வெள்ளி, நவம்பர் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
  
 
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின். (560)

பொருள்: ஆட்சியாளன் மக்களைத் தக்கபடி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருவதன் மூலம் கிடைக்கக் கூடிய பயன் குறைந்து போகும். அறுவகையான தொழில்களைச் செய்வோர் தங்கள் தொழில்களைச் செய்ய மறந்து விடுவார்கள்.

இன்றைய சிந்தனைக்கு

டாக்டர் அம்பேத்கார்


ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல. ஆடுகளாக இருக்க வேண்டாம். சிங்கங்களைப் போன்று வீறு கொண்டெழுவீர்.

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?

பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.


- நன்றி தினமலர்

:-))))))))))))))


தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் பரவலாக படிக்கப்படும் ஒரு பத்திரிக்கையின் செய்திதான் இது. இருந்தாலும் தமிழன் இவ்வளவு சோதனைகளையும் தாங்கிக் கொண்டு முன்னேறுவது ஆச்சரியப்படத்தக்க ஒன்றுதானே!


எந்த ஒரு கொள்கையும் உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். புலால் உண்ணாமை என்பது ஏதோ மிகப் பெரிய அறம் போன்று செய்தி பரப்பப்படுகிறது. துருவப்பிரதேசங்களில் வாழக் கூடியவர்கள் கய்கறிகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றால் அவர்களால் உயிர் வாழ முடியாது.
அடுத்து மனிதர்கள் உணவாக சாப்பிடும் ஆடு,மாடு,கோழி,ஒட்டகம்,மீன் போன்ற உயிரினங்கள் உலக அளவில் எண்ணிக்கையில்... மேலும் 

வியாழன், நவம்பர் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
 
 
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி 
ஒல்லாது வானம் பெயல். (559)

பொருள்: மன்னன் முறை தவறி ஆட்சி செய்வானாயின் அந்த நாட்டில் பருவ மழை தவறி, மேகம் மழை பெய்யாமல் போகும்.

இன்றைய பொன்மொழி

காஞ்சிப் பெரியவர் 

மனிதன் சத்தியம், தானம், சோம்பலின்மை, பொறாமையின்மை, மன உறுதி, தைரியம் ஆகிய ஆறு குணங்களையும் ஒரு போதும் விட்டு விடக் கூடாது.

புதன், நவம்பர் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
 
 
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா 
மன்னவன் கோல்கீழ்ப் படின். (558)
 
பொருள்: முறை இல்லாத ஆட்சியின் கீழிருக்கும் மக்களுக்கு செல்வம் உடையவனாய் வாழ்வது, வறுமையைவிடத் துன்பம் தரும்.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 
 வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் தெரியுமா?

ஆக்கம்: பிரவீன் சுந்தர், கோயம்புத்தூர், இந்தியா 

ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்து கொள்வோம்.

பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார்.

எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார். தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார்.

தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம்தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், வீட்டை வந்து பார்த்தார் எஜமானன்.

அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து, இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே?

தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு. மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பி வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றதுதான். ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும், மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள்.

இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு.


-தினமலர் பக்தி மலர் செய்தி

செவ்வாய், நவம்பர் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
 
 
துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே; வேந்தன் 
அளிஇன்மை வாழும் உயிர்க்கு. (557) 
 
பொருள்: மழைத்துளி இல்லையேல் உலகம், எத்தகைய துன்பம் அடையுமோ, அத்தகைய துன்பத்தை மக்கள் அடைவார்கள் அருள் இல்லாத ஆட்சியினால்.

இன்றைய சிந்தனைக்கு

டாக்டர் அம்பேத்கார்

உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.

கார்த்திகை தீபம் ஏற்றுங்கள்!

அழகு முருகனாம் ஆறுமுகப் பெருமானுக்குரிய முக்கிய விரதம் கார்த்திகை விரதம். இந்த விரதம் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கவல்லது. இவ்விரதம் நட்சத்திரத்தின் அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். அருகில் உள்ள முருகன் ஆலயங்களுக்கு சென்று முருகனை தரிசித்து வருவார்கள்.
   
