது . இதிலே என்ன பெரிய வெங்காய வித்தியாசம் இருக்கிறது என எனக்கு புரிவதில்லை . சிலரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் "நான் ரசிகர்-லாம் இல்லீங்க .ரஜினி படம் விரும்பி பார்ப்பேன்" என்பார்கள் .ஏதோ நாம் நீங்க யாருடைய ரசிகர் மன்றத்தில் இணைந்து பணிபுரிகிறீர்கள் என கேட்டது மாதிரி .. ரஜினி படம் விரும்பி பார்ப்பவர் ரஜினி ரசிகர் .இதுக்கு மேலே அவர் என்ன அர்த்தப்படுத்திக்கொள்ளுகிறார் என தெரிவதில்லை . இன்னும் சிலர் "எனக்கு எல்லா நடிகர்களும் ஒண்ணு தான்" -ன்னு ஒரு உலக மகா தத்துவத்தை சொல்லுவார்கள் ..இல்லையென்றால் நாம் அவரை ஒரு நடிகரின் ரசிகர் என அவமானமாக நினைத்து விடுவோமாம்.

இன்னொன்று ஒருவரின் ரசிகர் என்றால் அவர் சொல்லுவதே வேதவாக்காக கொண்டவர் ,அவரின் போட்டி நடிகரை வெறுப்பவர் என ஒரு பிம்பம் ..இதெல்லாம் ரசிகர் மன்றங்களில் சேர்பவர்களுக்கு சரியாக இருக்கலாம் ..ஏனென்றால் ரசிகர் மன்றங்களில் இருப்பவர்களில் பாதி பேர் உண்மையிலேயே அந்த நடிகரின் கலையை ரசிப்பதால் இணந்தவர்கள் என சொல்ல முடியாது ..இல்லையென்றால் ரஜினி மன்றத்தை சார்ந்தவர் அதிருப்தியால் விஜயகாந்த் மன்றத்தில் சேர்ந்தார் என்றெல்லாம் இருக்க முடியாது .ஏதோ ரஜினியின் நடிப்பில் திடீர் அதிருப்தி வந்தா அவர் மாறினார் .மன்றத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை .பிழைக்க வழியில்லை ..எனவே அரசியல் கட்சிகளுக்கு தாவுவது போல தாவுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் சிவாஜி ரசிகன் ,கமல் ரசிகன் .இதை சொல்லுவதால் நான் ஒன்றும் அவமானப்படவில்லை .சிவாஜி கணேசனின் கலைக்கு நான் ரசிகன் .அதே நேரத்தில் சிவாஜி கணேசன் என்ற அரசியல் வாதிக்கு நான் தொண்டனாகவோ ,ஆதரவாளனாகவோ இருந்ததில்லை .இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க தெரிந்தது . ரசிகர் மன்றத்தில் இணைந்திருக்கவில்லை .இன்னும் சொல்லப்போனால் இதுவரை தியேட்டரில் அவர்கள் திரையில் தோன்றும் முதல் காட்சியில் கைதட்டலோ விசிலோ அடித்ததில்லை (விசில் அடிக்க முயற்சி செய்தும் வரவில்லை ,அது வேறு விஷயம்) .அதனால் ஒரு நடிகரின் ரசிகர் கூட்டத்தின் அளவை அறிமுகக்காட்சியில் எழும் விசில் சத்தத்தை வைத்து கணக்கிடும் முறையை நான் ஒத்துக்கொள்ளுவதும் இல்லை.

சிவாஜி ரசிகன் என்பதால் எம்.ஜி.ஆர் படம் பார்க்க மாட்டேன் என அடம் பிடிப்பதில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆரின் 135 படங்களில் ஏறத்தாழ
90 படங்களை பார்த்திருக்கிறேன் .சில படங்களை பல முறை பார்த்திருக்கிறேன் .இன்றும் எம்.ஜி.ஆர் பட பாடல்கள் என்றால் அத்தனை விருப்பம் .எம்.ஜி.ஆர் படங்களில் வந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்களின் வீடியோ தொகுப்பை ஏறத்தாழ எல்லா வார இறுதியில் ஒரு முறை பார்ப்பவன். இதே போல கமல் ரசிகன் என்பதால் ரஜினி படம் பார்க்க மாட்டேன் என்று அடம் பிடிப்பதில்லை ..கமல் படம் வந்தால் ஒரு வாரத்துக்குள் பார்த்துவிட வேண்டும் என நினைப்பேன் .ரஜினி படம் வந்தால் இரண்டு வாரத்துக்குள்..இந்த ஒரு வாரம் தான் வித்தியாசம் .நீண்ட நாட்களுக்கு பின் தியேட்டரில் நான் பார்க்காத ரஜினி படம் குசேலன் (சில காரணங்களுக்காக) .மற்ற படங்கள் இயக்குநர்களைப் பொறுத்து ,மற்றவர் சொல்வதை பொறுத்து . இதே போல எனக்கு தெரிந்த நண்பர்கள் பலரும் ரஜினி ,கமல் இருவரின் படங்களையும் தவறாமல் பார்ப்பவர்கள் ..ஆனால் இருவரில் ஒருவருக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் என்பது தான் ஒரு சின்ன வேறுபாடு .

சினிமா என்பது எழுத்து போன்ற ஒரு கலை . வரலாற்று ஆய்வுகள் ,விஞ்ஞான கட்டுரைகள் போன்ற உருப்படியான எழுத்துக்களை தவிர்த்து , வெறும் புனைவுகளையும் அது குறித்த சண்டைகளையும் ,சுய சொறிதல்களையும் எழுதும் இலக்கியவாதிகளுக்கு ரசிகனாய் இருப்பதை விட ,இதை விட உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமாவில் கலைப்பங்களிக்கும் ஒரு கலைஞனின் திறமைக்கு ரசிகனாய் இருப்பது எந்த விதத்தில் தாழந்தது ?

