செவ்வாய், ஜூலை 26, 2011

சீனரும் மதமும்


ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர். 
பொதுவாகவே ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் ஒரு பொதுவான கருத்துருவாக்கம் நம் மனதில் ஏற்கனவே இருக்கும். முன்பெல்லாம் இந்தியா என்றால் பாம்பாட்டிகள், அரை நிர்வாண சாமியார்கள் நிறைந்த நாடு என்ற தோற்றம் மேலை நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது போல, சீனாவை பற்றியும் பொதுவான இந்தியர்களிடையே ஒரு கருத்துருவாக்கம் இருந்து வருகிறது. அவற்றில் சில "சீனர்கள் எப்போதும் நூடுல் சாப்பிடுவார்கள்", அப்புறம் "பாம்பு பல்லியெல்லாம் சாப்பிடுவார்கள்", "பெரும்பாலும் புத்த மதத்தை பின்பற்றுவார்கள்" இப்படியெல்லாம் சில கருத்துருவாக்கங்கள் இருகிறது. நான் 3 முறை சீனா சென்று வந்த போது கூட பலர் என்னிடம் ஏதோ நான் வேறு வழியில்லாமல் பாம்பு பல்லியெல்லாம் சாப்பிட்டிருப்பேன் என்று சந்தேகத்தோடு கேட்டார்கள்.


பொதுவாக இந்தியர்கள் அதிகமாக வெஜிடேரியன் சாப்பிடுவது போலவும், சீனர்கள் அதிகமாக புலால் உண்பதாகவும் நம் மக்கள் நினைக்கிறார்கள் .. சீனர்கள் உணவில் தினமும் புலால் சேர்த்து உண்பது உண்மை தான். ஆனால் கண்டிப்பாக நம்மை விட அதிகமாக காய்கறிகள், கீரைகளை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்பவர்கள் அவர்கள் தான். நம்ம ஊரில் வெஜிடேரியன் என்ற பெயரில் சட்டி சட்டியாக சோறு சாப்பிடுகிறோம் .காய்கறிகளை பெயருக்கு தொட்டுக் கொள்ளுகிறோம். சீனர்களும் சோறு சாப்பிடுகிறார்கள். ஆனால் நம் அளவு அல்ல. சோற்றை விட அதிகமாக காய்கறிகள், கீரைகள் அதோடு இறைச்சி சம அளவில் சாப்பிடுகிறார்கள். அதோடு பழங்களும் நிறைய சாப்பிடுகிறார்கள். ஆக மொத்ததில் காய்கறி சாப்பிடுவதாக சொல்லும் நம்மை விடவும் வித விதமான காய்கறிகள், கீரைகள் சாப்பிடுவது சீனர்கள் தான். இது தவிர உடலுக்கு நலம் தரும் மீன் வகைகளை அதிகமாக சாப்பிடுகிறார்கள்.

அலுவலக வேலை காரணமாக
3 முறை நான் சீனாவுக்கு சென்றிருக்கிறேன். நான் சென்ற நகரம் ShenZhen. இது ஹாங்காங் - க்கு மிக அருகில் உள்ள சீன நகரம். ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு நுழைவதற்கான வாயில் என்று சொல்லலாம். இந்தியாவோடு வளர்ச்சியில் போட்டி போடும் ஒரு நாடாக நினைத்து சீனாவை கற்பனை செய்திருந்த எனக்கு இங்கு அதிர்ச்சி காத்திருந்தது.. Shen Zhen உள்கட்டமைப்பு, வசதிகள், தொழில், சுத்தம் இவற்றில் உலகத்தரத்தில் இருந்தது என்றால் மிகையல்ல. இன்னும் சொல்லப்போனால் சுத்தம், நகர பராமரிப்பு, வடிவமைப்பு இவற்றில் சிங்கப்பூருக்கு இணையாக இருந்தது என்பதே உண்மை. நாம் அவர்களோடு போட்டி போட்டாலும் இப்போதைக்கு நம்மை விட கிட்டத்தட்ட 20 வருடங்களாவது அவர்கள் முன்னால் இருப்பதாகவே எனக்கு தோன்றியது.