ஒவ்வொரு கார்த்திகையுமே விசேஷம் எனும் போது. கார்த்திகை மாத கார்த்திகைக்கு பெருமை அதிகம் அல்லவா? முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை அன்று தீபம் ஏற்றி வழிபட கந்தன் அருள் கைகூடும் என்பது நம்பிக்கை!
 இந்த கார்த்திகை விரதத்தை ஏற்பவர்கள் மேலான பதவிகளை அடைவர் என்பது கண்கூடு. நாரத மகரிஷி இந்த விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் கடைபிடித்து. ரிஷிகளுக்கு எல்லாம் மேலாக உயர்ந்து மூன்று உலகமும் சுற்றிவரும் பாக்கியத்தை பெற்றார். இந்த விரத நாளில் முருகனுக்குரிய சஷ்டி கவசம் முதலியவைகளை பாராயணம் செய்து வழிபடவேண்டும்.
  சிவபெருமான் தன் ஐந்து முகங்களோடு ஆறாவது முகமான அதோ முகத்தையும் சேர்த்து ஆறு கண்களில் இருந்து நெருப்பு பொறியை தோற்றுவித்தார். அப்பொறிகளை மேலும் 

திங்கள், நவம்பர் 26, 2012

கவிதைச் சோலையில்



குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
 
 
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃதுஇன்றேல் 
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. (556)
 
பொருள்: செங்கோன்மையால்தான் மன்னர்க்குப் புகழ் நிலைபெறும். அச்செங்கோன்மை இல்லையென்றால் புகழ் நிலைபெற்றிராது.

இன்றைய பொன்மொழி

பிளேட்டோ 

பறவைகள் தங்கள் கால்களால் வலையில் சிக்குகின்றன. மனிதன் தகாத வார்த்தைகளால் சிக்கிக் கொள்கிறான்.

ஞாயிறு, நவம்பர் 25, 2012

இசைக்கு மொழியில்லை

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன் 
பாடல்: கடலின் அக்கர போனோரே
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை:சலீல் சௌத்ரி (பாலு மகேந்திராவின் "அழியாத கோலங்கள்" திரைப்படத்திற்கு இசையமைத்தவரும் இவரே)
பிராந்திய மொழி: மலையாளம்
நாடு: இந்தியா

நடிகர்:சத்தியநேசன்
பாடல் இடம்பெற்ற திரைப்படம்:செம்மீன் 
பாடலாசிரியர்: வயலார் ராமவர்மா 
இயக்கம்: ராமு கரியத்

பாடலைப் பற்றிய குறிப்பு: பாடல் வரிகள் தமிழுக்கு மிகவும் நெருக்கமான மலையாள மொழியில் அமைத்திருப்பதால் பெரும்பாலானவர்களால் புரிந்து கொள்ள முடியும். "கடலைத் தாண்டிச் செல்பவர்களே, திரும்பி வரும்போது எதைக் கொண்டு வருவீர்கள்? என்பதே பாடலின் அடிப்படைக் கருத்தாகும். 'செம்மீன்' என்ற இத்திரைப்படம் 1965 இல் வெளியாகியபோது கேரள மாநிலத்தில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும், இலங்கையில் மீனவர்கள் வாழும் பகுதிகளிலும் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இரண்டு உள்நாட்டு விருதுகளையும், இரண்டு வெளிநாட்டு விருதுகளையும் இப்படம் பெற்றது. இப்பாடல் மிகப்பெரிய அர்த்தங்களைக் கொண்டிருக்காவிட்டாலும் 47 வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் கேரளாவில் பாடல் போட்டிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடகர்களால் விரும்பிப் பாடப்படும் பாடலாக உள்ளது.

பாடலின் சிறப்பு:மேற்படி பாடலை இருவர் மட்டுமே  YouTube இணையத்தில் இணைத்திருந்த போதும் இன்றுவரை இப்பாடலை 190,000(ஒரு லட்சத்து தொண்ணூறாயிரம் பேர்) பார்வையிட்டு உள்ளனர்.

காணொளி உதவிக்கு நன்றி:Neelathamara
47 வருடங்கள் பழமையான காணொளி என்பதால் காட்சியின் தரக் குறைவிற்கு வருந்துகிறேன்.