ஆம் .நான் சிவாஜி ரசிகன் ,கமல் ரசிகன் ,கண்ணதாசன் ரசிகன் ,இளையராஜா ரசிகன் ,நாகேஷ் ரசிகன் ,எம்.ஆர்.ராதா ரசிகன்.

இன்றைய பொன்மொழி

ஜான் மில்டன்
நம்பிக்கை குறையும்போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.

வியாழன், ஜூலை 28, 2011

வாழ்வியல் குறள் - 5

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க் 


அன்பு 
மெல்லிய உணர்வுக் கயிறு மனதில்
அல்லியாய்ப் பூத்து ஆனந்திக்கும்.
ன்பினால் புன்னகை உதட்டில் வரும்
கண்களில் கண்ணீர் வரும்.
ண்மை அன்பு எத்தனை திண்மைத் 
துன்பங்களையும் தாங்கும் வலிமையுடைத்து.
ண்மை அன்பு ஒருவனுக்கு யானை 
பலம் தரும் சக்தியுடைத்து.
ன்பினால், அரசு, வீரம், காதல்
கொடை அனைத்தும் உருவாகும்.
ழலை, மாதா, மாணவர், மாஉலகிற்கும்
மகோன்னத  ஜீவசக்தி  அன்பு.
த்தனை பொருள் பணம் இருந்தென்ன
அன்பிலார் எதுவும் அற்றவர்.
ரடுமுரடான கற்களில் நடக்கும் உணர்வே
அன்பிலாரோடு செல்லும் பயணமும்(வாழ்வும்).
ன்பிற்காக உயிரையும் கொடுக்கும் மகா
சக்தியுடையது உண்மை அன்பு.
ன்பு அகிலத்து நோய்களைத் தீர்க்கும்
இன்ப அதிசய ஊற்று.

இன்றைய பொன்மொழி

சாணக்கியர்
மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது 'தீ' ஆகாது.

புதன், ஜூலை 27, 2011

என்னையே நானறியேன் - இறுதி அங்கம்


ஆக்கம்: கௌசி, ஜேர்மனி



வரம் பெற்ற வாழ்வு
திறம் கெட்டுப் போனாலும்
உரம் கொண்ட வரமது
உருக்குலைக்கும் உருக்கினார் வாழ்வை

வாழ்நாட்களில் வந்து போகும் சோகநினைவுகள் வரதேவி மூளைப் புதையலில் அழியாத அறிவுப்பலகையாய் அச்சடிக்கப்பட்டிருந்தன. அவ்வப்போது தலைகாட்டும் நினைவுகளை விரட்டியடிக்க வரதேவி விரும்பிய பணி மீண்டும் வீடு தேடி வந்தது. திறமையும் அறிவும் மறைக்கப்பட்டாலும் மறுக்கப்பட்டாலும் மடைதிறந்த வெள்ளம் போல் ஓர்நாள் பெருக்கெடுத்தே தீரும். இதனாலேயே அறிவுச்செல்வம் அழிக்கமுடியாத செல்வமாய்க் கருதப்படுகிறது. அறியாதமொழி, புரியாத மனிதர்கள், தெரிந்திராத வாழ்வு எதுவாய் இருந்தாலும் அறிவுச் செல்வம் கிடைக்கப்பெற்றார் அந்தஸ்து வாழ்வை அகிலம் எங்கு சென்றாலும் அடையப் பெறுவார். வரதேவி இவ்வாறே எதிர்காலத் தலைமுறைகள் தமிழால் தலைநிமிர்ந்து நிற்கத் தேடித் தன் மனைபுகுந்தார் தம் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்தாள். மீண்டும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் மனதில் பிரகாசித்தது. மீண்டு;ம் ஆர்வ வெள்ளம் மனமெங்கும் பாயத் தொடங்கியது. தொழிலாய்க் கொள்ளாது, பணியாய்க் கொண்டு பயின்ற பல கல்விக்களஞ்சியங்களைப் பாலர் தொட்டுப் பருவ வயதினர்வரைத் தாரைவார்க்கத் தீர்மானித்தாள். தமிழ்ப்பாடசாலை சென்றாள். பயின்றாள், பயிற்றுவித்தாள், மனநிறைவு பெற்றாள். ஆசிரியத்தொழில் நாளுங்கற்று நாளுங்கற்பிக்கும் தொழிலல்லவா! மாணவர்கள் கற்க ஆசிரியர்கள் கற்க வேண்டியதும் கற்பிக்க வேண்டியதும் கடமை அல்லவா. இனியொரு தடவை இவ்வரதேவி கற்பித்தலில் தடை காணமாட்டாள். தடைசெய்வார் துணிவுதளர்ந்த நிற்கும் நேரமிதுவென முற்றாக நம்பியதனால், முடிவாய் இப்பணிக்கு முகங்கொடுக்கத் துணிந்தாள். வாரம் இருதடவைகள் காணும் தமிழ்ச்சிறுவர்கள் முகங்கள், அவள் மனதிற்கு மருந்தாகியது. நோயை விரட்டியடிக்கும் பயிற்சியாகியது. 
     
