ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
எனது கணவரை டென்மார்க்கில் பல தடவை பாதம் மசாஜ் செய்ய போகும்படி கேட்டும் மறுத்திட்டார். நீங்கள் போனால் தான் நான் போவேன் என்று, அங்கு நான் அடம் பிடித்தேன். வந்தார். அவருக்கு நன்றாகப் பிடித்துக் கொண்டது. தனக்கு நிறைய காலில் நோவு இருந்தது. மசாஜ்க்குப் பின் அதெல்லாம் போய்விட்டது என்று மகிழ்ந்தார். இப்போதானால் மசாஜ்க்குப் போக வேண்டும் நல்லது என்கிறார்.
அங்கிருந்து வரும் போது ”நாங்களே ஒருவருக்கு ஒருவர் மசாஜ் செய்யலாமே கம்பசூத்திரமல்ல இது" என்றார் என் கணவர்.  இங்கு இப்போது கிழமைக்கு ஒரு தடவை நானே அவருக்கு பாதம் மசாஜ் செய்து விடுகிறேன். அது வேறு கதை.                                      
காலையுணவோடு வெளியே செல்வோம். மாலையில் அறைக்கு வரும் போது இரவு உணவையும் கையோடு எடுத்து வந்திடுவோம். குளித்து ஆடை மாற்றினால் களைப்பில் பிறகு வெளியே போக மனம் வராது.
இளநீரும் வழுக்கையும் கூட ஒரு நேர உணவு அல்லது இரண்டு மணிக்கு ஒரு கொறியலாகவும் எடுத்தோம்.
தெருவோரம் நடந்தால் வாயூறும். குளம்பு, ரசம் போல ஒரே உணவு வாசனை தான்.  நான்கு சில்லு வண்டில். அதில் ஒரு குசினியே இருக்கிறது. கரி அடுப்பில் உடனே சமையல் செய்து கொடுக்கிறார்கள்.
பெரிய உணவகம் சென்று உண்பது விலை அதிகம். இவர்களிடம் உண்பது விலை குறைவு தான். எமது மகன் ஏற்கெனவே ” ‘நன்கு விதம் விதமாகச் சாப்பிட்டு அனுபவியுங்கள் தெருவோரமானாலும் அவர்கள் மிக சுத்தமானவர்கள்”’   என்று சொல்லியே எங்களை அனுப்பினார். ஆரம்பத்தில் கணவர் விரும்பவே இல்லை. பின்னர் ஒரு நாள் கோழிப் பொரியல் வாங்கிச் சாப்பிட்டார். கோழிக் காலை மாவில் தோய்த்து பொரிக்கிறார்கள். அதை சாப்பிட்ட பின்னர் அவர் கூறினார் ” கொஞ்சம் உப்பும், மிளகாய்த் தூளும் போட்டால் நல்லாக இருக்கும்”… என்று.                                                     
மாம்பழம், பப்பாளிப் பழங்களை சிறு சிறு துண்டாக வெட்டி ஒரு சிறு பொலிதீன் உறையில் போட்டு, ஒரு குச்சியும் வைத்துத் தருகிறார்கள்.( நகரும் வண்டியில் தான்..)அப்படியே நடந்து நடந்து அதைக் குத்திச் சாப்பிட்டோம். மிகவும்  சுவைத்தது.
அன்னமுன்னாப் பழம், அரிநெல்லிக் காய் இருந்தது. பலாப் பழத்தைக் காணவே இல்லை.
எமது வாடி வீட்டிற்கு ஒரு பக்க நிலத்தில் தகரக் கொட்டகை வீடுகள் தான். அங்கிருந்தும் சிலர் சமைத்து வண்டிலில் சாப்பாடு கொண்டு வந்து தெருவில் விற்கின்றனர், நடமாடும் சாப்பாட்டுக் கடையாக. எங்கு மக்கள் அதிகம் கூடுகிறார்களோ அங்கு தேடித்தேடி ஓடி விற்பனைக்கு நிற்கும் விடா முயற்சியாளர்கள் தான் தாய்லாந்து மக்கள்.                                                       
ரென் ஸ்ரார் ஹோட்டலில் 5வது மாடியில் 800 பாத் திற்கு மாறினோம். இது மிகப் பெரிய அறை. நன்கு பிடித்துக் கொண்டது. இது கடை வீதிக்கு இன்னும் மிகவும் கிட்டவாகவும் அமைந்தது.
எக்கச் சக்க எண்ணிக்கையில் இந்திய உணவகங்கள். தெருவில் நடக்க முடியாதபடி தரகர்கள் இந்திய உணவக விசிட்டிங் அட்டைகளை கையுள் திணிக்கிறார்கள். நாளுக்கு ஒரு இடமாகச் சென்று உணவுகளை மாறி மாறி ருசித்துப் பார்த்தோம். பிள்ளைகளுடன் கதைக்கும் போது, சாமான் வாங்குவதை விட்டு விட்டு இடங்களைப் பாருங்கள் என்று ஏசத் தொடங்கி விட்டார்கள்.                                    
வாடி வீடுகளில் ஒரு கோப்பு  (ஃபைல்) உண்டு. அதில் சுற்றுலாவிற்காக எங்கு, எத்தனை மணிக்குப் போய்,    எத்தனை மணிக்கு வருவது, என்ன விலையென்ற விபரங்கள் யாவும் உண்டு. அதில் பார்த்து நமக்குப் பிடித்த இடத்தைப் பதிய வேண்டியது தான்.