மலையாள மொழி பற்றிய குறிப்பு: சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சேர நாடு தற்போதைய கேரள மாநிலம் எனவும், மூவேந்தர்களில் சேரர்கள் ஆண்ட பூமி இது எனவும் நம்பப் படுகிறது. காலப்போக்கில் தமிழ் மொழியுடன் சமஸ்கிருதம் கலந்ததால் மலையாள மொழி உருவானது எனவும் மொழியியலாளர்கள் கூறுவர். இலங்கையில் யாழ்ப்பாணத் தமிழில் மலையாள மொழியின் தாக்கம் தென்படுகிறது.யாழ்ப்பாண இராச்சியம் சேர நாட்டுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தது அல்லது யாழ்ப்பாண இராச்சியத்தை சேரர்கள் கைப்பற்றி ஆண்டது காரணமாக இருக்கலாம் என நம்பப் படுகிறது.
யாழ்ப்பாணத் தமிழில் புழக்கத்தில் உள்ள மலையாள வார்த்தைகள்: பர்த்தா(பத்தா), பாரியா(பாரியார்), மோன்(மகன்), மோள்(மகள்), அங்ஙன(அங்கே) இங்ஙன(இங்கே), தனது பிள்ளையை "என்ர குஞ்சு" எனச் செல்லமாக விளித்தல் போன்ற நூற்றுக் கணக்கான உதாரணங்களைக் கூறலாம். 

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
  
 
அல்லல்பட்டு ஆற்றாது அழுதுகண் ணீர்அன்றே 
செல்வத்தைத் தேய்க்கும் படை. (555)

பொருள்: கொடுங்கோல் ஆட்சியால் துன்புற்ற குடிமக்கள் அதைப் பொறுக்க மாட்டாமல் அழுத கண்ணீர், மன்னனின் செல்வத்தை அழிக்கும் படையாகும்.

இன்றைய சிந்தனைக்கு

டாக்டர் அம்பேத்கார் 

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.
முதல் தெய்வம் அறிவு,
இரண்டாவது தெய்வம் சுயமரியாதை,
மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.
இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

சனி, நவம்பர் 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
  
 
கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கொடிச் 
சூழாது செய்யும் அரசு. (554)
 
பொருள்: நடக்கப் போவதைப் பற்றிக் கருதாமல், முறை தவறி ஆட்சி செய்யும் மன்னன் பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

இன்றைய பொன்மொழி

பெர்னார்ட் ஷா 

பேச்சைக் குறையுங்கள், ஆழ்ந்து சிந்திக்க அதிக நேரம் ஒதுக்குங்கள். பிறகு ஆற்றலுடன் செயலாற்ற வேண்டிய சூழ்நிலை  தானாக வந்து சேரும்.

வெள்ளி, நவம்பர் 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
  
 
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் 
நாள்தொறும் நாடு கெடும் (553)

பொருள்: நாட்டில் நாள்தோறும் நடைபெறும் நன்மை தீமைகளை ஆராய்ந்து, ஆட்சி செய்யாத அரசன் நாளுக்கு நாள் தன் நாட்டை இழந்து வருவான்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
  

கடன் வாங்கும் முன்பு நீ கடனாளியானால் என்ன செய்வாய் என்பதை கொஞ்சம் நினைத்துப் பார். உன்னுடைய சுதந்திரத்தை மற்றொரு சக்தியிடம் அடகு வைத்து விடுகிறாய். உரிய நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமற் போனால்; கடன் கொடுத்தவனைப் பார்க்க வெட்கப் படுவாய். அவனிடம் பேசுவதற்கு உனக்குப் பயம் வந்து விடும்.

இறைவனுக்கு உகந்த பூக்கள்

ஆக்கம்: பவநீதா லோகநாதன்
கடவுளுக்கு மிக நெருக்கமான விடயம் பூக்கள் என்று கருதுகிறோம். அதனால் தான் இறைவனை அர்ச்சிக்க நாம் பூக்களை பயன்படுத்துகின்றோம்.
எத்தனையோ பூக்கள் உலகத்தில் இருந்தாலும் குறிப்பட்ட பூக்களை தான் நாம் பயன்படுத்துகின்றோம். அதுவும் குறிப்பிட்ட கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் தான் அர்ச்சிக்க வேண்டும் என்பதே ஐதீகம்.
 
விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். பூக்களில் செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
 
முருகனுக்கு மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா ஆகிய பூக்களுடன் சூரியகாந்திபூவும் பயன்படுத்தலாம்.
 
துர்க்கைக்கு மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்யப்படும்.
 
அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் தும்பை, வில்வம், செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம், செண்பகம் என்பவற்றால் அர்ச்சனை செய்யப்படும்
 
விஷ்ணுவிற்கு தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து,ஆகிய பூக்களால் அர்சனை செய்யப்படும்.
 
பூக்க்களால் அர்சனை செய்வதால் நமக்கு எண்ணிட முடியா பலன்கள் கிடைக்கும் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.
 
தாமரை மலர்கள் தெய்வீகத்தன்மையை தரவல்லது. நமக்குள் ஒரு சக்தியை தந்து நம்மை இயங்க வைக்கிறது.
 
முல்லை மற்றும் மல்லிகை பூக்கள் புனித தன்மையை வழங்கி உள சமநிலையை தரக்கூடியது.
 
துளசியை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை அதன் தெய்வீகத்தன்மையும் பக்தியும் நாம் அறிந்ததே.
 
நமக்கு தேவை இல்லாத துன்பங்களை நீக்கி தேவையான நன்மைகளை பெற மருக்கொழுந்து மலர் உகந்தது.
 
எல்லோருக்கும் பிடித்த ரோஜா மலர்கள் ஆண்டவனிடம் அன்பு அதிகரிக்க செய்து இனிய எண்ணத்தைதந்து தியான உணர்வை வளர்க்கும்.
 
நம் மனதில் சிறந்த எண்ணங்கள் மேலோங்கவும் விருப்பங்கள் நிறைவேறவும் பவள மல்லி பூக்கள் உதவும் . 
 
நமக்கு பயம் நீங்கி தைரியம் வரவேண்டும் எனில் எருக்கம் பூக்க்களால் அர்சனை செய்ய வேண்டும்.
 
செம்பருத்தி, அரளி ஆகிய இரு பூக்களும் நம் மனதை தவறான பாதையில் பயணிக்காது தடுத்து நன் நெறிக்கு இட்டு செல்கிறது.
 
நந்தியாவட்டப் பூக்கள் பணம், பொருள் தேவையை நிவர்த்தி செய்யும் தன்மை வாய்ந்தது .
 
பூக்கள் வாசனைக்கு மட்டுமல்ல நல்ல வாழ்க்கைக்கும் என்பதை நாம் உணர்ந்து மலர் அர்சனைகளை மேற்கொள்ள வேண்டும்.
நன்றி: vetrinews.lk

வியாழன், நவம்பர் 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. (552)
பொருள்: அரசன் குடிமக்களிடம் முறைகடந்து பொருளைக் கேட்பது, கையில் வேலோடு வழிப்பறி செய்யும் கள்வன் 'கொடு' என்று கேட்பதைப் போன்றது.

இன்றைய சிந்தனைக்கு

அலெக்சாண்டர் பெயின் 

ஏழ்மையில் வாடுகின்ற ஒருவன் தான் இன்னமும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதாக உணரலாம். ஆனால் உலகின் கண்களுக்கு அவன் இறந்து விட்டவனே.

புதன், நவம்பர் 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
 
 
கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டு 
அல்லவை செய்துஒழுகும் வேந்து. (551)
 
பொருள்: குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு முறையில்லாத செயல்களைச் செய்யும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன் ஆவான்.

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்
  

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும்போதுதான் தெரியும்.

செவ்வாய், நவம்பர் 20, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
  
 
கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் 
களைகட் டுஅதனோடு நேர். (550)

பொருள்: கொடியவரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும் மற்றவர்களை அருளோடு காத்தும் முறை செய்தல் பசுமையான பயிரில் களையெடுப்பது போன்று சிறந்த செயலாகும்.

இன்றைய சிந்தனைக்கு

அறிஞர் அண்ணா 

ஒரு  நல்ல நூலைப்போல் சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு யாரும் இல்லை.

ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் மிளகாய்

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

விதைகளுடன் கனிகள், ஜீரணத்தை ஊக்குவித்து உடலுக்கு வலுவேற்றுகிறது. தசைக்குடைச்சல் வலியை போக்கும் தன்மை கொண்டது. கிருமி நாசினியாக செயல்படுகிறது. வியர்வை மற்றும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். வலிபோக்கும் மருத்துவத்தில் பயன்படுகிறது.

உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. கெப்சைசின் எனும் வேதிப்பொருள் இத்தன்மைக்கு அடிப்படையாகிறது.

தோல்களின் மீது தடவும் போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றையும் போக்க வல்லது.