இந்நிலையில் கரண் வாழ்வில் காலம் என்ன மாற்றத்தைக் காட்டியது? காத்திருக்கும் வாழ்வில் காலம் தந்த பரிசை யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள் வேண்டியது கட்டாயமாகிறது. கரண் கால் விரலில் கறுப்பாய் ஒரு புள்ளி அதிசயமாய்த் தோன்றியது. மெல்ல மெல்லக் கால்விரல் நிறம் மாறத் தொடங்கியது. உருக்குலையும் நிலை கண்ட வைத்தியர்கள், இவ்விரலைப் பாதத்திலிருந்து அகற்றிவிட்டனர். ஓர்விரல், ஈர்விரல் என அவ்விரல்கள் அனைத்தும் பாதத்திலிருந்து விடைபெற, இதன் தாக்கத்தால் முழங்காலில் கீழ்ப்பகுதி பழுதடையும் நிலை கண்ட வைத்தியர்கள் முழங்காலின் கீழுள்ள பகுதியை அகற்றிவிட்டார்கள். ஒற்றைக்காலில் வாழ்வைக் கழிக்க வேண்டிய தண்டனை கிடைக்கப் பெற்றுத் தடுமாறிவிட்டான் கரண். இதை விதி என்பதா? இல்லை வினை விதைத்தான் வினை அறுப்பான் என்பதா? ஒரு மனிதன் செய்யும் தவறுகள் தண்டிக்கப்படும் வேளையில் அவன் அகற்றிய புண்ணியங்கள் புதுப்பொலிவு பெற்றுத் துணை தரத் துடித்துக் கொண்டு ஓடிவரும் இந்த வகையில் ஒற்றைக் கால் இழந்த கரணுக்கு ஒரு தடியாய் யார் இருப்பார்? தாலியின் மகத்துவம் இங்கு தலைநிமிர்ந்து நிற்கின்றது. 
தமிழர் கலாசாரம் என்றும் அழிந்துவிட மாட்டாது என வரதேவியின் பணிவிடை ஆணித்தரமாகக் காட்டியது. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடக்கப் போவது நல்லதாகட்டும் எனத் தன் அணைப்பில் மட்டுமே எதிர்காலத்தைக் கழிக்கவிருக்கும் கணவனைப் பராமரிக்கும் பாரிய பொறுப்பைத் தலைமேல் கொண்டாள். உலகம் உருண்டையானது. எங்கு சுற்றியும் திரும்பவும் அந்த இடத்திற்கே வந்தேயாக வேண்டும். மருத்துவமனை கரணுக்கு நல்ல பல பாடங்களைக் கற்றுத் தந்தது. சிந்தித்துச் சிந்தித்துத் தனக்குத் தானே பட்டை தீட்டித் தன் வாழ்வைப் பொலிவாக்கினான். தன் எதிர்கால வாழ்வைத் தன் மனையாள் கையிலே தங்கியிருக்கும் பேருண்மை புரிந்து கொண்டான். பெட்டிப்பாம்பாய் வீட்டினுள் அடங்கிக் கிடக்கும் கணவனின் தேவைகளைத்  தெரிந்து புரிந்து தீர்த்து வைத்த வரதேவி, வாழ்வை மாற்றியமைக்கும் காலத்தை எண்ணிப் பார்த்தாள். தனக்குள்ளே ஒரு சிரிப்பு. இது அலட்சியச் சிரிப்பா! இல்லை வாழ்ந்து பார்த்த வாழ்வுஞானச் சிரிப்பா! குடியிருக்கும் வீடானது அடிக்கடிப் பழைய நினைவுகளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. வேறு மனை புகுந்தால் வேற்று எண்ணங்கள் மனதில் பதியத் தொடங்கும். புதியவீடு, புதிய சூழ்நிலை புதிய வீட்டின் மாற்று அலங்காரம், அனைத்திலும் ஏற்படும் மாற்றமானது மனதில் மாறுதலை ஏற்படுத்தலாம் என்ற தீர்மானம் மனதில் வலுப் பெற்றது. இப்போது ஒரு புதிய முயற்சி முனைப்புப் பெற்றது. பத்திரிகைப் பக்கங்கள் திருப்பப்படுகின்றன. வீடு வாடகைக்கு விடப்படும்...... இது எமது தராதரத்திற்கு ஒத்துவருமா? வீடு இருக்கும் சூழ்நிலை பொருத்தமாக இருக்குமா? தேடத் தொடங்கினாள். அடுத்துவரப் போகின்ற தூரத்து வெளிச்சத்தை எதிர்பார்த்து வரதேவி காத்திருக்கின்றாள்.

கதையின் கதாநாயாகி கண்ணீர்வரிகள் என் கைப்பட்டு இலக்கிய வரிகளாயின. இது ஒரு பக்கப் பார்வையின் அலசலே. வரதேவி கணவன், மகன், சூழலிலுள்ளோர் பார்வையில் வேறுவிதமாய் இக்கதை அலசப்படலாம். அனைத்துப் பக்கப் பார்வையிலும் உருமாறி இலக்கியம்  விரிவுபடலாம். ஆயினும் 6 பாகங்களும் காத்திருந்து பொறுமையுடன் வாசித்து மனம் பதித்த உங்களுக்கு நன்றியைத் தெரிவித்து உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். 

செவ்வாய், ஜூலை 26, 2011

வாசகர்களின் கவனத்திற்கு

இன்றைய தினம் (26.07.2011) வெளியாகிய 'நாடுகாண் பயணம்' பகுதியில் 'சீனா' பற்றிய மேலதிக தகவல்கள் இன்று மாலையில் சேர்க்கப் பட்டு, பதியப்பட்டுள்ளது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்

ஆசிரிய பீடம் 
அந்திமாலை

நாடுகாண் பயணம் - சீனா

நாட்டின் பெயர்:
சீனா(China)

வேறு பெயர்கள்:
மக்கள் சீனக் குடியரசு (People's Republic of China / PRC)

*தமிழில் 'சீனா' எனும்போது பொதுவாக பெரு நிலப் பரப்பாகிய மக்கள் சீனக் குடியரசையே எண்ணுகிறோம். இருப்பினும் உலகில் இரண்டு சீனாக்கள் உள்ளன என்பதை பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

