செவ்வாய், டிசம்பர் 25, 2018

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்


தேவகுமாரன் பிறப்புக் கவிதைபுவியை மீட்க வந்த பாலன்


சீதளக் காற்று வீசிய - ஓர் புது இரவினிலே 
சீர் வந்தது உலகுக்குப் புதுச் சீர் வந்தது - அது 
மாதிளங்கன்னி மரியாள் வயிற்றுப் பொன் முத்து 
மனுக்குலம் மீட்க வந்த இறையின் சொத்து.

கோடி வெள்ளி சேர்ந்தவொளி சிந்திச் சிரித்தது - புவி மாந்தர் இனி மீள்வரென சிறிய விழி மலர்ந்தது.
நாடியிறை நமக்களித்த நற்செய்தி வாய்திறந்து 
தாயணைப்பில் செவி குளிர இருள் விடியத் தானழுதது.
அழுத முகம் சிரிக்கையிலே புனிதமெங்கும் தெறித்தது 
பிறந்த பாலன் யேசுவை உலகமின்றும் போற்றுது
சிலுவையிலே துயர் சுமந்து மரித்த பின்னும் உயிர்த்தெழுந்து 

இறையரசை நிறுவவந்த புனிதபாலன் வாழ்கவே. 
   

-ஆக்கம்-
ஈழக்கவிஞன் 
இரா.கெளரிநாதன்

செவ்வாய், நவம்பர் 06, 2018

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், வாசகப் பெருமக்களுக்கும் எமது உளங்கனிந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
மிக்க அன்புடன்
-நிர்வாகி-
அந்திமாலை இணையம்

சனி, அக்டோபர் 27, 2018

இன்று நள்ளிரவில் நேர மாற்றம் மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் அஃதாவது சனிக்கிழமை (28.10.2018)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு(ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)ஐரோப்பியக்  கண்டத்திலுள்ள நாடுகள்அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு)நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்படும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர்அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது. 
அமெரிக்கக் கண்டத்தில்(கனடா உட்பட) இந்த நேர மாற்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி(04.11.2018) நள்ளிரவில் நடைபெற இருப்பதும் ,  

அவுஸ்திரேலியாவில்(ஆஸ்திரேலியா) இந்த நேர மாற்றம் கடந்த 07.10.2018 அன்று இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்கது
அன்புடன் 
-நிர்வாகி- 
அந்திமாலை இணையம் 
டென்மார்க் 

புதன், அக்டோபர் 17, 2018

மரண அறிவித்தல்

தோற்றம்: 11.03.1952
மறைவு: 16.10.2018
திரு. ஆறுமுகம் சந்திரசேகரன் ( 'பஸ் டிரைவர் சந்திரன்' )
தோற்றம்: 11.03.1952
மறைவு: 16.10.2018
இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து 'Leeuwarden' நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.ஆறுமுகம் சந்திரசேகரன் ( 'பஸ் டிரைவர் சந்திரன்' ) அவர்கள் நேற்றைய தினம் (16.10.2018) நெதர்லாந்தில் காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம், சிவபாக்கியம்(மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான செல்லத்தம்பி ( 'பொன்னுத்துரை' ), நாகம்மா (மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும், சீதா தேவியின்(நெதர்லாந்து) அன்புக் கணவரும், காலம் சென்ற மகேந்திரன், வரலட்சுமி (மண்டைதீவு), குணபாலசிங்கம் 
( 'குணம்', நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மீனலோஜினி ( 'மீனா', ஃபிரான்ஸ்) பிரதாப் ( 'பிரபு', ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், பிரபாகரன் ('பிரபா' ஃபிரான்ஸ்) லொறின் (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவகுமார் ( 'உதயன்', ஜெர்மனி), கெளரிமாலா ('கெளரி', லண்டன், ஐக்கிய இராச்சியம்), வசந்தமலர் ( ஆனந்தி ) - 'அபிவிருத்தி உத்தியோகத்தர்', நல்லூர் பிரதேச செயலகம்; இலங்கை, காலஞ்சென்ற பரமேஸ்வரி, காலஞ்சென்ற வின்சன், புவனேஸ்வரி (யாழ்ப்பாணம், இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், லலீந்திரா (ஜெர்மனி), சோமசுந்தரம் / சுந்தர் (லண்டன், ஐக்கிய இராச்சியம்), சத்தியசீலன் / சீலன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும், பிரியங்கா, பிரித்திகா, பிரவீன், பிரஜித், லொனொக்ஸ்சிவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நெதர்லாந்தில் எதிர்வரும் 23.10.2018  செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 14:00 மணி தொடக்கம் மாலை 16:30 மணி வரை Haskerpoarte 2 , 8465 HP Oudehaske, Holland என்ற முகவரியில் நடைபெறும். உற்றார், உறவினர், நண்பர்கள், ஊரவர்கள், முகநூல் நட்புகள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