பக்டீரியங்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்குள் சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண சுரப்பிகள் சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும். தொண்டை கரகரப்பை மாற்றும் வல்லமை கொண்டது.

சர்க்கரை மற்றும் குல்கந்த் சேர்த்து முக்கோண வில்லைகளாகச் செய்யப்பட்டு தொண்டை கரகரப்புக்கு மருந்தாகிறது. மேடைப் பேச்சாளர்கள் மற்றும் பாடகர்களுக்கு மிகவும் உதவும். வலிகளைப் போக்க தேய்ப்புத் தைலமாக பயன்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் சின்கோனாவுடன் சேர்த்து நாட்பட்ட மூட்டுவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயம் மற்றும் கற்பூரத்துடன் சேர்ந்து கொலரா நோய்க்கு மருந்தாகிறது. தீப்புண் மேல் தூவப்படுகிறது.

நன்றி: தமிழ்க்கதிர்.com 

திங்கள், நவம்பர் 19, 2012

நன்றி, நன்றி, நன்றி,

அந்திமாலையில் வாசகர் வருகை
  60,000 தைத் தாண்டியது.
எமது பேரன்பிற்குப் பாத்திரமான வாசகப் பெருமக்களே!
எமது அந்திமாலையின் உதயம்பற்றி முறைப்படி மின்னஞ்சல் ஊடாகவும், 'முகப் புத்தகம்' (facebook) ஊடாகவும், ஒரு சில அன்பு உள்ளங்களுக்குக் கடிதமூலமாகவும் அறிவித்தல்
கொடுக்க ஆரம்பித்த 20.09.2010 தேதி தொடக்கம் இன்றைய தினம் (19.11.2012) திங்கட்கிழமை முற்பகல் 11.19 மணிவரை 'அந்திமாலை' இணையத்தளத்திற்கு வருகைதந்த வாசகர்களின் மொத்த எண்ணிக்கை 60,000 ஆகியது. இவ்விணையமானது ஒரு ஆத்ம திருப்திக்காகவும், பொழுதுபோக்கிற்காகவுமே எம்மால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் காரணமாகவே நாம் 'தினசரிச் செய்திகளை' வெளியிடுவதில்லை. உலகில் தினசரிச் செய்திகளை வெளியிடுகின்ற சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இணையத் தளங்களும், தமிழ் கூறும் நல்லுலகத்தைச் சேர்ந்த தனி மனிதர்களால், நேரம் கிடைக்கும்போது பதிவேற்றம் செய்யப்படும் எண்பதினாயிரத்திற்கு  மேற்பட்ட தமிழ் வலைப் பதிவுகளும் உள்ளன என்பதை உங்களில் சிலரேனும் அறிவீர்கள். மொத்தமாக எண்பத்திரெண்டாயிரத்திற்கு  மேற்பட்ட இணையங்களோடு போட்டியிட்டு இணைய உலகில் கால் பதிக்க வேண்டிய ஒரு கடினமான சூழலில் 'அந்திமாலை' பிறப்பெடுத்தது. இருப்பினும் எமது அன்பு வாசகர்களாகிய உங்களது ஆதரவால் இரண்டு  வருடங்களைத் தாண்டியும் அந்திமாலை ஒரு இணையமாக உங்கள்முன் பவனி வருகிறது. ஏறத்தாழ இருபத்தியாறு மாத காலத்திற்குள் வாசகர் வருகைப்பதிவேட்டைத் தமது வருகையால் நிரப்பி, வரவு எண்ணிக்கையை அறுபதினாயிரத்திற்கு மேற்பட்டவர்கள்' என்ற சிறப்பான நிலைக்குக்  கொண்டுவந்திருக்கும் எமது அன்பு வாசகப் பெருமக்களை 'அந்திமாலை' இருகரம்கூப்பி வணங்குகிறது.வளர்ச்சிப்பாதையில் அறுபதாவது அடியை எடுத்து வைத்திருக்கும் இந்த இணையத் தளத்திற்கு நீங்கள் கொடுக்கும் பேராதரவிற்கு உளமார்ந்த நன்றிகள். உங்கள் பேராதரவு இன்றுபோல் என்றும் தொடரும் என்று உளமார நம்புகிறோம்.
இந்த மனம் மகிழும் இனிய தருணத்தில் எமக்கு ஆக்கங்களையும், ஆலோசனைகளையும் வழங்கிய, வழங்கிவருகின்ற அனைத்து அன்பு உள்ளங்களையும் நன்றியோடு வணங்குகிறோம். அதேபோல் எங்கள் சோர்வை அகற்றி புத்துணர்ச்சியோடு எம்மைச் செயற்படத் தூண்டும் உங்கள் அனைவரது வருகைக்கும் எமது சிரம்தாழ்ந்த நன்றிகள். தொடர்ந்து எமது தளத்திற்கு வருகை தருவதோடு, கருத்துரைகள் இட்டு எம்மையும், எமது படைப்பாளிகளையும் ஊக்குவிக்கின்ற வாசகர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகுக. அதேபோல் எம்மை தொடர்ந்தும் உற்சாகப்படுத்திய, ஊக்குவிக்கின்ற அத்தனை நல் இதயங்களுக்கும் எம் நன்றிகள் உரித்தாகுக.   என்றும் வேண்டும் இந்த இனிய உறவு.