முதலாவது சீனாவின் பெயர் மக்கள் சீனக் குடியரசு (People's Republic of China) இப்பெரு நிலப் பரப்பு சீனா மற்றும் முன்னாள் பிரித்தானியக் குடியேற்றப் பகுதியாகிய ஹொங் கொங் (Hong Kong), மற்றும் முன்னாள் போர்த்துகேயக் குடியேற்றப் பகுதியாகிய மக்காவு (Macau) ஆகியவற்றைக் குறிக்கும்.
இரண்டாவது சீனாவின் பெயர் 'சீனக் குடியரசு' (Republic of China / ROC) இது தாய்வான்/தைவான் தீவுடன், Penghu, Kinmen, Matsu, மற்றும் பிரட்டாஸ் தீவுக் கூட்டங்களைக் (Pratas Islands) கொண்ட 'தைவான்' நாட்டைக் குறிக்கும். தாய்வான் நாடு 1912 ஆம் ஆண்டு சீனாவுடன் உறவை முறித்துக் கொண்டாலும், உலக அரங்கில் சீனாவின் ஒரு பகுதியாகவே பார்க்கப் படுகிறது. தற்போதும் உலக அங்கீகாரத்தை எதிர்பார்த்தபடியும், 'தனிநாட்டுப் பிரகடனம் செய்தால்' மக்கள் சீனக் குடியரசால் தாக்கப்படும் 'அபாயத்தை' எதிர்நோக்கியபடியும் உள்ள 'இறைமை' குறைந்த ஒரு விதமான 'சுயாட்சி' நாடு ஆகும்.

அமைவிடம்:
கிழக்கு ஆசியா 

எல்லைகள்:
வடக்கு - மொங்கோலியா, ரஷ்யா,கஜகஸ்தான். 
தெற்கு - வியட்னாம், லாவோஸ், பர்மா 
மேற்கு - இந்தியா, நேபாளம், பாகிஸ்தான். 

தலைநகரம்:
பெய்ஜிங் (Beijing)

மிகப் பெரிய நகரம்:
ஷங்காய் (Shanghai)

அலுவலக மொழி:
மண்டரின் (புட்டொங்குவா / Putonghua)

ஏனைய பிராந்திய மொழிகள்:
கன்டோனீஸ் (Cantonese), ஆங்கிலம், போர்த்துக்கேய மொழி, உய்க்கர் (Uyghur), திபெத்திய மொழி(Tibetan), மொங்கோலிய மொழி(Inner Mongolia) இவை தவிரவும் 292 வகையான சீன மொழியின் கிளை மொழிகள்.

இனங்கள்:
ஹன்(Han) இனத்தவர் 91.5 %
மீதி 56 வகையான வெவ்வேறு இனங்கள்.

கல்வியறிவு:
93 %

ஆயுட்காலம்:
ஆண்கள் 72.5 வருடங்கள் 
பெண்கள் 76.7 வருடங்கள் 

ஆட்சிமுறை:
ஒரு கட்சி ஆட்சிமுறை 

ஜனாதிபதி:
ஹூ ஜின்டாவோ (Hu Jintao) *இது 26.07.2011 அன்று உள்ள நிலவரமாகும்.  

பிரதமர்:
வென் ஜியாபாவோ (Wen Jiabao) *இது 26.07.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

பரப்பளவு:
9,640,821 சதுர கிலோ மீட்டர்கள்.

சனத்தொகை:
1,339,724,852 (2010 மதிப்பீடு)

நாணயம்:
சீன யுவான் (Chinese Yuan / CNY)

இணையத் தளக் குறியீடு:
.cn

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-86


இயற்கை வளங்கள்:
நிலக்கரி, இரும்பு, இயற்கை எரிவாயு, மெர்க்குரி, தகரம், டங்ஸ்டன், அன்டிமனி, மங்கனீஸ், மொலிபெட்னம், வனாடியம், அலுமினியம், ஈயம், ஸிங், அபூர்வ, இரசாயனப் பொருட்கள், யுரேனியம், நீர் மின்சாரம்(உலகிலேயே மிகப் பெரிய அளவில்)


தொழில்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
உருக்கு, சுரங்கத் தொழில், இரும்பு, வெள்ளீயம், அலுமினியம், நிலக்கரி, இயந்திரங்கள், ஆயுத உற்பத்தி, துணிகள், பெற்றோலியம், சீமெந்து, இரசாயனங்கள், உர வகைகள், பாதணிகள், விளையாட்டுப் பொருட்கள், மின்சார உபகரணங்கள், உணவு பதனிடல், வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்கள், ரயில்கள், கப்பல்கள், விமானங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள், வணிக வாகனங்கள், செய்மதிகள்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • உலகிலேயே அதிக சனத்தொகை கொண்ட நாடு.
  • உலகில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு இது.(முதலாமிடத்தில் உள்ளது அமெரிக்கப் பொருளாதாரம் ஆகும்)
  • உலகின் முதலாவது பெரிய இராணுவத்தைக்(காலாட்படை) கொண்டுள்ள நாடு.
  • உலகின் இரண்டாவது இராணுவப் பாதுகாப்புச் செலவினம்(பட்ஜெட்) கொண்ட நாடு.
  • உலகில் வெளிப்படையாக அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்று.
  • உலகில் அதி வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் முதலாம் இடத்தில் உள்ளது.
  • பெரும் எண்ணிக்கையில் பட்டதாரிகள், இராணுவ ஆய்வாளர்கள், பொதுக் கொள்கை வகுப்பாளர்கள், பொருளியல் நிபுணர்கள், ஆகியோரைக் கொண்டிருப்பதால் வல்லரசுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் முதலாம், இரண்டாம் இடங்களில் அமெரிக்காவும், பிரேசிலும் உள்ளன.
  • உலகின் பழமை வாய்ந்த ஐந்து நாகரிகங்களில் 'சீன நாகரிகமும்' ஒன்று.
  • உலகின் பழமை வாய்ந்த மொழி மட்டுமல்லாமல், உலகிலேயே அதிக மக்களால் பேசப்படுவதும் 'சீன மொழி' ஆகும்.
  • உலகில் ஆதி காலத்தில் எழுத்தை உபயோகித்த மனிதர்களில் சீனர்களும் அடங்குவர்.
  • உலகில் 7 லட்சத்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் காணப் படுகின்றன.
  • மேற்படி மனிதர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே 'நெருப்பின்' உபயோகத்தை அறிந்திருந்தனர்.
  • இவ்வுலகிற்கு வெடிமருந்தின் உபயோகத்தையும், நாம் எழுதுவதற்குப் பயன்படுத்தும் காகிதத்தின்(பேப்பர்) உபயோகத்தையும் அறிமுகம் செய்தவர்கள் சீனர்களே.