முதலில் பாங்கொக் நகர சுற்றுலா என்ற பெயரில் இரண்டு புத்த கோயில்களைப் பார்க்க நாம் பெயர் பதிந்தோம். என்ன! புத்த கோயிலுக்கா என்கிறீர்களா! அவை சுற்றுலாப் பயணத்திற்காகத் திறந்து விடப்பட்ட கோயில்கள் தான்!.            
—- பயணம் தொடரும்—-        






13 கருத்துகள்:
ஆஹா, அருமை, பிரமாதம். தாய்லாந்து போகவேணும் என ஆசையை ஊட்டுகிறது உங்கள் பயணக்கட்டுரை. உங்கள் தமிழ் மிகவும் எளிமையாக உள்ளது. இப்படி எல்லா எழுத்தாளர்களும் எழுதினால்தான் அனைத்து தமிழர்களுக்கு விளங்கும்.
உங்கள் ரசிகையாக என்னையும் சேர்க்கவும்.
Your description of food, especially fried chicken and fruit truck makes me hungry
நன்றி வேதா,, நான் பணக்காரர் பக்கமில்லை கஷ்டப்பட்டு நாளுக்கு ஒரு சிறியளவு இலாபத்தை eduthu தன குடும்பத்தை காப்பாற்றும், நாலு சில்லு வண்டி ஒட்டி, ஓடி உழைக்கிறான் மற்றவன் பெரிய ஹோட்டல்
போட்டு விசிடிங் கார்டு கொடுக்கிறான், அவனுக்கு இலாபமோ அதிகம், நாம் எப்பவும் கஷ்டப்படு
உழைப்பவனுக்கே கை கொடுப்போம்
Good
உங்களோடு நூறு வீதம் உடன்படுகிறேன். சென்னையிலும், மும்பையிலும், பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலும், தாய்லாந்திலும் கையேந்தி பவன்களில் சாப்பிட்டிருக்கிறேன். இதில் தாய்லாந்தில் மட்டுமே தெருவோரக் கடையும், உணவும் சுத்தமாக இருக்கும்.நன்றாக உள்ளது தொடர்.தொடருங்கள்.
இந்த தொடரும் நன்றாக உள்ளது . என்ன பலாப்பழத்தை காணவே இல்லை என்றீர்கள் .பலாப்பழம் போலவே அளவில் சிறியதாக இருக்கும்
டுரியான் என்ற பழத்தை நீங்கள் வாங்கி சாப்பிடவில்லையா? முதலில் அந்த பழத்தை வாங்கி சாப்பிட நினைப்பவர்கள் நிச்சயம் வாந்தி எடுப்பார்கள் .ஏனெனில் அந்தப் பழத்தில் இருந்து வரும் ஒரு மணம் யாரையும் ஓட்டமெடுக்க வைக்கும். ஆனால் முதல் தரம் சாப்பிட்டு ருசி கண்டு விட்டீர்கள்
என்றால் பிறகு விடவே மாட்டீர்கள் .நான் உங்கள் தொடரை மிகவும் ஆர்வமுடன் வாசித்து வருகிறேன். உங்கள் அனுபவங்களை நான் கூட
அனுபவித்தவள் 1992 ஆம் ஆண்டு பாங்கொக் சென்று வந்த வேளையில். எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மீண்டும் நினைவு படுத்துகின்றீர்கள் .
ஆனால் நான் வாடிவீடுகளில் தங்கிய அனுபவம் இல்லை .தொடர்ந்து எழுதுங்கள் .
வேதா Aunty,
தாய்லாந்துக் காரர்கள் உங்களை நன்றாகவே ஏமாற்றி விட்டார்கள். கோழிப் பொரியலை KFC உணவகத்தில் போய் சாப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் மாவில் தோய்த்துப் பொரித்த கோழிப் பொரியல் என்றதும், நாவில் ஊறியது, கடைசியில் உப்பும், மிளகாய்த் தூளும் போட்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் விபரிக்கையில் 'சப்' என்று ஆகிவிட்டது. நீங்கள் சாப்பிட்டது KFC கோழியைப் போல் உள்ள டுப்ளிக்கேட் கோழி. ஹி,ஹி, ஹி,
பாம்பு கறி அங்கு விலை அதை நீங்கள் சுவைத்தது உண்டா? புத்த கோவிலில் பிள்ளையார் சிலையை கண்டதுண்டா ?
நீங்கள் தங்கிய விடுதியில் எல்லாப் பக்கங் களும் கண்ணாடியால் அமைந்த சுவரா ?
Abi, you're 100% correct. If all authors write as Vetha, then everyone will understand and enjoy it.
Vetha, Write me also on your fan list
மிகவும் அருமை.
உங்கள் பயணக்கட்டுரை நான் தவறாமல் வாசித்து வருகிறேன். மிகவும் ரசனையாக எழுதுகிறீர்கள்.
அந்திமாலையில் மிகவும் சிறப்பான தொடர்கள் வருகிறது் பாராட்டத்தக்கது.
அந்தமாலை இணையத்துக்கும், எழுத்தாளர் வேதா அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
அபி,அனு, சீதா, சக்தி, விஜிதா, விநோ,நிரஞ்சன், கின்டி, ரமேஷ், சகானா, அருந்ததி, அந்திமாலை அனைவரது கரம் பற்றி நன்றி கூறுகிறேன். கருத்து கூறாது வாசித்தவர்களுக்கும் நன்றி.அனைவருக்கும் இறை ஆசி கிட்டட்டும்.
கருத்துரையிடுக