பொதுவாக நான் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டு வரலாறு, மக்கள் வாழ்க்கை முறை, கலாச்சாரம், உணவு முறை, மதம், சமுதாய கட்டமைப்பு இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முற்படுவேன். சீனாவிலுள்ள சீனர்கள் சிங்கப்பூர், ஹாங்காங்கில் உள்ள சீனர்களைக் காட்டிலும் நட்பு பாராட்டுபவர்களாகவும், உதவுகின்ற மனமுள்ளவர்களாகவும், பிறர் மேல் கரிசனமுள்ளவர்களாகவும் இருந்தார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. என்ன தான் சிங்கப்பூரில் நான் சீன உணவு சாப்பிட்டு அனுபவம் இருந்தாலும், சீன உணவின் சுவை, எண்ணற்ற வகைகள் இவற்றை சீனாவில் தான் என்னால் உணர முடிந்தது.

அலுவலக வேலை நிமித்தம் சென்றிருந்ததால், நான் அங்கு பணியாற்றிய, பழகிய அனைவரும் நன்கு படித்த பொறியாளர்களாக இருந்தனர். ஒரு சிலரைத் தவிர மிகப் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் பேசவும், நாம் பேசினால் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவும் இருந்தனர். ஆனால் ஆங்கிலத்தில் ஓரளவு நன்றாக எழுதவும், நாம் எழுதினால் நன்றாகவே புரிந்து கொள்பவர்களாகவும் இருந்தனர். அதனால் எப்போதும் என்னோடு ஒரு பேப்பரும் பேனாவும் வைத்திருப்பேன். நான் சொல்லி அவர்களுக்கு புரியாத பட்சத்தில் உடனே வாக்கியமாக அதை எழுதி காண்பிப்பேன். உடனே புரிந்து கொண்டு அவர்களும் பதிலை எழுதிக்காட்டுவார்கள். மற்ற படி உடைந்த ஆங்கிலத்தில் உரையாடி சமாளிக்க வேண்டியிருந்தது. அவர்கள் பல்கலைக்கழகங்களிலே ஆங்கிலம் கற்றிருந்தாலும் உரையாடும் வாய்ப்போ, தேவையோ இல்லாததால் இந்த நிலமை. ஆனால் இப்போது நிறுவனங்களிலேயே இதற்கான பட்டறைகளை நடத்தி வருகிறார்கள்.

பொதுவாக சீனாவில் உள்ள சீனர்கள் படித்தவர்களாக இருந்தாலும், வேலை, வியாபாரம் தவிர்த்த உலக அறிவு அவர்களுக்கு இல்லாதது கண்கூடாக தெரிந்தது. அரசியல், மதம் இவற்றைப்பற்றி நடுத்தர சீனர்கள் கண்டுகொள்வதே இல்லை. அவர்களது ஒரே நோக்கம் படிப்பு, வேலை, பணம், நல்ல வாழ்க்கை. மதம், சாதி (அப்படி ஒன்றும் கிடையாது), மொழி, சடங்குகள், அரசியல் இவற்றிலெல்லாம் அவர்களுக்கு இருக்கும் ஆர்வமின்மை அல்லது தேவையின்மை அவர்களின் முழுக்கவனத்தையும் நேரத்தையும் உழைப்புக்கும், வசதிகளை பெருக்கிகொள்வதற்கும் முழுக்கவனத்தையும் செலுத்த முடிவதே அவர்களின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருப்பதாக என்னால் உணர முடிந்தது.

நண்பரொருவர் வார இறுதியில் அவர் குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பதை தியாகம் செய்து என்னையும் வியட்நாமிலிருந்து வந்த இன்னொரு நண்பரையும் நகர உலாவுக்கு அழைத்து சென்றார் .."