அந்திமாலையில் அறிமுகம்

திரு.ஜோ மில்டன் அவர்கள் தமிழார்வம் மிக்க ஒரு வளர்ந்துவரும் எழுத்தாளர். சிந்தனைக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் எழுதுவதில் கைதேர்ந்தவர். தமிழகத்தின் தென்முனையான 'கன்னியாகுமரியைப்' பூர்வீகமாகக் கொண்ட இவர் திருச்சி செயின்ட்.ஜோசப் கல்லூரியில் 'கணனித் துறையில்' பட்டப் படிப்புப் படித்தவர். கடந்த 11 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கணனித் துறையில் மென் பொருள் (Software) பிரிவில் பணியாற்றி வருகிறார்.ஒரு கணனித் துறைப் பட்டதாரியாக இருப்பினும் தனது சிந்தனைகளை அழகிய தமிழில் வடிக்கும் ஆற்றல் மிக்கவர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் வலைப் பதிவில் எழுதிவரும் இவர் cdjm.blogspot.com எனும் வலைப்பதிவை இயக்கி, எழுதி வருகிறார். தமிழ்மீது இவருக்கு இருக்கும் ஆர்வத்தையும், பற்றுதலையும், சமூக அக்கறையையும் இவரது எழுத்துக்களில் காணலாம். இவரது வலைப்பதிவின் 'தாரக மந்திரம்' "இயன்றவரை இனிய தமிழில் பேசுவோம்""  என்பதாகும்.
இன்றைய தினம் 'அந்திமாலையில்' இவர் எழுதிய 'சீனரும் மதமும்' என்ற ஒரு சிறிய பயணக் கட்டுரை இடம்பெறுகிறது. இன்றைய தினம் அந்திமாலையில் 'நாடுகாண் பயணத்தில்' சீனா பற்றிய தகவல்கள் இடம்பெறுவதாலும், இவரது கட்டுரை சிறியதாக இருப்பினும் அதில் சீனா பற்றிய சில முக்கியமான தகவல்களை அவர் நம்மோடு பகிர்ந்து கொள்வதால் வாசகர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.
அந்திமாலையின் தளத்திற்குப் புதிய படைப்பாளியாக வருகை தரும் ஜோ மில்டன் அவர்களை நல்வரவு கூறி வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.
"ஒன்றுபட்டு உயர்வோம்"

ஆசிரிய பீடம் 
அந்திமாலை 

சீனரும் மதமும்


ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர். 
பொதுவாகவே ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் ஒரு பொதுவான கருத்துருவாக்கம் நம் மனதில் ஏற்கனவே இருக்கும். முன்பெல்லாம் இந்தியா என்றால் பாம்பாட்டிகள், அரை நிர்வாண சாமியார்கள் நிறைந்த நாடு என்ற தோற்றம் மேலை நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது போல, சீனாவை பற்றியும் பொதுவான இந்தியர்களிடையே ஒரு கருத்துருவாக்கம் இருந்து வருகிறது. அவற்றில் சில "சீனர்கள் எப்போதும் நூடுல் சாப்பிடுவார்கள்", அப்புறம் "பாம்பு பல்லியெல்லாம் சாப்பிடுவார்கள்", "பெரும்பாலும் புத்த மதத்தை பின்பற்றுவார்கள்" இப்படியெல்லாம் சில கருத்துருவாக்கங்கள் இருகிறது. நான் 3 முறை சீனா சென்று வந்த போது கூட பலர் என்னிடம் ஏதோ நான் வேறு வழியில்லாமல் பாம்பு பல்லியெல்லாம் சாப்பிட்டிருப்பேன் என்று சந்தேகத்தோடு கேட்டார்கள்.


பொதுவாக இந்தியர்கள் அதிகமாக வெஜிடேரியன் சாப்பிடுவது போலவும், சீனர்கள் அதிகமாக புலால் உண்பதாகவும் நம் மக்கள் நினைக்கிறார்கள் .. சீனர்கள் உணவில் தினமும் புலால் சேர்த்து உண்பது உண்மை தான். ஆனால் கண்டிப்பாக நம்மை விட அதிகமாக காய்கறிகள், கீரைகளை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்பவர்கள் அவர்கள் தான். நம்ம ஊரில் வெஜிடேரியன் என்ற பெயரில் சட்டி சட்டியாக சோறு சாப்பிடுகிறோம் .காய்கறிகளை பெயருக்கு தொட்டுக் கொள்ளுகிறோம். சீனர்களும் சோறு சாப்பிடுகிறார்கள். ஆனால் நம் அளவு அல்ல. சோற்றை விட அதிகமாக காய்கறிகள், கீரைகள் அதோடு இறைச்சி சம அளவில் சாப்பிடுகிறார்கள். அதோடு பழங்களும் நிறைய சாப்பிடுகிறார்கள். ஆக மொத்ததில் காய்கறி சாப்பிடுவதாக சொல்லும் நம்மை விடவும் வித விதமான காய்கறிகள், கீரைகள் சாப்பிடுவது சீனர்கள் தான். இது தவிர உடலுக்கு நலம் தரும் மீன் வகைகளை அதிகமாக சாப்பிடுகிறார்கள்.