வாருங்கள்! ஒன்றுபட்டு உயர்வோம்.



நன்றியுணர்வுடன் 
அந்திமாலையின் சார்பாக,
இ.சொ. லிங்கதாசன்
www.anthimaalai.dk

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
  
குடிபுறம் காத்துஓம்பிக் குற்றம் கடிதல் 
வடுஅன்று வேந்தன் தொழில் . (549)

பொருள்: குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து, தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தண்டனையால் ஒழித்தல் அரசனுடைய தொழிலாகும்; அது பழியன்று.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே. நீ கொடுப்பது நின்றுவிட்டால் அவர்கள் அன்பு செலுத்துவதை நிறுத்தி விடுவார்கள்.

ஞாயிறு, நவம்பர் 18, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
  
 
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் 
தண்பதத்தான் தானே கெடும். (548)

பொருள்: மக்கள் தங்கள் குறைகளைச் சொல்வதற்கு நேரில் காணமுடியாதவனாகவும், சரியாக ஆராயாமல் தீர்ப்பு வழங்குபவனாகவும் உள்ள ஆட்சியாளன், பகைவரின்றியே, தானே தாழ்ந்த நிலையடைந்து கெடுவான்.

இன்றைய சிந்தனைக்கு

அம்புரோஸ் பியர்ஸ் 

காதல் ஒருவிதமான தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகி விடும்.

சனி, நவம்பர் 17, 2012

இசைக்கு மொழியில்லை

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
பாடல்: "சமனல் ஹகுமன்  அதரே"
மொழி: சிங்களம்
நாடு: இலங்கை/சிங்கள மொழியில் ஸ்ரீலங்கா 
பாடியவர்: உரேஷா ரவிஹரி

பாடல் இடம்பெற்ற திரைப்படம்: ஆசை மாமா பியபன்னா
நடிகைகள்: பூஜா உமாசங்கர்("நான் கடவுள்" திரைப்படத்தில் பார்வையற்றவராக நடித்து விருதுகள் பெற்றவர்) மற்றும் உபேக்ஷா சுவர்ணமாலி.
பாடலாசிரியர்: சுனில் விமலவீர
இசை: திலின ருகுனகே  

குறிப்பு: இந்தியாவின் ஒரிய மொழி, உலகிலிருந்து மறைந்து விட்டதாகக் கருதப்படும் பாளி, சமஸ்கிருதம், இவற்றுடன் தமிழ் ஆகிய மொழிகள் கலந்த கலவையே சிங்கள மொழி ஆகும். தொழில் மற்றும் ஏனைய மார்க்கங்களுக்காக உலகின் பல நாடுகளில் சிங்களவர் வாழ்ந்த போதிலும் பல ஆயிரக் கணக்கான வருடங்களாக தமது தாய் மொழியாக சிங்களத்தைப் பேசுகின்ற மக்கள் வாழும் நாடு இலங்கை மட்டுமே ஆகும். இலங்கையின் சிங்களவர்களின் மூதாதையர்களில் ஆண்கள்(விஜயனும் அவனது 700 தோழர்களும்) கி.மு.543இல் கலிங்க நாட்டிலிருந்தும்(இந்தியாவின் ஒரிசா மாநிலம்), பெண்கள் (701 பெண்கள்) பாண்டி நாட்டிலிருந்தும்(மதுரை மாவட்டம்) வந்ததாக இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலாகிய 'மஹாவம்சம்' கூறுகிறது. 