பூதவுடல் பார்வைக்கு பின் வரும் முகவரியில்:
Noorderhof Uitvaartcentrum 
Sem Dresden Straat 6
8915 Bz Leeuwarden 
Holland

தகவல்: பி.மீனலோஜினி (மகள்)

தொடர்புகளுக்கு: 
சீதாதேவி (மனைவி) - 0031 - 615 262 070
மீனலோஜினி (மகள்) - 0031 - 617 635 455

பிரதாப் (மகன்) - 0049 - 1749 0591 99
பிரபாகரன் (மருமகன்) - 0033 - 651 723 375
வரலட்சுமி (சகோதரி) - 0094 - 779 737 381           

வியாழன், செப்டம்பர் 20, 2018

எட்டாவது ஆண்டில் உங்கள் அந்திமாலை

இணைய உலகில் கால் பதித்து எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாவது  ஆண்டை நோக்கிப் 
பயணிக்கும் இந்த நாளில் (20.09.2018) இவ் இனிய தருணத்தில் தமது வருகையின் மூலம் பேராதரவு நல்கிவரும் வாசக உள்ளங்களையும், தன்னலம் கருதாத உழைப்பினை வழங்கிய, வழங்கி வருகின்ற அனைத்து உள்ளங்களையும் போற்றி வணங்குகிறோம். 
"ஒன்றுபட்டு உயர்வோம்"
உளமார்ந்த அன்புடன் 
-நிர்வாகி- 
அந்திமாலை இணையம்
www.anthimaalai.dk 
டென்மார்க். 

ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

80 ஆவது அகவை வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா!
இலங்கை, திருகோணமலை மாவட்டம், 'அன்பு வழிபுரத்தில்' வசிக்கும் திருமதி இராமலிங்கம் சுந்தரா தேவி அவர்களின் 80 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ( 02.09.2018) சென்னையில் வசிக்கும் அவரது மூத்த மகன் கவிஞர். இரா.கெளரிநாதன் அவர்கள் புனைந்த வாழ்த்து மடல் :
 

அன்புள்ள அம்மாவுக்கு
அகவை எண்பதைக் காணும் 
அன்புள்ள அம்மாவிற்கு! 
முட்டும் விழி நீரை 
மையாய் விட்டு 
உங்கள் பாதம் தொட்டெழுதும் மடலிது.
அகவை எண்பதை - நீங்கள் 
காணும் நன்னாளில்
உங்கள் முதற் பிள்ளை; 
புலர் காலைப் பொழுதெழுந்து 
உங்கள் கால்கள் தொட்டு வணங்கிக்
கட்டியணைத்து முத்தமிட்டு 
"என்றும் என் அன்பிற்கினிய 
அம்மாவுக்கு எண்பதாவது
பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
என்றே நான் சொல்ல 
அருகே இல்லையென்ற 
உங்கள் மன வலியை
என் இதயம் உணரும். 
அந்த உணர்வினில்
மனம் கனத்து 
கண்கள் குளமாகி
விழி நீர் உருண்டு 
கன்னங்கள் தாண்டி - நிலம் 
பட்டுத் தெறிக்கும் - என் 
நெஞ்சக் கூட்டின் வெம்மை 
பெரு மூச்சாய்ப் பிறக்கும்.
சட்டென்ற கோபம் 
உங்கள் ஒரு குணம்
அதையும் பட்டென்று
மறப்பீர்கள் மறுகணம்.
நேர்மை, உண்மை, அன்பு, அறம்
இந்த நான்கும் தான்
நான் வணங்கும் என் 
தெய்வத்தாய் சுந்தரம்.
இருப்பதைக் கொண்டு 
சிறப்புடன் வாழக் கற்பித்த 
வாழ்வியற் புத்தகம் நீங்கள்.
மறந்திட முடியா என் 'தாய்'
கவிதையின் மையக் கரு நீங்கள்.
அறுபதுக்கு மேல் 
அகவை ஒவ்வொன்றும் 
ஆண்டவன் தரும் 'வெகுமதி' 
இருபதாவது தடவையும் 
ஆண்டவனிடம் வெகுமதி  
பெறும் எங்கள் அன்பின் 
சுந்தரி நீங்கள்.
உங்கள் பூட்டப் பிள்ளைகளின் 
நீராட்டு விழாவிலும் 
பூத்தூவி வாழ்த்த நீங்கள் 
இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் 
என்று இறைவனை வேண்டி 
வாழ்த்தும் : 
அன்புத் தலைமகன்: ராசா / கெளரிநாதன் 
மருமகள்: கலா 
பேரன்: பிரியன் 
பேர்த்தி: யாழினி