அலுவலக வேலை காரணமாக
3 முறை நான் சீனாவுக்கு சென்றிருக்கிறேன். நான் சென்ற நகரம் ShenZhen. இது ஹாங்காங் - க்கு மிக அருகில் உள்ள சீன நகரம். ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு நுழைவதற்கான வாயில் என்று சொல்லலாம். இந்தியாவோடு வளர்ச்சியில் போட்டி போடும் ஒரு நாடாக நினைத்து சீனாவை கற்பனை செய்திருந்த எனக்கு இங்கு அதிர்ச்சி காத்திருந்தது.. Shen Zhen உள்கட்டமைப்பு, வசதிகள், தொழில், சுத்தம் இவற்றில் உலகத்தரத்தில் இருந்தது என்றால் மிகையல்ல. இன்னும் சொல்லப்போனால் சுத்தம், நகர பராமரிப்பு, வடிவமைப்பு இவற்றில் சிங்கப்பூருக்கு இணையாக இருந்தது என்பதே உண்மை. நாம் அவர்களோடு போட்டி போட்டாலும் இப்போதைக்கு நம்மை விட கிட்டத்தட்ட 20 வருடங்களாவது அவர்கள் முன்னால் இருப்பதாகவே எனக்கு தோன்றியது.

பொதுவாக நான் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டு வரலாறு, மக்கள் வாழ்க்கை முறை, கலாச்சாரம், உணவு முறை, மதம், சமுதாய கட்டமைப்பு இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முற்படுவேன். சீனாவிலுள்ள சீனர்கள் சிங்கப்பூர், ஹாங்காங்கில் உள்ள சீனர்களைக் காட்டிலும் நட்பு பாராட்டுபவர்களாகவும், உதவுகின்ற மனமுள்ளவர்களாகவும், பிறர் மேல் கரிசனமுள்ளவர்களாகவும் இருந்தார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. என்ன தான் சிங்கப்பூரில் நான் சீன உணவு சாப்பிட்டு அனுபவம் இருந்தாலும், சீன உணவின் சுவை, எண்ணற்ற வகைகள் இவற்றை சீனாவில் தான் என்னால் உணர முடிந்தது.

அலுவலக வேலை நிமித்தம் சென்றிருந்ததால், நான் அங்கு பணியாற்றிய, பழகிய அனைவரும் நன்கு படித்த பொறியாளர்களாக இருந்தனர். ஒரு சிலரைத் தவிர மிகப் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் பேசவும், நாம் பேசினால் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவும் இருந்தனர். ஆனால் ஆங்கிலத்தில் ஓரளவு நன்றாக எழுதவும், நாம் எழுதினால் நன்றாகவே புரிந்து கொள்பவர்களாகவும் இருந்தனர். அதனால் எப்போதும் என்னோடு ஒரு பேப்பரும் பேனாவும் வைத்திருப்பேன். நான் சொல்லி அவர்களுக்கு புரியாத பட்சத்தில் உடனே வாக்கியமாக அதை எழுதி காண்பிப்பேன். உடனே புரிந்து கொண்டு அவர்களும் பதிலை எழுதிக்காட்டுவார்கள். மற்ற படி உடைந்த ஆங்கிலத்தில் உரையாடி சமாளிக்க வேண்டியிருந்தது. அவர்கள் பல்கலைக்கழகங்களிலே ஆங்கிலம் கற்றிருந்தாலும் உரையாடும் வாய்ப்போ, தேவையோ இல்லாததால் இந்த நிலமை. ஆனால் இப்போது நிறுவனங்களிலேயே இதற்கான பட்டறைகளை நடத்தி வருகிறார்கள்.

பொதுவாக சீனாவில் உள்ள சீனர்கள் படித்தவர்களாக இருந்தாலும், வேலை, வியாபாரம் தவிர்த்த உலக அறிவு அவர்களுக்கு இல்லாதது கண்கூடாக தெரிந்தது. அரசியல், மதம் இவற்றைப்பற்றி நடுத்தர சீனர்கள் கண்டுகொள்வதே இல்லை. அவர்களது ஒரே நோக்கம் படிப்பு, வேலை, பணம், நல்ல வாழ்க்கை. மதம், சாதி (அப்படி ஒன்றும் கிடையாது), மொழி, சடங்குகள், அரசியல் இவற்றிலெல்லாம் அவர்களுக்கு இருக்கும் ஆர்வமின்மை அல்லது தேவையின்மை அவர்களின் முழுக்கவனத்தையும் நேரத்தையும் உழைப்புக்கும், வசதிகளை பெருக்கிகொள்வதற்கும் முழுக்கவனத்தையும் செலுத்த முடிவதே அவர்களின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருப்பதாக என்னால் உணர முடிந்தது.

நண்பரொருவர் வார இறுதியில் அவர் குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பதை தியாகம் செய்து என்னையும் வியட்நாமிலிருந்து வந்த இன்னொரு நண்பரையும் நகர உலாவுக்கு அழைத்து சென்றார் .."