காணொளி உதவிக்கு நன்றி: Coolthili மற்றும் www.lankachannel.lk

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
 
 
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை 
முறைகாக்கும் முட்டாச் செயின் (547)
 
பொருள்:அரசன் உலகத்தையெல்லாம் காப்பாற்றுவான். நீதி தவறாமல் ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த ஆட்சி முறையே காப்பாற்றும்.

இன்றைய சிந்தனைக்கு

வால்டர் டேவிஸ் 
  

ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான்.

ராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன்

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.

சாக்கடையில் பதுங்கிய இந்திரன்

ஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என விளக்கம் சொன்னார். ‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார். சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா’ என்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே.. அதுகூட என் பார்வை, பீடிப்பினால்தான்’ என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.

சனீஸ்வரரின் அதிகாரம்

எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் திசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார். நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், ‘சனியனே! உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது’ என்று சொல்லி திட்டுவார்கள்.

உன்னை புதன் பிடித்து ஆட்டுகிறது. கேது ஆட்டுவிக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை. எந்த கிரக திசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது. இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு மேலும் 

வெள்ளி, நவம்பர் 16, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
  
 
வேல்அன்று வென்றி தருவது மன்னவன் 
கோல்அதூஉம் கோடாது எனின். (546)
 
பொருள்: அரசனுக்கு வெற்றி தருவது அவனுடைய வேல் அன்று; செங்கோலேயாகும். அதுவும் அச்செங்கோல் வளையாவிட்டால்தான் வெற்றி தரும்.

இன்றைய சிந்தனைக்கு

வின்ஸ்டன் சர்ச்சில் 

அறிவுத் தேவையை விடக் கவனக் குறைவுதான் அதிக நஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.

தாகத்தை தணிக்க மட்டுமல்ல தர்பூசணி…

கோடையில் தாகத்தை தணிக்க பலரும் தர்பூசணியின் தயவை நாடுவது வழக்கம். சாலையோர கடைகளிலும், கோடைகால சிறப்பு ஸ்டால்களிலும் காணக்கிடைக்கும் தர்பூசணி பழத்திற்கு தாகம் தணிக்கும் சக்தியோடு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர் ஒருவரின் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.ஆண்மையை அதிகரிப்பதில் வயாகரா மாத்திரையின் சக்தியை விட அதிகமான சக்தி தர்பூசணி பழத்துக்கு உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கோடைகாலமும் தர்பூசணியும் 
இயற்கையானது அந்தந்த சீசனிற்கு ஏற்ப பழங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கிறது. கோடையில் உஷ்ணத்தை சமாளிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை தர்பூசணிப் பழம். இது உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது.
தர்பூசணியில் உள்ள சத்துக்கள்
தர்பூசணி பழத்தில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. பசலைக்கீரைக்கு சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏயும் காணப்படுகின்றன. வைட்டமின் பி6, வைட்டமின் பி1 உள்ளன. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன.
இயற்கை வயாக்கரா
தர்பூசணி பழம் ஓர் இயற்கையான ‘வயாக்ரா’ என்பது தான். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்பவர் தர்பூசணி பழம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் ஒரு இன்ப அதிர்ச்சியாகும். தர்பூசணிக்கு `ஆசையை’ அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ – நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.
தர்பூசணியில் உள்ள `சிட்ரூலின்’ என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்.
இதயநோயாளிகளுக்கும் நன்மை
தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்’, `அர்ஜினைனாக’ எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நம் ஊரில் தாகம் தணிக்க தர்பூசணி பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, விதைகளை நீக்கி விட்டு சாப்பிடுவார்கள். இல்லையெனில் பாழத்தை துண்டுகளாக்கி சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவி சாப்பிடுவார்கள். மேலும் பழ ரசமாகவும் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த கட்டுரையை படித்த பின்னர் பழத்தின் சிவப்பு பகுதியை விட்டு விட்டு வெண்மை பகுதியைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
 நன்றி: seidhitamil.blogspot.com 

வியாழன், நவம்பர் 15, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
  

இயல்புளிக் கோல் ஓச்சும்  மன்னவன் நாட்ட 
பெயலும் விளையுளும் தொக்கு (545)

பொருள்: நீதிநெறியில் அரசாளும் மன்னனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருங்கு கூடியிருக்கும்.