Little wonders of the world" (உலக அதிசயங்களின் சிறிய மாதிரிகள்) என்ற மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவுக்கு அழைத்து சென்றார். உலகின் முக்கியமான சின்னங்களின் சிறிய வடிவங்கள் அங்கே தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன. தாஜ்மகால், ஈபில் டவர் உட்பட பல முக்கிய சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தாஜ்மகால் கிட்டத்தட்ட 30 அடி உயரமாகவும், ஈபில் டவர் கிட்டத்தட்ட 200 அடி உயரமாகவும் இருந்தது. அவற்றின் முன் நின்று புகைப்படம் எடுத்தால் உண்மையிலேயே அந்த உண்மையான சின்னங்களின் முன் நின்று எடுத்தது போல இருந்தது. இந்த பூங்காவின் உள்ளே நுழைந்தவுடன் முதலில் இருந்தது நமது அரசு சின்னமான 'மூன்று சிங்கங்கள்' அச்சு அசலாக சுமார் 20 அடி உயரத்தில் இருந்தது. இந்தியர்களை அங்கு காண்பது அரிது என்பதால் பலரும் என்னை விநோதமாக பார்த்தார்கள். பின்னர் புன்னகைத்தார்கள். ஓரிடத்தில் சீன மாது ஒருவர் பாரம்பரிய சீன உடைகள் அணிந்து தலையில் கீரீடங்கள் வைத்து விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று சீன நண்பரிடம் வந்து ஏதோ சொன்னார். சீன நண்பர் என்னிடம் "இந்த இந்தியரோடு ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்கிறார்" என்றார். பக்கத்தில் நின்ற வியட்நாம் நண்பருக்கு காதில் புகை. ஏதோ ஒரு விநோத ஜந்துவை பார்த்த ஆர்வத்தில் அப்பெண் புகைப்படம் எடுக்க விரும்பியிருப்பார் போலும்.
சீனாவில் புத்த மதம், கன்பூசிய மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் இன்னும் பல பாராம்பரிய சீன வழிமுறைகளை பின்பற்றுவோர் இருந்தாலும் கிட்டத்தட்ட 70% பேர் மத நம்பிக்கை அற்றவர்கள் தான். அதிலும் நான் சென்ற நிறுவனத்தில் நான் பழகிய அனைவரும் தாங்கள் எந்த மதத்தையும்  சாரவில்லை என்றே சொன்னார்கள். பலரிடம் 'மதம்' என்றால் என்ன என்பதை புரிய வைப்பதே பெரும்பாடாக இருந்தது. ஒரு பொறியாளரிடம் பேச்சு வாக்கில் 'நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறீர்கள்?" என்று கேட்க அவருக்கு 'மதம்' என்பதே புரியவில்லை ..நான் ஒரு உதாரணத்திற்கு 'I am a christian..what about you?'(நான் ஒரு கிறீஸ்தவன் நீங்கள் என்ன மதம்?) என்று கேட்க ,அவர் ஓரளவு புரிந்தவராக "Oh! no relegion"(எந்தச் சமயமும் இல்லை) என்றார். நான் உடனே "Do you beleive in GOD?"(நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?) என்று கேட்க "No..I beleive in myself "(இல்லை, நான் என்னைத்தான் நம்புகிறேன்) என்று தீர்க்கமான பதில் வந்தது. நானும் விடாமல் "What about your parents?"(உங்கள் பெற்றோர் எப்படி?) என்று கேட்க, அவர் சொன்னார் "They also same like me..But my grandparents beleived" (அவர்களும் என்னைப் போலத்தான், ஆனால் என் பாட்டன், பாட்டி கடவுளை நம்பினார்கள்) ..கிட்டத்தட்ட அனைவருமே இப்படித் தான் சொன்னார்கள். இவர்கள் இதைப்பற்றியெல்லாம் நினைத்துக்கூட பார்க்காமல் பொழப்பைப் பார்ப்பதால் தான் நம்மைவிட வேகமாக முன்னேறிச் செல்கிறார்களோ என்று தோன்றியது.
நம்மை நகர உலா அழைத்துச் சென்ற நண்பர் இதை விட மேல் .அவரிடம் வழ்க்கம் போல 'I am a christian. what about you?" என்று கேட்க அவருக்கு christian (கிறீஸ்தவன்) என்றால் என்ன என்று தெரியவில்லை ..நான் சைகையெல்லாம் வைத்து 'Jesus' என்று சொல்ல 'ஓ! யேசு' (சீன மொழியில் யேசு என்று தான் சொல்கிறார்கள்) என்று சொன்னார். அப்பாடா ஒரு வழியாக புரிந்தது. அப்போது டிசம்பர் மாதம். கிறிஸ்தவ மதம் அங்கு பெரிதாக இல்லையென்றாலும் எங்கும் கிறிஸ்துமஸ் சுவடுகள். உணவகங்கள், ஹோட்டல்கள் எங்கும் கிறிஸ்துமஸ் மரங்கள், அலங்கரிப்புகள், வாழ்த்து வாசகங்கள் என்று வியக்கும் வகையில் இருந்தது. ஒரு ஆடியோ சீடி விற்கும் கடை தென்பட நானும் அந்த சீன நண்பரும் உள்ளே சென்றோம். அங்கு கிறிஸ்துமஸ் பாடல்கள் எதுவும் கிடைக்குமா என தேடிக்கொண்டிருந்தேன். சீன மொழியிலேயே இருந்தன. சீன நண்பர் அருகில் வந்து "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டார். நான் "கிறிஸ்துமஸ் பாடல்கள் சீன மொழியில் இருக்கிறது. அது போல ஆங்கிலத்தில் கிடைக்குமா?" எனக் கேட்டேன். அவர் புருவத்தை உயர்த்தி ஒரு கேள்வி கேட்டார் "You worship Yesu. Then why do you look for christmas songs? (நீ இயேசுவை வணங்குகிறாய் பிறகு எதற்கு 'கிறிஸ்துமஸ் பாடல்களை தேடுகிறாய்?) எனக்கு மயக்கம் வராத குறை. அதன் பிறகு மதம் பற்றி நான் வாய் திறக்கவே இல்லை.

11 கருத்துகள்:

Arul, DK சொன்னது…

Good

பரஞ்சோதிநாதன், டென்மார்க் சொன்னது…

உங்கள் ஆக்கம் மிகவும் சுவாரிசியமாக உள்ளது.

Uthayan சொன்னது…

very good thanks for yours time

Vijitha Kamal சொன்னது…

அருமை

kowsy சொன்னது…

சுவாரஸ்யமாக இருக்கின்றது. தொடருங்கள்.

Arun Norway சொன்னது…

Excellent.

vinothiny pathmanathan dk சொன்னது…

உங்கள் ஆக்கம் நன்றாக இருக்கிறது .பாராட்டுக்கள்

ஜோ/Joe சொன்னது…

மிகப்பொருத்தமான படங்களை உள்ளீடு செய்து வெளியிட்ட அந்திமாலை குழுவுக்கு மனமார்ந்த நன்றி

ஜோ/Joe சொன்னது…

ஊக்கமும் கருத்துக்களும் நல்கிய அருள் , பரஞ்சோதி நாதன் ,உதயன் ,விஜிதா கமல் ,சந்திர கெளரி , அருண் , வினோதினி பத்மநாதன் அனைவருக்கும் நன்றி!

vetha. சொன்னது…

ஆக்கம் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

ஜோ/Joe சொன்னது…

வேதா , உங்கள் கருத்துக்கு நன்றி.

கருத்துரையிடுக