Little wonders of the world" (உலக அதிசயங்களின் சிறிய மாதிரிகள்) என்ற மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவுக்கு அழைத்து சென்றார். உலகின் முக்கியமான சின்னங்களின் சிறிய வடிவங்கள் அங்கே தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன. தாஜ்மகால், ஈபில் டவர் உட்பட பல முக்கிய சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தாஜ்மகால் கிட்டத்தட்ட 30 அடி உயரமாகவும், ஈபில் டவர் கிட்டத்தட்ட 200 அடி உயரமாகவும் இருந்தது. அவற்றின் முன் நின்று புகைப்படம் எடுத்தால் உண்மையிலேயே அந்த உண்மையான சின்னங்களின் முன் நின்று எடுத்தது போல இருந்தது. இந்த பூங்காவின் உள்ளே நுழைந்தவுடன் முதலில் இருந்தது நமது அரசு சின்னமான 'மூன்று சிங்கங்கள்' அச்சு அசலாக சுமார் 20 அடி உயரத்தில் இருந்தது. இந்தியர்களை அங்கு காண்பது அரிது என்பதால் பலரும் என்னை விநோதமாக பார்த்தார்கள். பின்னர் புன்னகைத்தார்கள். ஓரிடத்தில் சீன மாது ஒருவர் பாரம்பரிய சீன உடைகள் அணிந்து தலையில் கீரீடங்கள் வைத்து விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று சீன நண்பரிடம் வந்து ஏதோ சொன்னார். சீன நண்பர் என்னிடம் "இந்த இந்தியரோடு ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்கிறார்" என்றார். பக்கத்தில் நின்ற வியட்நாம் நண்பருக்கு காதில் புகை. ஏதோ ஒரு விநோத ஜந்துவை பார்த்த ஆர்வத்தில் அப்பெண் புகைப்படம் எடுக்க விரும்பியிருப்பார் போலும்.
சீனாவில் புத்த மதம், கன்பூசிய மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் இன்னும் பல பாராம்பரிய சீன வழிமுறைகளை பின்பற்றுவோர் இருந்தாலும் கிட்டத்தட்ட 70% பேர் மத நம்பிக்கை அற்றவர்கள் தான். அதிலும் நான் சென்ற நிறுவனத்தில் நான் பழகிய அனைவரும் தாங்கள் எந்த மதத்தையும்  சாரவில்லை என்றே சொன்னார்கள். பலரிடம் 'மதம்' என்றால் என்ன என்பதை புரிய வைப்பதே பெரும்பாடாக இருந்தது. ஒரு பொறியாளரிடம் பேச்சு வாக்கில் 'நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறீர்கள்?" என்று கேட்க அவருக்கு 'மதம்' என்பதே புரியவில்லை ..நான் ஒரு உதாரணத்திற்கு 'I am a christian..what about you?'(நான் ஒரு கிறீஸ்தவன் நீங்கள் என்ன மதம்?) என்று கேட்க ,அவர் ஓரளவு புரிந்தவராக "Oh! no relegion"(எந்தச் சமயமும் இல்லை) என்றார். நான் உடனே "Do you beleive in GOD?"(நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?) என்று கேட்க "No..I beleive in myself "(இல்லை, நான் என்னைத்தான் நம்புகிறேன்) என்று தீர்க்கமான பதில் வந்தது. நானும் விடாமல் "What about your parents?"(உங்கள் பெற்றோர் எப்படி?) என்று கேட்க, அவர் சொன்னார் "They also same like me..But my grandparents beleived" (அவர்களும் என்னைப் போலத்தான், ஆனால் என் பாட்டன், பாட்டி கடவுளை நம்பினார்கள்) ..கிட்டத்தட்ட அனைவருமே இப்படித் தான் சொன்னார்கள். இவர்கள் இதைப்பற்றியெல்லாம் நினைத்துக்கூட பார்க்காமல் பொழப்பைப் பார்ப்பதால் தான் நம்மைவிட வேகமாக முன்னேறிச் செல்கிறார்களோ என்று தோன்றியது.
நம்மை நகர உலா அழைத்துச் சென்ற நண்பர் இதை விட மேல் .அவரிடம் வழ்க்கம் போல 'I am a christian. what about you?" என்று கேட்க அவருக்கு christian (கிறீஸ்தவன்) என்றால் என்ன என்று தெரியவில்லை ..நான் சைகையெல்லாம் வைத்து 'Jesus' என்று சொல்ல 'ஓ! யேசு' (சீன மொழியில் யேசு என்று தான் சொல்கிறார்கள்) என்று சொன்னார். அப்பாடா ஒரு வழியாக புரிந்தது. அப்போது டிசம்பர் மாதம். கிறிஸ்தவ மதம் அங்கு பெரிதாக இல்லையென்றாலும் எங்கும் கிறிஸ்துமஸ் சுவடுகள். உணவகங்கள், ஹோட்டல்கள் எங்கும் கிறிஸ்துமஸ் மரங்கள், அலங்கரிப்புகள், வாழ்த்து வாசகங்கள் என்று வியக்கும் வகையில் இருந்தது. ஒரு ஆடியோ சீடி விற்கும் கடை தென்பட நானும் அந்த சீன நண்பரும் உள்ளே சென்றோம். அங்கு கிறிஸ்துமஸ் பாடல்கள் எதுவும் கிடைக்குமா என தேடிக்கொண்டிருந்தேன். சீன மொழியிலேயே இருந்தன. சீன நண்பர் அருகில் வந்து "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டார். நான் "கிறிஸ்துமஸ் பாடல்கள் சீன மொழியில் இருக்கிறது. அது போல ஆங்கிலத்தில் கிடைக்குமா?" எனக் கேட்டேன். அவர் புருவத்தை உயர்த்தி ஒரு கேள்வி கேட்டார் "You worship Yesu. Then why do you look for christmas songs? (நீ இயேசுவை வணங்குகிறாய் பிறகு எதற்கு 'கிறிஸ்துமஸ் பாடல்களை தேடுகிறாய்?) எனக்கு மயக்கம் வராத குறை. அதன் பிறகு மதம் பற்றி நான் வாய் திறக்கவே இல்லை.

திங்கள், ஜூலை 25, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (167)

பொருள்: பிறர் செல்வத்தைக் கண்டு பொறாமை கொள்பவரைத் திருமகள் தனது தமக்கையாகிய மூதேவிக்குக் காண்பித்து, அவரை விட்டு நீங்கி விடுவாள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


தாய்லாந்துப் பயணம் - 11

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
தாய்லாந்து மொழியில் 'வற்' என்றால் மடாலயம்  monastry  என்பது கருத்து. கோயிலும் கோயிலுடன் சேர்ந்த இந்த அமைப்பு, முழு தாய்லாந்திலும் 21,000  wats  இருக்கிறதாம். பாங்கொக்கில் மட்டும் கிட்டத்தட்ட 200 வற்கள் இருக்கிறதாம். முழு தாய்லாந்திலும் 27,000 புத்த கோயில்கள் உள்ளதாம்.
'வற் போ' கோயிலின் உள்ளே போகக் கட்டணம் எல்லாம் மொழி பெயர்ப்பாளரின் பொறுப்பு.
கிறிஸ்துவிற்கு முன் 269லிருந்து 237களில் இந்திய அரசன் 'அசோகச் சக்கரவர்த்தி' காலத்தில் பாடலிபுரத்திலிருந்து 'சோனா தேராவும்', 'உத்தர தேராவும்' சென்று 'சுவர்ண பூமி' வட்டாரத்தில் (மலேசியா, பர்மா, சுமத்திரா, தாய்லாந்தில்) புத்த மதம் பரப்பியுள்ளனர். இந்த வற் போ கோயிலின் பெயர் அப்போது 'யெலுவன விகார' என்று இருந்ததாம்.
இந்தக் கோயிலில் இருந்து சிறிது தூரம் நடந்து ஒரு ஆற்றின் கரைக்கு வந்தோம். சாயோ பிறையா chao phraya எனும் இந்த ஆற்றங்கரையில் கடவைப் படகில் போக அனைவருக்கும் பயண அனுமதிச் சீட்டுகளை மொழிபெயர்ப்பாளர் எடுத்தார்.
ஆறு பொங்கிப் பிரவாகித்து ஓடியது, மழை பெய்து வெள்ளமும் சேர்ந்து ஒரே கலங்கலாக இருந்தது. ஆற்றின் இக் கரையிலிருந்து அக்கரை போக வேண்டும். நீண்ட படகு. சுற்றி வர அடைக்காத, மேலே கூரை போட்ட பிளாஸ்டிக் இருக்கைகள் கொண்ட யந்திரப் படகு. மிக வேகமாக ஓடியது. இக்கரையிலிருந்து பார்க்க அக்கரை, சாயோ பிறையாவின் மேற்குக் கரைக் கோயிலின் கோபுரம் மிக அழகாகத் தெரிந்தது.
ஊரில் தென்னையளவு ஆழமான கிணறுகள் பார்த்து, எனக்குத் தண்ணீர் என்றாலே பயம். 
ஆனால் படகில் ஏறியதும், பயணம் செய்ததும் மிகக் குஷியாக இருந்தது. சிறிதளவு பயமும் இருக்கவில்லை.
இந்த சாயோ பிறையா ஆறு 370 கி.மீட்டர் நீளமானது. இதன் ஆதி காலப் பெயர் 'மீனம்'. இந்த நதி பிங், வங், நான் (யேன்) இயோம் எனும் கிளை நதிகளாக மேலே மலைப் பகுதிகளிலிருந்து ஊற்றாகி தாய்லாந்து நடுப்பகுதிக்கு வந்து 'தா சின்' – 'சாயோ பிறையா' என்று இரு கிளையாகி தாய்லாந்து வளைகுடாவில் சமாந்தரமாக விழுகிறது. 
வழமை போல்  மக்கள் குடிகள் இந்த ஆற்றின் கரையில் தான் தமது ஆதி வாழ்வைத் தொடங்கினர். மீன் பிடியும், பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதியும், பிரதானமாக அரிசி விளைச்சலின்   கிண்ணமுமாக இந்த ஆறு இருக்கிறது.  river of king 'ஆற்றின் அரசன்' என்றும் இந்த ஆற்றைக் கூறுகின்றனர். இது 25 மீட்டர் ஆழமுடையது என்று எமக்கு மொழி பெயர்ப்பாளர் கூறினார்.
ஐந்து நிமிடம் கூட போயிருக்காது அக்கரை சேர்ந்தோம். 'பாங்கொக் யாய்' மாவட்டத்தில் அமைந்த 'வற் அருண்'  Wat Arun என்ற கோயிலை அடைந்தோம்.  Temble of dawn 'விடியலின் கோயில்' என்றும் இதைக் கூறுவதுண்டு. அதிகாலை ஒளி கோயிலின் மேற் பகுதியிற் பட்டு அற்புதமாக பிரதிபலித்து வானவில்லின் வர்ணஜாலமாகத் தெறிப்பதால் இப் பெயர் வந்ததாம். கோயிலின் முழுப் பெயர் 'வற் அருண்ரட்சாவரராம் ரட்சாவோர மகாவிகாரா'. வெளியே தெரியும் நடுவில் இருக்கும் கோபுரமே இதன் முக்கிய பகுதியாகும்.
 செங்குத்தான படிகள் இரண்டு மாடித் தட்டுகளாக உள்ளது. "Over the second terrace are four statues of the hindu god indra riding on Erawn".  2வது மாடித் தட்டில் சைவக் கடவுளான இந்திரனின் 4 உருவம் ஐராவதம் யானையில் போவதாக உள்ளது. மொழிபெயர்ப்பாளர் 'எறவன்' என்று கூற, நான் முதலில் 'இறைவன்' என்றே விளங்கினேன். பின்னர் தான் எனக்குத் தெளிவானது அது 'ஐராவதம் யானை' என்று. மொழிபெயர்ப்பாளரின் ஆங்கில உச்சரிப்பும் புரிந்து கொள்வது சிரமமாகவும் இருந்தது.
இரண்டு சீனப் போர் வீரர்களின் உருவமும் வற் அருண் கோயிலுக்குக் காவலாக வாயிலில் செதுக்கப்பட்டுள்ளது.    
–பயணம் தொடரும்-