செவ்வாய், ஏப்ரல் 29, 2014

பரீட்சைத்தாள்களும்; பெறுபேறுகளும்

 ஆக்கம்: வி. ஜீவகுமாரன், டென்மார்க்


விஸ்வநாதன்
நான் விரும்பிப் பார்க்கும் தொடர்கள் இரண்டு:
ஒன்று மகாபாரதம்.

மகாபாரத்தின் தெரியாத பல கிளைக்கதைகளை அறியவும் அதன் பிரமாண்டத்தை ரசிப்பதற்காகவும் பார்க்கின்றேன்.

மற்றது ஒவ்வீஸ் (Office).

கணனி உலகத்துடன் சம்மந்தப்பட்ட ஒரு தொழில் நிறுவனத்தின் செயல்பாடுகள்… சூழ்ச்சிகள்… கால் வாருதல்கள்…உலகச் சூழலில் ஒரு நிறுவனம் தப்பித்து வாழ படாதபாடுபடும் பிராயத்தனங்கள் என பல விடயங்கள் என்னை பெரிதும் கவர்ந்திருக்கின்றது.

இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அந்த நிறுவனத்தின் ஒரு பிரிவின் இயக்குனராக வரும் விஸ்வநாதன் என்ற சுமார் 50-55 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரம்.

அவருடைய நேர்மை… சவால்களை எதிர் கொள்ளம் தன்மை… முகத்துக்கு நேரே தனது கருத்துகளை சொல்லம் பாங்கு மிகச் சிறப்பாக இருக்கும்.
சுகி சிவத்தினதும் ஓஷோவின் ஆன்மீக உரைகள் ஒரு விதம் என்றால் இது இன்னோர் விதம்.

அவர் சொல்லும் விதம் பல நாட்களாக மனதில் தங்கி இருக்கும்.
அண்மையில் வாழ்வு பற்றிய பொதுப்பார்வை உடைய ஒருவருக்கு அவர் கூறும் அறிவுரை பின்வருவனபோல் அமைந்திருந்தது.
”வாழ்க்கை என்பது ஒரு சோதனைக் கூடத்தில் அமர்ந்திருப்பது போல் இருக்கும்! பார்வைக்கு அனைவருக்கும் பரீட்சை நடப்பது போலத் தெரிந்தாலும்; ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் பரீட்சைத்தாள்கள் வித்தியாசமானது. அதில் உள்ள கேள்விகளும் வித்தியாசமானது. அதன் பதில்களும் வித்தியாசமானது!”
உண்மைதானே!

சீதைக்கு கொடுக்கப்பட்ட சோதனைத்தாள் பாஞ்சாலிக்கு கொடுக்கப்படவில்லை!

பாஞ்சாலிக்கு கொடுக்கப்பட்ட சோதனைத்தாள் கண்ணகிக்கு கொடுக்கப்பட்டவில்லை!!

என் தாய்க்கு கொடுக்கப்பட்ட சோதனைத்தாள் என் மகளுக்கு கொடுக்கப்படவில்லை!!

எனது தந்தை ஒரு குக்கிராமத்தில் இருந்து எழுதிய சோதனைப் பேப்பரும் நான் டென்மார்க்கில் இருந்து எழுதும் சோதனைப் பேப்பரும் முற்றுமுழுதாக வேறுபட்டதை உணர்கின்றேன்.

ஆனால் நாம் அனைவரும் கேள்விகளை நன்கு வாசிக்காமல் மற்றவரின் விடைகளை எட்டி எட்டிப் பார்க்கின்றோம்.

அயலவன் போல இருக்க ஆசைப்பட்டு எங்களின் நிம்மதிகளையே இழந்து கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் ஒரு விடயத்தில் மனம் ஒன்றுபடுகிறது.
இந்த சோதனைத் தாள்களை திருத்தி பாஸா அல்லது பெயிலா என புள்ளிகள் இடுவது எங்களைச் சுற்றியுள்ள சமுதாயமே!

அதனிடம் இருந்து பாஸ்மாக்ஸ் எடுக்க ரொம்ப கடினமாக உழைக்கவேணும்!
கண்ணியமாக நடக்க வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக