சனி, ஏப்ரல் 26, 2014

பேய்க் கதைகளின் 'சக்கரவர்த்தி' மறைந்தார்!

"லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் ஒவ்வொருவனும் தன் மக்கள், கடந்தகாலம் மற்றும் தேசியம்தேசிய வரலாறு என்றாகப்பட்ட கனத்த உடலை இழுத்துக்கொண்டு வருபவன்."
-பாப்லே நெருடா. 
ஆக்கம்: கரவைதாசன், டென்மார்க்.
மாந்திரீக எதார்த்தம் செய்த காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்இறப்பெய்தினார். யதார்த்தை கூறும் முறையில் இலக்கியத்தின் உறவை அங்கீகரித்துச்சென்ற மார்க்வைஸ் இறந்ததும் மாயத்தன்மை கொண்டதுமான நினைவுகளையும் தன் பாட்டியிடம் கேட்டறிந்த புதிர்களையும் தனக்குரிய வாலயப்பட்ட ஸ்பானிய மொழியிலே கதை சொல்லி வந்தார். இந்தக் கதை சொல்லி ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பே இறந்துவிட்டார். என்பத்தி ஏழுவயதில் இன்று  அவர் உடல் இவ்வுலகினை விட்டுப் பிரிந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பே அவர் நினைவாற்றலை இழக்கும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். என்ற உண்மையில் நாம் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருந்தோம். இன்று அவரது உடலும் எம்மிடமிருந்து இல்லாமல் போய்விட்டது.  

எட்டு வயதுவரை தன் தாத்தா பாட்டி வீட்டில் விடப்பட்ட மாக்வெஸ் அவர்களின் பேய்வீட்டில் அவர்களிடம் கதை கேட்டே வளர்ந்திருக்கிறார். அவர்களது வீடு அப்படிதான். இருட்டாகவும் பழைய மாந்தீரீக கதைகளால் நிறைந்தது. அவரின் தாத்தாவைவிடவும்  பாட்டியிடமே அதிக கதைகள் கேட்டு வளர்ந்ததாக அவர் தனது நேர் காணல்களில் வாக்கியங்களாக விட்டுச் சென்றுள்ளார். அவரின் தாத்தாவிடம் உள்நாட்டுப் போர்க்காலங்களில் சில போர்க்கூறுகளை கேட்டறிந்தாலும். அவர் ஒரு காதல் மன்னன் என்பதே அவரது கருத்தாகும்.  தன் பாட்டியிடம் கதை கேட்கும்போது அவளின் முகத்தில் தோன்றும் கோடுகள் தான் தன் கதைகளின் அழகியல் விசயங்கள் என அவரே சொல்லிவந்தார். 

அவை `ஒரு நூற்றாண்டு கால தனிமை வாசம்` என்ற நாவலாக வெளிவந்தபோது ஸ்பானிய மொழியில் மட்டும் நாற்பது இலட்சம் பிரதிகள் விற்பனையாகின. `ஏற்கெனவே சொல்லப்பட்ட கதை`நூலாக வந்தபோது  பத்து இலட்சத்துக்கு மேல் விற்பனையாகின. 1982ல் இலக்கித்துக்கான நோபல் பரிசினை அவர் பெற்றபோது அவர் ஆற்றிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. தன்னுடைய நோபல் பரிசு ஏற்புரையில் மார்க்வெஸ் தென் அமெரிக்க கண்டத்தில் நிலவும் ஏழ்மை, சர்வாதிகார ஆட்சி, உள்நாட்டுப்போர் போன்ற அவலங்களை விவரித்து லத்தீன் அமெரிக்க மக்களாகிய தங்களுக்கு ஆண்டாண்டு காலமாக யதார்த்தத்தில் தாங்கள் விரும்பும் கனவுலகம் மறுக்கப்படுவதை விவரிக்கிறர். கதை சொல்லியான தான்  (மார்க்வெஸ்) யதார்த்தத்தில் மறுக்கப்பட்ட நீதி, கொளரவமான வாழ்வும், சாவும், சக மனிதர்களீடம் கொள்ளும் பிரியம் இவற்றையெல்லாம் பிரதியில் படைத்து வேறொரு கனவுலகத்தில் பிரிதொரு கதாபாத்திரங்கள் வாயிலாக புதிய மொழியில் எழுதிச் செல்கிறேன் என்கிறார். இந்த கனவு பிரதேசத்தில் எந்த மனிதனும் சகமனிதனை வெறுக்கமுடியாது மாறாக நேசிக்கவே முடியும் என்கிறார்அதனால்த்தான்  மார்க்வெஸின் எழுத்தினை  அராதிக்கத்தோன்றும். எரிந்திராவை சந்திக்க மனம் அலைபாயும். ரேபாக்கவையும் ஊர்சுலாவையும் நூறு வருடங்கள் ஆனாலும் மனம் காண காத்திருக்க முடிகிறது.  

கொலம்பியாவில் பிறந்த மார்க்வெஸ் தன் கண்டத்தில் நிகழும் இயற்கை சூறையாடல், சுரண்டல், அரசியல் வன்முறைகளை, ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளி, ஒரு நாவிதன், வாடகைக்கு கார் ஓட்டுபவன், தச்சர், மீன்பிடிப்பவர், தையல்க்காரி, மாலுமிகள், கடல்க் கொள்ளைக்காரர்கள், ரசவாதிகள், பணிப்பெண்கள், பால்வினைத்தொளிலாரர்கள் போன்ற கதா பாத்திரங்களூடே வெளிக் கொணரும் ஆற்றல் கொண்டவர் மட்டுமல்ல. சல்மான் ருஸ்டி சொல்வதுபோல் அவர் சார்லிசத்திலிருந்து உருவாகி மாற்றம் பெற்றுள்ள அற்புத யதார்த்தம். யாரும் எழுதுவதில்லை கர்ணலுக்கு என்ற நூலில் வரும் கரையான் அரித்த குடையும் நாம் உயிருடன் அழுகிக் கொண்டிருக்கின்றோம் என்ற வார்த்தைப் பிரயோகங்களும் எங்களிடம் அவரால் விட்டுச்செல்லப்பட்டுத்தானிருக்கின்றன. இவற்றையெல்லாம் காணுகின்றபோது விமர்சகன் இவரை பாராட்டுவதற்கு வார்த்தைகளின்றி மாண்டு போய்விடுகின்றான். 


இயற்கையை விஞ்சுகின்ற பயங்கர கதைகளை அமைதிகொண்ட முகங்களுடன் காட்டுகின்ற  மார்க்வெஸ் பற்றிய அறிமுகம் பெரும்பாலும், அவருடைய இலக்கிய ஆளுமையைப் பற்றிதாகவே உள்ளது. இது அவருடைய இயல்பான ஆளுமையை குறைத்து மதிப்பீடு செய்வதாகவும், அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணியை புறக்கனிப்பதாகவும் உள்ளது. அவருக்கு வேறெரு மரபு இருக்கிறது. புரட்சிகர அரசியலின் இடதுசாரி அறிவுஜீவி மற்றும், காலணியாதிக்கத்திற்கு எதிரான மரபும் அவருக்கு உண்டு. ஒரு பராம்பரியமிக்க இடது சாரி மரபோடுதான்அவரை இணைத்துப் பார்க்க முடியும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள புரட்சிகர இயக்கங்களோடும், மக்கள் ஜனநாயக இயக்கங்களோடும், மற்றும் அதன் அரசியல் தலைவர்களோடும் தன்னை இணைத்துக் கொண்டு தன்னுடைய படைப்பின் மூலம், லத்தீன் அமெரிக்க நாடுகளின் அசலான முகத்தை, அதன் போர்குனத்தை உலகத்துக்குத் தெரியப்படுத்தியவர். அவருடைய பல படைப்புகளின் முதல் வாசகனாக கியூபாநாட்டுத் தலைவர் தோழர் பிடல் கஸ்ரோ இருந்திருக்கிறார். இருவரும் சந்திக்கும்போது கடல் பதார்த்தங்களை விரும்பி உண்டுகளித்திருக்கின்றார்கள். அந்தவேளையிலும்  கவர்லிய என்ற கடல் பதாத்தினை விரும்பி உண்பது பூர்ஷ்வாத்தனம் கொண்டவை எனக் கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள். 


லத்தீன் அமெரிக்க வெப்ப மண்டல நாடுகளிலே அமெரிக்க எதிர்ப்பு மனப்போக்கு அதன் நோய்பிடித்த கலாச்சாரத்துக்கு எதிராக மேலோங்கிவரும் லத்தீன் அமெரிக்க குரலாக மார்க்வெஸ்சை காண்கின்றோம். இவருடைய  இலக்கிய அரசியலைப் பின்பற்றுவது தான் இவருக்கு நாம் செய்யும் காணிக்கையும் அஞ்சலியுமாகும். 


பிற்குறிப்பு: கடந்த 17.04.2014 அன்று மறைந்த கொலம்பிய எழுத்தாளர் கப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் அவர்களின் நினைவாக கடந்த 19.04.2014 அன்று டென்மார்க்கில் வாழும் திரு.கரவைதாசன் அவர்கள் எழுதிய கட்டுரை இது.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

பெயரில்லா சொன்னது…

மிக்க நன்றி கரவைதாசன், அந்திமாலை.
எங்கள் ஆழ்ந்த அஞ்சலியும் உரித்தாகட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

கருத்துரையிடுக